MEV Tamil Novels 2

0
4845

Madhumathi Bharath Tamil Novels

விசேஷ வீடு… வீடு முழுக்க சொந்தங்கள்… யார் வேண்டுமானாலும் தங்களைப் பார்த்து விடக் கூடும் என்ற எண்ணம் அவனை ஒரு நொடி கூட தடுக்கவில்லை.எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவளைப் பார்க்கிறான்.அதுவும் திட்டமிட்டு அவளை இங்கே வர செய்து விட்டு அவளைப் பார்க்காமலோ,தனித்து அவளுடன் பேசாமலோ இருப்பது அவனால் ஆகாத காரியம்.

மாலை நேரத்தில் தோட்டத்தில் இருந்த மலர்கள் அனைத்தும் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்க அந்த அத்தனை மலர்களின் அழகையும் தன்னுள்ளே நிரப்பிக் கொண்டவள் போல கள்ளமில்லா அழகுடன் பூக்களை ரசித்துக் கொண்டு இருந்தவளைப் பார்த்தவனின் உள்ளம் காதலில் கரைந்து அவளது காலடியை தஞ்சமடைந்தது.

“குட்டிமா”தன்னுடைய மொத்த காதலையும் அவனது குரல் மூலம் அவளிடம் தெரிவிக்க எண்ணினானோ என்னவோ அவன் குரல் காந்தமாய் அவளை ஈர்க்க முயன்றது.

அவனது குரல் கேட்டு ஒரு நிமிடம் அசைவற்று நின்றவள் உடல் விறைப்புற, அவன் இருந்த திசைப் பக்கம் கூட திரும்பாமல் வேகமாக எதிர் திசையில் நடக்க முயல சட்டென அவளின் பாதையை மறித்து நின்றான் பார்த்திபன்.

“எத்தனை வருஷம் கழிச்சு உன்னைப் பார்க்கிறேன்…ஆளே அடையாளம் தெரியலை…”அவள் முகத்தை மொய்த்தது அவன் பார்வை.

“…”

“இத்தனை வருஷம் கழிச்சு இப்போ தான் இங்கே வர வழி தெரிந்ததா?”அவன் குரலில் லேசான கொஞ்சல் இருந்ததைக் கண்டவள் வெறுப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவளது பார்வைக்கு அர்த்தம் அவனுக்கு புரியாமல் இல்லை.ஒரு சில நிமிடங்கள் முகம் கன்ற அவளின் நேர்கொண்ட பார்வையை எதிர்நோக்க முடியாமல் தயங்கியவன்  பின் முகத்தை நேராக  நிமிர்த்தி அவள் முகத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டான்.

நான்கு வருடங்களுக்கு முன் அவள் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் அவளை அவன் முதன்முதலாக பார்த்தது.அதற்குப் பிறகு இப்பொழுது தான் பார்க்கிறான்.முன்பு முகத்தில் இருந்த அந்த குழந்தைத்தனம் முற்றிலுமாக மாறி இப்பொழுது தெளிவாகவும்,தீர்க்கமான பார்வையுடனும் இருந்தது அவள் முகம்.

அவள் முகத்தையே வைத்த கண் வாங்காமல் ரசிக்கத் தொடங்கினான் பார்த்திபன்.

கருவண்டு விழிகள் அவனைப் பார்க்காமல் அவன் இருந்த திசைக்கு எதிர்ப்புறம் இருக்க,பிறை போன்ற நெற்றியும்,பளபளப்பாக இருந்த கன்னங்களும் ,பாவையவளின் அதரங்களும் அவனை முத்தமிட சொல்லித் தூண்ட,அதை கட்டுப்படுத்தும் வகை தெரியாமல் திணறத் தொடங்கினான் பார்த்திபன்.

அவளின் பார்வை அவன் மீது இல்லாமல் இருந்தாலும் சில நொடிகள் முன்பு பார்த்த அவனின் உருவம் அவளது கண்ணை விட்டு அகல மறுத்தது.நான்கு வருடங்களுக்கு முன்பு அப்பொழுது தான் கல்லூரிப் படிப்பை முடித்து இருந்த பார்த்திபனின் உருவத்திற்கும் இப்பொழுது அவள் கண் முன்னே வேஷ்டி சட்டையில் ஆண்மையின் கம்பீரத்துடன் நிற்கும் பார்த்திபனுக்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருந்ததை அவளால் உணர முடிந்தது.அதற்கும் மேல் அவன் கண்களில் வழிந்த காதல்…அது அவளை தடுமாற செய்தது.

காதல்…வெறும் ஊற்றாக இருந்தால் அவளால் அசட்டை செய்திருக்க முடியும்…ஆனால் அவன் கண்களிலோ சமுத்திரத்தை மிஞ்சக்கூடிய அளவில் காதல்..அதை அவளால் சுலபமாக ஒதுக்கித் தள்ள முடியவில்லை,முயன்று அவன் கண்களிலிருந்து பார்வையை வேறு புறம் திருப்பினாள்.

‘யாராவது வந்து இப்படி இரண்டு பேரும் தனியா தோட்டத்தில் பேசிக்கிட்டு இருக்கிறதை பார்த்தா என்ன ஆகுறது?’ என்று நினைத்தவள் அவனை சுற்றிக் கொண்டு போக முயல அவளை மீண்டும் தடுத்து நிறுத்தியது அவன் குரல்.

“குட்டிமா”

“அப்படி கூப்பிடாதீங்க…”அவள் குரலும்,உடலும் சேர்ந்து நடுங்குவதை அவனால் உணர முடிந்தது.

“ஏன் குட்டிமா”அவள் தன்னிடம் பேசி விட்ட மகிழ்ச்சியில் இருந்தான் அவன்.

“எங்க அப்பா மட்டும் தான் அப்படி என்னை கூப்பிடுவார்…என் மேலே பாசம் வச்சு இருந்தவர் கூப்பிட்ட வார்த்தை அது…அதை நீங்க பயன்படுத்துறது எனக்கு கொஞ்சமும் பிடிக்கலை.”

முகத்தில் அடி வாங்கியதைப் போல உணர்ந்தவன் அப்பொழுது கூட அந்த இடத்தை விட்டு நகரவில்லை.

“கடைசியா நான் உன்னைப் பார்த்தப்போ உன்கிட்டே ஒரு கேள்வி கேட்டேன்…அதைப் பத்தி ஏதாவது யோசிச்சியா?”

“யோசிக்கிற அளவுக்கு அது எனக்கு முக்கியமான விஷயமா படலை…அதனால அதைப் பத்தி எல்லாம் நான் நினைக்கலை.”என்று நறுக்குத் தெறித்தார் போல பேசியவள் தொடர்ந்து அவனை கடந்து சென்று விட அவன் தான் அந்த இடத்திலேயே அப்படியே நின்று விட்டான்.

‘ஹம்…எல்லாம் உன்னோட தப்பு தானே பார்த்திபா…இதை நீ தான் சரி செஞ்சு ஆகணும்”என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டவன் வேகமாக வீட்டுக்குள் நுழைந்தான்.

அவனுக்கு முன்பாக உள்ளே வந்த பௌர்ணமி நேராக மெய்யாத்தாவிடம் சென்று பட்டும் படாமலும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு தனக்காக ஒதுக்கப்பட்டு இருந்த அறைக்குள் புகுந்து கொள்ள பார்த்திபனின் பார்வையோ ஏக்கத்தோடு அவளையே தொடர்ந்தது.

திருமணத்திற்கு வந்திருந்த சொந்தங்கள் அந்த பழங்கால கிராமத்து வீட்டில் முற்றத்தில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்க, வேஷ்டியின் வலது புற நுனியை ஒற்றை விரலால் அவன் பிடித்திருந்த விதம் கன்னியர்களின் நெஞ்சத்தை கிறங்க செய்யும் விதமாக இருந்தது.மற்ற பெண்களின் புறம் திரும்பாது தன்னுடைய கம்பீரமான நடையுடன் கடந்து சென்ற பார்த்திபனை அங்கிருந்த பல பேர் பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்த வயதிற்கே உரிய உரமேறிய நெஞ்சமும்,வலுவேறிய தோள்களும் பார்த்தவுடன் கிறங்கடிக்கும் அவனது வசீகரிக்கும் பார்வையும் பார்த்து ஊருக்குள் நிறைய கன்னிப்பெண்கள் அவன் மீது பித்தாக இருந்தனர்.பின்னே சும்மாவா?யாராலும் அசைக்க முடியாதவனாக அல்லவா அவன் இருந்தான்.

பார்த்திபன் அந்த ஊரிலேயே பெரிய குடும்பத்தின் மூத்த பிள்ளை…விவசாயத் துறையில் பட்டம் பெற்றவன்.சொந்த தொழிலாக விவசாய நிலங்களே அளவுக்கு அதிகமாக இருக்க அதை மட்டுமே கவனிக்காமல் தன்னுடைய சொந்த முயற்சியில் ஒரு பால் பண்ணை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்தியும் வருகிறான்.ஆரம்பத்தில் வெறும் பாலுக்காக மட்டும் தொடங்கப்பட்ட அவனது நிறுவனம் இப்பொழுது தயிர், மோர், நெய், வெண்ணெய்,பன்னீர்,பால் பவுடர் என்று பல மடங்காக பெருகி இருந்தது.

ஏகப்பட்ட சொத்துக்களுக்கு ஒரே ஆண் வாரிசு.அவன் தந்தை ராஜன் எப்பொழுதும் அம்மா பிள்ளை தான்…தொழில் விஷயத்தில் மெய்யாத்தாவின் வார்த்தைகளை மீறி அவர் நடந்தது இல்லை.ஆனால் பார்த்திபன் என்ன தான் பாட்டிக்கு அடங்கிய பேரனாக இருந்தாலும் அவன் முடிவு செய்து விட்டால் எப்பாடுபட்டாவது அதை நடத்திக் காட்டியே தீருவான்.மெய்யாத்தாவிற்கு அவனுடைய செயல்களால் இதுவரை அவன் மீது கோபமே வந்தது இல்லை.பேரன் மீது அத்தனை பாசம் அவருக்கு.

யாருக்காகவும்,எதற்காகவும் இறங்கி வராதவர் ஏதேனும் ஒரு விஷயத்தை பொறுத்துக் கொள்கிறார் என்றால் அதற்குக் காரணம் பார்த்திபனாகவே இருக்க முடியும்.

அவனுக்கு பின்னர் இரண்டு பெண் குழந்தைகள் சுகன்யா,சுபத்ரா…மூத்தவள் சுகன்யாவுக்கு பாஸ்கருடன் நான்கு வருடங்கள் முன்பே காதல் திருமணம் பெரும் போராட்டங்களுக்கு பிறகு வீட்டாரின் ஒப்புதலுடன் நடைபெற்றது.பாஸ்கர்,சுகன்யாவின் காதலுக்கு சாதிப் பிரச்சினை காரணம் இல்லை.அவர்களது திருமணத்திற்கு தடையாக இருந்தது அவர்கள் இருவருக்குள்ளும் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வே…

சுகன்யாவும்,பாஸ்கரும் தாங்கள் காதலில் உறுதியாக இருக்க வீட்டாரும் வேறு வழியின்றி அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.திருமணம் முடிந்த இந்த நான்கு ஆண்டுகளில் பாஸ்கரின் நல்ல குணத்தையும், சுகன்யாவின் மீது வைத்திருக்கும் நேசத்தையும் புரிந்து கொண்டவர்கள் அவரை தங்கத் தட்டில் வைத்து தாங்கத் தொடங்கினார்கள்.

இரண்டாவது தங்கை சுபத்ராவுக்கு தான் நாளை காலையில் திருமணம். அவளுக்கு சொந்தத்திலேயே திருமணம் பேசி முடிவு செய்து இருக்கிறார்கள்.சொந்த மாமா மகனையே சுபத்ராவுக்கு முடிவு செய்து விட கல்லூரி படிப்பு முடிந்ததுமே அவளது திருமணத்தை நடத்தி விட ஏற்கனவே செய்த முடிவின் படி நாளை திருமணமும் நடக்கப் போகிறது.

அடுத்ததாக பார்த்திபனின் திருமணத்தைத் தான் அந்த வட்டாரமே ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டு இருக்கிறது.ஆனால் அவனோ ஏற்கனவே ஒரு கன்னியின்  வலையில் விழுந்து விட்டான் என்பது ஊரில் உள்ள மற்றவர்களுக்கு தெரியாதே…

எப்படியாவது தங்கள் பெண்ணை அவனுக்கு மணம் முடித்துக் கொடுத்து விட வேண்டும் என்று அந்த ஊர் பெரிய மனிதர்கள் காத்துக் கொண்டு இருக்க அவனோ ஒரு மான் விழியாளிடம் நான்கு வருடத்திற்கு முன்பே தன்னுடைய மனதை தொலைத்து விட்டிருந்தான்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Previous PostMEV 1
Next PostMEV Tamil Novels 3
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here