MEV Tamil Novels 8

0
4149
Madhumathi Bharath Tamil Novels

அவரவர் தத்தமது எண்ணங்களில் மூழ்கி இருக்க,மெய்யாத்தாவின் குரலில் நடப்புக்கு திரும்பினர்.

“இன்னும் என்ன யோசனை…யோசிச்ச வரை போதும்…ஆக வேண்டியதைப் பாருங்க…செல்வி பார்த்திபன் ரூமையே இன்னைக்கு நைட் சடங்குக்கு ஏற்பாடு செஞ்சிடு.”என்று அசால்ட்டாக ஒரு வெடிகுண்டை போட்டு விட்டு நகர்ந்து விட பார்த்திபனின் பார்வை சட்டென்று உயர்ந்து பௌர்ணமியை பார்த்தது.அவளோ நடக்கும் நிகழ்வுகளுக்கும் தனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதைப் போல வேறு எங்கோ பார்வையை பதித்திருக்க ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான்.

‘எப்படி நிற்கிறா பாரு…யாரைப் பத்தியோ பேசுற மாதிரி…’

“ம்ம்ம்…எல்லாரும் கிளம்பி ஆளுக்கொரு வேலையா பாருங்க…”என்று உத்தரவிட்ட மெய்யாத்தா பார்த்திபனை மட்டும் அங்கேயே நிற்க சொன்னார்.

“போய் கதவை சாத்திட்டு வா..பார்த்திபா..”என்றவர் அவன் அறைக்கதவை பூட்டிவிட்டு அருகில் வந்ததும் கண்களை மூடி தன்னுடைய சாய்வு நாற்காலியில் அமர்ந்து விட்டார்.பார்த்திபனும் அவருடைய தந்தையைப் போலவே அவரின் காலடியில் அமர்ந்து கொள்ள சற்று நேரம் மெய்யாத்தாவிடம் இருந்து எந்த சத்தமும் இல்லை.

“ஏன் இப்படி செஞ்ச பார்த்திபா?”

“அதுதான் சொன்னேனே அப்பத்தா…”

“அதெல்லாம் சரி தான்…ஆனா உன் கையில் தாலி எப்படி வந்துச்சு?”

“…”

“நான் சொல்லட்டுமா? உன் தங்கச்சி கல்யாணத்துக்கு ஆசாரி கிட்டே நகை செய்ய சொன்னப்பவே இரண்டு தாலி செய்ய சொல்லி இருக்க…ஆசாரி காரணம் கேட்டதுக்கு…ஒரு பாதுகாப்புக்காக…ஒருவேளை தாலி தொலைஞ்சு போச்சுன்னா இன்னொன்னு கையில் இருக்கிறது நல்லது அப்படி இப்படின்னு வாயிக்கு வந்ததை புளுகி தள்ளி இருக்க..

அது மட்டும் இல்லாம சுபத்ரா கல்யாணம் முடிஞ்சதும் அடுத்து வர முஹூர்த்த தேதி என்னன்னு அய்யர்கிட்டே கேட்டு குறிச்சுட்டு வந்து இருக்க…அப்போ நீ ஏற்கனவே இதுக்கு தயாரா தான் இருந்து இருக்க…அதாவது உன்னோட கல்யாணத்துக்கு…வீட்டு ஆட்கள் எங்க யாரிடமும் கூட கலந்து பேசாமல் இதை எல்லாம் நீயே ஏற்பாடு செஞ்சு இருக்கியே…அதுக்கு என்ன அர்த்தம் பார்த்திபா?”

பார்த்திபன் தடுமாறினான்.அப்பத்தாவுக்கு இவ்வளவு விஷயம் தெரியும் என்பதே அவனுக்குத் தெரியாதே…என்ன சொல்லி சமாளிப்பது என்று அவன் யோசிக்கும் பொழுதே அவர் தொடர்ந்து பேசினார்.

“எனக்குத் தெரிஞ்சு உனக்கும்,பௌர்ணமிக்கும் சுகன்யா கல்யாண சமயத்தின் பொழுது தான் அறிமுகம் ஆகி இருக்கணும்.அவங்க கல்யாணம் முடிஞ்ச பிறகு அந்த பொண்ணு இந்த வீட்டுக் பக்கம் எட்டிக் கூட பார்த்தது இல்லை…அப்படி இருக்கும் பொழுது எப்படி இது சத்தியாமானது பார்த்திபா?”

“அப்பத்தா ஒவ்வொரு கேள்வியையும் நச்சு நச்சுனு கேட்கிறாங்களே… எதையாவது சொல்லி சமாளி பார்த்திபா’

“அப்படின்னா…அப்ப இருந்தே அந்தப் பொண்ணை நீ விரும்புனியா?ஏன் யார்கிட்டயும் சொல்லலை…அந்தப் பொண்ணுக்கும் உன் மேலே விருப்பமா?”

“இல்ல அப்பத்தா…அவளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”பதறிக் கொண்டு பதில் சொன்ன பார்த்திபனை கூர்மையான பார்வையால் அளவிட்டார் மெய்யாத்தா.

“என் கிட்ட எதையாவது மறைக்கறியா பார்த்திபா?”

“இல்லையே…”என்றவனின் பார்வை மெய்யாத்தா கண்களை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் தாழ்ந்து விட அதற்கு பிறகு மேலும் விசாரணையை தொடரவில்லை அவர்.

“எது எப்படியோ பார்த்திபா…இப்போ நீ அவளை கல்யாணம் செஞ்சு இருக்க..இனி பொறுப்பா…குடும்பம் நடத்து…அவ கண்ணில இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக் கூடாது”என்றார் கண்டிப்பும் கறாருமாய்.

‘நான் அவளை அழ வைப்பேனா..அவ என்னை எண்ணெய் சட்டியில் போட்டு தாளிக்காத குறையா வறுத்து எடுக்கிறா…’என்று உள்ளுக்குள் நொந்தவன் வெளியே முகத்தை நல்ல பிள்ளை போல வைத்துக் கொள்ள மெய்யாத்தாவின் முகமோ உன்னை நானறிவேன் என்று சொல்லாமல் சொல்லியது.

அங்கிருந்து கிளம்பியவனை மீண்டும் தன்னுடைய அறைக்குள் செல்ல விடாமல் தடுத்தாள் சுகன்யா.அவனுடைய அறையில் அலங்காரம் செய்து கொண்டு இருப்பதால் கீழே இருந்த விருந்தினர் அறை ஒன்றில் தங்கிக் கொள்ள சொல்ல மறுத்து பேசும் எண்ணம் கூட இல்லாமல் கீழே இறங்கி வந்தவன் முற்றத்திலேயே அமர்ந்து விட்டான்.

வானில் முழு நிலவு பவனி வரத் தொடங்கிய நேரம் இரண்டு புதுமண ஜோடிகளையும் ஒன்றாக அமர வைத்து உணவைப் பரிமாறினார்கள்.சாப்பிட்டு முடியும் வரை பார்த்திபன் எதற்குமே வாயைத் திறக்கவில்லை.காலையில் விரும்பி மணந்து கொண்ட பௌர்ணமி அவனுக்கு அருகிலேயே அமர்ந்து இருந்தும் அவள் புறம் அவன் திரும்பவே இல்லை.

உண்மையை சொல்லுவதானால் அவனுக்கு பயமாக இருந்தது. அவன் தாலி கட்டி சொந்தமாக்குவதற்கு முன்னரே அவளை முதன்முறையாக புடவையில் பார்த்ததில் அவனது தாபம் திமிறி எழுந்து அவனை படாத பாடு படுத்தி வைத்தது.

இப்பொழுது அவளின் விருப்பமே இல்லாமல் தாலியை கட்டிய பிறகு தன்னால் நிச்சயம் சும்மா இருக்க முடியாது என்று உறுதியாக எண்ணினான்.

‘எதற்கு வம்பு’என்று நினைத்தவன் அவளை பாராமலே உணவை உண்டு முடிக்க பௌர்ணமியும் அவன் இருந்த புறமே திரும்பவில்லை.

அவனுடைய எண்ணப்படி பௌர்ணமி அவன் மீது கடுங்கோபத்தில் இருப்பாள்.நிச்சயம் இன்று இரவு தண்ணி நெருங்க விட மாட்டாள்.அத்தனை பேர் எதிரிலுமே தன்னை அடிக்க கை ஓங்கியவள்…இன்று இரவு என்ன செய்யப் போகிறாளோ’என்ற எண்ணத்துடன் தான் இருந்தான்.

அவர்களுக்கு அருகிலேயே இருந்த குமரனும்,சுபத்ராவும் புதுமணத் தம்பதிகளுக்கே உரிய வகையில் மற்றவர்கள் அறியாமல் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொள்ள அதை ஓரக்கண்ணால் பார்த்த பார்த்திபனின் மனதில் ஏக்கம் சூழ்ந்தது.

‘இந்த திருமணம் மட்டும் இயல்பாக நடந்து இருந்தால் இந்நேரம் இப்படியா இருந்து இருக்கும்…அவர்களை விடவே அதிக நெருக்கத்துடன் மனைவியிடம் இருந்து இருக்கலாமே’ என்று ஏங்கியவன் மறந்தும் அவள் பக்கம் திரும்பவில்லை.

நால்வரும் உண்ட பிறகு பூஜை அறையில் ஒன்றாக சாமி கும்பிட்ட பின் ஆண்களை அறைக்கு செல்லும்படி பணித்து விட்டு பெண்களை அலங்காரம் செய்ய அழைத்து சென்றனர்.

சுபத்ராவை செல்வி அலங்கரிக்க,பௌர்ணமியை சுகன்யா அலங்கரித்தாள். அலங்காரம் செய்து முடிக்கும் வரையில் கூட பௌர்ணமி வாயைத் திறந்து எதையும் பேசினாளில்லை.

அலங்காரத்தை முடித்ததும் சுகன்யா தானாகவே அவளுடைய கைகளைப் பிடித்தபடி  பேச ஆரம்பித்தாள்.

“அண்ணன் ரொம்ப நல்லவங்க தான் அண்ணி…உங்க மேல ரொம்ப ஆசை போல..அதுதான்…அண்ணன் செஞ்சது சரின்னு நான் சொல்லலை..உங்களுக்கு இந்த விஷயம் எவ்வளவு அதிர்ச்சியா இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது.நான் உங்க கிட்டே கேட்கிறது எல்லாம் ஒண்ணே ஒண்ணு தான்.கொஞ்சம் அவரை புரிஞ்சுக்க முயற்சி செய்ங்க…எனக்கு தெரிஞ்சு எங்க அண்ணன் இதுவரை எந்த பொண்ணுகிட்டயும் நின்னு பேசுனது கூட இல்ல…

குடும்ப கௌரவத்துக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பார். அப்படிப்பட்டவர் இன்னைக்கு சுபத்ராவைப்  பத்தி மட்டும் இல்லை..வேற எதைப் பத்தியுமே யோசிக்காம உங்க கழுத்தில் தாலி கட்டி இருக்கார்னா அவர் எந்த அளவுக்கு உங்களை நேசிச்சு இருக்கணும்….அதுவும் உங்களோட கல்யாணத்தை வேற ஒருத்தர் கூட சேர்த்து பேசறதைக் கூட அவரால தாங்கிக்க முடியலை.அதனால கொஞ்சம்…”என்று பேசிக் கொண்டே போனவளை இடை மறித்தது செல்வியின் குரல்.

“சுகன்யா…போதும் நீ போய் இரண்டு பேருக்கும் பாலை சொம்பில் ஊற்றி எடுத்து வா”என்று சொன்னவர் சுகன்யா அகன்றதும் இரு பெண்களையும் பொதுவாக பார்த்தவாறே பேச்சைத் தொடங்கினார்.

“இந்தா பாருங்க…சுகன்யா கல்யாணம் ஆன அன்னிக்கு என்ன சொன்னேனோ அதே தான் இன்னைக்கும் சொல்றேன்…ஆம்பிளைங்க ஆயிரம் தப்பு செய்வாங்க…தப்பே செய்யாம சில நேரம் நாம தண்டனை அனுபவிக்க வேண்டி இருக்கும்.ஆனா வேற வழியில்லை…நாம எல்லாம் பொட்டச்சிங்க…சில வேதனைகளையும்,வலிகளையும் பொறுத்துத் தான் ஆகணும்.

பிள்ளை பிறக்கும் போது வர்ற வலிக்கு பயந்தா…வம்சம் தழைக்காம பட்டுப் போய்டும்.அதே மாதிரி வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்படுற சின்ன சின்ன வலிகளுக்கு பயந்து போனீங்கன்னா உங்க வாழ்க்கை வறண்ட பாலைவனமா மாறிடும்.

இந்த நிமிஷம் உங்க வாழ்க்கையிலேயே ரொம்ப முக்கியம்…அதனால உங்க மனசுல இருக்கிற தேவை இல்லாத விஷயங்களை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு ஒழுங்கா உங்க புருசனோட சேர்ந்து வாழப் பாருங்க”என்று மகளுக்கும்,மருமகளுக்கு சொல்லிவிட்டு அவர் கிளம்ப முனைய சுகன்யா பால் சொம்பை எடுத்துக் கொண்டு வந்தவள் இருவர் கைகளிலும் ஆளுக்கு ஒன்றாக திணிக்க சுபத்ரா வெட்கமும்,நாணமும் போட்டி போட,கீழே இருந்த  தன்னுடைய அறைக்கு செல்ல பௌர்ணமியோ எந்த உணர்வையும் முகத்தில் காட்டாது ஒரு இயந்திரத்தைப் போல நடந்து செல்ல , அவளைப்  பார்த்துக் கொண்டிருந்த செல்விக்கு உள்ளுக்குள் பதறியது.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Previous PostMEV Tamil Novels 7
Next PostMEV Tamil Novels 9
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here