
அத்தியாயம் 7
“சார் நான் சொல்வதை உங்களால நம்ப முடியலை அப்படிங்கிறது உங்க பார்வையிலேயே எனக்குப் புரியுது… ஆனா இப்படி ஒரு பொய்யை உங்க கிட்டே சொல்லணும்ன்னு எனக்கு எந்த விதமான அவசியமும் இல்லை அப்படிங்கிறத நீங்க புரிஞ்சுக்கணும்” என்று குரலில் சற்றே அழுத்தத்தைக் கூட்டி அக்னிபுத்திரன் பேச… சிவநேசன் சுதாரித்தார்.
வருங்கால மருமகன் ஆயிற்றே… ‘வெள்ளைக் காக்காய் பறக்குதுன்னு சொன்னாலும் தலையாட்டி விட வேண்டியது தான்.’ என்ற எண்ணத்துடன் அவர் பேசத் தொடங்கும் முன்னரே அதை அவனும் ஊகித்து விட்டான் போலும். அவனது தலை மறுப்பாக அசைந்தது.
“அப்படி வெறுமனே என்னுடைய வாய் வார்த்தையை மட்டும் நம்பி நீங்க எதுவும் செய்வது கஷ்டம் தான். ஆனா நான் சொல்றது எல்லாமே நிஜம்… எனக்கு ஆதாரம் கிடைச்சதும் உங்களுக்கு அதை காட்டிப் ப்ரூப் செய்றேன்” என்று அழுத்தமான குரலில் சொன்னவன் வேகமாக எழுந்து தோட்டத்திற்குள் புகுந்து கொண்டான்.
‘என்ன செய்வது? சிசிடிவி கேமராவின் கோணம் பதியாத இடமாகப் பார்த்து அவர்கள் செயல்பட்டது எதேச்சையான ஒன்றா? அல்லது முன்கூட்டியே திட்டமிட்டு செய்ததா? யார் அவர்கள்? அவர்கள் எதற்கு இந்த வீட்டினுள் நுழைந்தார்கள்? அவர்களது தேவை என்ன? எது எப்படியோ வந்தவர்களின் நோக்கம் நிச்சயமாக பணமோ, நகையோ இல்லை’ என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டான்.
‘வந்த முதல் நாளிலேயே எனக்கு இது தேவை தானா? அவர்களும் என்னுடைய கண்ணில் மட்டுமாக ஏன் பட்டுத் தொலைக்க வேண்டும்’ என்று எரிச்சலுடன் நினைத்தவன் பார்வையை சுழல விட அங்கே கண்ட காட்சியில் அவனுக்கு இரத்த அழுத்தம் வந்தது.
‘இவளை என்ன செய்ய சொன்னேன்? என்ன செய்து கொண்டு இருக்கிறாள்? இவளை…’ பற்களை நறநறவென்றுக் கடித்துக் கொண்டே அவளை நோக்கி வேக எட்டுக்களை எடுத்து வைத்தான்.
தோட்டத்தின் மூலையில் அமைக்கப்பட்டு இருந்த ஊஞ்சலில் காலை நீட்டி சாவதானமாக படுத்துக் கொண்டே வானத்தை கண்களால் அளந்தபடி… சாவகசமாக எதையோ கொறித்துக் கொண்டிருந்தாள் அருந்ததி.
“உன்னை என்ன செய்ய சொன்னேன்?”
“ஷ்ஷ்ஷ்…அப்பா… ஏன் இப்படி கத்தறீங்க? எனக்கு காது வலிக்குது… மெதுவா பேசுங்க” என்று சொன்னபடியே அவள் காதை லேசாக தடவி விட.. அந்த காதை வலிக்க வலிக்க நன்றாக திருகி விட வேண்டும் என்ற எண்ணம் வந்தது அவனுக்கு…
“முதல்ல எழுந்திரு…” என்று அவளை அதட்டியவன் கண்டிப்பான குரலில் பேசத் தொடங்கினான்.
“உன்னை ஐம்பது புஷ்அப் எடுக்க சொன்னேன்… எடுத்தியா?”
“எல்லாம் எடுத்து முடிச்சிட்டுத் தான் ரெஸ்ட் எடுக்கிறேன் நெருப்பு சார்” என்று படுத்து இருந்த தோற்றம் கொஞ்சமும் மாறாமல் அசட்டையாக அவள் பேசிய விதம் அவளது அலட்சியத்தை காட்ட… அக்னியால் பொறுக்க முடியவில்லை.
‘திமிர்.. அலட்சியம்… இன்னும் பேரை வேற கிண்டலாக சொல்கிறாள் இவளை’ என்று கட்டுகடங்காத ஆத்திரத்துடன் அவளை நெருங்கியவன் அவளது கைகளை அழுத்தமாக பற்றி மேலே தூக்கி அவளை நிற்க வைத்தான். வலியில் அவள் முகம் சுருக்குகிறாள் என்பதை அறிந்த பின்பும் அவளிடம் நிதானம் காட்ட அவன் தயாராக இல்லை.
“என்னிடம் ஒழுங்கா பேசலைனா விளைவுகள் வேற மாதிரி இருக்கும்… நீ தாங்க மாட்ட” என்று பேசியபடியே ஒவ்வொரு வார்த்தைக்கும் அவனது பிடியை அழுத்தம் கூட்டி மேலும் இறுக்கினான்.
வலி தாங்க முடியாத நிலை என்றாலும் கூட அருந்ததி அவனிடம் கொஞ்சமும் இறங்கி வரத் தயாராக இல்லை.. இது எல்லாம் அவள் எதிர்பார்த்தது தானே… தோட்டத்தில் அவர்களுக்கு பின்புறமாக யாரோ நடந்து வரும் அரவம் கேட்டதும் வேகமாக அவளை விடுவித்தான்.
“நான் உண்மையா தான் சொல்றேன்… புஷ் அப் எடுத்துட்டேன்” என்று சொன்னவளின் வார்த்தையில் அவனுக்கு கடுகளவு கூட நம்பிக்கை இல்லை. அவனுக்குத் தெரிந்து அவளுக்கு இது போல் எல்லாம் செய்து நிச்சயம் பழக்கம் இருந்து இருக்காது. அப்படி இருக்கையில் சிவநேசனிடம் தான் பேசி விட்டு வந்த அந்த பத்து நிமிடத்திற்குள் அவளால் எப்படி ஐம்பது புஷ்அப் எடுத்திருக்க முடியும் என்பது அவனது எண்ணம்.
ஒரு வேளை நூறில் ஒரு சதவீதமாக அவள் செய்திருந்தால் கூட அவளுக்கு கொஞ்சமேனும் வேர்த்து… மூச்சு வாங்கி இருக்குமே… அதையும் காணோம்.. இது எல்லாவற்றையும் விட அவள் கண்களில் கொஞ்சமும் உண்மை இல்லை என்பதை கண்டவனுக்கு ஆத்திரத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று புரியாமல் திணறினான்.
இது அனைத்தையும்விட அவனது திணறலையும், கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பதையும் அவள் ரசிப்பதாக படவே கண்களில் கனலைக் கக்கினான்.
“நீ சொல்றதை நான் எப்படி நம்புறது?” என்றான் ஆத்திரத்தோடு….
“உங்களுக்கு சந்தேகமாக இருந்தா அவரைக் கேளுங்க… நான் புஷ்அப் எடுக்கிறதை அவரும் தான் பார்த்தார்.. எனக்கு இருக்கும் ஒரே சாட்சி அவர் தான்” என்று அவள் எதிர்திசையில் கை காட்ட…
‘எவர்?’ என்ற கேள்வியுடன் பார்வையை சுழற்றியவனின் பார்வையில் பட்டது நீமோ மட்டுமே…
“யாரை சொல்ற?” குழம்பினான் அக்னி
“உங்க குடும்பத்தில் ஒருத்தர் மாதிரின்னு சொல்வீங்களே.. அவர் தாங்க நீமோ” என்று அவள் பவ்யமாக கூற… அக்னிபுத்திரன் அவளைப் பார்த்த பார்வையில் கோடி சூரியன்களின் வெப்பம் இருந்தது.
“நான் சொல்றதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா அவர் கிட்டவே கேட்டுப் பாருங்களேன்…” என்று பவ்யமாக சொல்ல… அவளை ஒன்றும் செய்ய முடியா ஆத்திரத்துடன் பற்களை நறநறவென்று கடிக்கத் தொடங்கினான்.
“என்ன சார்… நீங்க கேட்க மாட்டீங்களா? நான் வேணா கேட்கட்டுமா? நீமோ சார்… நான் ஐம்பது புஷ்அப் எடுத்ததை நீங்க பார்த்தீங்க தானே?…” என்று கேட்டபடியே நீமோவின் அருகில் செல்ல… புதிதாக நெருங்கி வருபவர்களை பார்த்து எப்பொழுதும் குலைக்கும் பழக்கத்தை இப்பொழுதும் கடைபிடிப்பவனாக அருந்ததி நெருங்கி வரவும் வேகமாக குலைக்கத் தொடங்கினான் நீமோ.
“அவரே ஆமான்னு சொல்லிட்டார் பாருங்க…”
“அவன் எப்போ அப்படி சொன்னான்?”
“அவர் குலைச்சதுக்கு அது தானே அர்த்தம்… என்ன சார் நீங்க இது கூட தெரியாதா உங்களுக்கு? இது கூட தெரியாம அப்புறம் எப்படித் தான் இத்தனை நாளாய் ஒண்ணா இருக்கீங்களோ” என்று குரலில் ஏற்ற இறக்கத்தை கூட்டி கிண்டலுடன் அவள் பேசியவிதம் அவனை மேலும் உசுப்பேற்றியது என்று தான் சொல்ல வேண்டும்.
“செய்யாம ஓபி அடிச்சுட்டு வாய் பேசுறியா… உன்னை” என்று அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கவும்… ஓட்டமாக வீட்டுக்குள் ஓடிப் போனாள் அருந்ததி.
“இன்னிக்கு இந்த நிமிஷம் தப்பிச்சு ஓடுறதால மட்டும் எப்பவும் இதே மாதிரி நிலைமை உனக்கு சாதகமா இருக்கும்னு நினைக்காதே” என்ற அக்னியின் ஆத்திரக் குரல் அவளை பின்தொடர்ந்து வந்த பொழுதும் அது குறித்து அவள் பெரிதாக கவலைப்படவில்லை.
அவனிடம் இருந்து தப்பி தன்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டவள் குளித்து முடித்து ஒரு சுடிதாரை போட்டுக் கொண்டு வந்தவளை டைனிங் டேபிளில் அமர்ந்த இடத்தில் இருந்தே கண்களால் தொடர்ந்தான் அக்னிபுத்திரன். அவன் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை… சில நிமிடங்களுக்கு முன் அவள் செய்து வைத்த காரியத்தையே மறந்து விட்டவனைப் போல இருந்த அந்த பார்வையை நம்பத் தான் அவளால் முடியவில்லை.
முன் தினத்தைப் போலவே அவளும் தாயுடன் சேர்ந்து பரிமாறத் தொடங்க… அவளை தடுத்தான் அக்னி.
“வேண்டாம் அருந்ததி… நீயும் என்னோடவே சாப்பிடு… அப்போ தான் சீக்கிரமா கிளம்ப முடியும்…” என்று சொன்னதை தந்தையும் ஏற்றுக்கொண்டு தலை அசைக்க… வேறு வழியின்றி அவனுக்கு எதிரில் அமர்ந்து உணவு உண்ணத் தயாரானாள்.
தட்டை சரியாக போட்டுக் கொண்டு அமர்ந்தவளின் முன்னால் ஒரு பவுல் (Bowl) நீட்டப்பட்டது. என்ன என்று குனிந்து பார்த்தவளுக்கு அது ஏதோ புதுவிதமான உணவாக தோன்றியது… சூப் போல நீர்த் தன்மையுடனும் அதே நேரம் கொஞ்சம் கொழகொழவென்றும் இருந்த அந்த உணவை விசித்திரமாக பார்த்தவள் வேகமாக மற்றவர்களின் தட்டைப் பார்த்தாள்.
வெண் பொங்கல், இட்லி , சாம்பார், தேங்காய் சட்னி, புதினா சட்னி, வடை..என்று விதவிதமான பதார்த்தங்கள் பரப்பி வைக்கப்பட்டு இருக்க… பாவமாக நிமிர்ந்து அன்னையைப் பார்த்தாள் அருந்ததி.
‘என்னம்மா கொடுமை இதெல்லாம்?’ என்று மகள் பார்வையால் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தாய் நகர்ந்து விட… அவளது கேள்விக்கு பதில் அக்னிபுத்திரனிடம் இருந்து வந்தது.
“உன்னோட உடம்பில் தேவை இல்லாத கொழுப்பை குறைக்க. உன்னோட சாப்பாட்டு வகைகளை மாத்த சொல்லி நான் தான் அவங்க கிட்டே சொன்னேன். இனி நான் சொல்றது தான் உனக்கு சாப்பாடு…”என்று அமர்த்தலாக சொல்லி விட்டு அவன் சாப்பாட்டில் முனைப்பாக காட்டிக் கொள்ள.. முன்தினம் இரவு அவன் பார்த்த பார்வைக்கு பொருள் என்ன என்பது அவளுக்கு புரிந்து போனது.
‘இனி இந்த மாதிரி நல்ல சாப்பாட்டை நீ சாப்பிடவே முடியாதுன்னு தான் சொல்லி இருக்கான்’ என்று எண்ணியவளுக்கு இதை கொஞ்சம் முன்னாடியே தெரிஞ்சு இருந்தா… வேற எதுவும் ஐடியா செஞ்சு இருக்கலாம். முன்னாடியே ரூமில் உட்கார்ந்து கொஞ்சமா எதையாவது மொக்கி இருக்கலாம்.
‘சண்டாளா… கடன்காரா… உர்ராங்குட்டான்… நீ எல்லாம் உருப்படுவியா? என்னை சாப்பிட விடாம செஞ்சுட்டு என்னோட கண் எதிர்லயே இத்தனை அயிட்டத்தையும் நொட்டை விட்டுக் கொண்டு மொக்குறியே.. இதெல்லாம் உனக்கு செரிக்குமா… ஆகாது.. ஆகவே ஆகாது… அடேய்! நான் எல்லாம் பசிக்காத நேரத்திலேயே நாலு தட்டு இட்லி சாப்பிடுறவ… இப்படி கொள்ளைப் பசியில் இருக்கும் பொழுது தம்மாத்தூண்டு கொடுத்தா எப்படி பத்தும்… அய்யயோ.. பசியிலேயே செத்துடுவேனே…’ என்று பசியில் பாதியும், அவன் மீது இருந்த கோபத்தில் பாதியுமாக அவனை திட்டித் தீர்த்தாள் அருந்ததி.
தலை நிமிராமல் சாப்பாட்டில் கவனம் போல காட்டிக் கொண்டாலும் மௌனச் சிரிப்பில் குலுங்கும் அவனது உடல் கண்டு அவளுக்கு ஆத்திரம் வந்தது. கோபம் வந்து என்ன பயன்… இப்போ சாப்பிட முடியாதே… இன்னிக்கு ஒருவேளைக்கு மட்டும்னா கூட பரவாயில்லை… இவன் சொல்றதைப் பார்த்தா கடைசி வரை எனக்கு கஞ்சி தான் போலவே’ என்று எண்ணி நொந்து போனாள்.
ஓரக்கண்ணால் தந்தையும், தாயையும் பார்த்தாள். அவர்கள் முக பாவனையில் இருந்தே அவர்கள் கண்டிப்பா இந்த விஷயத்தில் அவளுக்கு உதவப் போவதில்லை என்பது அவளுக்கு புரிந்து போனது.
கடைசியாக ஒருமுறை முயற்சி செய்வோம் என்று எண்ணியவள் கையில் இருந்த ஸ்பூனால் அந்த திரவத்தை கலக்கி மேலிருந்து கீழாக ஊற்றிப் பார்த்தாள்.
“என்ன கன்றாவி இது?”
“கம்மங்கூழ்” இப்பொழுதும் பதில் அவனிடம் இருந்து தான் வந்தது.
“தினமும் இந்த கிரகத்தை தான் குடிச்சு தொலைக்கணுமா?”
“அப்போ தான் கொழுப்பு குறைஞ்சு ஒழுங்கா எக்ஸ்சர்சைஸ்(Excercise) செய்ய முடியும் என்று அவன் அமர்த்தலாக சொல்ல அவளுக்கு புரிந்து விட்டது… இன்று காலையில் புஷ்அப் எடுக்காமல் அவனை ஏமாற்றியதற்கு இந்த தண்டனை என்று…
‘நான் காலையில இவனை செஞ்சதுக்கு, இப்போ இவன் என்னை வச்சு சிறப்பா செஞ்சிட்டானே…’ என்று எண்ணி நொந்து போனாள் அருந்ததி.
அதில் இருந்து ஒரு விஷயம் அவளுக்கு தெளிவானது. அவனை சீண்டி விட்டா.. அதை விட அதிகமா… இன்னும் அழுத்தமா சொல்லணும்னா எங்கே அடிச்சா அவளுக்கு வலிக்கும்னு தெரிஞ்சு அதை சரியான முறையில் செஞ்சு அவளை கதற விடுவதில் அவன் கை தேர்ந்தவன் என்று புரிந்து போனது.
‘ஆனா அதுக்காக எல்லாம் இந்த அருந்ததி அவனுக்கு பணிஞ்சு போகணுமா… நோ…. நெவர்… அப்பா , அம்மா முன்னாடி மட்டும் தான் இவனால என்னை பணிய வைக்க முடியும்… தனியா இருக்கும் பொழுது இவனோட கொட்டத்தை அடக்கியே தீருவேன்’ என்று அவசர சபதம் ஒன்றை எடுத்தாள்.
‘அடியே ராணி மங்கம்மா… நீ சபதம் எல்லாம் அப்புறம் எடுக்கலாம்..முதலில் என்னை கவனி ‘ என்று அவளது வயிறு கூப்பாடு போட வேறு வழியின்றி அதை குடிக்கத் தொடங்கினாள். ஆரம்பத்தில் முகம் சுளித்தவள் மெல்ல அதனது சுவை பிடித்துப் போக வேகமாக அந்த பவுலை காலி செய்து விட்டு மீண்டுமாய் கிண்ணத்தை நிரப்பிக் கொண்டு குடிக்க ஆரம்பித்தாள்.
இதை எதிர்பார்க்காத அக்னிப்புத்திரன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு அவளை கவனிக்கத் தொடங்கினான்.
ஒன்று…
இரண்டு…
மூன்று..
நான்கு….
கணக்கில்லாமல் கம்மங்கூழை அவள் உள்ளே தள்ளிக் கொண்டிருக்க… வாயில் ஈ நுழைந்தால் கூட தெரியாத அளவிற்கு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
பெற்றவர்கள் இருவருக்கும் அவளது வேலை தெரிந்து இருந்ததால் அவர்கள் சாப்பாட்டில் கவனமாக அக்னிப்புத்திரனுக்கு வெறுத்துப் போனது.
‘சை! என்ன பொண்ணு இவ… எது கிடைச்சாலும் இந்த அமுக்கு அமுக்குறா.. அது வயிறா இல்லை குப்பைத் தொட்டியா’ என்று எண்ணியவனுக்கு தன்னுடைய உத்தி பலிக்காமல் போனதில் கோபம் வந்தது.
அதே நேரம் என்ன தான் அவள் அளவுக்கு அதிகமாக வாங்கிக் குடித்தாலும் நீர்மத் தன்மையில் இருப்பதால் தீவிர உடற்பயிற்சியின் பொழுது அவளுக்கு வேர்த்து விட்டாலே போதும்… அதன் பிறகு மீண்டும் அவளுக்கு பசி எடுக்கத் தொடங்கி விடும் என்ற உண்மையை அறிந்தவனாய் அவள் மீது கொஞ்சம் இரக்கம் கூட தோன்றியது.
அடுத்த நொடியே அதை துடைத்து தூரப் போட்டது அவன் மனது.
‘இவளுக்காக எல்லாம் இரக்கப்படுறது சனியனைத் தூக்கி பனியனுக்குள்ளே போடுற மாதிரி… நல்லா படட்டும்.. அப்போ தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு ஓடுவா’ என்று கடுமையை பூசிக் கொண்டது அவன் முகம்…
அவளை மேலும் போட்டு வருத்த அவன் தயாராக… அதை திறமையாக சமாளித்து விடுவாளா அருந்ததி?…
ஷாக்கடிக்கும்…
Nice update. Thanks.
thanks dear
Can you please inform us about the next Update. Thank you.
நெருப்பு சார் நீங்க கம்மங்கூழை கொடுத்தாலும் நாங்க புள் கட்டு கட்டுவோம்ல🤣🤣