அத்தியாயம் 15
தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் படுத்து குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள் அருந்ததி. எதற்காக இந்த அழுகை? அக்னியின் மீது அவளுக்கு காதலா என்று கேட்டால் நிச்சயம் அவளது பதில் இல்லை தான். அக்னி தான் அவளுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்று தெரிந்த பிறகு ஒரு ஆர்வத்துடன் அவனை பார்வை இட்டிருக்கிறாள். ஆனால் அவனுக்கு தன்னை கொஞ்சமும் பிடிக்கவில்லை என்பது தெரிந்ததும் அதை தொடர்ந்து வளரவிடவில்லை அவள். இப்பொழுது அவன் கட்டிய தாலி அவள் கழுத்தில் இருந்தாலும் அவன் மீது ஆசையை அவள் வளர்த்துக் கொள்ளவில்லை.
முடிந்த அளவுக்கு இந்த திருமணத்தை நிறுத்தி விடலாம் என்று முடிவு செய்து தான் அவளது மாமா மகனை வர சொல்லி இருந்தாள். என்ன காரணமோ தெரியவில்லை அவன் வரவேயில்லை. அவன் வந்திருந்தால் அவனது உதவியுடன் இந்த திருமணத்தை நிறுத்தி இருக்கலாம். இப்பொழுது அதற்கும் வழி இல்லை.
திருமணமும் முடிந்து விட்டது. இனி அவன் தான் அவள் கணவன். அவளுக்குத் தெரிந்த வரையில் இனி அவனை விவாகரத்து செய்து விட்டு வேறு ஒருவனை திருமணம் செய்வது என்பது நடக்காத ஒன்று. அப்படி ஒன்று நடப்பதை அவள் தந்தை அனுமதிக்கவே மாட்டார். இனி இந்த வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற குழப்பத்தில் அவள் இருக்க… அவனோ அலுங்காமல் அவளது தலையில் இடியை இறக்கிவிட்டு போய்விட்டான்.
அவனுக்கு ஏதோ ஒரு முன்கதை இருக்கிறது என்பதை அவள் அறிவாள். ஜெனிபர் என்றொரு பெண்ணை காதலித்து இருப்பான் என்றே அவள் அனுமானித்து இருக்க, அவனோ குழந்தையே இருக்கிறது என்றான்.
தன்னை திருமணம் செய்து கொண்டவனின் வாழ்வில் தனக்கு முன்பே ஒரு பெண் இருந்திருக்கிறாள். அவளை அவன் உயிராய் விரும்பியதன் பயனாக அவர்களுக்கு குழந்தையும் இருந்திருக்கிறது என்ற செய்தியே அவளது நெஞ்சில் உயிர்வலியை தோற்றுவித்தது.
‘இரண்டாம் தாரமா நான்? எனக்கென்ன தலையெழுத்து? இந்த தாத்தா ஏன் இப்படி செய்தார்?’ கட்டிலில் படுத்து குலுங்கி குலுங்கி அழுதாள்.
அந்த நேரத்தில் தன்னுடைய தந்தையை அழைத்து பேசி அவரை கலவரப்படுத்தவும் அவள் விரும்பவில்லை. அழுதுகொண்டே உறங்கியவள் விடிந்த பின் வெகுநேரம் கழித்தே எழுந்தாள்.
சோர்வுடன் எழுந்து மணியைப் பார்க்க அது பதினொன்றைக் காட்டியது.
முதல் நாள் நிகழ்வுகள் அனைத்தும் அவள் கண் முன்னே வந்து போனது.எதைப்பற்றியும் யோசிக்க நேரமில்லாமல் வயிறு பசித்து தன்னுடைய இருப்பைக் காட்டிக் கொடுத்தது.
‘பசிச்சு வேற தொலைக்குது’ என்று எண்ணி வெளியே வந்தவள் கிச்சனுக்குள் சென்று தனக்காக மட்டும் காபியை தயாரித்து முடித்தவள் அதை பருகியபடி வீட்டினுள் நோட்டமிட்டாள்.
வீட்டினுள் அக்னி இருந்த தடமே தெரியவில்லை. நீமோவின் படுக்கையும் காலியாக இருந்தது.
‘வெளியே போயாச்சு போல’ என்று எண்ணியவள் வெறுமையான மனதுடன் அமர்ந்து இருந்தாள்.
‘இனி என்ன செய்வது? அப்பாவிடம் பேசலாமா? அம்மாவுக்கு தெரியுமா இதெல்லாம்?’ சிந்தனையில் மூழ்கிப் போனாள். காலிங்பெல் ஒலி நிகழ்காலத்திற்கு அவளை அழைத்து வந்தது.
‘யாரது இந்த நேரத்தில்? வீட்டு வேலைக்கு யாரையாவது சேர்த்து இருப்பாரோ’ என்ற எண்ணத்துடன் கதவை திறந்தவள் அங்கே இருந்த அவளது மாமனார் நேசமணியை அங்கே எதிர்பார்க்கவில்லை.
“வா.. வாங்க”
“தொந்தரவு செஞ்சுட்டேனா மா?”
“அதெல்லாம் இல்லை மாமா… உள்ளே வாங்க… காபி சாப்பிடுங்க” என்றவள் பேசிக் கொண்டே அவருக்கும் காபி கலந்து கொடுத்தாள்.
“இந்நேரத்தில் காபி குடிக்கறியே மா? காலையில் என்ன சாப்பிட்ட?”
“இன்னும் சாப்பிடலை மாமா… நைட் லேட்டா தான் தூங்கினேனா.. இப்போ தான் எழுந்தேன்…” என்று பேசிக்கொண்டே போனவள் அவரது முகத்தில் இருந்த சிரிப்பைப் பார்த்ததும் பேச்சை அப்படியே நிறுத்தி விட்டாள்.
‘அடக் கருமம் பிடிச்சவளே..முதல் நாள் கல்யாணம் ஆனவ இப்படி ராத்திரி தூங்கலைன்னு சொன்னா மத்தவங்க வேற மாதிரி அர்த்தத்தில் இல்ல எடுத்துப்பாங்க’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்.
ஏனோ அந்த நொடியில் அவளுக்கு அக்னியின் முன் வாழ்க்கையைப் பற்றி தன்னுடைய தந்தையிடம் கேட்பதை விட இவரிடம் கேட்பது சரியென்று தோன்ற மனதுக்குள் சில நொடி ஒத்திகை பார்த்துக் கொண்டவள் தெளிவான குரலில் பேசினாள்.
“எனக்கு உங்க கிட்டே கொஞ்சம் பேசணும் மாமா”
“நீ பேச ஆசைப்படுவனு எனக்கும் தெரியும் மருமகளே… அதுதான் நானும் அவன் வீட்டில் இல்லாத நேரமா பார்த்து கிளம்பி வந்து இருக்கேன்” அவளிடம் அவர் தனியாக பேச விரும்புவது ஏன் என்று கொஞ்சம் குழம்பினாள். ஒருவேளை அவளது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டதாலேயே அவர் தன்னை நாடி வந்து இருக்கிறார் என்பது புரிந்தது.
“அவர் வீட்டில் இல்லை அப்படின்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“இப்போ தான் போன்ல பேசினேன் மா. அவன் லோன் விஷயமா வெளியே போய் இருக்கான். எப்படியும் சாயந்திரம் ஆகும்னு சொன்னான். அதான் நான் கிளம்பி வந்துட்டேன்.”
“நேத்து நைட்டு உங்க பையன் என்கிட்ட சில விஷயங்கள் சொன்னாரு… அதெல்லாம்?”
“ என் பையன் பொய் சொல்ல மாட்டான்ம்மா” மகனைப் பற்றிய பெருமை அவர் குரலில் வழிந்து ஓடியதை அவளால் உணர முடிந்தது.
“நான் இன்னும் விஷயம் என்னன்னே சொல்லல.. சொன்ன பிறகு நீங்க தடுமாறலாம்” “சொல்லித்தான் பாரேன்மா எதுக்கு இத்தனை தடவை சுத்தி வளைச்சு பேசிகிட்டு இருக்க”
“ ஜெனிபர்… கு… குழந்தை” என்று திக்கி திணறிப் பேசும்போதே அவள் குரல் வெகுவாக தயங்கியது… திணறியது…திக்கு முக்காடியது.
அவளது தடுமாற்றத்தை உள்வாங்கியவர் அவளையே சில நொடிகள் இமைக்காமல் பார்த்தார். பின் கல்லை விழுங்குவது போல எதையோ முழுங்கி தொண்டையை சரி செய்து கொண்டு பேசத் தொடங்கினார்.
“உனக்கு எங்க குடும்பத்தைப் பத்தி எதுவும் தெரியுமாம்மா?” வாஞ்சை வழிந்தது அவர் குரலில்.
‘இல்லை’ மெல்லியதோர் தலை அசைப்பு மட்டுமே அவளிடம் இருந்து.
“எதுவுமே தெரியாதா?” மெல்லியதோர் ஆச்சரியம் அவர் குரலில்.
“எங்க தாத்தா மேலே உங்களுக்கு ரொம்ப மரியாதை இருக்குனு தெரியும். உங்க பையன் எக்ஸ் மிலிட்டரி மேன்னு தெரியும்.வேற எதுவும் நான் கேட்டுக்கல”
“ஏன்?”
“என்ன ஏன்?” புரியாமல் குழம்பினாள் அவள்.
“எதுவுமே தெரியாம எப்படி என் பையனை கல்யாணம் செஞ்சுக்க சம்மதிச்ச?”
“அப்பா சொன்னார்… அவரோட ஆசைக்காக”
“நல்ல பிள்ளை மா…” என்று சிலாகித்து சிரித்தார்.
“என் அப்பா எனக்கு எப்பவும் கெடுதல் செய்ய மாட்டார்” என்றாள் ரோஷத்துடன்.
“அந்த நம்பிக்கை இருக்கிறவரை ரொம்ப சந்தோசம்”
“என் அப்பா மேல எனக்கு எப்பவும் நம்பிக்கை இருக்கும்”
“அவரே பார்த்து கல்யாணம் செஞ்சு வச்ச என்னோட பையன் மேல மட்டும் நம்பிக்கை இல்லையா என்ன?”
“எப்படி நம்புறது? யாரோ சொல்லி நான் குழம்பல… உங்க பையன் வாயாலேயே சொன்னார்” அவள் குரல் வெகுவாக உள்ளே போயிருந்தது. அதில் இருந்த வலியை அவரால் உணர முடிந்தது.
“உனக்கு சில விஷயங்கள் தெரிஞ்சாகணும்மா. அப்போ தான் என் பையனைப் பத்தி உன்னால புரிஞ்சுக்க முடியும். அவன் ரோஷக்காரன்… வீம்பு பிடிச்சவன். தனக்காக எதுவும் வேணும்னு யார்கிட்டயும் எதுவும் கேட்கத் தெரியாது அவனுக்கு.அதனால தான் நானே சில விஷயங்களை உன்கிட்டே சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.”
“…”
“எங்க வீட்டில் நான், என் மனைவி சுபத்ரா, அக்னி… மூணே பேரு தான்மா… அக்னி சரியான அம்மா கோண்டு… அவ முந்தானையை பிடிச்சுக்கிட்டே சுத்துவான். காலேஜ் படிக்கிற வரையும் கூட தூங்கும்போது அவ புடவை முந்தானையை அவனோட கையில் சுத்தி வச்சுக்கிட்டு தான் தூங்குவான். அந்தளவுக்கு அம்மான்னா அவனுக்கு உசுரு”
“எங்க கல்யாணத்தப்போ அவங்க அம்மா… சாரி அத்தை வரலை தானே?”
“அவ வந்தா உன் கழுத்தில் தாலியே கட்ட மாட்டேன்னு சொல்லிட்டான்ம்மா”அவர் குரலில் அத்தனை வலி இருந்தது.
“எனக்குப் புரியலை. அம்மா மேலே அவ்வளவு பாசம் வச்சு இருந்தவர் எப்படி இப்படி மாறிப் போனார்?”
“அதைப் பத்தி தெளிவா சொல்லத் தான் நான் இங்கே வந்து இருக்கேன்மா”
“சொல்லுங்க மாமா”
“என் பையன் காலேஜ் முடிச்ச உடனே ரொம்ப ஆசைப்பட்டு மிலிட்டரியில் சேர்ந்தான். சுபத்ராவுக்கு அதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஒரே பிள்ளை… அவனை போருக்கு அனுப்ப அவ ரொம்பவே பயந்தா… அவளுக்கு மகன் தான் உலகமே. ரொம்ப மறுத்துப் பார்த்தாள். ஆனா இந்த பய பிடிவாதம் பிடிச்சவன். நாட்டுக்கு சேவை செய்யணும்னு உறுதியா இருந்தான். அவங்க அம்மாவும் அவனுக்கு மேல பிடிவாதம் பிடிச்சா… அம்மாவுக்காக அவனும் கொஞ்சம் இறங்கி வந்தான்.”
“மிலிட்டரிக்கு போகலைன்னு சொல்லிட்டாரா?” ஆர்வம் தாங்காமல் கேட்டாள் அருந்ததி.
“ஹா.. ஹா.. அவன் அவ்வளவு நல்லவன் எல்லாம் கிடையாது மருமகளே… இரண்டே இரண்டு வருசம் மட்டும் மிலிட்டரில இருந்துட்டு வர்றேன். அதுக்கு அப்புறம் அவ என்ன சொல்றாளோ அதை கேட்கிறேன்னு சொல்லி இருந்தான்”
“அத்தை என்ன சொன்னாங்க?”
“அவ இவனை விடவும் பிடிவாதக்காரி இல்லையா? ஊருக்கு வந்த உடனே அவ பார்த்து வச்சு இருக்கிற பொண்ணை கல்யாணம் செய்யணும்னு அவன் கிட்டே சொன்னா… இவனும் ஒத்துக்கிட்டான். இரண்டு வருசம் நல்லபடியா முடிஞ்சது. அவங்க அம்மாவும் அவனுக்கு நல்ல பொண்ணா பார்த்து வச்சு இருந்தா… எங்க சொந்தத்திலேயே நல்ல வசதியா… அழகா…”
“என்னை மாதிரி இல்லைன்னு நேரடியா சொல்லுங்க மாமா”
“ஹா ஹா… உனக்கென்னடா ராசாத்தி… அழகாத் தான் இருக்க…”
“ஆனா உங்க பிள்ளைக்கு பிடிக்கலையே… அவருக்கு ஜெனிபரைத் தான் பிடிக்குமாம். மணமேடையில் வச்சே என்கிட்டே சொல்றார்” அவள் குரலில் லேசான கண்ணீரின் சாயல்.
“நான் கதையை எங்கே விட்டேன்?”
“அத்தை அவருக்கு நல்ல அழகான பொண்ணா.. பார்த்து வச்சு இருந்தாங்க” எடுத்துக் கொடுத்தாள் அவள்.
“அவனும் வந்தான்… ஆனா தனியா இல்லை… ஒரு பொண்ணோட”
“சாரோட லவ்வரா?” சொல்லும் பொழுதே அவளின் அடித்தொண்டை வரை கசந்து வழிந்தது அவளுக்கு.
“அந்த பொண்ணு அப்போ முழுகாம இருந்தது.. நிறைமாசம்” என்று சொன்னவரின் முகத்தில் அப்படி ஒரு கலவையான உணர்வு வந்து போனது. அவர் அந்த நாட்களுக்குள் முழுகி விட்டதை அருந்ததியால் உணர முடிந்தது.
“யாருடா இந்த பொண்ணு?” வாசலிலேயே மறித்து நின்று கேள்வி கேட்டார் சுபத்ரா.
“அம்மா.. ப்ளீஸ் உள்ளே போய் பேசிக்கலாம்.” அக்னி பக்கத்தில் இருந்தவளை பார்த்துக் கொண்டே கண்களால் தாயிடம் கெஞ்சினான்.
“முடியாது… நான் ஊரெல்லாம் தேடி உனக்கு ரதி மாதிரி பொண்ணு பார்த்து வச்சு இருக்கேன். நீ என்னடான்னா இப்படி வாயும் வயிறுமா ஒருத்தியை கூட்டிட்டு வந்து இருக்கியே. பெத்தவங்க நாங்க என்ன செத்தா போய்ட்டோம். எங்க கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லாம கல்யாணம் செஞ்சுக்கிட்டு வந்து இருக்கே”
“அம்மா… கல்யாணம் எல்லாம் செய்யலை மா”
“என்ன கல்யாணம் செய்யலையா? கல்யாணம் செய்யாமலா இவ இப்படி வாயும், வயிறுமா இருக்கா? இப்படியா நாங்க உன்னை வளர்த்தோம்” மகன் தன்னை மீறி வேறு ஒரு பெண்ணை அழைத்து வந்து இருப்பதை ஏற்க முடியாமல் தவித்த அவரது தாய் மனம் மனம் போன போக்கில் பேசத் தொடங்கியது.
அவரது பேச்சை கேட்டு அக்னி அதிர்ந்ததை விடவும் அவளுக்கு அருகில் நின்று கொண்டிருந்த அந்தப் பெண் கூனிக்குறுகிப் போனாள். சுபத்ராவின் முன் நிற்க முடியாமல் அக்னியின் பின்னால் மறைந்து நின்று கொள்ள முயல அதுவும் சுபத்ராவின் பார்வைக்கு தவறாகவே பட்டது.
“இத்தனை பேர் நிற்கிறோம். நீ என்ன என் பிள்ளை பின்னாடி நிற்கிற… இப்படி எல்லாம் செஞ்சு தான் அவனை மயக்கி கைக்குள்ளே போட்டுக்கிட்டியா” என்று வார்த்தைகளை விட அதுவரை அமைதியாக நின்ற அக்னி கொதித்து எழுந்து விட்டான்.
“அம்மாஆஆ…” கர்ஜனையாய் அவன் குரல் வீடு முழுக்க எதிரொலித்தது. ஒற்றை விரல் உயர்த்தி தாயை எச்சரித்தவன் தகப்பன் புறம் திரும்பி பேசினான்.
“அப்பா.. நான் எல்லா விஷயத்தையும் தெளிவா சொல்லலாம்னு தான் இங்கே வந்தேன். ஆனா… இவங்க வரம்பை மீறி பேசிட்டாங்க. நான் தோப்பு வீட்டுக்கு போய் தங்கிக்கப் போறேன். இரண்டு நாள் போகட்டும். உங்க பொண்டாட்டிக்கு நான் சொல்றதை காது கொடுத்து கேட்கிற அளவுக்கு பொறுமை எப்போ வருதோ சொல்லி அனுப்புங்க. அப்போ வர்றேன். அதுவரைக்கும் நான் இங்கே வர மாட்டேன்”
“டேய்! அப்படியெல்லாம் இந்த வீட்டை உதறிட்டு நீ போக முடியாது.” மகன் தன்னை மீறி போவதை பார்த்து உள்ளம் பதைத்து பேசினார் சுபத்ரா.
“நீங்க பேசின பேச்சுக்கு இப்போதைக்கு… இந்த வீட்டை… மட்டும் தான்… உதறிட்டு போறேன். மேலே மேலே பேசி உங்க உறவையும் வெறுக்க வச்சிடாதீங்க” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவன் அந்தப் பெண்ணை இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.
வீட்டினுள் நுழைந்த சுபத்ராவின் மனதில் புயல் அடித்தது. மகன் வருகிறானே என்று பார்த்து பார்த்து செய்த உணவுகள் அவரைப் பார்த்து கேலியாய் சிரித்தன.
‘எல்லாம் அந்த சிறுக்கியால் வந்தது. அவளை ஓட ஓட விரட்டிட்டு என் மகனுக்கு நான் பார்த்த பொண்ணையே கல்யாணம் செஞ்சு வைக்கலை. நான் சுபத்ரா இல்லை’ அவர் மனம் கறுவியது.
மகன் மீது வைத்த பாசம் அவரை நேரடியாக சிந்திக்க விடாமல் செய்தது. அதன் விளைவு தான் ஜெனிபரின் இறப்பு.

Next Ud Eppo bby🤔 seekkiram pls I can’t wait 🫣