அத்தியாயம் 30
அருந்ததி அறையில் இருந்த டேபிளில் அமர்ந்து எதையோ கொறித்துக் கொண்டிருந்தாள். காலையில் தூங்கி எழுந்ததும் அக்னி பார்த்த முதல் காட்சி அது தான்.
‘ரொம்ப நேரம் தூங்கிட்டேனோ’ அவசரமாக எழுந்து மணியை பார்க்க அது காலை நான்கு மணி என்றது.
“என்ன மேடம் அதுக்குள்ளே எழுந்தாச்சா?” கண்களை தேய்த்து விட்டுக் கொண்டே எழுந்தான் அக்னி.
“நான் எங்கே எழுந்தேன்… பசி வந்துச்சு… அதான்… ரிஷப்ஷன்ல சொல்லி ஆர்டர் செஞ்சு சாப்பிடறேன்”
“எதுக்கு ஆர்டர் செஞ்சு சாப்பிடற? நான் தான் சாப்பிட வாங்கி வச்சு இருந்தேனே”
“ஹுக்கும்… எது அந்த பழம் எல்லாம் தானே? போங்க எனக்கு சாப்பிட்ட மாதிரியே இல்லை.. மறுபடியும் சீக்கிரமே பசி எடுக்குது.”
“இல்லைனா மட்டும் உனக்கு பசி எடுக்காதா?” என்று அதட்டலாய் கேட்டவனை உற்றுப் பார்த்தாள் அருந்ததி.
“இப்போ நீங்க என்ன சொல்ல வர்றீங்க? எப்போ பார்த்தாலும் நான் தின்னுட்டே இருக்கேன்னா?”
“அப்படியும் வச்சுக்கலாம்…”என்று அசட்டையாக தோள் குலுக்கியவனைப் பார்த்து ஆத்திரம் கொண்டவள் கையில் இருந்த ஸ்பூனை அவன் மீது எறிய லாவகமாய் தப்பித்து கொண்டான் அக்னி.
“ஒய்! என்ன கை நீளுது…நியாயமா பார்த்தா எனக்குத் தான் கோபம் வரணும். ஆனா நான் அமைதியா தான் பேசிட்டு இருக்கேன்”
“ஓஹோ… உங்களுக்கு கோபம் வேற வருமா? இல்லை வந்துடுமானு கேட்கிறேன். அதுவும் என்கிட்டே” எழுந்து இடுப்பில் கையை வைத்து முறைத்தவளை அவளே அறியாமல் ரசித்துக் கொண்டான் அக்னி.
“ஏன் வரக் கூடாதா? நானும் உனக்கு சாப்பிடுறதுக்கு பார்த்து பார்த்து ஹெல்த்தியா வாங்கி வச்சா… அதை விட்டுட்டு இஷ்டத்துக்கு வாங்கி சாப்பிடுற… உடம்பு என்னத்துக்கு ஆகுறது?”
“அதை எல்லாம் மனுசி சாப்பிடுவாளா? எப்போ பாரு அருகம்புல் ஜூஸ் , பழம்னு…”
“ஓ… வேற எப்படி மேடம் வேணும்?”
“நல்லா உப்பும், உறைப்புமா… ம்ம்ம் ச்ச்” சப்பு கொட்டினாள் அருந்ததி.
“காரமா தானே… நாளைக்கு மிளகாய் ஜூஸ் போட்டு வைக்கிறேன்”
“யோவ்! அது கும்பி பாகம்யா”
“யோவ் ஆஹ்? புருஷன்கிற மரியாதையே இல்லைல உனக்கு” அவன் கண்கள் சோம்பலாய் அவளை வருடியது.
“ஊருக்கு திரும்பி போற வரை இப்படி தான் இருக்கும்… இருப்பேன்”
“ஊருக்குப் போன பிறகு… திருந்திடுவியா?” பதிலுக்கு பதில் பேசும் அவள் இதழ்களை அவன் பார்வை முற்றுகையிட்டது.
“சே! சே! உங்களுக்கு பழகிடும்”
“வர வர உனக்கு கொழுப்பு ஜாஸ்தியாகிடுச்சு… வாயும் கூடிடுச்சு” பேசியபடியே அவளின் கவனத்தை கவராத வண்ணம் மெல்ல அவளை நெருங்கினான்.
“ஹுக்கும்… உங்களுக்கு சமாளிக்கத் திறமை இல்லைன்னு சொல்லுங்க…நான் பேசினா நீங்களும் பதிலுக்கு பேசுங்க… நான் என்ன வேண்டாம்னா சொன்னேன். நான் எது செஞ்சாலும் திருப்பி செய்ய வேண்டியது தானே?” அவளின் கவனம் முழுக்க தட்டில் இருந்த உணவில் மட்டுமே.
“அப்போ எனக்குத் திறமை இல்லைன்னு சொல்ற” அவன் பார்வை முழுக்க பஞ்சுமிட்டாயாய் பளபளத்து மின்னிய அவள் உதடுகளில் நிலைத்து இருந்தது.
“ஆமா… ஆமா… ஆமா மிஸ்டர் ஃபயர் எஞ்சின்”
“சரி திறமையை காட்டிட்டா போச்சு…” என்றவன் அவள் உணரும் முன்னரே அவளை இழுத்து தன்னுடைய கை வளைவிற்குள் கொண்டு வந்து இருந்தான்.
வாயில் சோற்றை நிறைத்துக் கொண்டு அதை முழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் பரிதாபமாய் நின்றாள் அருந்ததி.
“ஏதோ சொன்னியே… இப்போ சொல்லு?” காதை அவளது இதழ்களுக்கு அருகில் கொண்டு வைத்து கொண்டான்.
மூச்சு விடவும் பயந்தவளாய் நின்றாள் அருந்ததி.
“பேசுங்க மேடம்…” அவன் கைகள் அவள் கன்னங்களை பற்றி இருந்தது.
உடல் முழுக்க அதிர பயத்தில் கண்களை வேகமாக மூடிக் கொண்டாள் அருந்ததி.
“அதி”
“…”
“அதி மா”
“….”
“ஒரே ஒரு முத்தம் கொடுத்துக்கட்டுமா?”
“….”
“கல்யாணம் ஆகி இத்தனை நாள் ஆச்சு… ஹனிமூன் வந்துட்டு ஒரு முத்தம் கூட கொடுக்கலைனா நாளை பின்னே வரலாறு தப்பா பேசாது” அவன் கண்கள் அவள் முகத்தையே மொய்த்துக் கொண்டிருந்தது. அருந்ததி பதில் சொல்லவே இல்லை. அவள் உடல் முழுக்க அதிர்வதை அவனால் உணர முடிந்தது. தனக்குள் சிரித்துக் கொண்டவன் அவள் கன்னங்களை லேசாய் இறுக்கினான்.
“கண்ணைத் திறந்து என்னைப் பார் அதி”
“….”
“பிடிக்கலையா அதி” அவன் குரல் அவளை கிறங்கடித்தது. விரல்களால் மெல்ல அவள் முகத்தில் கோலம் வரைந்தான்.
அருந்ததிக்கு வெளியே சொல்ல முடியாத தவிப்பு… கண்களை திறக்கவில்லை அவள். சில நொடிகள் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் அமைதியாய் விலகிவிட, அப்பொழுது தான் அருந்ததிக்கு அவளின் தவறு உறைக்க… வேகமாய் நகர்ந்து அவன் கரங்களை பற்றினாள்.
அவன் எதிர்பார்த்ததும் அதைத் தானே… உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக திரும்பி நின்றான்.
“அ.. அது… நான்…” வார்த்தை வராமல் தடுமாறினாள் அவள்.
கைகளை நெஞ்சுக்கு குறுக்கே கட்டிக் கொண்டு அவளது தவிப்பையே சுவாரசியமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் அக்னி.
“வேணும்னு எதுவும் செய்யலை…”
“நான் இன்னும் பிரஷ் பண்ணலை … பண்ணிட்டு வந்துடட்டுமா? முதல் முத்தம் வேற” என்று கேலியாக கேட்டவனை முறைத்து பார்த்தவள், “போடா” என்று சத்தமாக சொல்லி விட்டு அறையை விட்டு வெளியே ஓடி விட்டாள்.
ஓடும் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டவன் குளித்து விட்டு வெளியே வந்தான்.
அருந்ததி இன்னும் அறைக்குள் வந்து சேரவில்லை. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். ஹோட்டலின் கீழே இருந்த பார்க் போல அமைக்கப்பட்டு இருந்த இடத்தில் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தாள்.
‘சரியான வாலு’ மனதுக்குள் செல்லம் கொஞ்சிக் கொண்டான் மனையாளை.
அவள் அன்றைய தினம் அவனை தினம் தினம் கொடுமைப்படுத்தப் போவதாக சொல்லிக் கொண்டாலும், அவளால் அதை செய்யமுடியவில்லை.
தண்டனை என்று எதைக் கொடுத்தாலும் அதில் அவளையே சிக்க வைத்து வேடிக்கைப் பார்க்கும் அக்னியை சமாளிக்க முடியாமல் வெற்றிகரமாக பின் வாங்கி விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் கெத்தாக திரிந்தாள்.
அவள் கொடுக்கும் தண்டனை எல்லாம் அவளுக்கே ஆப்பாக திருப்பி வைக்கப்பட்டது அக்னி புத்திரனால். இரண்டு நாட்களுக்கு முன்பாகக் கூட ஊர் சுற்றி விட்டு, அறைக்கே உணவை வரவழைத்து உண்டார்கள். அசதியில் இருவருக்குமே கண்ணை சுழற்றிக் கொண்டு தூக்கம் வர, தூங்க முயன்றவனை தடுத்து நிறுத்தினாள் அருந்ததி.
“எங்கே பெட்டுக்கு வர்றீங்க?”
“தூங்கத் தான்”
“அதெல்லாம் வேண்டாம்… நீங்க உட்கார்ந்து இருங்க”
“ஏன்?” அக்னிக்கு புரியவில்லை.
“பனிஷ்மென்ட்…”
“ஓ…”
“இன்னிக்கு நைட் பூரா நான் தூங்குவேனாம்… நீங்க தூங்காம எனக்கு காவல் காத்துக்கிட்டு இருங்க” என்று சொல்ல… சட்டென்று ஒத்துக் கொண்டான் அக்னி.
“ஓகே..” அசட்டையாய் ஒரு தோள் குலுக்கல்.
‘அவ்வளவு தானா?’ சந்தேகமாய் அவனைப் பார்த்தவள் படுக்கையில் படுத்துக் கொண்டாள்.
படுக்கையில் படுத்தவளுக்கு உறக்கம் வரவில்லை. ஏதோ உறுத்தல்… புரண்டு படுத்தவள் ஏதோ தோன்ற கண்ணைத் திறந்து பார்க்க, அக்னி இருந்த இடத்தில் இருந்து அவளையே தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘என்ன பார்வை அது’ அத்தனை குளிரையும் மீறி அவளுக்கு வியர்த்தது. அங்குலம் அங்குலமாய் அவளை பிய்த்துத் தின்னும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஏன் இப்படி பார்க்கறீங்க?”
“சும்மாஆஆஆ” அவன் குரல் உல்லாசம் சுமந்திருந்தது.
“வேற பக்கம் திரும்புங்க…” என்றதும் சட்டென்று திரும்பி அமர்ந்து கொண்டான். பெருமூச்சொன்றை வெளியேற்றியவள் மீண்டும் தூங்க முயல, மறுபடியும் அதே உறுத்தல்.
வேகமாக திரும்பி அவனைப் பார்த்தாள். அவன் சமத்தாக திரும்பி தான் அமர்ந்து இருந்தான்.
‘அப்புறமும் ஏன் இப்படி?’ தலையை குடைந்து கொண்டு யோசித்தவள் ஏதோ நினைவுடன் அவன் பார்வை செல்லும் திசையை தொடர்ந்தவள் அதிர்ந்தாள்.
கண்ணாடியில் அவளது உருவத்தைத் தான் இமைக்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.
‘அட சண்டாளா’
“என்ன செய்றீங்க?”
“என்ன செய்றேன்?”
“இப்படி செய்யாதீங்க”
“எப்படி செய்ய வேண்டாம்?” கல்லுளி மங்கனாய் அவன் கேட்க, அவள் என்னவென்று சொல்லுவாள்? பதில் சொல்ல முடியாமல் தடுமாறி திருதிருத்தாள்.
“நீங்க திரும்பியே உட்காருங்க… ஆனா கண்ணை மூடிக்கோங்க… போனா போகுது… உட்கார்ந்துகிட்டே தூங்குங்க” அவனை சமாளிக்கும் விதம் தெரியாமல் அவள் தான் இறங்கி வர வேண்டியதாய் போயிற்று.
“சரி…” அதையும் அவன் உடனே ஒத்துக்கொள்ள.. அவளுக்குத் தான் மனம் குரங்காய் யோசிக்கத் தொடங்கியது.
அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டவள் தூங்காமல் யோசனையிலேயே இருக்க, அக்னியின் சிரிப்பு சத்தம் அவளை கலைத்தது.
திரும்பி பார்த்தாள். உட்கார்ந்த நிலையில் கண்கள் மூடியபடியே சிரித்துக் கொண்டிருந்தான்.
“எதுக்கு இப்போ சிரிக்கறீங்க?”
“ஒரு விஷயம் யோசிச்சேன் சிரிப்பு வந்துடுச்சு?”
“என்னது?”
“கல்யாணம் ஆன பிறகு நமக்கு பர்ஸ்ட் நைட் ஏற்பாடு நடந்துச்சுல…”
“ஆ… ஆமா… அதுக்கென்ன இப்போ?”
“அன்னிக்கு நீ கூட புடவை கட்டி இருந்தியே” என்று கேட்க அவளுக்கு எரிச்சல் வந்தது. அந்த நாளில் நடந்த நிகழ்வுகள் இனிமையானதா என்ன?
“அதுக்கு இப்போ என்ன வந்துச்சு?”
“அன்னிக்கு உன்னோட இடுப்புல ஒரு மச்சம் பார்த்தேன்…”
“எதே?” அதிர்ச்சியில் வேகமாக படுக்கையில் இருந்து துள்ளி எழுந்தாள் அருந்ததி.
“இந்த நினைத்தேன் வந்தாய் படத்துல ரம்பாவுக்கு இருக்கும் பாரு… தொப்புளுக்கு கொஞ்சம் கீழே… அது மாதிரி இல்லாம தொப்புளுக்கு மேலே இருக்குல்ல… உனக்கு”
“அதைப் பத்தி இப்போ எதுக்கு நினைச்சுக்கிட்டு இருக்கீங்க?” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.
“வேற என்ன செய்ய? நீ என்ன தான் பெரிய மனசு பண்ணி உட்கார்ந்துகிட்டே தூங்க சொன்னாலும் இப்படி தூங்கறது எனக்கு வசதியா இல்லை… சும்மா இருக்கிற மனசு கண்டதையும் நினைக்கத் தான் செய்யும்.”
“அதெல்லாம் நினைக்கக்கூடாது… ஒழுங்கா தூங்குங்க…”
“சரி” என்றவன் நல்ல பிள்ளையாய் கண்ணை மூடிக் கொள்ள அவளுக்குத் தான் தூக்கம் தூரப் போனது.
ஒரு சில நிமிடங்கள் அமைதியில் கழிய… அக்னி அவளை மென்குரலில் அழைத்தான்.
“அதி…”
“…”
“அதிமா…”
“என்ன வேணும் உங்களுக்கு இப்ப?”
“இல்லை உன்னோட பின் கழுத்தில் ஒரு தழும்பு இருக்கே… அது எப்படி வந்தது?” என்று கேட்க அவள் கரங்கள் வேகமாக போர்வையை கழுத்து வரை இழுத்து விட்டுக் கொண்டது.
“போன வாரம் என் கண்ணுல பட்டுச்சு… இப்போ நியாபகம் வந்துச்சு”
“கண்டதையும் நினைக்காம பேசாம தூங்கப் போறீங்களா இல்லையா?”
“நீ சொல்றது புரியுது அதிமா… ஆனா இந்த மூளை என் சொல் பேச்சு கேட்கவே மாட்டேங்குது… அது பாட்டுக்கு இஷ்டத்துக்கு எதையாவது யோசிச்சுகிட்டே இருக்கு”
“நீங்களும் தூங்காம என்னையும் தூங்க விடாம தொல்லை செய்றீங்க?” குற்றம் சாட்டினாள் அருந்ததி.
“நான் ஒண்ணுமே செய்யலையே… நீ கொடுத்த பனிஷ்மென்ட்டை தான் மறுத்து பேசாம ஏத்துகிட்டேன்ல…”
“அய்யோ ராமா… தயவு செஞ்சு நீங்க மேல வந்தே தூங்குங்க…” கையெடுத்து கும்பிட்டு விட்டாள் அருந்ததி.
“வேணாம் மா… எனக்கு தூக்கத்துல பக்கத்துல இருக்கிறவங்க மேல கால் போடுற பழக்கம் இருக்கு.”
“ஆஆஆஅஆஆ. நேத்து வரை இப்படி ஒரு பழக்கம் இருக்குனு நீங்க சொல்லவே இல்லை.. இன்னிக்கு மட்டும் புதுசா என்ன வந்தது?”
“நான் இங்கேயே இருக்கேன் அதிமா… நீ கொடுத்த தண்டனையை மனசார ஏத்துக்கிறேன்” என்று சினிமா பாணியில் வசனம் பேச, அவள் பல்லைக் கடித்தாள்.
அவளால் அவனை அங்கே உட்கார வைத்துக்கொண்டு இனியும் தூங்க முடியும் என்று தோன்றவில்லை. அடுத்து அவன் எந்த இடத்தைப் பற்றி யோசிப்பான் என்பதே அவளுக்கு திகிலை கிளப்பியது.
அவனிடம் சொல்லவும் முடியாது. கேட்டால் ஒன்றுமே தெரியாதவன் போல சாதிப்பான். அமைதியாக இருந்தால் அவளை இம்சித்து தொலைப்பான். இதற்கு அவனை தூங்க விடுவதே சிறந்தது என்ற முடிவுக்கு அவள் வந்து விட்டாள்.
“நீங்க இங்கேயே வந்து படுத்து தொலைங்க”
“அப்போ பனிஷ்மென்ட்?”
“ஒரு மண்ணும் வேண்டாம்”
“நீ சொன்னா சரிதான்….” வேகமாக எழுந்து அவளுக்கு அருகில் படுத்தவன் அவள் மீது கையை போட்டபடி நொடியில் உறக்கத்தை தழுவ, உறங்கும் அவன் முகத்தையே சில நொடிகள் பார்த்த அருந்ததி எதுவும் பேசாமல் அவன் கை அணைப்பிலேயே உறங்கத் தொடங்கினாள்.
ராணுவத்தில் பணிபுரியும் பொழுது கொட்டும் பனியில் காடுகளில், மலைகளில் எப்படி எப்படியோ தூங்கி இரவைக் கழித்தவன் அவன் என்பதை அவள் மறந்து போனாளா என்ன? இல்லை அவளுக்கும் புரிகிறது. அவன் தன்னை நெருங்கி வருகிறான் என்பது.
ஒருவர் அருகில் மற்றொருவர் … உள்ளத்தால் நெருக்கம்… உடல் அளவிலும் நெருக்கம்… அடுத்த கட்டத்திற்கு செல்லத் தயார் என்று அக்னி கோடு காட்டி சொல்லி விட்டான். அருந்ததிக்கு பலவித குழப்பம். திருமணத்திற்கு முன்பும், பின்பும் அவன் நடந்து கொண்ட முறை தான் அதற்கு காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை. சட்டென்று அவளால் அவனை ஏற்றுக் கொண்டு அவனுடன் வாழவும் முடியவில்லை. ஏற்கனவே காயம் கொண்ட அவன் மனதை நோகடிக்கவும் அவளுக்கு மனம் ஒத்துழைக்க மறுத்தது.
அவள் அவனிடம் எதிர்பார்த்தது காதலையும் தாண்டிய ஒன்றாக இருந்தது.
சரணாகதி
முழு சரணாகதி
என்றைக்கு அது நடக்கிறதோ அன்று அவர்கள் இருவரின் வாழ்வும் அடுத்த கட்டத்திற்கு செல்லும்.
ஷாக்கடிக்கும்…