MMK tamil novels 10

2
2020

அத்தியாயம் 10

அருந்ததியின் பதிலில் மொத்த குடும்பமும் ஆர்வமானது. ஏன்? எதற்கு? யார்? என்று எந்த கேள்விக்கும் பதில் தெரியாமல் சுற்றிக் கொண்டு இருந்தவர்களுக்கு இப்பொழுது அவள் சொல்லும் பதிலை வைத்து ஏதேனும் கண்டுபிடிக்க முடியுமா என்ற ஆர்வத்துடன் அவள் முகத்தையே பார்த்தனர்.

“அவன் கையில் ஒரு டாட்டூ இருந்தது…”

“டாட்டூ வா? என்ன வரைஞ்சு இருந்தது…”அக்னிபுத்திரன் பரபரப்பானான்.

“அது பார்க்க ஒரு கிரீடம் மாதிரி இருந்தது…ராஜாவோட கிரீடம்”

“அருந்ததி… கொஞ்சம் இங்கே வா” என்றவன் அவனது மொபைலில் நெட்டில் நுழைந்து சில டாட்டூ மாடல்களை எடுத்து அவளிடம் காட்டினான்.

“இதுல ஏதாவது நீ பார்த்த மாதிரி இருந்ததா?”

“கிட்டத்தட்ட… ஆனா இந்த படங்களுக்குள்ளே பெருசா எந்த வித்தியாசமும் இல்லையே… எல்லாம் எனக்கு ஒரே மாதிரி தான் இருக்கு…ஆனா நான் பார்த்தது கொஞ்சம் வித்தியாசமா வேற மாதிரி இருந்தது.”

“அதுவும் சரிதான்… வேணும்னா இப்படி செய்யலாம்… போலீஸ் டிபார்ட்மெண்டில் நாம சொல்ற விஷயத்தை அப்படியே படம் வரைஞ்சு தர ஆள் இருக்கு.. அவங்ககிட்டே போய் நீ பார்த்ததை சொன்னா… அவங்க வரைஞ்சு கொடுப்பாங்க… இல்லைன்னா உனக்கு படம் வரையத் தெரிஞ்சா நீயே வரையலாம்”

“எனக்கு கொஞ்சம் சுமாரா வரையத் தெரியும்… நான் ஒரு இரண்டு நாளில் வரைஞ்சு தந்திடறேன்…”

“என்ன இரண்டு நாளா? அந்த அளவுக்கு எல்லாம் நம்மகிட்டே நேரம் இல்லை.. இன்னைக்கு நைட்டே வரைஞ்சு கொடு…” அவசரபடுத்தினான் அக்னி.

“இப்படி என்னை அவசரப்படுத்தினா அப்புறம் நான் பதட்டத்தில் தப்பா வரைஞ்சு கொடுத்துடுவேன்” என்று அவள் குரலை உயர்த்திப் பேச… அக்னிபுத்திரன் அவளை தீர்க்கமாக பார்த்து வைத்தான்.

“ஏன் இப்படி தெனாவெட்டா பேச மாட்ட?… நான் பாட்டுக்கு சிவனேன்னு ஊரில் இருந்தேன். தாத்தாவோட உயில்.. அது, இதுன்னு காரணம் சொல்லி என்னை இங்கே வரவழைச்சீங்க… நான் வந்த மறுநாளே உங்க வீட்டில் இப்படி எல்லாம் நடக்குதுன்னு அந்த போலீஸ்காரர் என்னை தான் சந்தேகமாக பார்க்கிறார்.” என்று எரிச்சலோடு கூற… இப்பொழுது பேசுவது கோகிலாவின் முறையானது.

“தம்பி… அவளே பயந்து போய் இருக்கா… இதுல நீங்களும் வேற கோபப்பட்டா எப்படி? நடந்த விஷயத்தில் இருந்து வெளியே வர அவளுக்கும் கொஞ்ச அவகாசம் தேவைப்படும் இல்லையா?” என்று பெண்ணுக்கு பரிந்து கொண்டு பேச… இப்பொழுது அக்னி உண்மையில்  கோபாக்னியானான்.

“ஏங்க… நீங்க விஷயம் புரிஞ்சு பேசறீங்களா.. இல்ல புரியாம பேசறீங்களா? இல்ல என்னைப் பார்த்தா உங்களுக்கு எல்லாம் எப்படித் தெரியுதுன்னு கேட்கிறேன்… உங்க பொண்ணு இன்னிக்கு தப்பிச்சது ஒண்ணும் சாதாரண விஷயம் இல்லை… நீங்க என்னவோ பொறுமையா பத்து நாள் கழிச்சு பார்த்துக்கலாம்ன்னு சொல்வீங்க போல…

எதிராளி நம்மை அடுத்ததா எப்ப வேணா தாக்கலாம். அதுக்கு நாம தயாராகணும். அதை விட முக்கியம் எதிராளி யாருன்னு கண்டுபிடிக்கணும்.  நான் இத்தனை டென்ஷனில் இருக்கேன். ஆனா உங்க யாருக்கும் அப்படி ஒரு நினைப்பு இருக்கிறதாவே தெரியலையே” என்று ஏகத்துக்கு எல்லாரையும் சேர்த்து திட்ட.. சற்று நேரம் அந்த அறையில் மௌனம் மட்டுமே ஆட்சி செலுத்தியது.

“இதோ பாருங்க… இதை எல்லாம் நானே நேரடியா இறங்கி செய்யணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை.. போலிசே கண்டுபிடிக்கட்டும்ன்னு நான் அமைதியா இருந்துட்டா… உங்களால என்ன செய்ய முடியும்?… இனி நீங்களாச்சு.. உங்க வீட்டு விஷயமாச்சு…” என்று முகத்தில் அடித்ததைப் போல பேசியவன் அறையை திறந்து கொண்டு புயலென வெளியேறி தன்னுடைய அறைக்குள் போய் படுத்து கொண்டான்.

அந்த வீட்டில் உள்ளவர்களை காப்பாற்ற வேண்டும் என்று அன்றைய தினம் காலையில் அவன் எடுத்த முடிவு இப்பொழுது அவனுக்கு கொஞ்சமும் நினைவில் இல்லை. அத்தனை எரிச்சலாக இருந்தது.

‘சை! என்ன குடும்பம் இது… எதுக்காக இப்படி ஒரு இக்கட்டில் வந்து மாட்டிக்கிட்டேன் நான்…’ என்று அவன் எரிச்சல் மிகுதியுடன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது நீமோ வந்து அவன் கால்களை பற்றினான்.

“த்ச்… நீமோ தள்ளிப்போ… இப்போ நான் விளையாடுற மூடில் இல்ல…” என்று நீமோவை தள்ளி விட… நீமோ அவன் சொல்வதை கொஞ்சமும் கவனிக்காமல் மீண்டும் வந்து அவன் பேண்ட்டை வாயால் கவ்வி இழுக்கத் தொடங்கினான்.

“லொள்…லொள்…”

“டேய்… என்னை கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடேன்” என்று கோபமாக கத்தியவன்  அவனை அடிக்க கை ஓங்கும் சமயம்… அறைக்கதவு திறந்து கொண்டது.

வேகமாக உள்ளே வந்தார் சிவநேசன்…

“தம்பி… உங்களைப் பார்க்க உங்க அப்பா வந்திருக்கார்… ஹாலில் வெயிட் பண்ணிட்டு இருக்கார்… கொஞ்சம் வர்றீங்களா?” என்று கேட்க… அர்த்தத்துடன் நீமோவைப் பார்த்தவன் எதுவுமே பேசாமல் அறையை விட்டு வெளியேற… நீமோவும் அவன் பின்னாலேயே நடந்தது.

மகனைப் பார்த்ததும் நேசமணி பதட்டத்துடன் அவனது தலைமுதல் கால் வரை ஆராய்ந்தார்.அவரது காலடியில் வாலை ஆட்டிக் கொண்டு அமர்ந்த நீமோவை அவர் கண்டுகொள்ளவேயில்லை.அவர் பார்வை மகனை விட்டு இம்மியும் நகரவில்லை.

இன்றைய இங்கே நடந்த குளறுபடிகள் எல்லாம் தந்தையின் காதுக்கு போய் விட்டது போல என்று எண்ணியவன் ஒரு பெருமூச்சுடன் அவருக்கு அருகில் போய் அமர்ந்தான்.

“தம்பி… நான் என்னென்னவோ கேள்விப்பட்டேனே… கேட்டதும் மனசு பதறிடுச்சு… அம்மாவை பக்கத்துக்கு வீட்டு விசாலாட்சியிடம் அம்மாவிடம் சொல்லி பார்த்துக்க சொல்லிட்டு அரக்கபறக்க ஓடி வந்தேன்…உ..உனக்கு ஒண்ணுமில்லையே” என்று கலவரத்துடன் கேட்டவரை இரக்கத்துடன் பார்த்தான் அக்னி.

‘அம்மா செய்த தவறுக்கு இவரையும் சேர்த்து வாட்டுகிறேனோ’ என்று வருந்தினான்.

அவசரமாக அந்த வீட்டு ஆட்களுக்கு மின்னல் வேகத்தில் ஒரு பார்வை பரிமாற்றத்தை நடத்தியவன் அவரைப் பார்த்து இலகுவாக புன்னகைத்தான்.

“அப்பா..எதுக்கு இத்தனை பதட்டம்… இன்னிக்கு நடந்தது ஒரு விளையாட்டு… அதுக்குப் போய் இவ்வளவு சீரியஸ் ஆவாங்களா?” என்று அவரை தைரியப்படுத்த முனைந்தான்.

“இல்ல தம்பி.. நான் என்னென்னவோ கேள்விபட்டேனே…”

“என்ன கேள்விபட்டீங்கப்பா” கண்ணுக்குத்தெரியாத கூர்மையுடன் தந்தையின் முக பாவனைகளை அளவிடத் தொடங்கினான்.

“இங்கே வீட்டில் பாம்… போலீசெல்லாம் வந்தாங்களாமே… மோப்ப நாய் கூட வந்துச்சாம்” தந்தையின் குரலில் தெளிவில்லை என்பதை உணர்ந்தவன் மனதுக்குள் வருந்தினான்.

“அப்பா… அது யாரோ கிளப்பி விட்ட புரளி… போலீஸ் வீடு பூரா சோதனை செஞ்சு ஒண்ணுமே இல்லைன்னு உறுதி செஞ்சுட்டு தான் போனாங்கப்பா.. ஸோ… உங்க கவலையும், பதட்டமும் அனாவசியம்… தந்தையை அமைதிப்படுத்த முயன்றவன் கண்களால் சிவநேசனை துணைக்கு அழைக்க.. சிவநேசனும் நொடியில் சூழலை கணித்துக் கொண்டு முகத்தில் புன்னகையை தவழ விட்டார்.

தங்களுக்காக இல்லாவிட்டாலும் நேசமணியை வருந்த வைக்க வேண்டாம் என்ற எண்ணத்துடன் மொத்த குடும்பமும் தங்களுடைய கவலைகளையும், பயங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு இயல்பாக இருப்பது போல காட்டிக் கொண்டனர்.

“அட என்ன சம்பந்தி.. நீங்க இத்தனை தூரம் கவலைப்படுற அளவுக்கு எதுவுமே இல்லை… இவ்வளவு நேரம் நாங்க எல்லாம் சாப்பிட்ட பிறகு ஒண்ணா உட்கார்ந்து அரட்டை அடிச்சுட்டு இப்போ தான் படுக்கப் போனோம்” என்று இயல்பான குரலில் பேசி சமாளிக்க…

அந்த சூழலிலும் அவர் தன்னுடைய தந்தையை விழித்த சம்பந்தி என்ற வார்த்தை அவனுக்குள் வேப்பங்காயாய் கசந்து வழிந்தது.

‘நானே இந்த கல்யாணத்தை நிறுத்த போராடிட்டு இருக்கேன்… இவர் என்னடான்னா  கேப் கிடைக்கிற இடத்தில் எல்லாம் எனக்கு ஆப்பு அடிக்கிறாரே’ என்று எண்ணி நொந்து போனான்.

அந்த நேரம் மட்டும் அவனுடைய பார்வையை சிவநேசன் நேருக்கு நேராக சந்தித்து இருந்தால் மனுசர் அந்த ஊரை விட்டே ஓடி இருப்பார்… அத்தனை ‘பாசத்துடன்’ அவரை பார்த்துக் கொண்டிருந்தான். அவரின் நல்ல நேரமோ அல்லது அக்னியின் கெட்ட நேரமோ அவருக்கு போன் வர… நேசமணியிடம் கண் அசைவில் விடை பெற்று சென்று விட்டார். கோகிலா அவருக்கு சாப்பிட உணவு தயார் செய்வதற்காக கிச்சனுக்குள் நுழைந்து ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.

ஹாலில் அருந்ததியும், அக்னியும், நேசமணியும் மட்டுமாக தனித்து பேசிக் கொண்டிருக்க… அக்னிக்கு ஆப்பு தயாரானது.

“அம்மாடி அருந்ததி… என்னோட பையனை உனக்கு பிடிச்சு இருக்கு தானே?”

‘பிடிக்கலைன்னு சொல்ல தான் ஆசை… ஆனா என்ன செய்ய? என்னோட அப்பர் பீல் பண்ணுவாரே’ என்று எண்ணியவள் வெளியே ‘ஈஈஈ’ என எல்லா பற்களையும் காட்டி சிரித்து சமாளித்து வைத்தாள்.

“உங்க தாத்தா சொன்னதுக்காக நீ அவனை கல்யாணம் செஞ்சுக்க சம்மதிச்சு இருந்தாலும் என்னோட பையன் ரொம்ப நல்லவன் மா”

‘இவன் தானே… ஆமா.. ரொம்ப நல்ல நல்லவன்ன்ன்ன்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட அருந்ததியின் உதடுகள் ஏளனமாக வளைய அக்னியின் முகம் கடுகடுத்தது.

‘என்னைப் பத்தி கான்டக்ட் (Conduct) சர்டிபிகட் கேட்க.. இந்த அரவை மெஷின் தான் கிடைச்சாளா? அவளுக்கு சோற்றை தவிர வேறு எதைப்பத்தி தெரியும்?’ என்று எண்ணியவனின் உதடுகள் அவளைக் காட்டிலும் அதிகமாக வளைய… அருந்ததியோ அவனது நக்கலை எல்லாம் சூவென விரட்டித் தள்ளினாள்.

‘எப்பேர்ப்பட்ட சந்தர்ப்பம் கிடைச்சு இருக்கு… இனியொருமுறை இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமோ என்னவோ’ என்ற எண்ணத்துடன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு நேசமணியின் புறம் திரும்பினாள்.

“என்ன செய்றது அங்கிள்… அவர் மிலிட்டரியில் இருந்தவர்… பார்டரில் எதிர்களோடு சண்டை போட்டவர்.. எந்நேரமும் மெஷின் கன், பீரங்கியோட குடும்பம் நடத்தினவர்… அவரைப் போய் அமைதியான இடத்தில் இருக்க சொன்னா.. அவருக்கு அது கஷ்டம் இல்லையா?” என்று சொல்ல அக்னி பல்லைக் கடித்தான்.

‘என்னை சண்டைக்காரன்னு சொல்லுறா’

“ஏன்மா உன்னிடம் இவன் எதுவும் சண்டை போட்டானா?” நேசமணியின் பார்வை சந்தேகத்துடன் மகனை நோக்கி பாய… அக்னிக்கு உள்ளுர ஏற்பட்ட கோபத்தை வெளிபடுத்தவும் முடியாமல், மறைக்கவும் முடியாமல் போராடினான்.

“ஆமா அங்கிள்… ரொம்பவும் ஸ்ட்ரிக்ட் ஆபிசரா நடந்துக்கிறார்…’ வராத கண்ணீரை துடைத்து விட… இப்பொழுது தந்தையின் பார்வையில் அதிருப்தி தெரிவதை உணர்ந்து கொண்ட அக்னிக்கு நிலைமையை எப்படி சமாளிப்பது என்றே புரியவில்லை.

“அது மட்டும் இல்லை அங்கிள்… நீமோவை வச்சு என்னை மிரட்டுறார்…”

அப்பாவின் பார்வையில் ‘அட கிராதகா’ என்னும் அழைப்பு இருக்க.. உடனடியாக அவளது பேச்சை நிறுத்தியாக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தான் அக்னி.

“அப்பா போலீஸ் வேலைன்னா சும்மாவா… அதுக்கு நிறைய ட்ரைனிங் எடுக்கணும்…நான் இவளுக்கு ட்ரைனிங் கொடுக்க ஆரம்பிச்சு முழுசா ஒரு வாரம் கூட ஆகல…”

“அதுக்குள்ளேயே இந்த பொண்ணு இப்படி சொல்லுதுன்னா நீ எந்தளவுக்கு அந்தப் பொண்ணை பாடாய் படுத்தி இருக்கணும்” என்று அவர் நியாயம் கேட்க… அக்னி ஒன்றுமே சொல்லாமல் மௌனமாக அருந்ததியை ஒரு உஷ்ணபார்வை பார்த்து வைத்தான்.

“அக்னி… நீ உலக விவரம் தெரிஞ்சவன்… வெளியில் இருக்கிற மாதிரி வீட்டிலும் விறைப்பா இருந்தா வாழ்க்கை ருசிக்காது டா… இந்த பொண்ணு நீ கல்யாணம் செஞ்சுக்கப் போற பொண்ணு… உன்னில் பாதி… அப்படி இருக்கும் பொழுது இப்படி நடந்துக்கிறது ரொம்ப தப்புடா…”

‘என்னது இவளை கல்யாணம் செய்யப் போறேனா? யார் சொன்னது? அப்படியே நம்பிட்டு இருங்க.. இவளே தானாகவே வலிய வந்து இவனை நான் கல்யாணம் செய்ய மாட்டேன்னு சொல்ல வைக்கிறேன்’

“அம்மாடி அருந்ததி… அவன் கொஞ்சம் விவரமில்லாம ஏதாவது செஞ்சாலும் நீ கொஞ்சம் அனுசரித்து போம்மா…”

“சரி அங்கிள்…”

“அதையும் மீறி இந்த பய ரொம்ப வம்பு செஞ்சான்னு வை… என்கிட்டே சொல்லு… நான் பார்த்துக்கிறேன்” என்று மிடுக்கோடு சொல்ல… அருந்ததி முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு தலையை அசைத்தாள்.

“எப்படி அங்கிள்… நீங்க வெளியூரில் இருக்கீங்க… இவர் இங்கே என்னை கொடுமை செய்றதை எல்லாம்…”

“அட… ஒரு போன் போடும்மா… இது தான் என்னோட நம்பர்”

அவர்களின் போன் நம்பர் பரிமாறல்கள் அனைத்தையும் வேறுவழியின்றி மௌனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் அக்னி.

“அண்ணா.. டிபன் ரெடியாகிடுச்சு… சாப்பிடலாம் வாங்க” என்று கோகிலா அழைக்க… நேசமணியும் அவர்களின் அழைப்பை ஏற்றவர் மரியாதைக்காக இரண்டு இட்லிகளை சாப்பிட்டவர் அத்துடன்  எழுந்து கொள்ள… சிவநேசன் பதறினார்.

“என்ன சம்பந்தி…இன்னும் கொஞ்சம்…”

“மன்னிக்கணும் சம்பந்தி.. அக்னியோட அம்மா அங்கே தனியா இருக்கா… இவனுக்கு என்ன ஆனதோன்னு பதட்டத்தில் அவளை பக்கத்து வீட்டில் ஒப்படைச்சுட்டு வந்தேன்… நான் சீக்கிரம் போயாகணும்” என்று சொன்னவரின் நிலை புரிந்ததால் யாரும் அவரை தடுக்கவில்லை.

அர்த்த ராத்திரியில் அவரின் வீட்டுக்கு செல்ல ரயில் இல்லாததால் வீட்டில் இருந்து கிளம்பியவரை அக்னி தன்னுடைய புல்லட்டில் கொண்டு போய் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டவன், புயல் வேகத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான்.

‘எவ்வளவு திமிர் அவளுக்கு.. அப்பா பக்கத்தில் இருக்கும் தைரியத்தில் என்ன பேச்சு பேசுறா…’ என்ற ஆத்திரத்துடன் வந்தவன்… மற்றவர்கள் உறங்கி இருக்க… அவளை தேடி அவளது அறைக்குள் நுழைந்தான் அக்னி.

ஷாக்கடிக்கும்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here