MMK tamil novels 8

3
1263

அத்தியாயம் 8

முடிந்த அளவு உணவை உண்டு வயிற்றை நிரப்பிக்கொண்டு கொண்டு எத்தனை தூரம் அக்னியை கோபப்படுத்த முடியுமோ அத்தனை தூரம் அவனை வெறுப்பேற்றி விட்டு மெதுவாகவே அன்னநடை நடந்து கீழே வந்தாள் அருந்ததி. இருவரும் மனதில் ஆயிரம் திட்டங்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார்கள். இவளுக்கு அவனை திருமணம் செய்ய வேண்டும். அதே நேரம் அவன் கொடுக்கும் அத்தனை சோதனைகளையும் கடந்தாக வேண்டும். அவனுக்கோ அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியாக வேண்டும். அதையும் அவள் வாயாலேயே சொல்ல வைக்க வேண்டும் என்ற கடினமான பொறுப்பு  இருந்தது.

ஆம்! அது கடினமாகத் தான் இருந்தது அவனுக்கு. அவர்கள் வீட்டு ஆட்களை நேரடியாக எதிர்க்காமல் வெற்றியை அடைய வேண்டும். அவள் தான் அவன் எந்த பந்தை போட்டாலும் அதில் சிக்சர் அடித்து தள்ளுக்கிறாளே… அவனும் அவளை பார்த்த நாள் முதல் எதையாவது செய்து கொண்டு தான் இருக்கிறான். ஆனால் அவள் கொஞ்சமும் அசைந்து கொடுப்பதில்லையே.

அப்படி அவர்கள் இருவரின் எதிர்பார்ப்பும்  நிறைவேற முடியாத வண்ணம்  அவர்களுக்கு ஒரு  சோதனை காத்திருந்தது.

அருந்ததியின் வீட்டில் எப்பொழுதும் மூன்று கார்கள் இருக்கும். சிவநேசன் வெளியில் செல்லும் பொழுது ஒரு காரை எடுத்து சென்று விடுவார். அது தவிர மீதம் இருக்கும் கார்கள் அருந்ததிக்கும், கோகிலாவிற்கும் எந்த நேரத்திலும் வீட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். முதல் நாளைப் போலவே இருவரும் அவரவர் வண்டியில் ஏறப் போகும்போது டிரைவரை அழைத்தபடியே காரை நெருங்கிய பொழுது தான் அருந்ததி கவனித்தாள் அவளது கார் டயர் பஞ்சராகி இருந்ததை… லேசான சலிப்புடன் அன்னையின் காரை நோக்கி நகர்ந்தாள். ஆனால் அந்த காரும் பஞ்சராகி இருப்பதைப் பார்த்த அருந்ததி எரிச்சல் அடைய… அக்னி புத்திரன் சிந்தனையானான்.

‘அதெப்படி ஒரே நேரத்தில் இரண்டு காரும் பஞ்சராகி இருக்க முடியும்?’

அருந்ததி போனை  எடுத்து தன்னுடைய தந்தையிடம் வேறு கார் ஏற்பாடு செய்வது குறித்து பேசத் தொடங்க… அந்த நேரத்தில் இரண்டு காரையும் நன்றாக  ஆராய்ந்தான் அக்னி.

ஏதோவொரு கூரிய பொருளை வைத்து டயரை யாரோ வேண்டுமென்றே கிழித்து இருப்பதை அவனால் உணர முடிந்தது…

ஒருவேளை….

ஒருவேளை…. நேற்று இரவு வந்தவர்களின் வேலையாக இருக்குமோ.. அவன் மனம் வேகமாக கணக்கிடத் தொடங்கியது…

முதல் நாள் இரவு அவர்கள் கேமரா கோணம் பதியாத இடமாக சென்றது நிச்சயம் எதேச்சையாக நடந்த ஒன்று தான். ஏனெனில் அவர்கள் நோக்கம் காரை பஞ்சராக்குவதாக இருந்தால் அதற்கு அவர்கள் அந்த வழியில் தான் சென்று இருக்க வேண்டும்.

ஆனால் அதனால் அவர்களுக்கு என்ன லாபம்?

காரில் ஏதேனும் பொருட்களை மறைத்து வைத்து இருப்பார்களோ?

இந்த வீட்டை விட்டு அவர்கள் வெளியேற வேண்டாம் என்று நினைத்தது இந்த காரா? அல்லது இந்த காருக்கு சொந்தமான ஆட்களா?

அக்னியின் மூளையில் அபாய மணி ஒலித்தது.

அக்னி சிந்தனையில் மூழ்கி இருந்த சில நிமிடங்களில் அவர்களின் வீட்டு வாசலில் ஒரு கால் டேக்ஸி வந்து நின்றது.

“நான் அந்த காரில் வந்திடறேன்.. நீங்க முன்னாடி போங்க” என்று சொல்லிவிட்டு அந்த காரில் ஏறப் போனவளின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினான் அக்னி.

“இன்னிக்கு என்னோட வா”

“எ… என்ன… ஆனா ஏன்? வேற கார் தான் வந்துடுச்சே…”

“அதுவா… உன்னோட பைக்கில் ஒண்ணா போகணும்னு எனக்கு ரொம்ம்ம்ம்ப ஆசையா இருக்கு” என்று பல்லைக் கடித்தபடி சொன்னவனை நம்பாத பார்வை பார்த்தாள் அருந்ததி.

“அதெல்லாம் அப்புறமா பொறுமையா என்னைப் பார்த்துக்க.. இப்போ கிளம்பு.. ட்ரைனிங்க்கு நேரமாச்சு..” என்று அவளை அவசரப்படுத்த, அருந்ததியும் ஏனோ மறுத்து பேசாமல் கால் டேக்சியை திருப்பி அனுப்பிவிட்டு பைக்கில் ஏறிக் கொண்டாள்.

அருந்ததி டிரைவரிடம் பேசி அனுப்பிய இடைப்பட்ட நேரத்தில் தன்னுடைய போனில் இருந்து சிவநேசனுக்கு தன்னுடைய சந்தேகத்தை தெரிவித்தவன்… அந்த கார்களை வெளியே எங்கேயும் எடுத்து செல்ல வேண்டாம் என்றும்… இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கவும் வலியுறுத்தியவன் அருந்ததி அருகில் வந்ததும் பைக்கில் ஏறி அமர்ந்து ஓட்டத் தயாரானான்.

அருந்ததி ஏறி அமரும் முன்… நீமோ ஒரே பாய்ச்சலில் தாவி ஏறி அக்னியின் பின் அமர்ந்து கொள்ள அருந்ததியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.  

“நெருப்பு சார்… நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல கார்ப்பரேஷன்க்காரன் மாதிரி நாய் கூடவே சுத்தாதீங்கன்னு … அப்புறமும் ஏன் இப்படி?”

“உனக்காக எல்லாம் என்னோட பழக்கத்தை மாத்திக்க முடியாது… நீமோ எப்பவும் என்னோட தான் இருப்பான்…”

“அய்யா சாமி.. நீங்க அந்த நாயை கூடவே வச்சுக்கங்க… ஒண்ணா சாப்பிடுங்க… ஒண்ணா தூங்குங்க… யார் வேண்டாம்னு சொன்னா? ஆனா இப்படி பைக்கில் அது உட்கார்ந்துகிட்டா நான் எப்படி உட்கார்ந்து வர்றது? எனக்கு எங்கே இடம் இருக்கு?” என்று பொறிந்து தள்ளியவளை அமர்த்தலாக பார்த்தான் அக்னி…

“அதுக்குத் தான் சொல்றது.. கொஞ்சமா சாப்பிட சொல்லி…. கிடைச்சது எல்லாத்தையும் தின்னா இப்படித் தான் கஷ்டப்படணும்” என்று நக்கலாக பேசியவனின் பேச்சில் அருந்ததிக்கு முகம் வாடியது.

“என்னமோ உங்க சொத்தை எல்லாம் சாப்பிட்டே அழிச்ச மாதிரி சொல்றீங்க… எங்க அப்பா வாங்கி போடுறார்… அம்மா செஞ்சு தர்றாங்க… நான் சாப்பிடறேன்.. இதுல உங்களுக்கேன் இவ்வளவு வருத்தம்?”என்றாள் கோபமாக.

“என்னம்மா செய்றது… உன்னை என்னோட தலையில் இல்ல கட்ட முயற்சிக்கிறாங்க… நாளை பின்னே என்னோட தலையில் தானே விழும்… உங்க அப்பா மாதிரி நான் கோடீஸ்வரனும் இல்லையே… அது தான்” என்று அவளை மேலும் நோகடிக்க…

அருந்ததியின் கண்கள் கலங்கத் தொடங்கியது. அவளுக்கு சாப்பிடப் பிடிக்கும்.. இது தான் பிடிக்கும். அது பிடிக்காது என்பது போன்ற கட்டுப்பாடுகள் இன்றி எந்த வகையான உணவு கிடைத்தாலும் அதை ரசித்து, ருசித்து உண்பாள். சாப்பாட்டு பிரியை… ஆனால் அதையே அக்னி புத்திரன் குத்திக் காட்டி பேசி அவளை நோகடிப்பதைப் போல பேசுவதை தாங்க முடியவில்லை அவளால்.

“கட்டின பொண்டாட்டிக்கு தானே சாப்பாடு போடப் போறீங்க? அதுக்கு ஏன் இத்தனை சலிப்பு? எங்க வீட்டில் வச்சு இருக்கிற மாதிரியே நீங்களும் கார் வச்சு இருந்தா இந்த பிரச்சினையே இல்லையே…. உங்க கிட்டே கார் இல்லாததற்கு என் மேல பழியைத் தூக்கி போடறீங்களா?” என்று அவனைத் தாக்கிப் பேச… தன்னுடைய தன்மானம் சீண்டப்பட்டதை உணர்ந்து கொதித்துப் போனான் அக்னி.

“அதுக்கு என்ன செய்றது மேடம்… உங்க தாத்தா தன்னோட உயிலை நல்ல வசதியான ஒருத்தனை உங்க வீட்டு மாப்பிள்ளையாக சொல்லி எழுதவில்லையே… உன்னோட அப்பாவும் ஒரு கார் கூட இல்லாதவனுக்கு தன்னோட அருமை பொண்ணை கட்டிக் கொடுக்க வேண்டாம்னு எண்ணம் இல்லையே? அவங்க இரண்டு பேருக்கும் தான் தோணல… குறைந்தபட்சம் உன்னோட அம்மாவுக்காவது தோணி இருக்கலாம். இப்படி உன்னோட வீட்டு ஆட்கள் யாருக்குமே தோணாம போச்சு… வேணும்னா நீயே போய் சொல்லேன்… நீங்க பார்த்து வச்சு இருக்கும் இந்த மாப்பிள்ளைக்கு சொந்தமா கார் கூட இல்லை.. இவன் எனக்கு வேண்டாம்னு” என்று அழுத்தமாக சொல்ல அருந்ததி சுதாரித்தாள்.

‘அருந்ததி ரூட்டை மாத்து…’

“நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி கோபப்படுறீங்க நெருப்பு சார்… இப்போ நீங்க நீமோவை தூக்கி முன்னாடி உட்கார வச்சுக்கோங்க… நான் சமத்தா பின்னாடி உட்கார்ந்துக்கறேன்” என்று சொன்னவள் நல்ல பிள்ளை போல முகத்தை வைத்துக் கொள்ள… அக்னி புத்திரன் தான் கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டியதாக போனது.

நீமோவைத் தூக்கி பின்னால் அமர வைத்தவன்… அவளை திரும்பியும் பாராமல் புல்லட்டை வேகமாக முறுக்க… அருந்ததிக்கு கோபம் வந்தது.

‘ஏன் திரும்பி என்னோட முகத்தைப் பார்த்து வண்டியில் ஏறுன்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டீங்களோ… அம்புட்டு ஏத்தம்… இருடி உன்னை கதற வைக்கிறேன் பாரு’ என்று சபதம் எடுத்தவளுக்கு தெரியவில்லை… இனி  அவள் கதறும் தருணங்களில் எல்லாம் அவன் தான் ரட்சகனாக இருந்து அவளை காப்பாற்ற போகிறான் என்று..

அவனை மனதுக்குள் தாளித்தபடியே அவள் பின்னால் ஏறி அமர்ந்தாள்… பின்னால் அவள் இருக்கும் எண்ணமே இல்லாதது போல அக்னியின் கைகளில் புல்லட் பறந்தது.

இரண்டு தெருதான் தாண்டி இருப்பார்கள்… மூன்றாவது தெருவின் உள்ளே கூட நுழைய முடியாத அளவிற்கு கும்பல் நிறைந்து இருந்தது.

சிலரின் பரிதாபமான ஒலிகளும்… உச்சு கொட்டல்களும் எதுவோ சரியில்லை என்பதை உணர்த்த… புல்லட்டை நிறுத்தி விட்டு அவன் வேகமாக அந்த இடத்தை நோக்கி முன்னேறி செல்ல… அருந்ததியும் என்னவாக இருக்கும் என்ற லேசான ஆர்வத்துடன் அவன் பின்னாலேயே போனாள்.

அங்கே கூட்டத்தை எல்லாம் விலக்கிக்கொண்டு அவன் முன்னே செல்ல… கூட்ட நெரிசலுக்கு இடையில் தடுமாறி அவன் பின்னோடு வந்தவள், கண்ட காட்சியில் அவள் ரத்தம் உறைந்து போனது.

தெருவில் வைக்கப்பட்டு இருந்த மிகப்பெரிய குப்பை தொட்டியில் இருந்து ஒரு கை மட்டும் வெளியே தெரிய ரத்தத் துளிகள் ஆங்காங்கே தெறித்த வண்ணம் இருந்த அந்த கையைப் பார்த்து திகைத்துப் போனாள் அருந்ததி. அடுத்த அடி எடுத்து வைக்கவும் மறந்தவளாக அவள் அப்படியே உறைந்து நிற்க… அங்கே இருந்த காட்சிகளை வேடிக்கைப் பார்த்தவண்ணம் எதேச்சையாக  திரும்பியவனுக்கு அவளது நிலை புரிந்து போனது.

ராணுவத்தில் இருந்ததால் அவனை அந்த காட்சி அதிகம் பாதிக்கவில்லை. முதன்முறையாக ஒரு சடலத்தை பார்த்ததும் அதிர்ந்து நிற்கும் அவளது நிலை கண்டு அவனுக்கு இரக்கம் வந்தது.

‘இப்படி பயந்து போய் நிற்கிறாளே… இவளால் எப்படி போலீசில் வேலை பார்க்க முடியும்… ஒரு நாளைக்கு எத்தனையோ விதமான மரணங்களை சந்தித்தாக வேண்டுமே அந்த வேலையில்’

அவளது கையை அழுத்தமாக பற்றியவன் வேகமாக அவளை இழுத்துக் கொண்டு வந்து புல்லட்டில் ஏற்றினான். கண்கள் அந்த இடத்தையே  வெறித்திருக்க அவள் இருந்த கோலம் கண்டு அவனுக்கு பாவமாக இருந்தது. இப்படியே அவளை பின்னால் அமர வைத்துக்கொண்டு புல்லட்டில்  போனால் போகும் வழியில் எங்கேனும் கண்டிப்பாக விழுந்து வைப்பாள் என்று தோன்றவே… அவளது சுடிதார் துப்பட்டாவை எடுத்து… தன்னுடைய இடுப்போடு சேர்த்து அவளையும் இறுக்கமாக கட்டிக் கொண்ட பிறகே வண்டியை எடுத்தான்.

அவன் தன்னுடைய துப்பட்டாவை எடுத்ததைக் கூட உணராமல் இருந்தாள் அருந்ததி. பைக்கை வேகமாக செலுத்தியவன் அவர்கள் பயிற்சி செய்யும் மைதானத்திற்கு வந்த பின்னர் தான் மட்டுமாக இறங்கி,துப்பட்டாவை சரியாக அணிவித்தான். கொண்டு வந்திருந்த தண்ணீரை அவள் முகத்தில் பீய்ச்சி அடித்தான்.

கனவில் இருந்து மீண்டவள் போல தலையை உலுக்கிக் கொண்டாள் அருந்ததி.

“தூங்கினது போதும்… எழுந்து மைதானத்தை இரண்டு முறை சுத்தி வார்ம் அப் பண்ணிட்டு வா” என்று இரக்கமில்லாமல் சொன்னவனை அசையாத பார்வை பார்த்தாள். அவன் தனக்காக என்று சுண்டு விரலைக் கூட அசைக்க மாட்டான் என்பது தெரிந்த விஷயம் தான் என்றாலும், மனதின் மூலையில் லேசாக வலித்தது அவளுக்கு.

அவன் அவளுக்காகத் தான் அந்த இடத்தை விட்டு வேகமாக வந்தான் என்பதுவும்… அவள் கீழே விழுந்து விடக் கூடாதே என்ற அக்கறையில் புல்லட்டில் வரும் பொழுது தன்னோடு சேர்த்து அவளை துப்பட்டாவால் கட்டி அழைத்து வந்ததையோ அவள் கொஞ்சமும் உணராமல் போனது விதியின் சதியன்றி… வேறு என்ன?

கண்களை ஒரு நொடி மூடி தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவள் குனிந்து ஷூ லேசை இறுக்கி கட்டிக்கொண்டு ஓடத் தொடங்கினாள்.

காலையில் உணவாக வெறுமனே கூழை குடித்ததாலோ அல்லது கண் முன்னே கண்ட அந்த கோரக் காட்சியின் விளைவோ இன்னதென்று இனம் பிரிக்க முடியாத காரணத்தினால் முதல் ரவுண்டு ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே தடுமாறி  விழுந்து மூர்ச்சையானாள் அருந்ததி.

அவள் கீழே விழுந்ததும் கொஞ்சமும் பதட்டப்படாமல் ஏற்கனவே எதிர்பார்த்த நிகழ்வு நடந்ததை போல அவளை நோக்கி மெதுவாக நடந்து வந்தவன் உள்ளங்கையை அழுத்தி பிடித்து நாடியை பரிசோதித்தான்.

‘இன்னிக்கு இவ ட்ரைனிங்ல ஓடி கிழிச்சா மாதிரி தான்.’ என்று சலித்துக் கொண்டவன்… தண்ணீரில் குளுக்கோசை கலந்து கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு புகட்டினான். எழுந்து அமர்ந்தவள் ஒரு நொடி அக்னியைப் பார்த்தாள். கண்டிப்பாக தனக்காக அவன் மனம் இறங்க மாட்டான் என்பது புரிய பிடிவாதமாக ஓடத் தொடங்கினாள். அக்னிபுத்திரன் அவளது ரோசத்தைக் கண்டு ஒரு கணம் புருவத்தை உயர்த்தினானே தவிர மேற்கொண்டு அவளை ஓட வேண்டாம் என்று சொல்லி தடுக்கவில்லை. பிடிவாதமாக இரண்டு ரவுண்டை  ஓடிவிட்டு வந்தாள் அருந்ததி.

அதற்குள் அவளுக்கு உடலெல்லாம் வியர்த்து வழிந்தது.

“ஐம்பது புஷ் அப் எடு” என்று சொன்னவன் அவள் தட்டுத்தடுமாறி புஷ் அப் செய்து கொண்டிருந்த  நேரம் மைதானத்தை ஓட ஆரம்பித்தான்.

‘நான் தான் ட்ரைனிங் எடுக்க ஓடுறேன்… இவன் எதுக்கு இப்போ இப்படி ஓடுறான்?’ என்று  எண்ணியவளின் மனம் அடுத்த நொடியே அந்த குப்பைத் தொட்டிக்குப் போனது…

கண் எதிரே ஒரு உடலை அப்படிப் பார்த்ததை அவளால் அத்தனை எளிதில் மறக்க முடியவில்லை. கண்டிப்பாக அந்த மரணம் ஒரு கொடூரமானதாகத் தான் இருக்க வேண்டும் என்று அவளது உள்மனம் அடித்து சொல்லியது.

அதே நேரம் அக்னிபுத்திரனின் மனமும் அதையே தான் நினைத்துக் கொண்டிருந்தது ஆனால் வேறு கோணத்தில்…. அப்படி யோசித்த பொழுது அவனுக்கு கிடைத்த விடையோ அவனது நரம்புகளில் அட்ரீனலை அதிகமாக சுரக்க வைத்தது.

ஷாக்கடிக்கும்.

Facebook Comments

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here