
ஏனோ அன்று அக்னிபுத்திரன் அவளிடம் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. அவனது பார்வை சுற்றுப்புறத்தை அலசி ஆராய்ந்தவாறே இருந்தது. அவனின் விசித்திர நடவடிக்கைகளை எல்லாம் பார்த்தும் பாராதது போல இருந்தாள் அருந்ததி.
‘இவரோட செய்கை எல்லாம் பார்த்தா… நான் என்னவோ சிஎம் போலவும்… இவர் எனக்கு பிளாக் கேட் போலவும் இல்ல நடந்துக்கிறார்… கையில் கன்(Gun) மட்டும் தான் இல்லை… மத்தப்படி அதே மாதிரி தான் நடந்துக்கிறார்’ என்று எண்ணியவள் அவன் செய்ய சொன்ன உடற்பயிற்சியை செய்வது போல நடித்துக் கொண்டிருந்தாள்.
அன்று அவளைப் போட்டு வாட்டி வதக்காமல் அடுத்த அரை மணிக்குள்ளாகவே அவளை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான் அக்னிபுத்திரன். ஏனோ அருந்ததிக்கு வீட்டுக்கு வெளியில் இருந்தால் ஆபத்து என்ற எண்ணம் அவனைப் போட்டு உறுத்திக் கொண்டிருந்தது.
வேகமாக அவளைக் கொண்டு போய் வீட்டில் இறக்கி விட்டு வந்தவன் தனிமை வேண்டி… நீமோவையும் வீட்டில் விட்டு விட்டு கடற்கரைக்கு சென்று இருந்தான்.
அவன் ஒரு ராணுவ வீரன்… எதிரி நாட்டு படைகளை அஞ்சாமல் எதிர்கொண்டவன்… எத்தனை பேர் வந்தாலும் அவர்களை பந்தாடும் அளவிற்கு துணிவு பெற்றவன்… அவன் மனதில் இப்பொழுது குழப்ப மேகங்கள்…
அருந்ததிக்கு வரப் போகும் ஆபத்தை அவனால் உணர முடிந்தது. அவளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு இருந்தது. அதற்குப் பெயர் இரக்கம்… பரிதாபம்.. கண்ணுக்குத் தெரிந்தே நடக்கப் போகும் ஒரு தவறை தடுத்தாக வேண்டும் என்ற துடிப்பு அவ்வளவே.. அதைத் தாண்டி எதுவுமே இல்லை…அதில் அவன் தெளிவாக இருந்தான்.
ஜெனிபருடன் அவன் இருந்த நாட்களிலேயே அவன் எடுத்த முடிவு தானே அது… தன்னுடைய வாழ்க்கையில் இனி காதல், கல்யாணம் போன்ற நுண்ணிய உணர்வுகளுக்கு இடமில்லை என்பது…
ராணுவத்தில் இருந்த பொழுது மொத்த தேசத்தையும் காப்பற்றியவனுக்கு இப்பொழுது ஒரேயொரு குடும்பத்தை காப்பாற்றுவது கஷ்டமான காரியம் இல்லை. ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ராணுவத்தில் அவனுக்கு யாரிடம் போரிட வேண்டும்… எதிராளி யார் என்பது தெளிவாக தெரியும். ஆனால் இங்கோ எதுவுமே தெளிவாக தெரியாத நிலை… முக்கியமாக அவன் சொல்வதை வீட்டுத் தலைவரான சிவநேசன் துளி கூட நம்பவில்லை. எத்தனை நாட்கள் இவன் மட்டுமாக தனியாக போராட முடியும்… அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அவனால் அந்த குடும்பத்தை காப்பாற்ற முடியாதே..
என்ன நடந்தாலும் சரி… நான் இருக்கும் வரையிலும் இந்த குடும்பத்திற்கு எந்தவொரு ஆபத்தும் நெருங்க விட மாட்டேன் என்று முடிவு செய்தவன் வீட்டிற்கு போன பொழுது திகைத்துப் போனான். அங்கே நிலவிய அசாத்தியமான சூழ்நிலையில்…
வீடு முழுக்க போலீசார் குமிக்கப்பட்டு இருந்தனர். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு வீடு, தோட்டம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ஓடிக் கொண்டிருந்தது.
அக்னியைப் பார்த்ததுமே ஓடி வந்து அவன் கைகளைப் பற்றிக் கொண்ட சிவநேசன் கண்கள் கலங்க அப்படியே அவனைக் கட்டிக் கொண்டார்.
அக்னிப்புத்திரனுக்கோ… எதுவுமே புரியவில்லை…
“தம்பி… நீங்க என்னோட குல சாமி… நீங்க சொன்னதை நம்பாம போனேனே… பாவிப்பய நான்… நல்லவேளை நீங்க இருக்கவும் என்னோட குடும்பம் தப்பிச்சது…” என்று அவர் உணர்ச்சிப்பெருக்கோடு பேசிக் கொண்டே போக… அக்னிபுத்திரன் கேள்வியாக அவரைப் பார்த்தான்.
“சார்… கொஞ்சம் புரியற மாதிரி சொல்றீங்களா?”
“தம்பி நீங்க சொன்ன மாதிரி தான்… என்னோட குடும்பம் இப்போ ஏதோ ஆபத்தில் சிக்கி இருக்கு…”
“எப்படி சொல்றீங்க… என்னோட பேச்சில்… அப்போ வராத நம்பிக்கை.. இப்போ எப்படி வந்தது?” என்று கேட்க… சிவநேசனின் தலை தானாகவே குனிந்தது…
“தப்பு தான் தம்பி.. அன்னிக்கு நீங்க சொன்னப்பவே உங்களை நான் நம்பி இருக்கணும்…”
“ஸோ… இப்போ என்னோட பேச்சை நம்புற மாதிரி எதுவோ நடந்து இருக்கு… அது என்னன்னு சொல்றீங்களா?”கூர்மையான பார்வையுடன் கேட்டான் அக்னி.
“தம்பி… இ… இன்னிக்கு காலையில் வீட்டில் இருந்த ரெண்டு காரும் பஞ்சராகி இருக்குனு அருந்ததி என்னை வேற கார் அனுப்ப சொன்னா…”
“ஆமா… தெரியும்.. நானும் பக்கத்தில் தான் இருந்தேன்…”என்றான் துளைக்கும் பார்வையுடன்…
“நான் என்னோட நண்பனோட ட்ராவல்ஸ்ல சொல்லி ஒரு கார் அனுப்ப சொல்லி இருந்தேன்…”
“அதுவும் தான் எனக்குத் தெரியுமே… கார் வந்துச்சு.. அதையும் நான் திருப்பி அனுப்ப சொல்லிட்டு… என்னோட புல்லட்டிலேயே உங்க பொண்ணை கூட்டிட்டு போனேன்… விஷயத்துக்கு வாங்க”
“ஆ.. ஆனா.. என்னோட நண்பன் அனுப்பின அவனோட கார்… பாதி வழியிலேயே ஏதோ ரிப்பேராகி நின்னு போயிடுச்சாம்… டிரைவரின் போனில் இருந்தும் உடனடியா தகவல் சொல்ல முடியாம அரைமணி நேரம் கழிச்சு தான் அவனுக்கு தகவல் சொன்னாராம்… அதுக்குப் பிறகு தான் அவன் வேற ஒரு காரை ஏற்பாடு செஞ்சு இங்கே நம்ம வீட்டுக்கு அனுப்பி இருக்கான்…”
அக்னிபுத்திரனின் விழிகளில் அத்தனை அதிர்ச்சி…
அவனது அதிர்ச்சிக்கு காரணம் இல்லாமல் இல்லை… அருந்ததி அவளது தந்தையிடம் கார் வேண்டும் என்ற தகவல் சொன்ன அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வீட்டின் முன்னே வந்து நின்ற அந்த கால் டேக்ஸி அவனது கண்ணில் வந்து போனது.
“அப்படின்னா…”
“ஆமா தம்பி.. நான் ஏற்பாடு செஞ்ச ஆள் இங்கே வர்றதுக்கு முன்னாடி வேற யாரோ ஒருத்தன் இங்கே வந்துட்டு போய் இருக்கான்… அதுவும் நான் வர சொன்னதாக சொல்லிட்டு…” தொண்டை அடைக்க கண்களை மூடி ஒரு நிமிடம் அமைதி காத்தார் சிவநேசன்…
“நீங்க மட்டும் அருந்ததியை தடுத்து உங்களோட புல்லட்டில் கூட்டிட்டு போகாம இருந்து இருந்தா… என் பொண்ணோட நிலைமை…” என்று கேட்டவரால் தொடர்ந்து பேச முடியாமல் அழத் தொடங்கினார்.
“அருந்ததி இப்போ எங்கே?”
“போலீஸ் விசாரிச்சுட்டு இருக்காங்க…”
“இப்போ எதுக்கு இப்படி வீடு பூரா போலிசை குமிச்சு வச்சு இருக்கீங்க…”
“அது வந்து தம்பி..இவ்வளவு தூரம் வந்த பிறகு அப்படியே விட முடியுமா… அது தான் போலீசில் கம்ப்ளைன்ட் செஞ்சு இருக்கேன்…அவங்களை கண்டுபிடிச்சு….”
“அதுக்குத் தான் வாய்ப்பே இல்லாம செஞ்சுட்டீங்களே…”என்றான் சுள்ளென்று.
“நானா?… நான் என்ன செஞ்சேன் தம்பி?”என்ன தவறு செய்தோம் என்பது புரியாமல் திருதிருத்தார்.
“கொஞ்சம் என்னோட வாங்க…” என்றவன் அவரை அழைத்துக் கொண்டு அருந்ததியை விசாரித்துக் கொண்டிருந்த அறைக்கு செல்ல… இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் அவனை கேள்வியாக பார்த்தார்.
அக்னியின் முகம் அருந்ததியைப் பார்க்க… அவள் பயந்து போய் இருக்கிறாள் என்பது அவளது வெளிறிய முகத்தைப் பார்த்ததுமே அவனுக்கு புரிந்து போனது.
“சார்… இவர் தான் என்னோட வருங்கால மாப்பிள்ளை … அக்னிபுத்திரன்… நேத்து ராத்திரி யாரோ இரண்டு பேர் சுவர் ஏறிக் குதிச்சதைப் பார்த்ததும் இவர் தான்…” என்று அறிமுகம் செய்து வைத்தவர்.. அடுத்து பேசும் முன் அக்னிபுத்திரன் இடைமறித்து பேசினான்.
“சார்… உங்க கிட்டே நான் தனியா பேசணும்… if you dont mind”
கிருஷ்ணனின் கண் ஜாடையில் உடன் இருந்த மற்ற அலுவலர்கள் வெளியே செல்ல… அவரிடம் தன்னுடைய திட்டத்தை விளக்கிக் கூறினான் அக்னி.
“சார் எனக்குத் தெரிஞ்சு… அந்த ஆட்கள் ஏதோவொரு காரணத்திற்காக இந்த வீட்டை சுத்தி வர்றாங்க… அது என்னன்னு எனக்கும் இன்னும் தெளிவா தெரியலை… ஆனா இந்த வீடு எப்பவும் அவங்க கண்காணிப்பில் இருக்குனு மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும்… இப்போ நீங்க வந்து அவங்களைப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சுட்டீங்கன்னு தெரிஞ்சா அவங்க இன்னும் உஷாராகிடுவாங்க…”
“அதுக்கு?”
“இப்போ நீங்க வீட்டுக்கு வந்தது அவங்களைப் பத்தி தெரிஞ்சுக்கிறதுக்காக வந்த மாதிரி இல்லாம… வேற ஒரு காரணத்தை சொல்லுங்க…”
“இப்படி ஒரு போலீஸ் படையையே இங்கே குமிச்சு வச்சதுக்கு பொய்யாக ஒரு காரணம் சொல்ல சொல்றீங்க… ரைட் … என்ன காரணம் சொல்லலாம்? அதையும் நீங்களே சொல்லிடுங்களேன்…”
“மோப்ப நாய் எல்லாம் கொண்டு வந்து இருக்கீங்க சார்.. ஸோ இந்த வீட்டில் பாம் இருக்குனு போன் கால் வந்ததால சிவநேசன் சார் உங்களுக்கு போன் செஞ்சதா இருக்கட்டும்…”
“கவனிங்க … மிஸ்டர் அக்னி… நீங்க மிலிட்டரியில் சர்விஸ் செஞ்சு இருக்கலாம்… இந்த வீட்டின் வருங்கால மாப்பிள்ளையாகவும் இருக்கலாம். ஆனா அதுக்காக போலீஸ்க்கு நீங்க ஆர்டர் போட முடியாது… உங்க இஷ்டத்துக்கு எல்லாம் நான் ஆட மாட்டேன்… மைன்ட் இட்..”என்று குரலை உயர்த்திப் பேச… அக்னி ஒரு நிமிடம் யோசித்தவன்… புயலென அங்கிருந்து வெளியேறினான்.
சிவநேசனுக்கு என்ன செய்வது என்று புரியாமல் கிருஷ்ணனிடம் பேச்சு வார்த்தை நடத்தத் தொடங்கினார்.
“சார்… மாப்பிள்ளை சொன்னா.. அதுல ஏதாவது காரணம் இருக்கும்…”
“சார் கொஞ்சம் சும்மா இருக்கீங்களா… விஷயம் புரியாம பேசிக்கிட்டு… இந்த ஆள் இங்கே தங்க வந்த அடுத்த நாளே இப்படி ஒரு பிரச்சினை இங்கே ஆரம்பிச்சு இருக்கு… யாருக்குத் தெரியும்… இந்த விஷயத்தை எல்லாம் செய்றதே இவர் தானோ என்னவோ”
“சா.. சார்… அப்படி எல்லாம் இல்லை… மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்…”
“இந்த காலத்தில் அடுத்தவன் குடியை கெடுக்கிறவனுக்கு எல்லாம் அக்கம் பக்கத்தில் நல்லவன்னு தான் பேர்… எங்களோட சந்தேக லிஸ்டில் முதலில் இருப்பதே அந்தாளு தான்…” என்றவர்… உள்ளே நுழைந்த அக்னிபுத்திரனைக் கண்டதும் அவனையே முறைத்துப் பார்க்கத் தொடங்கினார்.
“இந்தாங்க சார்… உங்களுக்கு போன்…” என்று அக்னி போனை நீட்ட… அதை வாங்காமல் அக்னியையே நக்கலாக பார்த்தார் கிருஷ்ணன்.
“போனில் யாரு? எம்எல்ஏ வா? இல்ல எம்பியா?”
“அவங்க எல்லாம் இல்லை… உங்க கமிஷனர்…” என்று அதை விட அதிக நக்கலோடு கூற.. கிருஷ்ணனின் கை தன்னையும் அறியாது போனை வாங்கி இருந்தது.
“சார்…”
“என்ன கிருஷ்ணன்… என்ன பிரச்சினை அங்கே?”
“இல்லை சார்… வ… வழக்கத்துக்கு மாறா…”
“கிருஷ்ணன் மிஸ்டர் அக்னிபுத்திரன் மிலிட்டரியில் சாதாரண ஆள் இல்லை… மேஜர் அக்னிபுத்திரன்… ரொம்ப திறமையான ஆள்… இன்னும் கொஞ்ச நாள் இருந்து இருந்தா பெரிய பதவில இருந்திருக்க வேண்டியவர்.. தானாகவே எழுதி கொடுத்துட்டு வந்துட்டார்… பார்டர்ல மட்டும் இல்ல… நாட்டுக்குள்ளே நடந்த எத்தனையோ பிரச்சினைகளில் உதவி இருக்கார்… இன்பேக்ட்… சிஎம் சாருக்கு அவரை நல்லாவே தெரியும்…” என்ற ரீதியில் அந்தப் பக்கம் தொடர்ந்து பேச.. கிருஷ்ணன் வாய் அடைத்துப் போனார்.
ஓ… சரி சார்…ஓகே சார்…”என்று நிறுத்தாமல் தலையை ஆட்ட… சிவநேசனுக்கு புரிந்து போனது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று…
அடுத்த சில நிமிடங்களில் அக்னிபுத்திரன் சொல்லிக் கொடுத்த விஷயத்தை அச்சு பிசகாமல் அப்படியே நிறைவேற்றினார் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன்.
வெளியில் இருப்பவர்களை நம்ப வைப்பதற்காக… பாம் ஸ்குவாடு (Squad) வரவழைக்கப்பட்டது…
ஒன்றுமே இல்லாத இடத்தில் மூன்று மணி நேரமாக தேடுதல் வேட்டை நடத்தினார்கள். சிவநேசன் வீட்டு ஆட்கள் அனைவரும் வீட்டுக்கு வெளியில் ஒரு சுமோவில் போலிஸ் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டார்கள்.
மாலை வரை தேடுவதைப் போல நடித்த போலிசார்… வீட்டு வாசலில் இருந்த சிவநேசனை தேடி வந்து… எல்லார் காதிலும் கேட்கும் வண்ணம் சத்தமாகவே பேசினார்.
“சார்.. போனில் மிரட்டின மாதிரி உங்க வீட்டில் எந்த பாமும் இல்லை… பயப்படாமல் நீங்க உள்ளே போங்க… இது வெறும் புரளி தான்… போன் நம்பரை வச்சு பார்த்தா ஏதோ பூத்தில் இருந்து பேசின மாதிரி இருக்கு… விசாரிச்சுட்டு இருக்கோம். மீதி தகவல் கிடைச்சதும் நாங்களே உங்களுக்கு சொல்றோம்…” என்று சொல்லிவிட்டு லேசான தலை அசைப்புடன் கிருஷ்ணன் கிளம்பி விட, அதுநேரம் அவர்கள் வீட்டின் முன்னே இருந்த கும்பல் தங்களுக்குள் பேசி சலசலத்தவாறே கொஞ்சம் கொஞ்சமாக கலையத் தொடங்கியது.
அக்னியின் சொல் படி… வெளியே அமைதியாக காட்டிக் கொண்டாலும் சிவநேசன் வீட்டு ஆட்கள் மூவருமே வெகுவாக கலங்கிப் போய் இருந்தனர்.
வீடும்… வீட்டு ஆட்களும் எப்பொழுதும் போல நடமாட என்பது அக்னியின் கண்டிப்பான உத்தரவு… இப்பொழுது அவர்கள் இருக்கும் மனநிலையில் அவன் என்ன சொன்னாலும் மூவரும் தயங்காமல் கேட்டுக் கொண்டார்கள். சிவநேசன் பணக்காரர் தான். ஆனால் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதவர். அமைதியான சுபாவம்.. அதிரடிகளில் பழக்கம் இல்லாதவர். தியாகி அண்ணாமலையின் வளர்ப்பு அல்லவா… அகிம்சை விரும்பியாகவே வளர்ந்தார்… வாழ்ந்தார்… திடீரென்று ஏற்பட்ட இந்த பிரச்சினையை எப்படி கையாள்வது என்பதே புரியாமல் கலங்கிப் போய் இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
அன்றைய இரவு…உணவை முடித்தபின் வேலையாட்கள் யார் காதுக்கும் கேட்காத வண்ணம் சிவநேசனின் ஏசி அறைக்குள் நால்வரும் சென்று கதவை சாத்திக் கொண்டார்கள்.எல்லார் முகமும் கலவரத்தை சுமந்திருந்தது.
“அருந்ததி நல்லா யோசிச்சு சொல்லு…நீ மட்டும் தான் அவனைப் பார்த்து இருக்க… அவன் பார்க்க எப்படி இருந்தான்? என்ன கலர்? மீசை இருந்ததா? கண்ணு எப்படி இருந்தது?”கொஞ்சம் யோசனை செஞ்சு சொல்லு…” என்று சொல்ல அருந்ததி சோர்வாக பேசினாள்.
“காலையில் போலீஸ் கிட்டே சொன்ன அதே பதில் தான்…அவன் தலையில் தொப்பி போட்டு இருந்தான்… மாநிறம்… ஆனா முகத்தில் மாஸ்க் போட்டு இருந்தான்…”
“மாஸ்க்கா? நீ அதைப் பத்தி எதுவும் கேட்கலையா?”
“கேட்டேனே… அவன் ஏதோ பொலுயூசனுக்காக (Pollution) போட்டு இருக்கேன்னு சொன்னான்..”
“ஓ.. வேற எதுவும் அடையாளம்…”
“இல்ல… எனக்கு நியாபகம் இல்லையே…” அவள் தலையைப் பிய்த்துக் கொள்ள…
“நல்லா யோசி… ஏதாவது நினைவுக்கு வரும்…” என்று மேலும் அழுத்தமாக கேட்க… அருந்ததி தன்னுடைய மனக்கண்ணில் காலையில் நடந்த காட்சிகளை மீண்டுமாக ஓட்டிப் பார்த்தாள்.
யோசனையில் சுருங்கி இருந்த அவள் முகம் நொடியில் மலர்ந்தது…
“இருக்கு.. ஒரு அடையாளம் இருக்கு…” என்றாள் பரபரப்பாக…
மொத்த குடும்பமும் அவளது முகத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தது.
ஷாக்கடிக்கும்….
Superb. As usual the suspense has started. Thank you.