அருந்ததி அந்த வீட்டின் செல்ல இளவரசி… அவளை அந்த வீட்டில் யாரும் கண்டித்துக் கூட பேசியதில்லை. அப்படிப்பட்டவள் இன்று காரில் இருந்து இறங்கவே முடியாமல் தடுமாறி நடந்து வந்தவள் வாசல்படியில் கால் வைக்கும் முன்னரே கால் பிசகி கீழே விழுந்து வைத்தாள்.
“அருந்ததி” என்று ஒரே குரலில் தாயும் , தந்தையும் பதட்டத்துடன் ஓடி வந்தது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.
‘இவர்களின் அன்பில் ஒரு துளி கூட அவனிடம் இல்லையே… ராட்சசன்.. அரக்கன்…’ மனதுக்குள் வசைமாரி பொழிந்தாள்.
‘அவன் வரட்டும்… அப்பா பேசுற பேச்சில்.. கதறிக்கிட்டு வந்து என்கிட்டே மன்னிப்பு கேட்கணும்… எவ்வளவு திமிரு இருந்து இருந்தா என்னை ஓட வச்சு இருப்பான்.. அதுவும் நாயை விட்டு துரத்தி…’ அவளால் இன்னமும் அந்த சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து வெளியேற முடியவில்லை.
அருந்ததி கொஞ்சம் பூசினாற் போல உடல்வாகு உடையவள். அவளுக்கு இப்படி ஓடி எல்லாம் பழக்கமே கிடையாது. சாதாரணமாக இருப்பவர்களுக்கே அந்த மைதானத்தை நான்கு முறை சுற்றி வருவது கடினம் எனும் பொழுது…அவளுக்கு அது எப்படி சாத்தியம்? நாய் துரத்துகிறது என்ற பயத்தில் அளவுக்கு மீறிய வேகத்தில் ஓடினாள் அருந்ததி. அதன் விளைவு கை, காலில் ஆங்காங்கே தசைபிடிப்பு ஏற்பட்டு கால்களை அசைக்கக் கூட முடியாமல் படுத்திருந்தாள் அவள்.
ஹாலை ஒட்டி இருந்த படுக்கை அறையில் படுத்து இருந்தபடியே அக்னிபுத்திரனின் வருகைக்காக அவள் காத்திருக்கத் தொடங்கினாள். மருத்துவர் வந்து அவளை பரிசோதித்து விட்டு சென்ற பிறகும் கூட சில மணி நேரங்கள் கழித்து வேண்டுமென்றே தாமதமாகவே வந்து சேர்ந்தான் அக்னி.
அவன் முகத்தில் தவறு செய்து விட்டோம் என்ற பயமோ, பதட்டமோ இல்லை என்பதை குறித்துக் கொண்டார் சிவநேசன்.
தீர்க்கமான பார்வையுடன் அவரை எதிர் கொண்டவன் அவரது குற்றம் சாட்டும் பார்வைக்கு கொஞ்சமும் அசையவில்லை.
“உங்களை நம்பி தானே தம்பி பொண்ணை அனுப்பினேன்… இப்படியா செய்வீங்க?”
“உங்க பொண்ணை பத்திரமா வீடு வரை கொண்டு வந்து விட்ட பிறகு தான் நான் கிளம்பினேன் சார்” என்றான் ஒன்றுமறியாதவன் போல
“தம்பி… உங்களை பொறுப்பானவர்ன்னு நினைச்சேன்…”
“என்னிடம் என்ன பொறுப்பில்லாத் தனத்தை கண்டுட்டீங்க?”குரலை உயர்த்தத் தொடங்கினான் அக்னி
“நேரில் வேற பார்க்கணுமா? என் பொண்ணு வீட்டுக்கு வந்து சேர்ந்த கோலமே சொல்லுதே உங்க பொறுப்பைப் பற்றி”
“அது உங்க பொண்ணா இழுத்து விட்டுகிட்டது… அதுக்கு நான் எப்படி பொறுப்பாளி ஆவேன்?”
“உங்களால என்னோட பொண்ணு எழுந்திரிக்க முடியாம படுத்துக் கிடக்கிறா”
“நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. இது உங்க பொண்ணா விரும்பி செஞ்சது… இதில் என்னோட தப்பு எதுவும் இல்லைன்னு”
“நாயை விட்டு துரத்தும்படி என்னோட பொண்ணு தான் உங்ககிட்டே சொன்னாளா?” அவரது கூர்மையான கேள்வி அவனை ஒரு துளி கூட அசைக்கவில்லை. அப்படியே கல்லைப் போல இறுகிப் போய் அமர்ந்து இருந்தான்.
“இதோ பாருங்க சார்… என்னை கல்யாணம் செஞ்சுக்கப் போற பொண்ணு காக்கி யூனிபார்மில் இருக்கிற பொண்ணா இருக்கணும். அப்படிங்கிறது என்னோட ஆசை. அதுல என்ன தப்பு இருக்கு?… நான் எத்தனையோ முறை திரும்ப திரும்ப கேட்டும் உங்க பொண்ணு என்னால முடியும்… செஞ்சு காட்டுறேன் அப்படின்னு வாய் சவடால் அடிச்சுக்கிட்டே இருந்தாங்க.. நிதர்சனம் என்னனு அவங்களுக்கு புரிய வேண்டாம்..அதுக்காகத் தான் இப்படி செஞ்சேன்…
நான் என்ன உங்க பொண்ணை கல்யாணம் செஞ்சுக்க வரதட்சணை கேட்டேனா? இல்லை சொத்து கேட்டேனா… இந்த கல்யாணம் உங்க அப்பாவின் கடைசி ஆசைக்காக நடப்பது. அதுக்காக என்னுடைய வருங்கால மனைவியைப் பற்றிய கற்பனைகளை நான் மாற்றிக் கொள்ள முடியுமா? இதுக்கு உங்க பொண்ணு சம்மதித்தால் இந்த கல்யாணம் நடக்கும்.. இல்லைனா இந்த பேச்சை இப்படியே விட்டுடுங்க” என்று அவன் கறாராக பேசியதில் அந்த இடத்தில் அசாத்திய அமைதி நிலவியது.