ஹாய் மக்களே நான் வந்துட்டேன்… இனி வழக்கம் போல வாரத்தில் இரண்டு நாள் ud வரும்… அதாவது செவ்வாய்,வெள்ளி எபி வரும்… இப்போதைக்கு டீசர் படிங்க….
அருந்ததியின் வீட்டில் எப்பொழுதும் மூன்று கார்கள் இருக்கும். சிவநேசன் வெளியில் செல்லும் பொழுது ஒரு காரை எடுத்து சென்று விடுவார். அது தவிர மீதம் இருக்கும் கார்கள் அருந்ததிக்கும், கோகிலாவிற்கும் எந்த நேரத்திலும் வீட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். முதல் நாளைப் போலவே இருவரும் அவரவர் வண்டியில் ஏறப் போகும்போது தான் அருந்ததி கவனித்தாள் அவளது கார் டயர் பஞ்சராகி இருந்ததை… லேசான சலிப்புடன் அன்னையின் காரை நோக்கி நகர்ந்தாள். ஆனால் அந்த காரும் பஞ்சராகி இருப்பதைப் பார்த்த அருந்ததி எரிச்சல் அடைய… அக்னி புத்திரன் சிந்தனையானான்.
‘அதெப்படி ஒரே நேரத்தில் இரண்டு காரும் எப்படி பஞ்சராகி இருக்க முடியும்?’
அருந்ததி போனை எடுத்து தன்னுடைய தந்தையிடம் பேசத் தொடங்க… அந்த நேரத்தில் இரண்டு காரையும் நன்றாக ஆராய்ந்தான் அக்னி.
ஏதோவொரு கூரிய பொருளை வைத்து டயரை யாரோ வேண்டுமென்றே கிழித்து இருப்பதை அவனால் உணர முடிந்தது…
ஒருவேளை….
ஒருவேளை…. நேற்று இரவு வந்தவர்களின் வேலையாக இருக்குமோ.. அவன் மனம் வேகமாக கணக்கிடத் தொடங்கியது…
முதல் நாள் இரவு அவர்கள் கேமரா கோணம் பதியாத இடமாக சென்றது நிச்சயம் எதேச்சையாக நடந்த ஒன்று தான்.ஏனெனில் அவர்கள் நோக்கம் காரை பஞ்சராக்குவதாக இருந்தால் அதற்கு அவர்கள் அந்த வழியில் தான் சென்று இருக்க வேண்டும்.
ஆனால் அதனால் அவர்களுக்கு என்ன லாபம்?
காரில் ஏதேனும் பொருட்களை மறைத்து வைத்து இருப்பார்களோ?
இந்த வீட்டை விட்டு அவர்கள் வெளியேற வேண்டாம் என்று நினைத்தது இந்த காரா? அல்லது இந்த காருக்கு சொந்தமான ஆட்களா?
அக்னியின் மூளையில் அபாய மணி ஒலித்தது.