Nilave unthan nizhal nane – Episode 1

2
6904“ஹாய் குட் மார்னிங்! நைட் நல்லா தூங்குனீங்களா? இல்ல புது இடமா இருக்கிறதால தூக்கம் வரலையா? நைட் உங்ககிட்ட சொன்ன மாதிரியே காலையில எழுந்ததும் உங்களை பார்க்க ஓடி வந்துட்டேன்…” குட்டியாய் மலங்க மலங்க விழித்தபடி இருந்த அந்த நாய்க்குட்டியை கையில் ஏந்தியபடி மிதுலா கொஞ்சிக் கொண்டிருக்க, 

 “அடியேய்… மிதுலா! காலைல எழுந்ததும் பல்லை கூட விளக்காம அங்க நாய்க்குட்டி ஓட என்ன விளையாட்டு வேண்டி கிடக்கு. இவ்வளவு கத்துறேனே கொஞ்சமாவது ஏதாவது கண்டுக்கிறாளான்னு பாரு. நீ பாட்டுக்கு கத்து எனக்கென்ன அப்படினு நாய்க்குட்டிய கொஞ்சிக்கிட்டு இருக்கிறா? வர வர உன் அட்டகாசம் தாங்க முடியல. தெருவுல போற தெரு நாய் எல்லாம் வீட்டுக்கு தூக்கிட்டு வந்து ஏண்டி இப்படி வீட்டை நாசம் பண்ற…” அபஸ்வரமாய் தாய் கத்தியது காதில் விழுந்தது.


 “அம்மா! உனக்குப் பிடிக்காதுங்கிறதுக்காக இப்படிப் பேசாதம்மா, பாவம் வாயில்லா ஜீவன் நேத்துச் சாயங்காலம் கோவிலுக்குப் போயிட்டு வரும் போது பாவமா ரோட்ல இங்கேயும் அங்கேயும் ஓடி பசியில கத்திக்கிட்டு இருந்துச்சு… மனசு கேக்கல. எப்படியும் நான் காலேஜ் போனதுக்கப்பறம் உனக்குப் போர் அடிக்கும்ல அந்த நேரத்துல இவங்களோட விளையாடு. நேரம் போறதே தெரியாது அம்மா…”

 “அந்த ரோட்ல நீ மட்டும் தான் இதுகளைப் பாத்தியா? மத்தவங்க எல்லாம் அவங்க வேலைய பாத்துகிட்டு போகல? உன்னை மாதிரியா வீட்டுக்கு தூக்கிட்டு வந்து கொஞ்சிகிட்டு இருக்காங்க?” 

  “யாருமே இரக்கப்படலைனா நாமளும் அப்படியே இருக்கணுமாம்மா? இவங்களும் நம்மள மாதிரியே ஒரு உயிர்தானம்மா. நம்மள மாதிரியே அவங்களுக்கும் பசிக்கும். அங்க ரோட்ல அத்தனை பேரிருந்தும் இவங்களை யாரும் கண்டுக்கவே இல்லம்மா. ஆனா இப்பப்பாரு நம்ம வீட்டுல இவங்களுக்கு நேரா நேரத்துக்கு கரெக்டா சாப்பாடு கிடைக்கும்ல. பாவம்! ரொம்ப சின்னக்குட்டிங்க… அம்மா இல்லாம தனியா எப்படிம்மா இருக்க முடியும்?” 

 “ஆமா… இப்படி நாய் பூனை குரங்கு மேலல்லாம் இரக்கப்பட்டு உதவி செய். ஒரு நாளாவது எனக்குக் கிச்சன்ல உதவி பண்றியா? கொஞ்சமாவது வீட்டு வேலை எதாவது செய்றியா? எல்லா வேலையும் நானே தனியா கிடந்து செய்றேன். காலேஜ்க்கு போனா வீட்டுல அம்மாக்கு ஏதும் உதவி செய்யகூடாதுனு சட்டம் இருக்கா? சரி… வீட்டுவேலை தான் ஏதும் செய்யறது இல்ல. காலேஜ் முடிஞ்சு வந்ததும் புக் எடுத்தாச்சும் படிக்கறியா? அதுவும் இல்ல. எப்பப் பாரு மொட்டை மாடில உட்கார்ந்து நிலாவை பார்த்துகிட்டு இருக்க?”

 “ஏன்மா இப்படிக் கத்தி டென்ஷன் ஆகுற? ரிலாக்ஸ். இப்ப நான் ஒழுங்கா படிக்கலையா? ஏன் இவளோ கோவம்? மார்க் எல்லாம் நல்லாத்தானே எடுக்கறேன். வாம்மா… நீயும் கொஞ்சம் நேரம் இவங்களோட விளையாடும்மா. டென்ஷன் எல்லாம் ஓடி போய்டும்” “சுத்தம்! ஏண்டி நீ கெட்டது பத்தாதா? என்னையும் சேர்த்து கெடுக்கறியா? ஒழுங்கா மரியாதையா இப்ப கிளம்பி காலேஜ்க்கு போகப் போறியா இல்ல உங்க அப்பாக்கிட்ட சொல்லட்டுமா?”

 “அப்பானு சொன்னா உடனே நான் பயந்துடுவேனா? அதெல்லாம் அப்பாக்கு எப்படி ஐஸ் வைக்குறதுனு எனக்குத் தெரியும். நீதான் என்ன எப்ப பாரு திட்டுவ… ஆனா அப்பா என்னை திட்டவே மாட்டார் தெரியுமா?” 

 “சரி… சரி… நேரம் ஆச்சு. நீ போய்க் குளிச்சுட்டுக் கிளம்பு. காலேஜ் போகணும்ல” “இரும்மா… இன்னும் கொஞ்ச நேரம் சந்துருகூடயும் சந்திராகூடயும் விளையாடிட்டு வரேன்” தெய்வானையின் முறைப்பை பார்த்ததும் அம்மாவிடம் அடி உறுதி என்று தெரிந்ததால் அங்கிருந்து சிட்டாக ஓடி மறைந்தாள் மிதுலா. 

சிட்டுக்குருவி போலத் துள்ளி ஓடும் மகளையே பாசத்தோடு பார்த்துக் கொண்டு இருந்தார் தெய்வானை. ‘இருபது வயது ஆனாலும் இன்னும் குழந்தையாகவே இருக்கிறாளே இந்தப் பெண்’ எனப் பெருமூச்சு விட்டபடி படிகளில் இறங்கி கீழே வந்தவரை வரவேற்றது மகளின் அலறல் குரல்… 

 “ ஐயோ… அம்மா!” என்று. மகளின் அலறலைக் கேட்டதும் மகளுக்கு என்னவோ ஏதோ என்று விரைந்து குரல் கேட்ட திசையை நோக்கி ஓடினார் தெய்வானை. அங்கே தரையில் அமர்ந்து முகத்தை மூடி அழும் மகளைக் கண்டதும் ஒரு நொடி ஒன்றும் புரியாமல் திகைத்துப் போய் நின்றார். அவளுக்கு உடம்பில் காயமோ, அடியோ ஏதும் பட்டு இருந்தால் இந்நேரம் வலிக்கிறது என்று கத்தி ஊரையே கூப்பிட்டு இருப்பாள். 

அப்படி இல்லாமல் முகத்தை மூடி ஏன் அழுகிறாள் என்று சிந்தித்தவாறே மகளின் தோளை மெதுவாகத் தொட்டு, “மிதுலா!” என்று கூப்பிட்டார். “அம்மா! ” என்று கதறிய படி அன்னையின் தோளில் சாய்ந்து மேலும் மேலும் அழுது கொண்டே இருந்தாள்.

 “என்ன ஆச்சு மிதுலா? சொன்னாத்தானே தெரியும்… என்ன?” என்று கேட்டார் தெய்வானை. மெதுவாகத் தன்னை அமைதிப்படுத்திக் கொண்ட பின், “போன வாரம் வெயிட் மெஷின்ல வெயிட் பாத்தப்போ அறுபத்தியஞ்சு கிலோ தான்மா இருந்தேன். இப்ப அறுபத்தியெட்டு கிலோனு காட்டுதும்மா. இந்த சுஜிதா கூட பந்தயம் கட்டி இருக்கேன்மா. எப்படியும் இன்னும் ஒரு மாசத்துக்குள்ள எப்படியாவது ஐம்பது கிலோவா குறைச்சு காமிக்கிறேன்னு சொல்லி இருக்கேனே… இப்ப என்னம்மா பண்றது?” என்று கூறிவிட்டு மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

 ‘அடிப்பாவி! கிராதகி! இதுக்கா இவ்ளோ கத்து கத்தின?’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, “இதுக்காக எல்லாம் அழுவாங்களா?” என்று மகளைச் சமாதானப் படுத்த முனைந்தார். ஆனால் அவளோ நிறுத்தாமல் அழுது கொண்டே இருந்தாள். 

 இவளை விட்டால் நாள் முழுக்க இதையே நினைத்துக் கொண்டு இருப்பாள் என்று ஒரு முடிவுக்கு வந்த தெய்வானை, “ஆமா இன்னிக்கு காலேஜ்ல ஏதோ டெஸ்ட் இருக்குனு சொன்னியே?” என்று கேட்டது தான் தாமதம்…

 “அய்யயோ! ஆமாம்மா… மறந்தே போய்ட்டேன். இப்பவே நேரம் ஆச்சு. இப்ப கிளம்பினா தான் அந்த முசுடு முத்தப்பா வர்றதுக்கு முன்னாடி லேபுக்கு போக முடியும்”

 “சரிடி… அப்புறம் ஏன் நின்னு பேசிக்கிட்டே இருக்க. ம்… கிளம்பு போ” என்று மகளை விரட்டி குளிக்க அனுப்பினார். நேரே குளித்து முடித்துத் தன்னுடைய அறைக்குச் சென்றவள், ஒரு சுடிதாரை எடுத்து உடுத்திக் கொண்டு, கண்ணாடி பார்த்து பொட்டு வைத்துக் கொண்டு சமையல் அறை மேடையின் மேல் ஏறி அமர்ந்தாள்.

 ‘ஆரம்பிச்சுட்டியா?’ என்பதைப் போலப் பார்த்த தாயின் பார்வையைப் பொருட்படுத்தாமல், “அம்மா! எனக்கு லேட்டாச்சு. நான் சாப்பிட ஆரம்பிச்சா லேட் ஆகிடும். அதனால நீயே ஊட்டி விட்டுடும்மா…” என்று கூறிய மிதுலாவை முறைத்துக் கொண்டிருந்த தெய்வானை பேச ஆரம்பிக்கும் முன்… தாயின் குரலிலேயே, “ஏழு கழுதை வயசாகுது. இன்னும் உனக்கு ஊட்டி விடச் சொல்லி ஏண்டி இப்படிப் படுத்துற?” என்று கூறி முடிக்கவும்… சிரித்துக் கொண்டே, “வாயாடி!” என்று கூறி தோளில் ஒரு தட்டு தட்டி அவளுக்குச் சாப்பாடு ஊட்ட ஆரம்பித்தார் தெய்வானை.

  “வயசு பொண்ணா லட்சணமா புடவை கட்டிக்கோனு எத்தனை தடவை சொல்றேன். ஒரு நாளாவது புடவை கட்டுறியா?” 

 “என்னது புடவையா? போம்மா! அதைக் கட்டிக்கிட்டு யாரு சோளக்கொல்லை பொம்மை மாதிரி நிக்கறது… சுடிதார் தான்மா வசதி” 

 “ ஹ்ம்ம்” என்பதைத் தவிர வேறு எதுவும் தெய்வானை சொல்லவில்லை. ஒரு வழியாகச் சாப்பிட்டு முடித்து, “அம்மா நான் கிளம்பறேன்மா. அப்படியே அப்பாகிட்ட உங்களைப் பத்தி கம்பிளைன்ட் ஒண்ணு பண்ணனும். அப்பாகிட்ட பத்த வச்சுட்டு கிளம்பறேன்” என்றவள், நேரே சென்றது பூஜை அறையில் இருந்த அவளது தந்தையின் புகைப்படத்தை நோக்கி.

 குமரகுரு தான் மிதுலாவின் தந்தை. அவளுக்கு ஐந்து வயது இருக்கும் போதே ஒரு விபத்தில் உயிரை விட்டு விட்டார். குமரகுரு சொந்தமாக ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர் வைத்து இருந்தார். அவருடைய நெருங்கிய நண்பர் கங்காதரனும் அதில் ஒரு பார்ட்னர். 

 குமரகுரு இறந்ததும் கங்காதரன் தொழிலின் முழுப் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டார். பார்ட்னெர்ஷிப்பை தெய்வானை பெயருக்கு மாற்றி அவரைச் சைலன்ட் பார்ட்னர் ஆக்கி வருமானத்தில் லாபத் தொகையை மாதா மாதம் அவரே நேரில் வந்து பணத்தைக் கொடுத்துவிட்டு போவார். 

 குமரகுருவுக்கு சொந்தமாக இருந்த வீடுகளின் வாடகை மூலமாக அவர்களுக்கு வந்த மேற்படி வருமானத்தை படிப்பறிவு இல்லாவிட்டாலும் தெய்வானை மகளின் எதிர்காலத்திற்காக முறையாகச் சேமித்து வந்தார். 

 தந்தையின் புகைப்படத்தின் முன் நின்றவள், “அப்பா! வர வர உங்க பொண்டாட்டியோட இம்சை தாங்க முடியலைப்பா… எப்பப்பாரு ஒரே அட்வைஸ் தான். இப்படிச் செய்யாத, இப்படி இருக்காத… ரெண்டு காதுலயும் ரத்தம் வராத குறை” என்று புலம்பிய மகளைப் பார்த்த தெய்வானையின் நினைவுகள் பின்னோக்கி சென்றது… 

 குமரகுரு இறந்தப் பிறகு, “அப்பா எங்கே? எப்ப வருவாங்க?” என்று விடாமல் கேள்வி கேட்ட மிதுலாவை சமாளிக்க, அவளது அன்னை தெய்வானை, “அப்பா இந்தப் போட்டோக்குள்ள இருக்கார். நீ பேசுறது செய்யுறது எல்லாத்தையும் அங்கே இருந்து பார்ப்பார்” என்று சொல்லி சமாளித்து வைத்தார். 

 அன்றிலிருந்து தந்தையிடம் அன்றைய நாளில் என்ன நடந்தது, தான் செய்தது என்று எல்லாவற்றையும் ஒப்பித்து விடுவாள். மனது சரி இல்லாத நேரங்களில் தெய்வானையும் குமரகுருவின் போட்டோவின் அருகே அமர்ந்து பேசுவார். ஏதேனும் முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்றால் கூட குமரகுருவிடம் சீட்டு எழுதிப் போட்டு தான் முடிவு எடுப்பார். அந்த வீட்டை பொறுத்தவரை குமரகுரு இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

  “அம்ம்மா! எத்தனை தடவை கூப்பிடறேன்… என்னம்மா யோசனை? ஓ அப்பா கூட டூயட்டா? ஹ்ம்… நடத்து நடத்து! சரிம்மா எனக்கு நேரமாச்சு. நான் கிளம்புறேன் சாயந்திரம் லைப்ரரிக்கு போயிட்டு வரேன்மா. ஆறு மணிக்குள்ள வந்துடுவேன்… பை” என்றவள் காலேஜ்க்கு கிளம்பினாள். மகள் கண் பார்வையில் இருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டே இருந்தவர், பின்னர் கதவை சாத்திவிட்டு கணவரின் புகைப்படத்தின் கீழ் அமர்ந்து கொண்டு அவருடன் பேசத் தொடங்கினார். 

 “உங்க பொண்ணுக்கு வர வர வாய் ஜாஸ்தி ஆயிடுச்சு. சொல் பேச்சே கேட்க மாட்டேங்கிறா. ரொம்ப விளையாட்டுத்தனம். இன்னும் ஒரு வருஷம் தான். அவ படிப்பை முடிக்கட்டும்… ஒரு நல்ல பையனை பாத்துக் கல்யாணம் செஞ்சு வச்சிட்டா போதும் என் கடமை முடிஞ்சுடும். உங்க கிட்டவே நானும் வந்து சேர்ந்துடுவேன்” என்றார் கண்ணீர் மல்க. ‘நீ நினைப்பது எல்லாம் அப்படியே நடந்து விட்டால் பிறகு நான் எதற்கு இருக்கிறேன்?’ என்ற கேள்வியோடு விதி தெய்வானையை பார்த்துச் சிரித்தது.
Click to rate this post!
[Total: 0 Average: 0]
Facebook Comments Box

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here