Nunn 24

0
1295
NUNN Tamil Novels 37

வசீகரனின் கரங்கள் மெதுவாக மிதுலாவின் தோள் வழியாக ஊர்வலத்தை தொடங்கியது.பெண்ணுக்கே உண்டான இயல்பான கூச்ச மிகுதியால் அவன் கரங்களை தள்ளிவிட்டு விட்டு அங்கிருந்து ஓட முற்பட்டாள் மிதுலா.அவளது எண்ணம் புரிந்தவன் போல அவளை நகர முடியாத படி இரு கரங்களிலும் சிறை பிடித்தான் வசீகரன்.”கொஞ்ச நேரம் பேசாம இருக்க சொல்லி சொன்னேன்ல”…என்று அதட்டல் வேறு.வசீகரனின் மீசை கழுத்து வளைவில் குறுகுறுப்பை ஏற்படுத்த ஒரு அளவிற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் அவன் மீதே கொடி போல படர்ந்து விட்டாள் மிதுலா.சற்றுநேரம் பொறுத்து அவளை விடுவித்தவன்,”உன் மேல் எந்த வாசனையும் அடிப்பதாக எனக்கு தெரியவில்லையே”

மெதுவாக தன்னை சமாளித்து முக சிவப்பை மீட்டுக் கொண்டவள் வசீகரனின் கேள்வியில் செல்ல கோபம் கொண்டு வாதாடினாள்.
“நல்லா மூச்சு முட்ட குடித்து இருந்தால் பூவின் வாசமும் தெரியாது, புண்ணாக்கு வாசமும் தெரியாது…பேசாம போவாரா….அதை விட்டு சும்மா போறவளை கூப்பிட்டு வம்பா செய்றீங்க”
“ஏய்….என்னடி ரொம்ப பேசுற”
“சரி பேசலை…. வெறும் வயித்தோட படுக்க வேண்டாம்….இருங்க பால் கொண்டு வருகிறேன் குடித்துவிட்டு தூங்குங்க” சமாதானமாக பேச முற்பட்டாள் மிதுலா.

“உன் கையால் எனக்கு எதுவுமே வேண்டாம் போடீ….கொலை பசியில் வந்தேன்….ஒரு வாய் கூட வாயில் வைக்க முடியவில்லை….சை!!! ராட்சஸி”

“கோபம் என்மேல் தானே …. பரவாயில்லை…கொஞ்சம் சாப்பிடுங்கள்…..ப்ளீஸ்!!!!” கெஞ்சினாள் மிதுலா.

“ஏய் !!!! பேசாம போடி….நீ எதற்கு இப்படி வந்து என்னிடம் தழைந்து பேசுகிறாய்???? உன்னை எத்தனை அசிங்க படுத்துகிறேன் ரோஷப்பட்டு சண்டை போடு…. கத்தி கூச்சல் போடு… அழுது புலம்பி ஊரை கூட்டு…அதை விடுத்து ஏன் இப்படி நடந்து என் உயிரை வாங்குகிறாய்…. போ என் கண் முன்னால் நிற்காதே” என்று கூறி அவளை கீழே தள்ளி விட்டான் வசீகரன்.

சற்று நேரம் அவளுக்கு ஒன்றுமே புரியாமல் பேந்த பேந்த முழித்தாள்.இப்போது எதற்கு திடீரென புருஷர்ர்ர்ர் இவ்ளோ கோவப்படுகிறார்……நல்லா தானே பேசிக்கிட்டு இருந்தார் என்ற யோசனையோடு அவன் முகத்தை பார்த்தாள்.

“என்னடி !!!! முறைச்சு பார்க்கிறாயா???? என்னை முறைத்து பார்க்கும் அளவுக்கு உனக்கு தைரியம் வந்துடுச்சா!!!! என்று கேட்டுக் கொண்டே அவள் தோளை தொட்டு உலுக்கினான்.

வசீகரனின் காட்டுத் தனமான உலுக்கலில் வலி தாங்காமல் மிதுலா கண்ணீரோடு ,”ப்ளீஸ் விடுங்க கை வலிக்குது” என்று புலம்ப பட்டென கையை விட்டு அவள் எதிர்பாரா நேரத்தில் அவளை தள்ளி விட்டவன் ,”என் கண் முன்னாடி நிற்காதே!!!! போ ….போய்டு…. இல்லை நானே உன்னை ஏதாவது செய்துடுவேன்…..போடி” என்று ஆவேசமாக கூறிவிட்டு கட்டிலில் சென்று படுத்து விட்டான்.

படுத்தவன் சற்று நேரம் தூக்கத்தில் புலம்பிக்கொண்டே ஆழ்ந்து உறங்கி விட்டான். விடியும்வரை உறங்காமலே பொழுதை கழித்தவள் விடிந்ததும் இதே சிந்தனையோடு தோட்டத்திற்கு வந்து அமர்ந்து சிந்திக்க ஆரம்பித்தாள்.இடையில் சக்தியின் குறுக்கீட்டில் திசை மாறி சென்ற எண்ணம் மீண்டும் அதே இடத்திற்கு வந்தது.

‘நேற்று இரவு அவர் என்ன சொல்ல வந்தார்???? என் கூட சண்டை போடு என்று தானே சொன்னார்……அதற்கு என்ன அர்த்தம்……அவர் என்ன எதிர்பார்க்கிறார் ….. நான் அவரிடம் சண்டை போடணும்னு எதிர்பார்கிறாரோ’….என்று யோசித்தவண்ணம் அமர்ந்து இருந்தாள் மிதுலா.

“உன்னை எங்கே எல்லாம் தேடுவது தங்கச்சி….இங்கே உட்கார்ந்து ஏன் அந்த காக்காவை முறைச்சு பார்க்கிற….ஓ !!!! நீ அது வாயில இருக்கிற வடையை கீழே போடும் எடுத்து சாப்பிடலாம் என்று காத்திருக்கிறாயா????” வழக்கமான புன்சிரிப்போடு அவளை எதிர்கொண்டான் சக்தி.

“சே !!! சே !!! இல்லைண்ணா ….பார்க்கிறதுக்கு ஒரு சாயலில் உங்களை போலவே இருந்துச்சா அதுதான் உற்று பார்த்து அது நீங்கள் தானா என உறுதி செய்து கொண்டு இருந்தேன்….நல்லவேளை நீங்களே வந்து விட்டிர்கள்… இல்லையென்றால் அது நீங்கள் என்று நினைத்து உங்களுக்காக எடுத்து வைத்து இருந்த காலை டிபனையும் சேர்த்து கொடுத்து இருப்பேன்….”சிரிப்பை அடக்கியபடி சொன்னாள் மிதுலா.

“என்ன தங்கச்சி நான் என்ன காக்கா போலவா இருக்கிறேன்……” உண்மையான தவிப்போடு கைகளை முன்னும் பின்னும் திருப்பி பார்த்துக் கொண்டான். “போன வாரம் கூட ஜென்ட்ஸ் பார்லர் போய் அவ்வளவு செலவு செய்தேன் அத்தனையும் வேஸ்ட்டா???”

இத்தனை நேரம் வாய்க்குள் சிரித்தவள் இப்பொழுது அடக்க மாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தாள் .

“தங்கச்சி இப்ப ஏன் சிரிக்குற….ப்ளீஸ்!!! சிரிக்காம என் கேள்விக்கு பதில் சொல்லு….என்னை பார்த்தால் காக்கா போலவா இருக்கிறது”கெஞ்ச ஆரம்பித்தான் சக்தி.

ஒருவழியாக சிரித்து முடித்தவள் ,”ஆமாம் அண்ணா ….காக்கா போல தான் தெரிகிறது….அதுவும் சாதாரணமான காக்காய் இல்லை…திருட்டு காக்காய்….”
“திருட்டு காக்காயா!!!! ” திருத்திருத்தான் சக்தி.
“ஆமாம் “
“என்ன தங்கச்சி சொல்ற???”
“அதுவா அண்ணா …..காலையில் கொஞ்ச நேரம் அழகான காலை பொழுதை ரசிக்கலாம்னு தோட்டத்திற்கு வந்தேன்…..அப்பொழுது யாரோ யார்கிட்டயோ…..என்னவோ பேசிக்கிட்டு இருந்தாங்க….பட் என் காதில் ஒண்ணுமே விழவில்லை தெரியுமா!!!…. முக்கியமா “நீ ஊருக்கு வர இந்த நாட்களுக்காக தான் நான் காத்துக் கொண்டு இருக்கேன்…அட.. அட … செம டயலாக் அதை நான் கேட்கவே இல்லை தெரியுமா…என்று கூறிவிட்டு சக்தியின் முகம் போன போக்கை பார்த்து விட்டு மீண்டும் அடக்க மாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தாள்.
“மிதுலா ….நீ எங்கே இருந்தாய்???? ” சக்தியின் கேள்வியில் தவிப்பு இருந்தது.
“அதோ அந்த ஆள் உயர பூ செடிகள் இருக்கிறதே….அங்கே தான்”
“மிதுலா….அதுவந்து….”
“அண்ணா….என்னிடமே இத்தனை தயங்கினால் பிறகு வர்ஷினியின் அண்ணாவிடம் எப்படி பேசி திருமணத்திற்கு அனுமதி வாங்குவீர்கள்”
“மிதுலா….உனக்கு என்மேல் கோபம் ஏதும் இல்லையே???”
“ரொம்ப சந்தோஷமா தான் அண்ணா இருக்கேன்….வர்ஷினிக்கு தேடினாலும் உங்களை போல ஒருத்தர் கிடைக்க மாட்டார்…. அவள் ரொம்ப கொடுத்து வைத்தவள்”

“இல்லை மிதுலா….என் வர்ஷினியை அடைய நான் தான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்”

“பார்றா….லவ்வு!!! ஹம் நடத்துங்க நடத்துங்க…..”

“அப்போ உன் சப்போர்ட் எனக்கு தான் இல்லையா???? வசீகரன் ஏதாவது இடக்கு செய்தால் என் சார்பாக அவனிடம் பேசி என் காதலுக்கு உதவி செய்வாய் இல்லையா??? ” உற்சாக மிகுதியில் பேசிக் கொண்டே போனான் சக்தி.

‘ஹுக்கும்….இங்கே என் காதலுக்கே வழி இல்லையாம்….இதிலே உங்களுக்கு வேறு உதவ வேண்டுமா…. நல்ல ஆளை பார்த்து தான் உதவ தேர்ந்து எடுத்து இருக்குறீர்கள்’என்று மனதுக்குள் நினைத்தபடி வெளியே,”அதற்கு என்ன அண்ணா….கண்டிப்பாக செய்கிறேன்.ஆனால் அதற்கு முன்னால் உங்கள் காதல் கதையை எனக்கு சொல்ல வேண்டும்… சரிதானா????”

“அது கதை இல்லை தங்கச்சி……காவியம்”
“சுத்தம்…… ரொம்ப முத்திடுச்சு போல”
“அப்படியா சொல்ற!!!…” என்றான் சந்தேகமாக
“கன்பார்ம் அண்ணா”
“இருந்துட்டு போகட்டும் போ”
“என்ன அண்ணா…ஆமாம்னு சொன்னா வீரவேசமா ஏதாவது டயலாக் பேசுவீங்கன்னு பார்த்தா இப்படி டக்குனு சரண்டர் ஆகிட்டீங்க….கொஞ்சம் கெத்து காமிக்கணும்னு அண்ணா”

“அந்த கருமத்தை வச்சுக்கிட்டு நான் என்ன செய்ய தங்கச்சி….எனக்கு அதெல்லாம் வேணாம்….எப்படியாவது உன் புருஷன்கிட்ட சொல்லி எங்க ரெண்டு பேர் கல்யாணத்தை மட்டும் முடிச்சு வை… நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்”
“என்ன சொன்னாலுமா!!!!”
“என்ன சொன்னாலும்….” அழுத்திக் கூறினான் சக்தி.
“அண்ணா என்னைப் பற்றி தெரியாம வாக்கு கொடுக்காதீங்க….. நான் கொஞ்சம் லூசு….வில்லங்கமா எதையாவது கேட்டு வைப்பேன் யோசிச்சுக்கோங்க”
“அதெல்லாம் நான் வாக்கு கொடுத்தா கொடுத்தது தான்… சொன்ன சொல்லை காப்பாற்றியே தீருவேன்”
மிதுலாவின் மனதுக்குள் அப்பொழுது ஒரு திரைப்பட வசனம் நினைவுக்கு வந்தது.(சொன்ன சொல் தவற மாட்டான் இந்த கோட்டை சாமி …..தலை கீழாக தான் குதிக்க போகிறேன்).”விதி வலியது” என்று கூறிவிட்டு அடக்க மாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தாள்.

“காலையிலே என்ன இப்படி சிரிப்பு வேண்டி கிடக்கு” என்று பின்னுருந்து கேட்ட வசீகரனின் குரலில் சுவிட்ச் போட்டது போல அவள் சிரிப்பு நின்று போனது.

“வாடா புது மாப்பிள்ளை….என்னடா ….காலையில் எப்பவும் சீக்கிரமா எழுந்துடுவ…..இன்னிக்கு என்ன இவ்வளவு லேட்டா எழுந்து இருக்கிறாய்!!!! நைட் சரியா தூங்கலியா….. கண் வேற சிவந்து போய் இருக்கு…..”இயல்பாக கேலி பேசினான் சக்தி.

சக்தியின் பேச்சில் முகம் சிவந்து”சரி சரி வாங்க அண்ணா முதலில் ஒரு கப் காபி குடிக்கலாம் பிறகு தான் மற்றவை எல்லாம்” என்று அவனை அழைத்துக் கொண்டு அங்கு இருந்து செல்ல முற்பட்டாள்.

“அவனை மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரிகிறதா!!!! குத்துகல்லு மாதிரி இங்கே இருக்கிறேனே நான் உன் கண்ணுக்கு தெரியவில்லையா????” அதற்கும் எரிந்து விழுந்தான் வசீகரன்.

இரவு அந்த பேச்சு பேசிவிட்டு எப்படி ஒன்றுமே நடக்காதது போல் பேசுகிறார் பார் இந்த புருஷர்ர்ர்ர் என்று எண்ணி அவனை விசித்திரமாக பார்த்துக் கொண்டே ,”இது உங்கள் வீடு இங்கே உங்களை யார் வரவேற்க வேண்டும்…சக்தி அண்ணா இந்த வீட்டின் விருந்தாளி …அவரை கவனிக்க வேண்டியது என் கடமை அதை தான் செய்கிறேன் என்று கூறிவிட்டு விரைந்து உள்ளே சென்று விட்டாள் மிதுலா.

ஹாலில் அனைவரும் கூடி இருக்க சமையல்கார அம்மா பூரணி காபி கோப்பைகளை எடுத்து ஒவ்வொருவருக்கும் கொடுத்துக் கொண்டே வந்தார்.உள்ளே வந்த மிதுலா காவேரியை பார்த்து இயல்பாக ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு வர்ஷினியை பார்த்தாள். கையில் பேப்பரோடு காபியை குடிப்பது போல் பாவனை செய்து கொண்டு இருந்தாலும் அவள் கண் பேப்பரில் பதியாமல் வாசலை நோக்கிய வண்ணம் இருந்தது.யாரை பார்க்கிறாள் என்று திரும்பிய மிதுலாவின் கண்களில் சக்தியும் வசீகரனும் பேசிக் கொண்டே ஹாலுக்கு வருவது பட்டது.இவள் யாரை பார்க்கிறாள் என்று தெரியவில்லையே ….என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே சட்டென பார்வையை திருப்பி சீரியஸாக பேப்பர் படிக்க ஆரம்பித்து விட்டாள் வர்ஷினி.

“பூரணி அம்மா ஒரு கப் காபி தாங்க….” என்றபடி உள்ளே வந்த சக்தி வர்ஷினியின் நேர் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.அவனுக்கு அருகில் வசீகரனும் அமர்ந்து ஏதோ தொழில் சம்மந்தமாக பேச ஆரம்பித்தனர்.
“தங்கச்சி இன்னிக்கு என்ன டிபன்மா”….என்றான் சக்தி.

“அடேய்…. சாப்பாடு ராமா….நான் இங்கே எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிக்கிட்டு இருக்கேன்……நீ என்னடா டிபனை பத்தி பேசிக்கிட்டு இருக்க…..”

“டேய் யார் யாருக்கு எது முக்கியமோ அதை பற்றி தான் பேசுவாங்க…..போடா நான் இன்னிக்கு இங்கே வந்தது முக்கியமாக சிஸ்டரோட சாப்பாட்டுக்காக தான்… நீ போடா உனக்கு என்ன தெரியும்…. சிஸ்டர் கை மணம் அப்படி ….நீ சொல்லு தங்கச்சி…..இன்னிக்கு என்ன ஸ்பெஷல்!!!!”

“டேய் அவள் சமையலை பத்தி தெரியாம பேசாதே….” அசுவாரசியமாய் பேசினான் வசீகரன்.

“தெரிஞ்சதுனால தான் சொல்றேன்.நேத்து நைட் சிஸ்டர் செஞ்ச சாப்பாட்டை புல்லா சாப்பிட்டு நடக்க கூட முடியலை.தோட்டத்தில் கொஞ்ச நேரம் நடந்துட்டு அப்பறம் தான் வீட்டுக்கே போனேன்….தெரியுமா????….”

சக்தி பேச பேச அசுவாரசியமாய் கவனித்துக் கொண்டு இருந்தவன் அந்த நிலையில் இருந்து மாறி உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான் வசீகரன்.

மிதுலாவை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே , ” அப்படி என்னடா சாப்பிட்டாய்”???? என்று ஆர்வம் இல்லாதவனை போல விசாரித்தான்.

மிதுலா சொல்ல வேண்டாம் என்று சக்திக்கு எவ்வளவோ சைகை செய்து பார்த்தாள். ஆனால் சக்தி அவளை பார்த்தால் தானே…..அவன் பாட்டிற்கு பேசிக் கொண்டே போனான்.
“என்னடா இப்படி கேட்டுட்ட !!!! சிஸ்டர் நேத்து எத்தனை வெரைட்டி செஞ்சு இருந்தாங்க தெரியுமா????…. இட்லி,தோசை,சப்பாத்தி ,வெஜ் சாலட் அப்பறம் ஹைலைட் என்ன தெரியுமா…..அந்த சாக்லேட் கேக் தான்….. அதுல கிரீம் எதுவுமே போடலை…. குக்கர்ல செஞ்சதுன்னு சொன்னா தான் தெரியும் ….பார்க்க அப்படியே இட்லி மாதிரியே இருந்துச்சு…..இன்னிக்கும் அது மாதிரி ஏதாவது வித்தியாசமா செஞ்சு இருப்பாங்களேன்னு தான் காலையிலே இவ்வளவு சீக்கிரம் வந்துட்டேன்”

சக்தி பேச பேச வசீகரனின் முகம் போன போக்கை பார்த்து அரண்டு தான் போனாள் மிதுலா.

‘ஐயோ இந்த சக்தி அண்ணன் இப்படி கவுத்துட்டாரே….எவ்வளவு தூரம் சைகை செய்தேன்….கொஞ்சம் கூட கவனிக்காமல் இந்த பனைமரத்தான் கிட்ட இப்படி வகையாய் கோர்த்து விட்டு விட்டாரே……மிதுலா இப்போ எப்படி டி சமாளிக்க போற’ என்று யோசித்த வண்ணம் நின்று கொண்டு இருந்தாள்.

“சரி சரி நீ எப்படியோ போ….நான் போய் குளித்து விட்டு வருகிறேன்.வந்ததும் மிச்ச விஷயங்களை பேசலாம் என்று கூறிவிட்டு கடகடவென மாடி ஏறி கடைசி படியில் நின்று கொண்டு,”மிதுலா காபியை மேலே கொண்டு வா” என்று சொல்லி விட்டு போய் விட்டான்.

‘மாடிக்கு இப்பொழுது போகலாமா வேண்டாமா ‘ என்று மனதுக்குள் அவள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டு இருக்கும் போதே அவள் கைகளில் காபி ட்ரே திணிக்கப் பட்டது.அவர்களிடம் மறுக்கவும் முடியாமல் அதை வாங்கிக் கொண்டு மாடி ஏறினாள் மிதுலா.

Facebook Comments Box
Previous PostNunn 23
Next PostNunn 25
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here