Nunn 25

0
1631
NUNN Tamil Novels 37

படபடக்கும் இதயத்தோடு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மாடியில் உள்ள அறையை அடைந்தாள் மிதுலா. புருஷர்ர்ர்ர் என்ன சொல்வாரோ…. எப்படி நடந்துக்க போறாரோ….. அம்மா தாயே….காப்பாத்து….. ஊரில் உள்ள அனைத்து தெய்வத்தையும் வேண்டியவாறே அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல முற்பட்டாள்.உள்ளே நுழைந்த வேகத்தில் வசீகரன் அவள் கைகளை பிடித்து சுண்டி இழுத்தான்.இழுத்த வேகத்தில் சுவற்றில் மோதி நின்றாள் மிதுலா.அவளின் இருபுறமும் கைகளை ஊன்றி,”போனா போகுது சின்ன பொண்ணுன்னு உன்னை பாவம் பார்த்து விட்டா நீ என்னையே ஏமாற்றுகிறாயா!!!! உனக்கு அத்தனை தைரியம் எங்கிருந்து வந்தது???? யார் கொடுத்தது??? வில்லில் இருந்து புறப்பட்ட அம்பென வந்து தெறித்தது வார்த்தைகள்.

“என் புருஷனிடம் இருந்து வந்தது” சற்றும் சளைக்காமல் பதில் கொடுத்தால் மிதுலா.

“உனக்கு ரொம்பவும் இடம் கொடுத்து விட்டேன் தான்…. இல்லையென்றால் என் வீட்டில் இருந்து கொண்டு எனக்கே சாப்பாடு போடாமல் பட்டினி போடுவாயா???”

“ஆமா ….இவர் அப்படியே ரொம்ப தான் செல்லம் கொடுத்து விட்டார்.முழுதாக ஒரு வார்த்தை என்னிடம் நேராக இயல்பாக சிரித்து பேசி இருக்கீங்களா????”

“நீயும் உன் குடும்பமும் செய்து வைத்த காரியத்திற்கு இந்த நினைப்பெல்லாம் வேறு இருக்கிறதா உனக்கு…”எகத்தாளமாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

“திரும்ப திரும்ப அதையே சொல்லாதீங்க…..உங்களை ஏமாற்றியதில் என் பங்கு என்று எதுவும் இல்லையே???? பிறகு எனக்கு ஏன் இந்த தண்டனை”மிதுலாவும் பதிலுக்கு கேட்டாள்.

“ஓ ….உனக்கு என்னை கல்யாணம் செஞ்சு என் கூட வாழ்க்கை நடத்துவது தண்டனையா????….”ஸ்ருதி ஏறியது வசீகரனின் குரலில்.

“நான் அப்படி சொல்லலை……உங்களுக்கு எப்படி இது வேண்டாத திருமணமோ அதே போல தான் எனக்கும் ….. அதை புரிந்து கொள்ளுங்கள் மஹாபிரபு என்று கெஞ்சுகிறேன்” நக்கல் தெறித்தது அவளின் பதிலில்.

“ஓ ….. உனக்கு என்னை பிடிக்கவில்லை என்று தான் நேற்று அப்படி ஒரு சமையலை செய்து போட்டேன் என்று சொல்ல வருகிறாயா” இடக்காக கேள்வி கேட்டான் வசீகரன்.

“புருஷர்ர்ர்ர்…நீங்க பேசுறது உங்களுக்கே சரி என்று படுகிறதா….அப்படி பேசினால் இந்த பக்கம் போறீங்க….இப்படி பேசினால் அப்படி போறீங்க….செய்யறது எல்லாம் தப்பு….இதிலே என் மேலே பழியா???”
“அப்படி என்னடி நான் தப்பு செய்து விட்டேன்” அவள் கைகளை இழுத்து பிடித்து முறுக்கியவாறு கேட்டான்.

வலி தாங்காமல் கண்களில் கண்ணீரோடு வசீகரனை நிமிர்ந்து பார்த்து அவனை நேருக்கு நேராக பார்த்து சொன்னாள். “என்னை உங்கள் மனைவியாக நினைத்தா சமைக்க சொன்னீர்கள்???? வேலைக்காரியாக நினைத்து தானே சொன்னீர்கள்…. அப்படி சொன்னால் இப்படி தான் சமைப்பேன்……”உறுதியுடன் வந்தது வார்த்தைகள்.

“உன் திமிர் அடங்குகிறதா பார்!!! …..”

“என் பக்க நியாயத்தை நான் பேசினால் உங்கள் கண்ணுக்கு நான் திமிர் பிடித்தவளாக தெரிந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல”
மிதுலா பேச பேச வசீகரனின் கண்களில் உஷ்ணம் ஏறிக் கொண்டே போனது.

“அப்படியென்றால் என் சொல் பேச்சு கேட்டு நடக்க மாட்டேன் என்கிறாய்…அப்படித்தானே!!!”கண்களில் கொலைவெறி தாண்டவமாட கேட்டான் வசீகரன்.

“நீங்கள் மனைவி என்ற ஸ்தானத்தில் என்னை நடத்தவில்லையென்றால் கண்டிப்பாக உங்கள் தாளத்திற்கு ஆடும் பொம்மையாக ஒருக்காலும் இருக்க மாட்டேன்”

“சொல் பேச்சு கேட்க மாட்டாயா???? உன்னை …..என்று பாய்ந்து வந்த வசீகரன் என்ன செய்து இருப்பானோ செல்போன் ஒலி எழுப்பி மிதுலாவை காப்பாற்றியது.போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தவன் கண்களை ஒரு நிமிடம் மூடி இயல்புக்கு திரும்பியவன்,”சொல்லு நிவி….என்ன காலையிலேயே போன்….என்ன விஷயம்???
……
“ஓ….சரி சரி….”
……..
“சே!!! சே!!!!! …. உன்னிடம் எதற்கு கோபப்பட போகிறேன்”
……..
“ஹா ஹா ஹா…..நீ சொன்னால் சரிதான்”
………
“மிதுலா இப்பொழுது இங்கு இல்லையே…. அவள் குளித்துக் கொண்டு இருக்கிறாள்”
……….
“கண்டிப்பாக சொல்லி விடுகிறேன்….உன் வார்த்தைக்கு மறுவார்த்தை பேச முடியுமா…..அப்படி பேசிவிட்டு தான் உன்னிடம் இருந்து தப்ப முடியுமா”
“சரி நிவி ….வைத்து விடட்டுமா”

போனில் பேசியவன் அவளை திரும்பியும் பாராது குளியல் அறைக்கு சென்று புகுந்து விட்டான். சோப் மணம் கமழ குளித்து முடித்து வெளியே வந்தவன் மிதுலாவிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் ட்ரெஸ்ஸிங் டேபிளுக்கு சென்று உடை மாற்றி விட்டு தன்னுடைய அலுவலகத்திற்கு கிளம்பி கீழே சென்று விட்டான்.

மிதுலா நின்ற அதே இடத்தில் ஆணி அடித்தார் போல நின்று விட்டாள்.வசீகரன் பேசியதை வைத்து பேசியது நிவியிடம் என்று தெரிந்து கொண்டாள்.அவளிடம் மட்டும் நிவி நிவி என்று உருகுவதை பார்….. என்னை பக்கத்தில் வைத்துக் கொண்டே இல்லை என்கிறார் , நான் இங்கே நின்று கொண்டே இருக்கிறேன் அவர் பாட்டிற்கு கிளம்பி போய் கொண்டே இருக்கிறார் என்று முதலில் ஆத்திரமாக எண்ண தொடங்கியவள் சிறிது நேரத்தில் வருந்த தொடங்கினாள்.

‘உண்மையில் அவருக்கு என்னை பிடிக்கவில்லையோ!!!! அதனால் தான் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாரோ….நிவியிடம் எல்லாம் நன்றாக தானே பேசுகிறார் என்று ஏதேதோ யோசனையில் மூழ்கி வெகுநேரம் அப்படியே நின்றவள் அறை வாசலில் கேட்ட காவேரியின் பேச்சு குரலில் தான் தன்னுணர்வு பெற்று மீண்டாள். தன்னை சமாளித்துக் கொண்டு குளித்து முடித்து சுடிதாருக்குள் தன்னை நுழைத்துக் கொண்டு கீழே சென்றாள்.கீழே ஹால் மிக அமைதியாக இருந்தது.யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.எங்கே யாரையும் காணவில்லை என்ற யோசனையோடு கீழே சென்றவளை எதிர்கொண்டார் காவேரி.
“வாம்மா குளித்து விட்டாயா!!!! சரி வா வந்து டிபனை சாப்பிடு….”
“இருக்கட்டும் அத்தை…. கொஞ்ச நேரம் போகட்டும் சாப்பிட்டு கொள்கிறேன்.உங்க பையன் எங்கே அத்தை?????”

“அவன் அப்பொழுதே கிளம்பி விட்டான் மிதுலா….சாப்பிடக்கூட இல்லை…..சக்தி சாப்பிட்டு முடிக்கும் வரை லேப்டாப்பை நோண்டியவன் பிறகு ஏதோ முக்கிய வேலை இருக்கிறது என்று கூறி சாப்பிடாமல் கூட கிளம்பிவிட்டான். கல்யாணத்திற்கு முன்பு தான் இப்படி இருந்தான் என்றால் நீ வந்த பிறகும் கொஞ்சம் கூட மாற்றம் இல்லையே…இனி நீ தான் அவனை வழிக்கு கொண்டு வர வேண்டும் மிதுலா…..”

‘நான் தானே….கொண்டு வந்து விட்டால் போயிற்று……. ஜல்லிக்கட்டு காளையை போல துள்ளிக்கிட்டே தான் இருக்கிறார்….இவரை எப்படி வழிக்கு கொண்டு வருவது’

“என்ன மிதுலா , நான் பேசிக்கிட்டே இருக்கேன்….நீ வேறு ஏதோ யோசனையில் இருக்கிறாய் போல….சொன்னதை கவனித்தாயா …. இல்லையா????”

“சாரி அத்தை வேறு ஏதோ யோசனை…சொல்லுங்க”

“சரி தான்…உன் புருஷன் உன்னை சாயந்திரம் வெளியே போக தயாராக இருக்க சொல்லி இருக்கிறான்…. அவன் பிரண்டு நிவேதா பார்ட்டி. கொடுக்கிறளாம் இன்று”

“ஆனால் அத்தை …அடுத்த வாரம் தான் பார்ட்டி கொடுக்க போவதாக நேற்று இரவு இங்கே வந்திருந்த பொழுது அவங்க சொன்னாங்க”

“அது என்னமோ எனக்கு தெரியவில்லை மிதுலா….இன்று மாலை உன்னை தயாராக இருக்கும் படி வசீகரன் சொல்லிவிட்டு போனான்.நீ வேண்டுமானால் அவனிடமே போன் செய்து என்ன விஷயம் என்று கேட்டு கொள்கிறாயா?????”

‘நானா….. உங்கள் மகனிடம்……அதுவும் போனில்…..சொல்லிவிட்டு தான் மறுவேலை பார்ப்பார் உங்கள் பையன்….’ என்று மனதுக்குள் நினைத்த படியே அங்கிருந்து சென்றாள் மிதுலா.மனம் முழுக்க ஏதோ இனம் புரியாத பயம் அவளை பிடித்து ஆட்டியது. இப்படியே போனால் எங்கே வசீகரன் தன்னை வெறுத்து விடுவானோ என்று அஞ்ச ஆரம்பித்தாள்.

இதே சஞ்சலத்தோடு அமர்ந்து இருந்தவளை காவேரி தான் மீண்டும் அழைத்து சாப்பிட வைத்தார்.சரியாக சாப்பாட்டை உண்ணாமல் ஏதோ சிந்தனையில் இருந்தவளை கவனித்து அவளுக்கு பார்த்து பார்த்து பரிமாறினார் காவேரி.வசீகரனின் சிறுவயது குறும்புத்தனங்களை நகைச்சுவையாக எடுத்து கூறி அவளை சிரிக்க வைத்தார்.அவரின் முயற்சி புரிந்து அவருக்காக சிரித்த முகமாகவே வலம் வந்தாள்.அனுபவசாலியான காவேரி அதை உணர்ந்து கொண்டு ஒருவேளை தாயை பிரிந்த ஏக்கமோ என்று எண்ணி தானாகவே தெய்வானைக்கு அழைத்து தானும் பேசிவிட்டு போனை மிதுலாவிற்கு கொடுத்தார்.தாயின் குரலை கேட்டதும் கதறி அழ தோன்றிய மனதை அடக்கி இன்முகமாகவே பேசி போனை வைத்தாள். காவேரி இத்தனை தூரம் பார்த்து பார்த்து செய்தும் மதியத்திற்கு மேலும் இதே நிலை தொடர்ந்தது. அவள் இயல்புக்கு திரும்பாதது கண்டு உள்ளூர வருந்தினாலும் இதை இப்படியே விடவும் மனமின்றி மெதுவாக பேச்சுக் கொடுத்தார் மிதுலாவிடம்.

“என்ன மிதுலா….”ஏன் சுரத்தே இல்லாமல் இருக்கிறாய்???? உடம்புக்கு ஏதும் முடியவில்லையா????”

“அதெல்லாம் ஒன்றும் இல்லை அத்தை ” முகத்தை இயல்பாக்கி பதில் அளிக்க முயன்றாள் மிதுலா.

“நானும் பெண்ணை பெற்றவள் தான் மிதுலா….உன் முகத்தை பார்த்தாலே என்னால் சொல்ல முடியாதா…. நீ எப்படிப் பட்ட மன நிலையில் இருக்கிறாய் என்று … என்னிடம் என்ன தயக்கம் மிதுலா!!! உன் அம்மா உன்னை விட்டு சற்று தொலைவில் உள்ளார்கள் அவர்களை ஏமாற்றுவது போல உன்னால் என்னை ஏமாற்ற முடியாது. சொல் மிதுலா என்ன பிரச்சினை???”

அதற்கு மேலும் மறுக்க முடியாமல் தன் மனதில் உள்ள பயத்தை காவேரியிடம் கொட்டி தீர்த்து விட்டாள். முழுதாக எல்லாவற்றையும் சொல்லாவிட்டாலும் ஓரளவிற்கு மேலோட்டமாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள் மிதுலா.

“எனக்கு பயமாக இருக்கிறது அத்தை உங்கள் பையன் என்னை முற்றிலும் வெறுத்து விடுவாரோ என்று பயமாக இருக்கிறது அத்தை….. என்னாலும் எல்லா நேரமும் அவர் பேசுகின்ற பேச்சை கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்க முடிவதில்லை.இங்கே வந்தபின் என் நிலை இப்படித்தான் இருக்கும் என்று அம்மா கணித்து தான் எனக்கு ஆயிரம் அறிவுரை சொல்லி அனுப்பினார்கள்.அவர் பேசும் பேச்சில் அந்த அறிவுரை எல்லாம் நொடியில் காற்றில் பறந்து விடுகிறது அத்தை……இப்படியே போனால் எங்கள் வாழ்வு சீராகும் வாய்ப்பே இருக்காது….நான் என்ன செய்ய வேண்டும் என்றே எனக்கு புரியவில்லை”

“மிதுலா முதலில் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்……இங்கே பிரச்சினைக்கு காரணம் நீ கெட்டவள் என்பது அல்ல…… அவன் நல்லவன் என்பது தான்…. அவனுக்கும் அதை எல்லாம் மறக்க கொஞ்ச நாள் ஆகலாம்… அதுவரை நீ பொறுத்து போவது தான் உங்கள் இருவருக்குமே நல்லது.இதையே எண்ணி வருந்தாமல் உன்னை பற்றிய அவனது கணிப்பை மாற்ற முயற்சி செய்….கண்டதையும் போட்டு குழப்பிக் கொள்ளாமல் மாலையில் அவனோடு செல்வதற்க்கு உன்னை எப்படி தயார் செய்து கொள்ள வேண்டும் என்று யோசி….போ….என்று அவளை அறைக்கு அனுப்பி வைத்தார்.

காவேரியின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு மாடியில் தனது அறைக்கு சென்று பீரோவை கொட்டி தலை கீழாக கவிழ்த்து விட்டாள்.’ இது எப்படி இருக்கும்….. ஊஹூம்…. இது வேண்டாம்….இது டிசைன் நல்லா இல்லை….இது கலர் கன்றாவியா இருக்கு….இந்த தெய்வானைக்கு ஒரு டிரஸ் எடுத்து வைக்க கூட தெரியலை…..புருஷர்ர்ர்ர்க்குஏற்ற படி அழகா டிரஸ் பண்ணிக்கலாம்னு பார்த்தா இங்கே ஒண்ணுமே எனக்கு மேட்ச் ஆகுற மாதிரி இல்லை……இப்போ என்ன செய்யுறது….பேசாம புருஷர்ர்ர்ர் வந்ததும் அவர் என்ன கலர்ல டிரஸ் போட்டு இருக்கிறாரோ அதற்கு மாட்ச் ஆகுற மாதிரி செலக்ட் பண்ணிக்க வேண்டியது தான் என்ற முடிவுடன் பொழுதை நெட்டி தள்ளினாள்.ஏதோ யோசனையில் படுத்துக் கொண்டு இருந்தவள் அப்படியே தூங்கியும் போனாள். மணி ஐந்தை நெருங்கும் போது தூக்க கலக்கத்தில் புரண்டு படுத்தவள் கண்ட காட்சியில் இமைக்க மறந்தாள்.ரேமோண்ட்ஸ் கம்பெனி மாடல் போல கோட் சூட்டில் ஜொலித்தான் வசீகரன்.கண்களை அவனிடம் இருந்து திருப்ப முடியாமல் மெய் மறந்து அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் மிதுலா.

கண்ணாடியின் முன் நின்று தனது கழுத்து டையை சரி செய்து கொண்டு இருந்தான் வசீகரன்.படுக்கையில் படுத்தவாறே நேர் எதிரில் தெரிந்த வசீகரனின் பிம்பத்தில் இருந்து பார்வையை திருப்ப இயலாமல் தவித்தாள் மிதுலா.’அடியே மிதுலா….கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தான் உன்னை அந்த பேச்சு பேசினார் உன் புருஷர்ர்ர்ர் அதை மறந்து விட்டாயா’ அலறியது அவளது மனசாட்சி.

‘இல்லையே’ இப்பொழுதும் பார்வையை திருப்பினாளில்லை.
‘அப்புறமும் ஏன் அங்கேயே பார்த்துக் கொண்டு இருக்கிறாய்????’
‘……..’
‘ஏய் …..உன்னை தான்டி கேட்கிறேன்’
‘……’
‘சுத்தம் ….எப்படியோ போய் தொலை’

கண்ணாடியில் உடையை சரி செய்து கொண்டே வசீகரனும் மிதுலாவை பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.வைத்த கண் வாங்காமல் அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்து கொண்டாலும் அதை கண்டும் காணாமலும் முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு கிளம்பிக் கொண்டு இருந்தான்.

மிதுலா எதிர்பாரா நேரம் அவளை நோக்கி திரும்பியவன்,”பார்ட்டிக்கு நீ வருகிறாயா இல்லை நான் மட்டும் போய் கொள்ளட்டுமா”

“இதோ ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க….” என்று கூறிவிட்டு அலறி அடித்துக் கொண்டு பாத்ரூமை நோக்கி ஓடினாள் மிதுலா.குளித்து முடித்து வெளியே வந்து பார்த்த பொழுது வசீகரன் அங்கே இருக்கவில்லை.கீழே வர்ஷினியிடம் பேசிக் கொண்டு இருப்பான் போலும்.பேச்சுக் குரல் கேட்டது.

‘மிதுலா புருஷர்ர்ர்ர் ரொம்ப சூப்பரா ரெடி ஆகி இருக்கார்.அவருக்கு பக்கத்தில் இருக்கும் போது நீ டல்லா தெரிய கூடாது.யோசிச்சு நல்ல அழகான ட்ரெஸ்ஸா செலக்ட் செய்….சொதப்பிடாதே ‘என்று தனக்குள்ளே பேசியவள் தேர்ந்தெடுத்தது ரோஜா நிற ஜெரி வேலைப்பாடு மிகுந்த டிசைனர் புடவையை.

‘அடியே….புடவையை எதுக்குடி எடுத்து வச்சு இருக்கிற’
‘இருக்கிறதில் இது தான் கொஞ்சம் பளிச்சுன்னு நல்லா இருக்கு அதான்’
‘அது பளிச்சுன்னு நல்லா தான் இருக்கு….உனக்கு முதல்ல புடவை கட்ட தெரியுமா????’
மனசாட்சியின் கேள்வியில் ஒரு நிமிடம் பேந்த பேந்த முழித்தவள் ‘அதுக்கு என்ன செய்யுறது’

‘பேசாமல் வழக்கம் போல ஏதாவது சுடிதாரை எடுத்து போட்டு கொள்’இலகுவாக வழி சொல்லி தந்தது அவளது மனசாட்சி.

ஒரு நிமிடம் அது தான் சரி என்று தோன்றினாலும் அடுத்த நிமிடமே அதை மறுத்து விட்டாள்.’இல்லை எனக்கு இன்னிக்கு புடவை கட்டுறது தான் நல்லா இருக்கும்ன்னு தோணுது’

‘உனக்கு தான் கட்ட தெரியாதே ….அப்பறம் ஏன் டி இப்படி எல்லாம் ரிஸ்க் எடுக்கிற’

‘நான் போய் அத்தை கிட்ட புடவை கட்டிக்கிட்டு வரேன்…..பிரச்சினை தீர்ந்துச்சு’
‘ஹே …. சொன்னா கேளு டி….உனக்கு புடவை கட்டினா பிடிக்காது….அங்கே தெரியுது….இங்கே தெரியுது என்று அப்பறம் என்னிடம் வந்து தான் புலம்புவாய்’

‘அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டேன்….நான் அத்தை கிட்ட போய் கட்டிக்கிறேன் ‘ என்று கூறிவிட்டு புடவையை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள் மிதுலா.

கீழே மிதுலாவிற்காக காத்துக் கொண்டு இருந்த வசீகரன் அறை கதவு திறக்கவும் மிதுலா கிளம்பிவிட்டாள் போல என்று நினைத்து பார்வையை திருப்பியவன் அரண்டு தான் போனான் நைட்டியோடு வெளியே வந்தவளை பார்த்து.

‘இவள் என்ன இப்படி கிளம்பி வருகிறாள்…வெளியே போக வேண்டும்ன்னு அம்மாகிட்ட சொன்னதை அம்மா ஒருவேளை இவளிடம் சொல்லவில்லையோ’ என்று அவன் சிந்தித்திக் கொண்டு இருக்கும் போதே வசீகரனை கடந்து காவேரியிடம் போய் நின்றாள் மிதுலா.

“அத்தை….எனக்கு இந்த புடவையை கொஞ்சம் கட்டி விடறீங்களா….. எனக்கு எப்படி கட்டுறதுன்னு தெரியல…..ப்ளீஸ்!!!!”

“இதுக்கு எதற்கம்மா ப்ளீஸ் எல்லாம் போடற…..இதற்கு தான் இந்த ராஜேஸ்வரியை கூட வெளி இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் புடவை கட்டி பழகு என்கிறேன்….காதிலே வாங்க மாட்டேன் என்கிறாள்…..நீ வா …உனக்கு நான் கட்டி விடுகிறேன்…..பூரணி….அங்கே வாசலில் இருக்கும் வாட்ச்மேனிடம் சொல்லி எதிரில் இருக்கும் பூக்கடையில் நெருக்கமாக கட்டிய மல்லிகை பூ வாங்கி கொண்டு வர சொல்லுங்கள்” …. என்று கூற அவரை தடுத்த மிதுலா, “அத்தை மல்லிகை வேணாம் அத்தை…. எனக்கு முல்லை பூ என்றால் ரொம்பவும் இஷ்டம் அதை வாங்கி வர சொல்லுங்களேன்…..ப்ளீஸ்!!!!”

“இதற்காக எல்லாம் ப்ளீஸ் போட வேண்டுமா மிதுலா….. இது உன் வீடு உனக்கு எது வேண்டுமோ அதை செய்து கொள்….பூரணி மிதுலா சொன்னது போல் முல்லைப்பூவே வாங்கி கொண்டு வர சொல்லுங்கள்” என்று கூறிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றார் காவேரி.

இவை அனைத்தையும் அங்கேயே இருந்து செவிமடுத்துக் கொண்டு இருந்தாலும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை வசீகரன்.முகம் மட்டும் இரும்பென இறுகி போய் இருக்க ஏதோ யோசனையில் இருந்தான்.உள்ளிருந்து அவ்வப்போது பேச்சுக்குரல் மட்டும் வந்து கொண்டே இருந்தது.

“அத்தை…. இங்கேயும் ஒரு பின் குத்தி விடுங்கள் அத்தை , இல்லையென்றால் புடவை எனக்கு நிற்காது…… அச்சச்சோ இப்படி கட்டினா புடவை எப்போ எங்கே அவிழுமோ என்று பயமா இருக்கும்… மிதுலா மட்டும் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தாள்.

அரை மணி நேரம் ஆகியும் மிதுலா வெளியே வராததால் சற்றே எரிச்சலுற்று,”பெரியம்மா…. பார்ட்டி இன்னிக்கு தான் நாளைக்கு ஒண்ணும் இல்லை.சீக்கிரம் கிளம்ப சொல்லுங்க…. என்று தனது எரிச்சலை வெளிப்படுத்தினான்.

“இதோ… முடிந்து விட்டது தம்பி….ஒரு ஐந்து நிமிடம் பொறுத்திரு” உள்ளிருந்து காவேரி குரல் கொடுத்தார்.

அறை வாயிலில் நின்று கொண்டு பூரணியம்மா குரல் கொடுத்தார்.”அம்மா முல்லைப்பூ வாங்கி வந்துட்டேன்…இங்கே ஹாலில் வைத்து விடட்டுமா????”
“உள்ளே கொண்டு வந்து தா பூரணி….”

“அம்மா ….. இன்னும் எவ்வளவு நேரம் ????” வசீகரனின் குரலிலேயே அவனின் கோபத்தின் அளவு தெரிந்தது.

“டேய்…. சும்மா காலில் சுடுதண்ணியை ஊற்றிக்கொண்டதை போல குதிக்காதே…. பெண்கள் கிளம்ப நேரம் ஆக தான் செய்யும்….உன் அவசரத்திற்கு நாங்கள் ஒன்றும் ஆளில்லை…. கொஞ்ச நேரம் கழித்து கிளம்பினால் ஒன்றும் தலை போய்விடாது…. பேசாமல் உட்காருடா” என்று ஒரு அதட்டலை போட்டு சற்று நேரம் வசீகரனை வாய் மூட வைத்தார்.

வாட்சை பார்ப்பதும் காவேரியின் அறை வாயிலை பார்ப்பதுமாக இருந்தவன் மேலும் எரிச்சலாகி பேசும் முன் கதவு திறந்தது.ஆர்வமே இல்லாதவன் போல் பார்வையை திருப்பி பார்ப்பவன் போல் பார்த்தவனின் பார்வைக்கு முதலில் தரிசனம் தந்தது காவேரி மட்டுமே.சலனம் இல்லாமல் அறை வாசலை பார்த்துக் கொண்டு இருந்தவனின் கண்களில் மின்னல் வெட்டியது . அழகான ரோஜா வண்ண புடவையில் ரோஜாவை போலவே இருந்தாள் மிதுலா. தலையை திருத்தமாக வாரி சரம் சரமாக அழகாக நெருக்கமாக தொடுத்த முல்லைப்பூவை சூடி இருந்தாள் மிதுலா.

பொதுவாகவே மிதுலா விற்கு அலங்காரத்தில் நாட்டம் இருந்தது கிடையாது.திருமணத்தின் போது கூட வேண்டா வெறுப்பாக செய்து கொண்டது தான். இன்று கணவனுக்காக பார்த்து பார்த்து செய்து கொண்டாள். எனவே சற்று கூடுதல் கவனம் செலுத்தி தன்னை அழகு படுத்திக் கொண்டாள். அதற்காக ரோஸ் பவுடரை எடுத்து பூசி முகத்தை கெடுத்துக் கொள்ளவில்லை.

லேசான ஒப்பனை தான் அதில் தனது குண்டு கண்களுக்கு மை தீட்டி இருந்தாள். இந்த சின்ன அலங்காரமே அவளை பேரழகியாக மாற்றி காமித்தது. தனது அலங்காரத்தை கணவன் ரசிக்கிறானா என அறிந்து கொள்ளும் நோக்கோடு பார்வையை திருப்பி வசீகரனை பார்த்தவள் அவனது பார்வையில் முகம் சிவந்து நிலம் நோக்கினாள்.

“அம்மாடி மிதுலா இங்கே வா ….இந்த நெத்திசூடியை போட்டுக் கொள்…. இன்னும் நல்லா இருக்கும்”

“ஐயோ ….அதெல்லாம் வேண்டாம் அத்தை….ரொம்ப ஓவரா இருக்கும்….இதுவே போதும்”

“அம்மா சொல்வதை கேளு” வருடுவது போல் வெளிவந்தது வார்த்தைகள்

வேண்டாம் என்று சொல்வதற்காக நிமிர்ந்தவள் வசீகரனின் கண்ணோடு கண் கலக்க அவளது பார்வையை எதிர்நோக்கி காத்திருந்தவன் பார்வையாலேயே அவளை துண்டாட ஓரிரு நொடிகளுக்கு மேல் சமாளிக்க முடியாமல் பார்வையை வேறு திசைக்கு திருப்பினாள்.

கல் வைத்த ஜிமிக்கி அசைந்தாட தாயிடம் பேசிக் கொண்டு இருந்தவளை ஆழமாக பார்த்துக் கொண்டு இருந்தான் வசீகரன். சுடிதாரில் தெரியாத மறைத்து வைக்கப்பட்டு இருந்த அவளது அபாயகரமான வளைவுகள் இப்பொழுது வசீகரனை திண்டாட வைத்தது.

ஆழ்ந்த மூச்சுகளை வெளியேற்றி விட்டு ,”நான் காரில் இருக்கிறேன் சீக்கிரம் வந்து சேர்”என்று கூறிவிட்டு காரை நோக்கி சென்றான் வசீகரன்.

சின்னதாக ஒரு நெட்டிசுட்டியையும் அவளுக்கு அணிவித்து விட்டு ,”சந்தோசமா போய்ட்டு வாம்மா” என்று அவள் தலையில் கை வைத்து ஆசி கூறி அனுப்பினார் காவேரி.

காரில் அமர்ந்து இருந்த வசீகரன் வேகவேகமாக மூச்சுகளை வெளியேற்றி தன்னை சமனப்படுத்த முயன்று கொண்டு இருந்தான்.

‘இப்படி எல்லாம் மேக்கப் செய்துகிட்டா நான் மயங்கிடுவேணா…. நோ….வசீ ஸ்டெடியா இருடா’ என்று மனதுக்குள் அவன் எடுத்துக் கொண்ட பயிற்சிகள் அனைத்தும் மிதுலா காரை நோக்கி வந்த அந்த நொடியில் காணாமல் போனது.’ராட்சஸி…. இவளை யார் இப்பொழுது இப்படி எல்லாம் அலங்காரம் செய்து கொள்ள சொன்னது…. இதில் நான் பார்த்தால் வெட்கம் வேறு’

அவளை திட்டிக் கொண்டே அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் வசீகரன்.கார் கதவை அவளுக்காக திறந்து விட்டு அவள் ஏறி அமர்ந்ததும்,அவனே அவளுக்காக சீட் பெல்ட்டை பட்டும் படாமலும் அவனே அணிவித்தான்.

ஏற்கனவே கணவனின் பார்வையில் சிவந்தவள் அவனின் மெல்லியதொரு தீண்டலில் சிலிர்த்து கதவின் ஓரம் நகர்ந்து விட்டாள்.அதற்கு ஆட்சேபமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு,”பார்த்து மேடம் ரொம்ப நகர்ந்து போய் காரை விட்டு வெளியே குதிச்சிடாதீங்க….உங்களை ஒண்ணும் செஞ்சுட மாட்டேன்….பேசாம. உட்காருங்க” என்று படபடத்து விட்டு காரை ஓட்டலானான்.

‘உடனே கோபம் வந்துடுமே புருஷர்ர்ர்ர்க்கு’ என்று எண்ணியவள் மெல்ல அவன் புறம் திரும்பி அவனை பார்த்தாள். கை விரல்கள் ஸ்டியரிங் வீலை அழுந்த பற்றி இருக்க காற்றில் ஆடும் கேசத்தை ஒதுக்கி விடும் எண்ணம் கூட இல்லாமல் காரை ஓட்டிக் கொண்டு இருந்தான்.

அவனை வம்பிழுக்க எண்ணி,”இந்த ஜிமிக்கி நல்லா இருக்கா???”என்று அவனுக்கு சற்று அருகில் வந்து காதுகளை அசைத்து கேட்டாள்.
லேசாக அவள்புறம் திரும்பி பார்த்துவிட்டு,”நல்லா இல்லை”என்றான்
“இந்த நெற்றிசூடி”
“நல்லா இல்லை”
“இந்த நெக்லஸ்”
“நல்லா இல்லை”
“இந்த புடவை”
“ஏண்டி…..ராட்சஸி!!!! ஒரு மனுஷனை நிம்மதியாக கார் ஓட்ட விட மாட்டாயா????…. வாயை மூடிக் கொண்டு உட்கார்….இல்லை நான் என்ன செய்வேன்னு தெரியாது”என்று அதட்டியவன் ‘மனுஷன் நிலைமை புரியாம இவ பாட்டுக்கு பேசுவா’என்று மனதுக்குள் புலம்பியவன் காரை புயல் வேகத்தில் ஓட்டி பார்ட்டி நடக்கும் ஹோட்டலை வந்தடைந்தான். முகம் எங்கும் மகிழ்ச்சியில் பொங்க காரை விட்டு கீழிறங்கினாள் மிதுலா.

Facebook Comments Box
Previous PostNunn 24
Next PostNunn 26
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here