Nunn 26

0
1275
NUNN Tamil Novels 37

காரை விட்டு முதலில் மிதுலா இறங்கிவிட வசீகரன் மட்டும் இறங்காமல் உள்ளேயே இருந்தான். மனதை நிலைப்படுத்திக் கொள்ள சிறிது நேரம் எடுத்துக் கொண்டு விறைப்பாகவே காரை விட்டு கீழிறங்கினான்.காரை விட்டு கீழிறங்கிய மிதுலா சற்று தள்ளி நின்று ஹோட்டலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சும்மா பட்டிக் காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பது போல் எல்லாவற்றையும் இப்படி வெறித்து பார்க்காதே…..வா போகலாம் ” என்று கூறிவிட்டு முன்னே நடக்க தொடங்கினான்.வழியில் எதிர்ப்பட்ட காவலாளியிடம் கார் சாவியை கொடுத்து பார்க் செய்யுமாறு பணித்துவிட்டு வேகமாக முன்னே சென்றான்.அவனுக்கு இணையாக நடக்க கிட்டத்தட்ட ஓட வேண்டி இருந்தது மிதுலாவிற்கு. வேகமாக ஓடி வசீகரனின் கைகளை ஒரு இடத்தில் பிடித்து நிறுத்தினாள். ‘என்ன ‘என்பது போல் திரும்பி பார்த்தான் வசீகரன்.
“கொஞ்சம் மெதுவாக போங்க…..புடவையை கட்டிக் கொண்டு உங்க வேகத்திற்கு இணையாக என்னால் நடக்க முடியவில்லை.ப்ளீஸ்”
“வசதியாக இல்லை என்றால் இதை ஏன் கட்டிக் கொண்டாய்…..எப்பொழுதும் போல சுடிதார் போட்டுக் கொள்வது தானே”
“உங்க கூட முதல் முறை தனியே வெளியே வருகிறேன்….. உங்களுக்கு இணையாக இல்லாவிட்டாலும் கொஞ்சம் சுமாராகவாவது தெரிய வேண்டாமா???? அதற்கு தான்” குழந்தை போல மனதில் உள்ளதை மறைக்காமல் சொன்னாள் மிதுலா.

நடந்து கொண்டே இருந்தவன் திரும்பி அவளை ஒரு ஆழப் பார்வை பார்த்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் மீண்டும் நடக்க தொடங்கினான்.

வசீகரனின் பார்வையின் பொருள் புரியாவிட்டாலும் அவனது பார்வையில் திணறித் தான் போனாள் மிதுலா. ‘எதுவும் பேசி விட கூடாது உடனே இப்படி ஒரு பார்வையை பார்த்து வைத்து விடுவார் இந்த புருஷர்ர்ர்ர்…… ஏன் இப்படி பார்க்கிறார்ன்னு அர்த்தம் தான் புரிய மாட்டேங்குது’என்று எண்ணியவள் மெதுவாக வசீகரனிடம் பேச்சை வளர்த்தாள்.

“நம்ம வீட்டுல அணிமல்ஸ் வளர்க்கலாமா???…. உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லையே???”

“என் வீட்டை மிருகக்காட்சி சாலையாக மாற்ற போகிறாயா?”
“சே !!!! சே!!!! அப்படி எல்லாம் இல்லை….நாய் பூனை இப்படி சின்ன சின்னதா ஏதாவது வளர்க்கலாம்னு ஆசை….அது தான் உங்க கிட்ட அனுமதி வாங்கிக்கிட்டு செய்யலாமேன்னு ” தயக்கமாக எடுத்துக் கூறினாள்.

“உனக்கு வேற எந்த ஆசையும் வராதே” ஏக்கம் கலந்து வந்தது அவனது வார்த்தையில்.மிதுலாவின் கேள்விகளுக்கு முணுமுணுத்து விட்டு வேகமாக முன்னே சென்று விட்டான்.

‘என்ன சொல்லிட்டு போறார்’ என்று புரியாமல் வசீகரனின் பின்னேயே ஓடி அவனுக்கு இணையாக நடக்க தொடங்கினாள்.
“கேட்டேன் …. நீங்க ஒண்ணுமே சொல்லலியே!!!! வீட்டில் வளர்த்துக் கொள்ளட்டுமா ???”ஆவலுடன் முகம் பார்த்தாள்.

ஏதோ சொல்ல வாயெடுத்தவன் இவளிடம் திரும்பி ,”இதனை எல்லாம் பிறகு பேசிக் கொள்ளலாம்” என்று கூறி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

மிதுலா மீண்டும் பேச முற்படும் முன் ஏற்கனவே முன்பதிவு செய்ய பட்டு இருந்த அந்த பிரம்மாண்டமான பார்ட்டி ஹாலை நோக்கி நடக்க தொடங்கினான்.
அறை கதவை நெருங்கும் போது நின்றவன் மிதுலா அருகில் வரும்வரை அவளையே பார்த்துக் கொண்டு நின்றவன் ஹாலுக்குள் நுழையும் முன் அவள் கைகளை பற்றிக் கொண்டான்.கணவனின் தீண்டலில் சிலிர்த்து போய் வசீகரனின் முகம் பார்த்தாள்.

“நமது திருமணத்திற்காக கொடுக்கும் பார்ட்டி இது…. முடியும் வரை நிறைய கேலி,கிண்டல்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கும்….தயாராகி கொள்”

மிதுலாவிற்கு தான் சொத்தென்று ஆகி போனது.’அவ்வளவு தானா’ என்று மனதிற்குள் நினைத்தவள் வெளியே பூம்பூம் மாடு போல தலையை ஆட்டி வைத்தாள். பின்னே எதையாவது பேச போய் இருக்கிற சந்தோஷமான மனநிலை கெட்டுப் போய்விடக் கூடாதே என்ற பதற்றம் அவளுக்கு.

ஹாலுக்குள் அவளது தோள்களை சுற்றி கரத்தை போட்டுக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டு போனான். முதலில் சற்று நெளிந்த மிதுலாவை அடக்க வசீகரனின் அதட்டலான பார்வை ஒன்றே போதுமானதாக இருந்தது.ஏற்கனவே ஒருமுறை பார்ட்டிக்கு சென்ற அந்த நாள் மிதுலாவின் நினைவில் ஆடியது.

“உள்ளே நிறைய பேர் இருப்பார்களா???? அச்சத்தில் விழிகள் விரிய கேட்டாள்.

பயத்தில் முகம் வெளிறிப் போய் இருந்தவளை பார்த்து முகம் மென்மையுற,”என்னுடைய நண்பர்கள் சிலர் மட்டும் தான் இருப்பார்கள்.இவர்கள் யாரையும் அவாய்ட் பண்ண முடியாது.மறுத்தால் அநாகரீகமாக இருக்கும்.தொழிலையும் பாதிக்கும்.ஆனால் நீ பயப்படும் அளவிற்கு யாரும் எதுவும் செய்து விட மாட்டார்கள்.ஏன் இப்படி பயப்படுகிறாய்????”என்ன தான் கனிவாக பேசக்கூடாது என்று அவன் நினைத்தாலும் அவனது குரல் சற்று மென்மையாகவே வெளிவந்தது அவனை அறியாமலே.

“இல்லை இது போல ஹோட்டலுக்கு எல்லாம் வந்தது இல்லையா…..அது தான் கொஞ்சம் பயமாய் இருக்கிறது”

“உடனே பொய்யா…..அப்பொழுது அன்று எப்படி அந்த ஹோட்டலுக்கு வந்தாய்????” சீற தொடங்கினான்.

“அது தான் முதல் முறை ….சுஜி தான் ரொம்பவும் வற்புறுத்தி அழைத்து வந்தாள். மகேஷ் அண்ணாவின் பிறந்த நாள் பார்ட்டிக்கு தனியாக வர பயமாய் இருக்கிறதென்று என்னை துணைக்கு அழைத்து வந்தாள்”

“அவளுக்கு துணைக்கு நீயா???? அவளுக்கு இருக்கும் வாய்க்கு ஊரையே விற்று விடுவாள்….அவளுக்கு பயமாம்…. அவளுக்கு துணைக்கு இவள் வந்தாளாம்….. நல்லா சொல்ற டி கதை”

“நான் என்ன சொன்னாலும் நீங்க நம்ப மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்….. உண்மை பேசினாலே போதும் நீங்க ஒத்துக்க மாட்டீங்க …..அப்பறம் எதுக்கு உங்ககிட்ட சொல்றதுக்குன்னு நான் ஒரு பொய்யை உருவாக்க வேண்டும் …… ப்ளீஸ்…. இன்று எந்த சண்டையும் வேண்டாமே”கெஞ்சுதலாக பார்த்தாள்.தோளை குலுக்கிவிட்டு நகர தொடங்கினான்.

“ஆமா இன்னிக்கு உங்க பிரண்டு நிவி பார்ட்டி தருவதாக தானே அத்தை என்னிடம் கூறினார்கள்…..இப்பொழுது நீங்கள் உங்கள் நண்பர்கள் வர போவதாக சொல்கிறீர்கள்….. எது நிஜம்????”

“இரண்டும் உண்மை தான்….முதலில் இவர்கள் பார்ட்டி அது முடிந்ததும் நிவியின் பார்ட்டி நள்ளிரவு வரை இருக்கும்….பெரிய சிபிஐ போல விசாரிக்க வந்து விட்டாய்….. கண்டுகொள்ள வேண்டியதை கண்டு கொள்ளாதே…. தேவை இல்லாததை எல்லாம் நன்றாக தெரிந்து வைத்துக் கொள்” முணுமுணுத்து விட்டு முன்னே சென்று விட்டான்.

அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு அந்த இடமே ஜொலித்துக் கொண்டு இருந்தது.வீட்டில் இருந்து கிளம்பும் வரை இல்லாத பயம் இப்பொழுது மிதுலாவை ஆட்டுவிக்க தொடங்கியது.’ஏற்கனவே நமக்கும் ஹோட்டலுக்கும் ஆகாது. இப்பொழுது இங்கே என்ன நடக்க போகிறதோ…. தெரியலியே….. ஆண்டவா நீ தான் காப்பாத்தணும்’ என்று மனதிற்குள் வேண்டியபடியே நடந்தாள்.

சுமார் நூறு பேர் அமரக் கூடிய ஹாலுக்குள் அவளும் வசீகரனும் நுழைந்தனர்.ஏற்கனவே அங்கே இவர்களின் வருகைக்காக காத்திருந்தவர்கள் இவர்கள் உள்ளே நுழைந்ததும் கைகளை தட்டி இருவரையும் வரவேற்றனர். உள்ளே நுழைந்ததும் மீண்டும் அவள் தோளின் மேல் கை போட்டு மிதுலாவுடன் நடந்து வந்தான் வசீகரன்.

இருமருங்கிலும் ஆட்கள் நின்று கை தட்டி வரவேற்க வசீகரனுடன் இணைந்து வந்த மிதுலாவிற்கு தன்னையே ஒரு மஹாராணியாக உணர்ந்தாள். இவர்களுக்காக தனியாக போடப்பட்டு இருந்த கலை நயம் மிக்க அழகான தனி சேரில் போய் அமர்ந்தனர்.இப்பொழுது முற்றிலும் தன்னை ஒரு ராணியாகவே உணர்ந்தாள் மிதுலா.வசீகரனின் அருகில் அரியணையில் அமர்ந்து இருப்பது போல் முகம் பூரிப்பில் நிறைந்து இருந்தது.

கூட்டத்தில் இருந்த ஒருவர் இருவரையும் வரவேற்று பேச ஆரம்பித்தார்.”எங்கள் அழைப்பை ஏற்று இங்கே வந்ததற்கு ரொம்ப மகிழ்ச்சி மிஸ்டர் வசீகரன் அண்ட் மிசஸ் வசீகரன்….முதலில் எங்கள் அனைவரின் சார்பிலும் உங்கள் இருவருக்கும் எங்கள் திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் இருவரின் ஜோடி பொருத்தம் அற்புதம்…..காதல் திருமணமாமே…. அதற்கும் ஒரு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்”

ஆரம்பத்தில் அவர் பேசுவதை எல்லாம் சிரிப்புடன் கேட்டுக் கொண்டு இருந்தவள் காதல் திருமணம் என்ற வார்த்தையில் லேசாக அதிர்ந்தாள்.’அய்யா சாமி தயவு செஞ்சு பேச்சை மாத்திடு’ என்று மனதுக்குள் வேண்ட ஆரம்பித்தாள்.

“வசீகரன் சார் கூட காதலிப்பார் என்று நாங்கள் யாருமே நினைத்துக் கூட பார்க்கவில்லை.அவருக்கு நாங்கள் வைத்து இருக்கும் பட்ட பெயர் என்ன தெரியுமா மேடம்,’விசுவாமித்திரன்’.எங்களுக்குள் நாங்கள் கேலியாக கூட சொல்லிக்கொள்வது உண்டு.விசுவாமித்திரன் கூட மேனகையிடம் மயங்கினார். ஆனால் வசீகரன் அப்படி யாரிடமும் மயங்க மாட்டார் ……இவரது அம்மாவின் முயற்சியால் இவருக்கு திருமணம் ஆனால் தான் உண்டு ……அதுவரை இவர் சாமியார் தான் என்று விளையாட்டாக பேசிக் கொள்வோம்…..கடைசியில் இப்படி உங்களிடம் முழு சரணாகதி அடைந்து விட்டாரே…… மகிழ்ச்சி”

‘இப்ப தான் இந்த மனுஷன் என்னை லேசா திரும்பி பார்த்தார்…..அது பொறுக்கவில்லையா உங்களுக்கு…..இப்படி அதிலே ஒரு லாரி மண் அள்ளி போட்டு விட்டீர்களே….என் மகிழ்ச்சியை கெடுத்து விட்டு சூப்பர் ஸ்டார் டயலாக் மகிழ்ச்சியை வேறு யூஸ் பண்ணுறீங்களா…..ஹ்ம்ம்…இனி இந்த பனைமரத்தான் மலை ஏறிடுவானே…..இப்ப எப்படி இவரை கீழே இறக்குவது’என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள் மிதுலா.

லேசாக திரும்பி கணவனின் முகம் பார்த்தாள். எந்தவித சலனமும் இல்லாமல் அமைதியாக தான் இருந்தது.’மிதுலா ரொம்ப சந்தோச படாதே……அநேகமா இன்னிக்கு வீட்டுக்கு போய் உனக்கு இருக்குன்னு நினைக்குறேன்.இத்தனை பேர் முன்னிலையில் புருஷர்ர்ர்ர் அடக்கி வாசிக்கிறார்.’

“எல்லாரும் வந்தாச்சா சுந்தர் சார்….. பார்ட்டியை ஆரம்பிக்கலாமே…. இன்று வேறு ஒரு விருந்திற்கு வருவதாக ஒத்துக் கொண்டு இருக்கிறேன்…..அதனால்”

“புரிகிறது வசீகரன்….இதோ ஆரம்பித்து விடலாம்.”

“அதெப்படி…..நான் இல்லாமல் பார்ட்டியை ஆரம்பித்து விடுவீர்களா????”என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் திருவாளர் மூர்த்தி.

“வாங்க மூர்த்தி……என்ன லேட்???”

“மூர்த்தி எப்பொழுது சீக்கிரம் வந்தார் ….. எல்லாவற்றிலும் லேட்டா தானே வருவார். அது தானே அவரது ஸ்பெஷாலிட்டி” வசீகரன் பதில் அளிக்கவும் லேசான சிரிப்பலை அங்கே பரவியது.

“ஆமாம் வசீகரன் நான் எல்லாவற்றிலும் கொஞ்சம் லேட் தான்…… ஓரளவிற்கு லைப் ல செட்டில் அனைத்தும் முப்பத்து ஐந்து வயதில் தான் நான் திருமணமே செய்து கொண்டேன்…..ஆனால் ….. நீங்கள்….. இதோ இருபத்தியெட்டு வயதிலேயே திருமணத்தை முடித்து கொண்டு விட்டீர்களே…..அத்தனை அவசரமோ……” நக்கலாக பேசினான் மூர்த்தி.

‘இந்த ஆளை பார்த்தால், வாழ்த்துவதற்கு வந்தது போல் தெரியவில்லையே…. வேணும்னு புருஷர்ர்ர்ர் கிட்ட வம்புக்கு வராரே….. நான் ஒருத்தி பக்கத்தில் இருக்கும் போது என் மாமனை ஒருத்தன் வம்பு செய்யுறதா….. பொறுத்தது போதும் மிதுலா….பொங்கியெழு’என்று மிதுலா நினைத்துக் கொண்டு இருக்கும் போதே வசீகரன் பேசத் தொடங்கினான்.

“அதற்கு என்ன செய்வது மூர்த்தி…..நீங்கள் முப்பத்தி ஐந்து வயதில் சாதித்ததை நான் இருபத்தி எட்டிலே சாதித்து விட்டேனே…. அதனால் உங்களை போல் இளமையை தொலைத்த பிறகு திருமணம் செய்து கொள்ள எனக்கு அவசியம் ஏற்படவில்லை”.தோளை குலுக்கி பதில் அளித்தான் வசீகரன்.

சிரித்துக் பேசியேபடியே ஒருவர் முகத்தில் கரி பூசுவது எப்படி என்று அன்று தான் பார்த்தாள் மிதுலா.கேள்வி கேட்டவன் முகத்தில் ஈயாடவில்லை.

“ஆமாம் …. ஆமாம்…..உங்களுக்கு அமைந்தது போல் எங்களுக்கு அமைவதில்லை தான்….. ஹோட்டலில் பெண்ணை தனியாக சந்திக்க மாமியாரே அல்லவா ஏற்பாடு செய்து இருந்தார்கள்…..அவர்களுக்கு துணையாக ஒரு ஆள் வேறு…..ஏம்மா மிதுலா….. அது .. மிஸ்டர் கங்காதரன் தானே…. உனக்கு மாமா முறை தானே அவர்????”எகத்தாளமாய் கேட்டான் மூர்த்தி.

துடித்துப்போய் நிமிர்ந்தாள் மிதுலா. ‘என் தெய்வாவை குறை சொல்ல என் புருசரையே நான் அனுமதித்தது கிடையாது….. இவன் யார்….. என்று வரிந்து கட்டிக்கொண்டு அவனிடம் சண்டையிட அமர்ந்து இருந்த இடத்தை விட்டு எழுந்தாள்.அவளின் கை பற்றி மீண்டும் அமர வைத்த வசீகரன் அதே வேகத்தோடு மூர்த்தியிடம் திரும்பி,”நீங்கள் என்ன சொல்ல வருகுறீர்கள் என்று புரியவில்லையே மூர்த்தி….. கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்”என்றான் சலனமற்ற குரலில்.

‘இன்னும் என்ன இவனிடம் எல்லாம் விளக்கம் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.சே!!! என் தெய்வாவை அவதூறாக பேசிய இடத்தில் நான் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன்….’என்று நினைத்தவள் கிளம்பத்தான் முடியவில்லை. வசீகரனின் கரம் அவளது கரத்தை இறுகப் பற்றி இருந்தது.

“இல்லை….வயதுக்கு வந்த பெண்ணை தனியே உங்களுடன் ஹோட்டலுக்கு அனுப்பி வைத்து விட்டு வேண்டுமென்றே தாமதமாக வந்து நீங்கள் இருவரும் நன்கு ‘பழக’ அனுமதி அளித்தார்களே… .எங்கள் வீட்டில் எல்லாம் இது போல அனுமதிக்க மாட்டார்கள்….. அதை சொன்னேன்.” வேண்டுமென்றே பழக என்ற வார்த்தையை அழுத்தமாக உச்சரித்தான் மூர்த்தி.

“ஒரு பெண்ணை அவளுடைய தாய் தனியே அனுப்பி வைக்க வேண்டும் எனில் காரணம் ஒன்றாக தான் இருக்க வேண்டும் மூர்த்தி.அதற்கு பெயர் நம்பிக்கை. தன்னுடைய வளர்ப்பின் மீது என் மாமியாருக்கு இருந்த நம்பிக்கை,என் பெரியம்மாவிற்கு அவர்களுடைய வளர்ப்பின் மீது இருந்த நம்பிக்கை மட்டும் தான். ஆனால் உங்கள் விஷயத்தில் இரு வீட்டிலும் அந்த நம்பிக்கை இல்லை போலும்.அது மட்டும் இல்லாமல் சில நாட்கள் பழகிய உங்களுக்கே தெரிந்து இருக்கிறது..நான் விசுவாமித்திரன் என்று தெரிந்து இருக்கும் போது என் பெரியம்மாவிற்கு தெரியாதா???? அதனால் தான் என் தவத்தை கலைக்க ஏதோ ஒரு மேனாமினிக்கியை தேர்ந்து எடுக்காமல் எனக்கான மேனகையை அரும்பாடு பட்டு தேடி தந்திருக்கிறார்……”

வசீகரன் தனது தாயிற்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேச போவதில்லை.மேலும் இங்கேயே நின்று இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டுமோ என்று எண்ணி வருந்திக் கொண்டிருந்த மிதுலா வசீகரனின் பேச்சில் அயர்ந்து தான் போனாள். புருஷர்ர்ர்ர் தெய்வாவிற்கும் எனக்கும் சப்போர்ட் செய்கிறாரா….. இது கனவில்லையே….. நிஜம் தானா….. ‘என்று வாய் பிளந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

‘இனியாவது நீ வாயை மூடிக் கொண்டு பேசாமல் போவாயா ‘ என்று திரும்பி அவனை நேருக்கு நேராக துச்சமாக ஒரு பார்வை பார்த்தாள் மிதுலா.

அவளது பார்வையில் சினம் அதிகரிக்க,”உங்கள் மனைவியை பற்றி எனக்கு நீங்கள் சொல்லி தான் தெரிய வேண்டுமா வசீகரன்… அது தான் அன்று ஹோட்டலில் என் கண்ணாலேயே பார்த்தேனே…… உங்கள் மனைவி ஒரு பக்கம் போதையில் தடுமாற…. அவரை நீங்கள் அணைத்துக் கொண்டு நிற்க….என்ன ஒரு கண்கொள்ளா காட்சி…. அந்த இடத்தில் நான் நின்று இருந்தாலும் உங்கள் மனைவி என்னையும்…..ஆ ஆ ஆ……”வார்த்தையை முடிப்பதற்குள் வசீகரனின் கை மூர்த்தியின் கன்னத்தை பதம் பார்த்தது.

“எதையோ சொல்ல வந்தீர்களே மூர்த்தி….சரியாக கவனிக்கவில்லை…இன்னொரு முறை சொல்லுங்கள்….”போட்டு இருந்த கோட்டை கழற்றி மிதுலாவிடம். கொடுத்து விட்டு முழுக்கை சட்டையின் கை பகுதியில் இருந்த பட்டனை கழற்றி கொண்டே மூர்த்தியை நோக்கி மேலும் ஒரு அடி முன்னேறினான் வசீகரன்.

“அந்த இடத்தில் நான் இருந்து இருந்தாலும்….ஐயோ…அம்மா…”

“வாயில் ரத்தம் வருகிறது போல….இந்தாருங்கள் கர்ச்சீப் துடைத்துக் கொள்ளுங்கள்…..மறுபடியும் சரியாக கேட்கவில்லை மூர்த்தி……திருப்பி சொல்லுங்கள்”முழுக்கை சட்டையை முழங்கைக்கு மடித்து விட்டுக் கொண்டே மூர்த்தியின் புறம் திரும்பாமல் அலட்சியமாக கேட்பதை போல கேட்டான் வசீகரன்.

இந்த முறை மூர்த்தியின் குரல் சற்று மெலிந்தே வந்தது.வசீகரன் அடித்தால் அவனை தடுக்கவோ மூர்த்தியை காப்பாற்றவோ அங்கு இருந்தோரில் ஒருவர் கூட முன் வராததால் பயம் தொற்ற ஆரம்பித்தது மூர்த்திக்கு.

“அந்த….. இடத்தில்….. நான்…..இரு…..ஐயோ…அம்மா….என் கை…போச்சே……”

“என்ன மூர்த்தி….பேசியது சரியாக கேட்கவில்லை என்று எத்தனை முறை சொல்லுகிறேன்.முழுதாக சொல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்களே….எனக்காக இன்னும் ஒரு முறை சொல்லுங்கள் மூர்த்தி” இப்பொழுதும் வசீகரனின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.
“அ…. அந்த…..இ…இ…இடத்தில்…..”

இந்த முறை வசீகரன் அவன் பேச ஆரம்பிக்கும் பொழுதே அவன் வயிற்றில் ஓங்கி முழங்கையால் ஒரு குத்து விட்டான்.”அம்மா ” என்று அலறி கொண்டே கீழே விழுந்த மூர்த்தியை நையப் புடைத்தான்.அவன் ஆத்திரம் தீரும் மட்டும் அவனை அடித்து துவைத்து கிழிந்த நாராக அவனை மாற்றும் வரை அடித்து துவைத்துவிட்டு ஒன்றுமே நடவாதது போல் கைகளை தூசு தட்டுவது போல லேசாக தட்டி விட்டுக் கொண்டு மீண்டும் மிதுலாவின் அருகில் போய் அமர்ந்து விட்டான்.அரை மயக்க நிலையில் இருந்த மூர்த்தியை யாரோ சிலர் கை தாங்கலாக வெளியே அழைத்து சென்றனர்.

நடந்தவை அத்தனையும் பார்த்துக் கொண்டு இருந்த மிதுலா முகம் வெளிறிப் போய் அமர்ந்து இருந்தாள். ‘ஆத்தாடி….புருஷர்ர்ர்ர்க்குஇவ்வளவு கோபம் வருமா…. இது தெரியாம இத்தனை நாள் அவர்கிட்ட ரொம்ப பேசிட்டோமோ…. இதை எல்லாம் நேற்று நீ சமையல் என்கிற பேரில் ஏதோ ஒன்று செய்து வைத்து புருஷர்ர்ர்ர்ரை பழி வாங்கினாயே….அப்பொழுது யோசித்திருக்க வேண்டும்’ என்று அவளது மனசாட்சி அவளுக்கு எடுத்தரைத்தது.முன்னிலும் அதிக பயத்துடன் வசீகரனை பார்க்க அவனோ அவளை கண்டு கொள்ளாது அவள் கைகளில் இருந்த கோட்டை வாங்கி மீண்டும் அணிந்து கொண்டு அதே இடத்தில் அமர்ந்து விட்டான்.

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here