கணவனிடம் விறைப்பாகப் பேசி படுத்துவிட்டாலும் மிதுலாவால் இயல்பாக இருக்க முடியவில்லை. தான் பேசியது தவறோ என்று சிந்திக்கத் தொடங்கினாள்.
மெதுவாகத் திரும்பி வசீகரனை பார்த்தாள். பால்கனியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தான். ‘சே! கொஞ்சம் ஜாஸ்தியா பேசிட்டோம் போலவே!’ ( கொஞ்சம் இல்லம்மா ரொம்ப ஜாஸ்தியா பேசிட்டே)
‘பேசாம போய் மன்னிப்புக் கேட்டுடுவோமா? (அடப்பாவி இவ்ளோ பேசிட்டு தெரியாம பேசிட்டேன்னு சொல்லி மன்னிப்பு கேட்கப் போறியா? துரத்தி துரத்தி மிதிப்பார் உன் புருஷர்ர்ர்ர்)’
அவர் பேசியதும் தப்பு தானே… தெய்வாவை குறை சொல்லி பேசவும் தான் எனக்குக் கோபம் வந்தது. அதனால், இனிமேல் அப்படிப் பேசக்கூடாதுனு சொல்ல போறேன்’
‘ஏன்டி! உனக்கு மூளைன்னு ஒண்னு ஆண்டவன் கால் கிராம் அளவுக்காவது வச்சு இருக்கானா இல்லையா?’
“ ஏன்! எனக்கென்ன குறைச்சல்… இல்ல என் புத்திசாலித்தனத்துக்குத் தான் இப்ப என்ன குறைச்சல்? நான் எப்பவும் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணுவேணாக்கும்”
இப்பொழுது மிதுலாவின் மனசாட்சி நேரிடையாகவே தலையில் அடித்துக் கொண்டது.
‘சுத்தம். அம்மாடி மிதுலா! கல்லூரிப்பாடம் வேற வாழ்க்கை பாடம் வேற’
‘இப்ப என்ன தான் சொல்ல வர நீ?’
‘இப்போ நீ போய்ப் பேசினால் உனக்கு உதை கண்டிப்பாகக் கிடைக்கும்னு சொல்றேன். அதனால கொஞ்சம் அடக்கி வாசி. நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்குப் பேசுறியே… நாளைக்கு நீ அவர் வீட்டுக்கு தான் போகப் போற. அதை மறந்துட்டியா?’
‘அய்யய்யோ! ஆமாம்ல. அதை எப்படி மறந்தேன். அங்கே போனதும் தரையில் தூங்க சொன்னா என்ன பண்ணுறது?’
‘அடி கிரகம் புடிச்சிவளே! உன்னை யோசிக்கச் சொன்னா… ஒண்ணு சாப்பாட்டைப் பத்தி யோசிக்கிற இல்லை தூக்கத்தைப் பத்தி யோசிக்கிற…”
‘என்னை என்ன செய்ய சொல்லுற? எனக்கு சந்தேகம் வந்தா கேக்குறது தப்பா?’
‘பாவம்…’
‘ஆமா… நான் ரொம்பப் பாவம் தான் இல்ல’
‘நான் உன் புருஷரர்ர்ர சொன்னேன்…’
‘நீ என் மனசாட்சி தானே. எப்ப பாரு என் புருஷர்ர்ர்ர்க்கு எதுக்கு சப்போர்ட் பண்ணுற?”
‘நியாயம் தான். உனக்குத் தான் நான் சப்போர்ட் பண்ணனும். எனக்கும் அது தான் ஆசை. எங்கே நீ செய்வதைப் பார்த்தா உனக்கு சப்போர்ட் பண்ணனும்னு தோணலியே’
‘தெய்வா உன்கிட்ட எத்தனை தடவை சொல்லி அனுப்பினாங்க… கொஞ்சமாவது காதில் வாங்கினியா?’
‘நான் எவ்ளோ தான் பொறுமையாக இருப்பது. நான் அவ்ளோ தூரம் இறங்கி பேசுறேன். ஆனால், அவர் கோபமா தான் இருக்கார். அவருக்கு விளக்கம் கொடுத்தா, புருஷர்ர்ர்ர் அதுக்கும் தையா தக்கானு குதிக்கிறார். நான் என்ன செய்ய?’
‘இப்போதைக்கு நீ உன் புருஷர்ர்ர்ர்கிட்ட பேச வேணாம். அமைதியா படுத்து தூங்கு… காலையில் பார்த்துக் கொள்ளலாம்’
‘அட! அருமையான யோசனை நல்லா தூங்கி ரெண்டு நாளாச்சு. சாப்பாடு வேற சூப்பரா இருந்துச்சா, ஒரு வெட்டு வெட்டிட்டேன். செமையா தூக்கம் வருது. நான் தூங்குறேன். நீ போய்ட்டு அப்பறம் நான் கூப்பிடும் போது வா. குட் நைட்’, என்றவள்… உடனே உறங்கியும் விட்டாள்.
நெடுநேரம் பால்கனியில் நடை பயின்ற வசீகரன், கால்கள் வலி எடுத்ததும் சோர்ந்து போய் உள்ளே வந்தான். வந்தவன் எங்கே தூங்குவது என்று அறையைச் சுற்றி நோட்டம் இட்டான். உறங்கிக் கொண்டு இருந்த மிதுலாவின் மீது அவன் பார்வை சென்றது. விடிவிளக்கின் வெளிச்சத்தில் அவளைப் பார்த்தான்.
வளர்ந்த குழந்தை போல உறங்கிக் கொண்டு இருக்கும் இவளா கொஞ்ச நேரம் முன்னர் அப்படி எல்லாம் பேசினாள் என்று அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
‘மாலையில் தன்னுடைய சிறு பார்வையைக் கூடத் தாங்க முடியாமல் தவித்தவளா இவள்? கொஞ்சம் கூடப் பயமே இல்லாமல் என்ன பேச்சு பேசுகிறாள்…
சாந்தி முஹூர்த்தத்தை பற்றிப் பேசினால் கொஞ்சம் பயந்து வாயை மூடுவாள் என்று பார்த்தால் அதையும் காணோம். சில் வண்டு என்னையே மிரட்டுகிறாள்…
இவளை வெறுப்பேற்றுவதற்காவது இவளை கட்டிப் பிடித்து ஒரு முத்தம் கொடுத்து இருக்க வேண்டும். அப்படிச் செய்து இருந்தால் என்ன செய்து இருப்பாள்’ என்று யோசித்தவனின் இதழோரம் சிரிப்பில் லேசாக நெளியத் தொடங்கியது.
சட்டென்று முகம் இறுக, ‘நாளை எப்படி என்கிட்ட இருந்து தப்பிக்கப் போகிறாய்னு பார்க்கிறேன்’ என்று மனதில் நினைத்துக்கொண்டான்.
திருமணமான நாளின் இரவை உலகிலுள்ள ஒவ்வொரு ஜோடியும் ஒவ்வொரு விதமாகக் கழிக்க, இவர்கள் இருவரும் வேறு விதமாகக் கழித்தனர். மனைவி, கணவனிடம் அதிகமாகப் பேசிவிட்டோமோ என்ற குற்ற உணர்வுடனும்… கணவன் நாளையிலிருந்து இவளை எப்படிப் பழி வாங்குவது என்றும் யோசித்த நிலையில் உறங்கினர்.
வசீகரன் எப்பொழுதும் அதிகாலையில் எழுபவன் எப்பொழுதும் போலச் சீக்கிரமே முழிப்பு வந்து விட, எழுந்து குளித்து முடித்து அறையை விட்டு வெளியேறினான்.
வசீகரன் அறையை விட்டு வெளியேறியதும் மகளை எழுப்பி விட நினைத்து அறைக்குள் நுழைந்தார் தெய்வானை.
அங்கே மிதுலா கட்டிலை மொத்த உடலாலும் அளந்தபடி தூங்கிக் கொண்டு இருக்க, வசீகரன் இரவில் கீழே விரித்து இருந்த போர்வையும் தலையணையும் நேற்று என்ன நடந்து இருக்கக் கூடும் என்பதை அவருக்கு அறிவித்தது.
என்ன தான் எதிர்பார்த்த விஷயம் என்றாலும் மனதில் லேசான வலி ஏற்படுவதை தெய்வானையால் தடுக்க முடியவில்லை.
“மிதுலா! ஏய் எழுந்திருடி! எப்படி தூங்குகிறாள் பார்! அங்கே மாப்பிள்ளை எழுந்து குளித்து முடித்துக் கீழே போய் விட்டார். இங்கே இவள் இன்னமும் தூங்குவதைப் பார். அடியேய்… மிதுலா! எழுந்து தொலையேண்டி! தெய்வானை உலுக்கி எழுப்ப முயன்றார்”
மெதுவாகக் கண் முழித்த மிதுலா, “தெய்வா நல்லா ஸ்ட்ரோங்கா ஒரு காபி” என்று கூறிவிட்டு மறுபடியும் தூக்கத்தைத் தொடரப் பார்த்தாள்.
“ஏன்டி… எருமை! ஏற்கனவே லேட் ஆகிடுச்சு மறுபடியும் தூங்கவா போற? எழுந்திருடி!”
“இன்னும் கொஞ்ச நேரம் தெய்வா, ப்ளீஸ்!”
“ஏய்… மாப்பிள்ளை ஏற்கனவே கிளம்பி கீழே போய்விட்டார். நீ இன்னும் எழுந்திரிக்கவே இல்லை. மரியாதையாக எழுந்து குளித்துக் கிளம்பு போ…”
அதுவரை தூக்க கலக்கத்தில் பேசிக் கொண்டு இருந்த மிதுலா, வசீகரன் கிளம்பி விட்டான் என்று தெரிந்தததும், ‘ஐயோ! அந்தப் பனைமரத்தான் முன்னாடியே கிளம்பி போய்ட்டானா? கீழே போகும் போது என்னையும் எழுப்பி விட்டு இருக்கலாம்ல! திமிரு! திமிரு!’
“சரி! சரி! சும்மா முழிச்சுகிட்டே நிற்காம போய்க் குளிச்சுட்டு வா மிதுலா”
“தெய்வா காபி கேட்டேனே…”
“எல்லாம் கீழே வந்து குடிச்சுக்கோ, ம்… சீக்கிரம் போ மிதுலா”
மிதுலா குளித்து முடித்து வரும் வரை அங்கேயே காத்துக் கொண்டு இருந்த தெய்வானையின் மனதில் பற்பல சிந்தனைகள் ஓடிக் கொண்டு இருந்தது.
ஆழ்ந்து சிந்தித்தவர் தெளிவான ஒரு முடிவு எடுத்தார். பிறகு மனதுக்குள் கணவனிடம் பேசியபடி மிதுலாவிற்காகக் காத்திருக்கத் தொடங்கினார்.
“மிதுலா… இங்கே உட்கார். உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்”
“என்னம்மா?”என்று கேட்டுக் கொண்டே கட்டிலில் அமர்ந்தாள் மிதுலா.
“கீழே போர்வை விரிச்சு இருக்கே… அது யாருக்கு?”
“உங்க மாப்பிள்ளை தான் படுத்து இருந்தார்மா”
“அவர் ஏன் கீழே படுத்தார்? நீ தரையில் படுத்துக் கொள்வது தானே?”
“அது வந்து அம்மா…”
“மிதுலா… உன்னிடம் ஏற்கனவே சொன்னது தான் மறுபடியும் சொல்கிறேன், தப்பு நம் பக்கம் இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது ”
“இல்லைம்மா… அவர் என்னைத் திட்டினால் பரவாயில்லை, உங்களை ஒரு வார்த்தை சொன்னால் என்னால் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?”
“மிதுலா… இனி உனக்கு எல்லாமும் அவர் தான். என்னை விட அவர் தான் உனக்கு முக்கியம் இதை எப்பொழுதும் நினைவில் வை”
“எனக்குக் கோபம் வருதே அம்மா, நான் என்ன செய்ய?”
“ஒரு குழந்தை உன் மீது கல் எறிந்தால் என்ன செய்வாய்? அந்தக் குழந்தையைத் திட்டி அடித்துக் கண்டிப்பாயா மிதுலா?”
“அம்மா, குழந்தைக்கு என்ன தெரியும், அதை போய் அப்படி எல்லாம் செய்ய முடியுமா?”
“அது போலத் தான் மாப்பிள்ளையும் இனி! அவரைக் குழந்தை என்று நினைத்துக் கொள். அவர் தாயில்லா பிள்ளை மிதுலா… இனி அவருக்கு எல்லாமும் நீ தான். அதைப் புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்… அதே சமயம் அவர் உனக்கு கணவரும் கூட அதை மறந்து விடாதே… அவரையும் மறக்க விட்டு விடாதே…”
“அம்மா…”
“அது மட்டும் இல்லை மிதுலா… கணவனும் மனைவியும் எந்நேரமும் ஒருவர் நினைவில் ஒருவர் வாழ வேண்டும். இனி மாப்பிள்ளையின் எல்லாத் தேவைகளையும் நீ தான் பார்த்து பார்த்துச் செய்ய வேண்டும். புரிந்து நடந்து கொள்…
இது உன் வாழ்க்கை இனி இதைக் காப்பாற்றிக் கொள்வது உன் பொறுப்பு. இனி இந்த வீட்டிற்குள் மாப்பிள்ளையோடு தான் நீ வர வேண்டும். தனித்து வரக் கூடாது. சரி கீழே போகலாம் வா, அப்பறம் உனக்குக் காபி இருக்காது”
“ஐயோ ஆமாம்மா… வா போகலாம்” என்று ஓடினாள் மிதுலா.
‘இவ்வளவு நேரம் சொன்ன அறிவுரை எல்லாம் இவள் புத்திக்குள் ஏறியதா? இல்லையா?’ என்ற சிந்தனையோடு மகளை அழைத்துத் தலை சீவி பூ முடித்துக் கீழே அழைத்துக் கொண்டு சென்றார் தெய்வானை.
அதே நேரம் மிதுலாவும், ‘இனி அம்மா சொன்ன மாதிரி புருஷர்ர்ர்ர குழந்தை(! ) மாதிரி பார்த்துக்கணும்’ என்ற நினைவோடு கீழே சென்றாள்.
Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
+1
2
+1
+1
+1
+1