NUNN Tamil Novels 16

0
3991

பெரியம்மா, இப்பொழுது கிளம்பினால் தான் சரியாக இருக்கும், எனக்கும் ஊரில் நிறைய வேலை இருக்கு” மிதுலாவிற்கு ஆதரவாக காவேரி தன்னிடம் வந்து பேசுவதை பொறுக்காமல் பேச்சை வேண்டுமென்றே மாற்றினான் வசீகரன்.

சரி தம்பி, நீ அவளை வருந்த வைக்க வேண்டும் என்று எதையும் செய்து விடாதே. எனக்கு உன்னைப் பற்றி நன்கு தெரியும்… அடுத்தவரை வருத்தி அதில் மகிழ்ச்சி அடையும் அற்பபுத்தி உனக்குக் கிடையாது… மேலும்…

போதும் பெரியம்மா… லேட் ஆகுது கிளம்பலாம். நீங்க போய் அந்த மஹாராணியைக் கூட்டிட்டு வாங்க

ஹம்ம்…என்று பெருமூச்சு விட்டப்படி திரும்பியவர், வாசலில் நின்று கொண்டு இருந்த தெய்வானையை அப்பொழுதுதான் பார்த்தார்.

“உள்ளே வரலாமா சம்பந்தி?”

வாங்க அண்ணி… இது என்ன கேள்வி? சும்மா தான் பேசிட்டு இருக்கோம்…

மன்னிச்சுடுங்க அண்ணி, ஒட்டுக்கேட்கணும்னு வரலை. ஆனால், நீங்க ரெண்டு பேரும் பேசுனது எல்லாம் என் காதில் விழுந்து விட்டது

காவேரியின் முகத்தில் லேசான அதிர்வு தோன்றியது. வசீகரனின் முகத்தில் எந்த விதமான உணர்ச்சியும் காணப்படவில்லை…

நடந்த எதையும் மாற்ற என்னால் முடியாது மாப்பிள்ளை. உங்கள் கோபம் தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால், இதற்கும் மிதுலாவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை… அவள் குழந்தை மாதிரி… அவளைத் தண்டித்து விடாதீர்கள்… என் கணவர் போன பிறகு அவளுக்காக மட்டும் தான் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

ஒரு ஈ, எறும்பைக்கூட அவள் துன்புறுத்தியது கிடையாது. அவளுடன் கொஞ்ச நாள் பழகினால் உங்களுக்கே அவளைப் பற்றிப் புரிந்துவிடும்… இதோ இந்த நிமிடம் வரை நீங்கள் என்னிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. அது எனக்கான தண்டனை என்று எனக்குப் புரிகிறது…

நான் உங்கள் தண்டனைக்குத் தகுதியானவள் தான். ஆனால், மிதுலாவிற்கு இது போல எந்தத் தண்டனையையும் கொடுத்து விடாதீர்கள்…

அவள் உங்களில் பாதி இனி. அவளின் இன்பமும், துன்பமும் உங்கள் பொறுப்பு. அக்கினி சாட்சியாக வாக்குறுதி கொடுத்து உள்ளீர்கள். அதைக் காப்பாற்றுங்கள். பெண்ணைப் பெற்ற தாயாக உங்கள் முன் மடியேந்தி பிச்சை கேட்கிறேன்இல்லை… அதுவும் போதாது என்றால், உங்கள் காலில் விழுந்து வேண்டுமானாலும் மன்னிப்புக் கேட்கிறேன்என்று கூறிக்கொண்டே வசீகரனின் காலில் விழப்போனவரை தடுத்து நிறுத்தினார் காவேரி.

என்ன காரியம் அண்ணி செய்யறீங்க? அவன் ஏதோ கோபத்தில் பேசிவிட்டான். அதற்காக இப்படி எல்லாம் செய்வீர்களா? நான் இல்லையா? நான் நம்ம மிதுலாவை பார்த்துக் கொள்ள மாட்டேனா?”

ஆயிரம் பேர் அனுசரனையாய் இருந்தாலும் கட்டினவன் அன்பு இல்லை என்று ஆனால் என் பெண்ணிற்கு வாழ்க்கையே நரகமாக மாறி விடுமே அண்ணி…

மிதுலா நல்ல பெண், அண்ணி! இதுவரையில் எந்த வகையிலும் எனக்கு சிரமம் கொடுத்ததே இல்லை. அப்படிப்பட்ட பெண்ணுக்கு ஒரு தாயான என்னால் மகிழ்ச்சியான மணவாழ்க்கையை அமைத்து தர முடியாவிட்டாலும், இப்படி வெறுப்போடு இருக்கும் கணவனுடன் அவள் எப்படி வாழ்வாள் அண்ணி? நீங்களும் ஒரு பெண்ணைப் பெற்றவர்தானே… என் உணர்வுகள் உங்களுக்குப் புரியவில்லையா அண்ணி?”

 கண்கள் கலங்க மூச்சு வாங்கி மேலும் பேசிக்கொண்டே இருந்தார் தெய்வானை. காவேரியின் சமாதானங்கள் அவரது செவியைத் தீண்டினார் போல தெரியவே இல்லை.

“பெரியம்மா! போதும் நிறுத்த சொல்லுங்க… என் பொண்டாட்டியை பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும். சம்மந்தம் இல்லாமல் எனக்கும் என் மனைவிக்கும் நடுவில் யாரும் வர தேவை இல்லை என்று சொல்லுங்கள்எரிச்சலுடன் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான் வசீகரன்.

விடுங்க அண்ணி! அவன் அப்படித்தான் பேசுவான்அதெல்லாம் அவன் நல்லா பார்த்துக் கொள்வான். வாங்க, நாம போய் மிதுலாவை கிளப்பலாம், எங்கே மிதுலா?”

பின்னாடி கொல்லையில் அவள் வைத்த செடி எல்லாம் இருக்குஅதைப் பார்த்து விட்டு வரேன்னு சொல்லிட்டு போனா. வாங்க, அங்கே போய்ப் பார்க்கலாம்

இருவரும் சென்று பார்த்தபோது மிதுலா அவளுக்கு மிகவும் பிடித்த ஆரஞ்சு வண்ண ரோஸ் செடியை வலிக்காமல் வருடிக்கொடுப்பது போல் தடவிக் கொண்டு இருந்தாள்.

தெய்வானையைப் பார்த்ததும், “தெய்வா! தினமும் தண்ணி எல்லாம் கரெக்டா ஊத்திடு. நான் பக்கத்தில் இல்லைங்கிற தைரியத்தில் என் செல்லக்குட்டிங்கல்லாம் சரியாய்க் கவனிக்காமல் விட்டுவிடாதே. அப்பறம் என்னைப் பற்றித் தெரியும் இல்லையா? அப்பாவிடம் பத்த வச்சு விடுவேன்… ஜாக்கிரதை!

போடி, வாயாடி! அதெல்லாம் நான் பார்த்துக் கொள்வேன்

அப்பறம் சந்துரு, சந்திரா ரெண்டு பேரையும்…

அடியேய்… உன்னையே நான் தான் வளர்த்தேன் அதை ஞாபகம் வைத்துக்கொள். வீட்டில் இருக்கும் செடி, நாய், பூனை பத்தி ஒன்னும் நீ கவலை படவேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்வேன். நீ இனி உன்னையும் மாப்பிள்ளையையும் பற்றிக் கவலைப் படு… அது போதும்

அதெல்லாம் நான் பார்த்துக் கொள்வேன். நீங்க சொன்னது எல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு. மறுபடி… மறுபடி அதையே சொல்லி என் காதில் ரத்தம் வர வைத்து விடாதே தெய்வா! ப்ளீஸ்! நான் பாவம் என்னை விட்டுடு”

முதலில் உன் வாயை குறை, நீ வாயை திறக்காமல் இருந்தாலே எல்லாம் நன்றாக நடக்கும். சரி வா… சாப்பிட போகலாம்

இல்லை அண்ணிசாப்பிட உட்கார்ந்தா லேட் ஆகிடும், வசீகரனுக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்காம்அதனால் சாப்பாட்டைப் போகிற வழியில் பார்த்துக் கொள்ளலாம்னு தம்பி சொன்னான்

சாப்பிட்டு விட்டு போகலாமே அண்ணி…”

இல்லை அண்ணி, அதற்கு நேரம் இல்லை, சீக்கிரமே கிளம்பணும்னு வசீகரன் சொன்னான். இன்னும் போற வழியில் ராஜேஸ்வரியையும் ஹோட்டலுக்குப் போய் அழைச்சுக்கிட்டு போகணும். அதனால உடனே கிளம்பச் சொன்னான்

சரி அண்ணி…என்றார் தெய்வானை மனமே இல்லாமல்…

விடு தெய்வா, இன்னிக்கு ஒருநாள் நான் ஹோட்டல்ல நல்ல சாப்பாடு சாப்பிடுகிறேனே. நீ செஞ்சதை நீயே சாப்பிடு. மறந்து போய் வேற யாருக்கும் கொடுத்து விடாதே! எல்லாரும் என்னை மாதிரியே உன் மேல் பரிதாபப்பட்டு உன் சமையலை கஷ்டப்பட்டு முழுங்கிவிட்டு நல்லா இருக்குனு வாய் கூசாம பொய் சொல்லமாட்டாங்கபார்த்துக்கோ

பெரியம்மா, சீக்கிரம் கிளம்பணும்னு சொன்னேன்ல… இன்னும் என்ன அரட்டை? போய் வண்டியில் ஏறுங்க” வசீகரனின் குரலில் மிதுலாவின் பேச்சு உடனே நின்றது.

என்ன… மஹாராணிக்கு தனியா சொல்லணுமா? வந்து காரில் ஏறு

அவசரமாகக் காரில் ஏறி அமர்ந்து தாயின் முகத்தைப் பார்த்தாள் மிதுலா. ‘கண்களிலிருந்து கண்ணீர் இதோ கொட்டப் போகிறது’ என்ற நிலையில் கண்கள் கலங்க நின்று கொண்டு இருந்தார் தெய்வானை.  

கண் பார்வையில் இருந்து தெய்வானை மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தவள், இரண்டு தெரு தாண்டியும் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி ஏக்கத்தோடு இது நாள் வரை தான் வாழ்ந்து வந்த அந்த இடத்தைப் பார்த்துக் கொண்டே வந்தாள்.

உனக்கு ஆண்டவன் பேருக்காவது மூளையை வைத்து இருக்கிறானா இல்லையா? தலையை உள்ளே வைத்துக் கொண்டு உட்கார்… சை! சரியான இம்சை!

இம்சையா? நானா?’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே கைப்பையில் இருந்த பொருட்களை நோண்ட ஆரம்பித்தாள். தலையைக் குனிந்து கைப்பையுனுள் எதையோ தேடுவதைப் போல இருந்தாலும், உள்ளூர அவளுக்குள் கொஞ்சம் நடுக்கமும் பயமும் காணப்பட்டது.

‘இதுவரை அம்மாகூட இருந்ததால் ஓரளவிற்கு புருஷர்ர்ர்ரை சமாளித்தாயிற்று… இனி எப்படிச் சமாளிப்பது? அதுவும் நேற்று இரவு நான் பேசியதற்கு இவர் என்ன செய்யக் காத்திருக்கிறார்னு வேற தெரியலை. பேசாமல் நேத்துக் கொஞ்சம் அடக்கியே வாசிச்சு இருக்கலாமோ(! )’

இவ்வளவு சீக்கிரம் உனக்கு ஞானோதயம் வந்து இருக்கக் கூடாது மிதுலா

‘அம்மா வேற இவர் குழந்தை மாதிரினு சொன்னாங்க… குழந்தை என்னை விட ரொம்ப உயரமா இருக்கே! மத்த குழந்தைகள் அழுதால் இடுப்பில் தூக்கி வைத்து நிலாவை காட்டி சமாதானப் படுத்தலாம், இவரை நான் எங்கே இடுப்பில் தூக்கி வைத்து நிலவை காட்டி சமாளிப்பது…

இப்படி எல்லாம் யோசிக்க உன்னால மட்டும் தான்டி முடியும்…

சட்டென்று அவளின் தோள்கள் உலுக்கப் பட நிஜ உலகிற்கு வந்தவள், யார் தன்னை உலுக்கியது என்று நிமிர்ந்து பார்த்தாள். அங்கே ஆத்திரமாக நின்று கொண்டு இருந்தாள் ராஜேஸ்வரி (எ) வர்ஷினி.


Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here