NUNN Tamil Novels 18

0
3588


எவ்ளோ நேரம் தான் செல்லை வச்சு பார்த்துக்கிட்டேஇருப்பாய்! கொஞ்சநேரம் என்னோடு பேச உங்க யாருக்கும் நேரம் இல்லையா?

ஏன் அத்தை! இப்படி சொல்றீங்க? அங்கே வீட்டில் யாரும் உங்களோடு பேச மாட்டார்களா?”

எங்கே மிதுலா இதோ உன் புருஷன் இருக்கிறானே,எப்போ வீட்டிற்கு வருவான்,ஒழுங்காக சாப்பிடுவானா! எனக்கு ஒன்றும் தெரியாது. தொழில் என்று வந்துவிட்டால் இவனுக்கு நேரம் காலம் எல்லாம் மறந்து விடும்.

 இவள் சென்னையில் தான் படிப்பேன் என்று அங்கே ஹாஸ்டலில் தங்கி படிக்கிறாள். எப்பொழுதாவது தான் லீவிற்கு வருவாள்.

மத்த நாட்களில் சமையல்காரி,தோட்டக்காரன் மற்றும் வாட்ச்மேன் இவர்கள் தான் எனக்கு துணை. நாங்கள் மூவரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டே வருட கணக்கு ஆகிறது… என்றார் மனத்தாங்கலுடன்

என்னம்மா! இவ்வளவு பீல் பண்ணுறீங்க,தொழிலுக்கு வெளியே போனால் முன்னே பின்னே தான் ஆகும்,இதற்கெல்லாம் வருத்த படலாமா? என் நிலைமை உங்களுக்கு தெரியாதா?”  வசீகரனின் குரலில் மிகுந்த துயரம் இருந்தது.

தெரியும் தம்பி இருந்தாலும் பிள்ளைகளுக்கு வாய்க்கு ருசியாக சமைத்து வயிறார சாப்பிடுவதை கண்ணார காண வேண்டும் என்று ஒவ்வொரு தாயும் எதிர்பார்ப்பது போல தானே தம்பி நானும் நினைக்குறேன். அது தவறா?”  காவேரியின் கேள்வியில் நியாயமும் எதிர்பார்ப்பும் நிறைந்து இருந்தது.

இதற்காக ஏன் அத்தை இத்தனை வருத்த படறீங்க! இனி நான் வந்துட்டேன் இல்லை. நாம ரெண்டு பேரும் சேர்ந்து இவர்களை ஒரு வழி செய்து விடலாம். கவைப்படாதீங்க! நான் உங்க பக்கம் தான்”

நீ ஏன் நாங்க பேசும் போது குறுக்கே பேசுற? உன் வேலையை மட்டும் பாரு… இப்படி எல்லாம் பேசி என் அம்மாவை கைக்குள் போட்டுக் கொள்ளலாம் என்று பார்க்கிறாயா?” வர்ஷினி பொரிந்தாள்.

ஆரம்பித்து விட்டாளா! இவளை போனா போகுதுன்னு விட்டா ரொம்ப பேசுவாளே(உன்னை விடவா மிதுலா செல்லம்!)

என்ன சொல்ற ராஜேஸ்வரி” என்று அவளது பெயரை அழுத்திக் கூறி வர்ஷினியின் பிபியை எகிற வைத்தாள் மிதுலா.

என் பெயர் வர்ஷினி… அப்படியே கூப்பிடு” ஏற்கனவே தாயிடம் இருந்து பலமுறை வாங்கிக் கட்டிக் கொண்டதால் பல்லை கடித்து வார்த்தைகளை துப்பாத குறையாக பேசினாள்.

அப்படியானால் நான் உன்னிடம் பேசவேண்டும் என்று எதிர்பார்kகிறாயா? அதற்கு தான் இத்தனை கோவமா! என்னிடம் பேசு என்று ஒரு வார்த்தை சொன்னால் பேசிவிட்டு போகிறேன். அதற்கு எதற்கு இப்படி அத்தை மேல் பொறாமை படுகிறாய்!”

பொறாமையா! யாருக்கு” எள்ளலாக வந்தது வர்ஷினியின் குரல்.

உனக்கு தான்,அதுவும் நான் அத்தையிடம் பேசுவதை பார்த்து!”

ஹ! குட் ஜோக்! எனக்கு அம்மா உன்னுடன் பேசுவதே பிடிக்கவில்லை. இதில் நான் வேறு உன்னிடம் பேச ஆசை படுகிறேனாம்! கனவில் கூட நினைக்காதே! உன்னை எல்லாம் நான் எனக்கு சமதையாக நினைத்ததும் இல்லை இனி நினைக்க போவதும் இல்லை”

ஏதொ பேச முற்பட்ட காவேரியின் கரங்களை அழுத்தி அவர் பேசுவதை தடுத்தாள்.

 சரி உனக்கு தான் என்னை பிடிக்காது… நான் பேசுவதும் பிடிக்காது பிறகென்ன அத்தையின் சந்தோசத்திற்காக உன்னை நான் அவர்களுக்கு பிடித்தமான ராஜேஸ்வரி என்ற பெயரில் அழைத்து விட்டு போகிறேன்… என்னை போன்ற ஒருத்தி, அதாவது உனக்கு சமதையாக இல்லாத ஒருத்தி உன்னை பற்றி பேசினால் இப்படி தான் அவர்களிடம் சென்று பேச்சு வார்த்தை நடத்துவாயா?”

வர்ஷினி திருத்திருத்தாள். இப்பொழுது இவளுக்கு ஆம் என்று சொன்னால் அது தான் சாக்கென்று இவள் மேலும் மேலும் பேசி சீண்டுவாள். இல்லையென்று சொன்னால் அப்படியானால் நான் உனக்கு சமமானவள் என்று ஒத்துக்கொள்வதாக ஆகிவிடும்.

சே! இப்படி மாட்டி வைத்து விட்டாளே இனி இவளிடம் யோசித்து ஜாக்கிரதையாக தான் பேச வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, “ உன்னை போல ஒரு ஏமாற்றுக்காரிக்கு எல்லாம் நான் விளக்கம் சொல்ல முடியாது. நீ எப்படியோ போ” என்று கூறிவிட்டு ஜன்னல் பக்கம் திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

வேறு வழி! விட்டால் இப்படியே பேசி என் வாயை பிடிங்கி இவள் நல்லவள் என்று என் வாயாலேயே சொல்ல வைத்தாலும் வைத்து விடுவாள். எதற்கு வம்பு!

சரி நீயே சொல்லிவிட்டாயே! பிறகென்ன அத்தையின் சந்தோசத்திற்காக நீ இதை பொறுத்துக் கொள்வாய் இல்லையா! ராஜேஸ்வரி “ என்று பெயரை மட்டும் அழுத்தி உச்சரித்தாள்.

எல்லாம் என் அம்மாவிற்காக தான் உனக்காக ஒன்றும் இல்லை! கெத்தாகவே பேசினாள் வர்ஷினி. பின்னே இவளுக்காக நான் விட்டுக் கொடுத்ததாக இருக்க கூடாது.

ஒருவழியாக அவளை சமாளித்துவிட்டு சிரிப்புடன் திரும்பி சாலையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்த மிதுலாவிற்கு மனதின் ஓரத்தில் லேசான வலி ஏற்படுவதை தடுக்க முடியவில்லை.

 தங்களுக்குள் இவ்வளவு தூரம் பேசியும் வசீகரன் தனக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வர்ஷினியையும் அதட்டவில்லை. அத்தைக்கு தோன்றிய உணர்வு இவருக்கு தோன்றவில்லையே!‘. என்னுடைய மனைவியை இப்படி எல்லாம் பேசாதே என்று ஒரு வார்த்தை மறுத்து பேசவில்லையேஎன்று எண்ணினாள்.

நான்கு மணிநேர பயணத்திற்கு பிறகு ரோட்டோரமாக போட பட்டு இருந்த ஒரு கடை வாசலில் வண்டியை நிறுத்தினான் வசீகரன். தொடர்ந்து வண்டியை ஒட்டியதால் கைகள் எல்லாம் சற்று மரத்து போனதுபோல் இருக்க கைகளை லேசாக நீவியபடி காரில் இருந்து இறங்கினான் வசீகரன்.

தன்னை மீறி, “கை ரொம்ப வலிக்குதா?” என்று கேட்டுவிட்டு நாக்கை கடித்துக் கொண்டே தலையிலும் தட்டிக் கொண்டாள்.

அதை தெரிந்து கொண்டு இப்பொழுது என்ன செய்ய போகிறாய்? உன் வேலையை மட்டும் பார்” கடினமாக வந்து தெறித்தன வார்த்தைகள்.

அக்கறையாம் அண்ணா,இந்த மாதிரியான பொய் வார்த்தைகளை நம்ப என் அண்ணன் ஒன்றும் என் அம்மாவை போல ஏமாந்தவர் அல்ல நினைவில் வைத்துக் கொள், தமையனுக்கு மட்டும் கேட்கும் குரலில் தெளிவாக முணுமுணுத்து விட்டு சென்றாள் வர்ஷினி.

இவள் ஒருத்தி! புருஷர்ர்ர்ர் சும்மாவே நம்மளை ரொமான்டிக் லுக்கு விடுவார். இப்ப சுத்தம் என்று எண்ணிக் கொண்டே நிமிர்ந்து வசீகரனை பார்த்தாள். அவள் எண்ணியது சரியே என்பது போல வசீகரன் அவளை உறுத்து தீப்பார்வை பார்த்துக் கொண்டு இருந்தான்.

அய்யா சாமி! தெரியாம சொல்லிட்டேன். இனி வாயை திறக்க மாட்டேன். தயவு செஞ்சு கண்ணகிக்கு கசின் பிரதர் மாதிரி பார்த்து வைக்காதீங்க… ப்ளீஸ்!”

ஒரு நிமிடம் அவளை உறுத்து பார்த்தவன் ஒன்றுமே நடவாதது போல தோளை குலுக்கி விட்டு சென்று விட்டான். ஹம்! என்று பெருமூச்சை விட்டுவிட்டு,’ கை வலிக்குத்தான்னு கேட்டது ஒரு குத்தமாடா சாமி அதற்கு இப்படி ஒரு லுக்கு வேற. ரொம்ப நல்லா இருக்கு புருஷர்ர்ர்ர். இப்படியே முறைச்சுகிட்டே இருந்தா விளங்கிடும்என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டே சாப்பிட அமர்ந்தாள்.

வாம்மா மிதுலா இங்கே வந்து உட்கார்”என்று வசீகரனுக்கு அருகில் இடத்தை சுட்டிக் காட்டினார்.

நல்லவேளை சாமி இந்த முறை என்னை எதிரில் உட்கார சொல்லலைஎன்று மனதுக்குள் வேண்டியபடியே வசீகரனின் அருகில் அமர்ந்தாள்.

என்ன சாப்பிடுகிறாய் மிதுலா” அன்புடன் கேட்டார் காவேரி.

எதற்கு. அத்தை என்னிடம் கேட்கறீங்க? எப்படியும் நான் கேட்பதை உங்கள் பையன் ஆர்டர் செய்ய மாட்டார். பிறகு எதற்கு? அவர் என்ன சொல்கிறாரோ அதையே சாப்பிட்டுக் கொள்கிறேன். அவள் குரலில் இருந்தது வருத்தமா கோபமா என்று இன்னதென பிரிக்க முடியவில்லை காவேரியால். கண்டிப்புடன் அவரது பார்வை உயர்ந்து வசீகரனை குற்றம் சாட்டியது.

வசீகரனோ இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல தோளை குலுக்கி விட்டு உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பித்து விட்டான்.

மிதுலா வழக்கம் போல அவள் பாட்டிற்கு காவேரியிடம் சலசலத்துக் கொண்டே உணவு உண்டாள். வெளியே இயல்பாக காட்டிக் கொண்டாலும் மிதுலாவின் மனதில் பயம் நேரம் ஆக ஆக கூடிக் கொண்டே தான் இருந்தது.

அங்கே யார் எல்லாம் இருப்பார்கள்! எப்படி பழகுவார்கள்! அவர்களும் வசீகரனையும் வர்ஷினியையும் போல தன்னிடம் வேண்டா வெறுப்பாக நடந்து கொள்வார்களோ என்று பல விதமான எண்ணம் தோன்ற சாப்பாடு தொண்டை குழியை தாண்டி இறங்க மாட்டேன் என்று சத்யா கிரகம் செய்ய ஆரம்பித்தது. உணவை கைகளால் அலைந்தவாறு கவனம் எங்கோ இருக்க காவேரியின் பேச்சுக்கு உம்கொட்டிக் கொண்டு இருந்தாள்.

சாப்பிட்டு முடித்ததும் காரில் ஏறி அனைவரும் உட்கார கார் திருச்சியை நோக்கி விரைந்தது. காரில் ஒரு விதமான அமைதியான சூழ்நிலையே நிலவியது. மிதுலாவிற்கு அங்கே போய் தனது கணவனை எப்படி சமாளிப்பது என்ற யோசனையிலும் இருந்தாள்.

 காவேரியோ வசீகரனை நன்கு அறிந்தவர் இந்த பெண்ணை என்ன செய்ய போகிறானோ தெரியவில்லையே,இவனின் அமைதி ஆபத்தாயிற்றே!

ஏற்கனவே முன்பு ஒருமுறை அவன்கல் மாதிரி இறுகி போய் அமைதியாக இருந்த அந்த கொடுமையான நாட்கள் அவரின் கண் முன்னே நிழலாடியது.

 ஆண்டவா என் பையனும் சரி இந்த மிதுலாவும் சரி யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதவர்கள் எது எப்படியோ அவர்கள் இருவரும் இப்பொழுதும் கணவன் மனைவி. அவர்கள் வாழ்வை செழிக்க வைஎன்று மனமார வேண்டிக் கொண்டாள்.

இது என்ன கார் இத்தனை அமைதியாக போகிறது,அதுவும் நான் ஒருத்தி இருக்கும் போது என்று நினைத்த மிதுலா எதையாவது பேச வேண்டுமே என்று பேச ஆரம்பித்தாள். ஏனெனில் அப்பொழுது அவள் இருக்கும் மன நிலைக்கு சும்மா இருந்தால் மனதில் தேவையில்லாத பயம் தோன்றிக் கொண்டே இருந்தது. அதில் இருந்து வெளியே வர எதையாவது பேச வேண்டுமே என்று பேசிக் கொண்டே வந்தாள்.

அதுநாள் வரையில் தெய்வானையை விடுத்து தனியே எங்கும் வெளி ஊர்களுக்கு சென்று இராத காரணத்தால் அவளுக்கு கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் இருந்தன. இந்த ட்ரெயின் எந்த ஊருக்கு போகிறது? புளியம்பழம் புளிக்குமா! இல்லை பழம் என்பதால் இனிக்குமா! என்று அவளுக்கு கேட்பதற்கு ஆயிரம் சந்தேகங்கள் இருந்தது.

வரும் வழியில் அவள் காவேரி ஆற்றை பார்க்கும் பொழுதும் மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலை பார்க்கும் பொழுதும் குழந்தை போல துள்ளி குதித்தாள். ஹை! எவ்ளோ பெரிய ஆறு!.. ஆனால் ஆற்றில் தண்ணீர் ரொம்ப கம்மியாக ஓடுவது போல இருக்கிறதே!

வெயில் காலம் இல்லையா மிதுலா அதுதான். ஒரு காலத்தில் இந்த ஆறு எப்படி இருக்கும் தெரியுமா? ஆற்றில் வழிய வழிய நீர் இருக்கும். பதினெட்டாம் பெருக்கின் பொழுது சுற்றி உள்ள சிறு சிறு ஊர்களில் இருந்து எல்லாம் புதுமண தம்பதிகள் வருவார்கள்.

ஊரே திருவிழாவாக இருக்கும். பச்சை பட்டாடை உடுத்தி வைரங்களை வாரி இறைத்தார் போல தண்ணீர் சலசலத்து ஓடும் என்று கண்கள் மின்ன பேசிக் கொண்டே போனார் காவேரி.

அப்பாடி!எவ்ளோ பெரிய மலை!மலை மேல கோவில் இருக்கு. அங்கே இருந்து பார்த்தால் மொத்த ஊரும் தெரியுமா அத்தை”

ஆமாம் மிதுலா அங்கே இருந்து பார்த்தால் மொத்த திருச்சியும் தெரியும் பார்க்கவே ரம்மியமாக இருக்கும். ஆனால் இப்பொழுது வேண்டாம் உச்சி பொழுதாகிவிட்டது இல்லையா! இரண்டொரு நாள் பொறுத்து மாலை வேளையில் நீயும் வசீகரனும் சென்று வாருங்கள்… சரிதானா!..

காது தொங்கட்டான் ஆட குதூகலமாக தலையை இடமும் வலமுமாக ஆட்டினாள் மிதுலா.இதோ வீடு வந்தாச்சு மிதுலா. வசீகரா ரெண்டு பேரும் வாசலிலேயே காத்திருங்கள். நான் போய் ஆரத்தி கரைத்து எடுத்து வருகிறேன். உள்ளே வந்து ஒரு ஐந்து நிமிடம் இருந்து விட்டு பிறகு நீ கிளம்பு”

காரின்உள்ளே இருந்து கொண்டே ஆவலாக வீட்டை பார்வை இட்டாள் மிதுலா. அது பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் பகுதி என்பதை அதன் செல்வசெழிப்பிலேயே உணரமுடிந்தது.

முன்புறம் பாதி நிலம் வெறுமனே காலியாக இருந்தது. அந்த இடத்தில் அழகிற்காக வளர்க்கப் பட்ட சிறு சிறு பூச்செடிகள் மட்டும் காணப்பட்டது.

மூன்று மாடி கொண்ட அழகிய பங்களா கண்ணை பறித்தது. அழகில் ஒரு குறையும் சொல்ல முடியாது ஆனால் ஏதோ ஒன்று குறைவது போல் மிதுலாவிற்கு தோன்றியது. அவளின் எண்ணவோட்டத்தை கலைத்தது வசீகரனின் குரல்.

அதற்கெல்லாம் எனக்கு… வசீகரன் பேசி முடிக்கவில்லை. அதற்குள் மணமகளே மணமகளே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வாஎன்று பழங்காலத்து பாடல் ஒன்று அவர்களின் வீட்டுக்குள் இருந்து ஒலிக்க ஆரம்பித்தது.ஏற்கனவே ஒரு லூசு உள்ளே வந்து இறங்கிடுச்சு போல அது வேலை தான் இதெல்லாம்! என்றான் வசீகரன் சிரிப்புடன்.

ஹா ஹா… ஆமாம் அண்ணா நம் வீட்டில் இப்பொழுது லூசுகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது தான் “ என்று மிதுலாவை பார்த்துக் கொண்டே கூறினாள் வர்ஷினி.

மிதுலா அவள் கூறிய எதையும் கவனிக்க வில்லை. தனக்கு அந்த வீட்டில் வரவேற்பு அளிக்கும் அந்த நபர் யார் என்று ஆவலாக எட்டிப் பார்த்துக் கொண்டே காரை விட்டு இறங்கினாள்.


Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here