‘யாருடாஅது… ‘என்று திரும்பி பார்த்த மிதுலா வியப்பில் வாயை பிளந்து விட்டாள். பாலை போன்ற மாசு மருவற்ற தேகத்துடன் கோயில் சிலை ஒன்று உயிர் பெற்று வந்தது போன்ற தோற்றத்துடன் ஒயிலாக நின்று கொண்டு இருந்தாள் அவள். திறந்த வாயை மூடாமல் அவளை பார்த்துக் கொண்டு இருந்த மிதுலாவின் தோளில் தட்டி சுய உணர்வுக்கு வரவழைத்தான் வசீகரன்.
“என்னப்பா! பூஜைவேளை கரடியாக உள்ளே வந்துவிட்டேனோ…” என்று இயல்பாக வெண்பற்கள் மிளிரிட கேட்டபடி உள்ளே வந்தாள் அந்த யுவதி.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை நிவி… சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்… வா ஹாலுக்கு போகலாம்”என்றபடி அறை வாயிலுக்கு சென்றான் வசீகரன்.
“என்ன மேன்… அதுதான் உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதே… இன்னமும் கூட என்னை இந்த ரூமை விட்டு வெளியேற்றுவதிலேயே குறியாக இருக்கிறாயே… அதுதான் உன் பாதுகாப்பிற்கு உன் மனைவி பக்கத்திலேயே இருக்காங்களே… அப்பறம் என்ன பயம்? உட்கார் இங்கேயே பேசிவிட்டு கிளம்பி விடுகிறேன்”
“அம்மா உன்னை பார்த்தால் சந்தோச படுவார்கள் வா… உன்னை பார்க்க வேண்டும் என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் தூங்கி இருக்கா விட்டால் பார்க்கலாம் என்று கூறி மிதுலாவின் கைகளை இயல்பாக பிடித்து கொண்டு அறைக்கு வெளியே வந்தான்.
“மிதுலா நீகீழே போய் அம்மாவை அழைத்துக் கொண்டு வா… தூங்கி இருந்தால் எழுப்பாதே… என்று கூறி மிதுலாவை அங்கிருந்து அனுப்பினான்.
‘அத்தை இவ்வளவு நேரம் முழித்திருக்க மாட்டார்களே ‘என்று எண்ணியபடியே காவேரியின் அறைக்கு சென்று பார்த்தாள். அவள் நினைத்தது சரியே என்பது போல் காவேரியும் உறங்கிக் கொண்டு இருந்தார்கள். பூனை போல வந்த வழியே சத்தம் இல்லாமல் திரும்பினாள் மிதுலா.
ஊரே உறங்கும் இரவு நேரத்தில் அந்த மாளிகையின் மாடியில் நடு கூடத்தில் இருவர் பேசிய பேச்சும் மிதுலாவிற்கு தெளிவாக கேட்டது.
“ஆன்ட்டி இந்நேரத்துக்கு கண்டிப்பாக தூங்கி இருப்பார்கள் என்று எனக்கும் தெரியும்… அதுதான் உன் மனைவி பக்கத்தில் இருக்கிறார்களே… பிறகேன் என்னை வழக்கம் போல் ஏதாவது ஒரு காரணம் சொல்லி இப்படி இங்கே ஹாலுக்கு கூட்டி வந்துவிட்டாய் வசீகரன்.”
“என்னுடைய அறைக்குள் அடுத்த வீட்டு பெண்களுக்கு அனுமதி கிடையாது நிவி… அது உனக்கு நன்றாகவே தெரியும் பிறகு எதற்கு இப்படி ஒரு கேள்வி”
“திருமணத்திற்கு பிறகும் அதே மாதிரி ஏன் இருக்க வேண்டும் என்பது தான் என் கேள்வி”
“எனக்கு திருமணம் ஆனதால் மாறி இருப்பது ஒன்றே ஒன்று தான்… என் அறைக்குள் நுழையும் உரிமை புதிதாக ஒரு பெண்ணுக்கு வந்திருக்கிறது… அது என் மனைவி மட்டுமே… வேறு பெண்கள் உள்ளே நுழைவதை நான் விரும்பவில்லை”கணவனை எண்ணி மிதுலாவின் நெஞ்சம் பூரித்தது. என்ன ஒரு அருமையான கணவன் எனக்கு அமைந்து இருக்கிறார்… இறைவா உனக்கு என் நன்றி… என்று கடவுளுக்கு நன்றி செலுத்திவிட்டு கணவனின் செயல்களை எண்ணி எண்ணி மகிழ்ந்தாள்.
தன் கணவனின் அறைக்குள் தன்னை தவிர வேறு எந்த பெண்ணும் நுழைந்தது கிடையாது. இனி நுழையவும் முடியாது… நினைக்க நினைக்க நெஞ்சம் இனித்தது. கண்கள் முழுக்க காதலுடன் வசீகரனை பார்த்துக் கொண்டே அவர்களை நெருங்கினாள் மிதுலா.
“அத்தை தூங்கிட்டாங்க…” மெதுவாக வசீகரனின் எதிரில் நின்று அவனை பார்த்தவாறே சொன்னாள் மிதுலா.
“ஓ… சரி பரவாயில்லை வசீகரன்… நான் மிதுலாவை பார்க்க தான் வந்தேன்… உங்க கல்யாணத்திற்கு என்னால் வர முடியவில்லை… உங்களை பார்க்க வேண்டும் என்றுசாயந்திரம் கொஞ்சம் சீக்கிரமே கிளம்பிட்டேன்… பட் பாதி வழியில் ஒரு எமர்ஜன்சி கேஸ்காக கூப்பிட்டாங்க…
அதை முடிச்சுட்டு வரவும் தான் லேட் ஆகிடுச்சு… ஸாரி லேட்டா வந்து உங்க ரெண்டு பேரையும் தொந்தரவு செஞ்சுட்டேன்… வசீகரன் நான் கிளம்பனும் இப்பவாவது என்னை உங்க மனைவிக்கு அறிமுக படுத்தினால் கொஞ்சம் நல்லா இருக்கும்”கிண்டலாக சொன்னாள் அவள்.
“மிதுலா… இவங்க நிவேதா… என்கூட ஸ்கூல் ஒண்ணா படிச்சவங்க… இப்ப பெரிய டாக்டர்… போதுமா நிவி”
“ஹ்ம்ம் இப்போதைக்கு இதுபோதும்… சரிப்பா லேட் ஆகிடுச்சு… நான் கிளம்புறேன்… அடுத்த வாரத்தில் ஒரு நாள் உங்க ரெண்டு பேருக்கும் என் சார்பில் பார்ட்டி… அவசியம் ரெண்டு பேரும் கலந்துக்கணும்… நோ எஸ்கேப்… ஓகே வா”
“அதெல்லாம் பிறகு பார்க்கலாம் நிவி, என்ன மிதுலா வீட்டிற்கு விருந்தாளி வந்து இருக்கிறார்கள் சாப்பிட ஏதும் கொண்டு வந்து கொடுக்க மாட்டாயா… ஹ்ம்ம் வேண்டாம் நீ இரு நானே என் கையால் பாதாம் பால் எடுத்து வருகிறேன். நீ நிவியுடன் பேசிக் கொண்டிரு…”
‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் வசீகரன்… எனக்கு ரொம்ப டையர்ட் ஆஹ் இருக்கு. நான் வீட்டிற்கு கிளம்புறேன். நம்ம வீடு தானே இன்னொரு நாள் வந்து சாப்பிட்டு கொண்டால் போயிற்று… நான் வரட்டுமா”
“இரு நிவி தனியாக. எப்படி போவாய்?உன்னை நான் வீட்டில் விட்டுவிடவா”
வசீகரன் பேச பேச மிதுலாவிற்கு காதில் புகை வரும் போல இருந்தது. ‘வார்த்தைக்கு வார்த்தை நிவி… நிவி என்று குழைவதை பார்! கல்யாணம் ஆகி முழுதாக இரண்டு நாள் ஆயிற்று என் பெயரை இப்படி ஒரு முறையாவது சுருக்கி கூப்பிட்டு இருப்பாரா இந்த புருஷர்ர்ர்ர்.
அது மட்டுமா பாதாம் பால் அவரே எடுத்து வருவாராம்… இரண்டு நாளாக என்னை அந்த விரட்டு விரட்டி விட்டு இவளுக்கு மட்டும் ராஜஉபச்சாரமா!‘மனதுக்குள் கருவிக் கொண்டே வசீகரனை உறுத்து விழித்தாள் மிதுலா.
“அதெல்லாம் வேண்டாம் வசீகரன்… என் காரில் தான் வந்திருக்கிறேன்… நான் போய்க் கொள்வேன்… பாருங்க நீங்க இந்த நேரத்தில் வெளியே கிளம்புவதாக சொன்னதும் உங்க ஸ்வீட் ஹார்ட் முகமே மாறி விட்டது… பை… குட் நைட்…”
“தனியாக போக வேண்டாம் நிவி… இரு நான் வருகிறேன்…”
“கீழே தோட்டத்தில் சக்தியை பார்த்தேன் பா. நான் வேணும்னா அவரை கூட கூட்டிக் கொண்டு போகிறேன் போதுமா… எப்பா… உன் மனைவி என்னை கண்ணாலேயே பொசுக்கி விடுவாங்க போல நான் கிளம்புறேன்… பை”
“சரி பார்த்து போ நிவி… என்று கூறிவிட்டு நிவேதா கீழே இறங்கும் வரை பார்த்துக் கொண்டு இருந்தவன் அதற்குமேல் அங்கு ஒரு நொடி கூட நில்லாமல் வேகவேகமாக அறைக்குள் சென்று கட்டிலில் கண் மூடி அமர்ந்து விட்டான்.
கணவனை பற்றிய பெருமிதத்துடன் எண்ணியவாறே வசீகரனின் அருகில் சென்று பாலை நீட்டினாள் மிதுலா.”இந்தாங்க பால் “நீட்டிய வேகத்திலேயே பால் டம்ளரை தட்டி விட்டு விட்டு ருத்ர மூர்த்தியாக ஆங்காரத்துடன் எழுந்து நின்று மிதுலாவின் கழுத்தை பிடித்து நெறித்தான் வசீகரன்.
திடீரென்று வசீகரனிடம் இருந்து இப்படி ஒரு செயலை எதிர்பார்க்காததால் மிதுலா நிலை தடுமாறி கட்டிலில் விழுந்தாள்.
“பார்த்தாயா… இது தான் நான்… இப்பேர்ப்பட்ட எனக்கு நீயும் உன் குடும்பமும் சேர்ந்து என்ன வேலை செய்து வைத்து இருக்கீங்கன்னு புரியுதா… அடுத்த வீட்டு பெண்களை எத்தனை மதிப்பவன் நான் என்று தெரிகிறதா… உனக்கு என்னடி நான் கெடுதல் செய்து விட்டேன்… எதற்காக எனக்கு இந்த அவப்பெயரை நீயும் உன் குடும்பமும் ஏற்படுத்தினீங்க?… என்று பேசிக் கொண்டே அவள் கழுத்தை மேலும் நெறித்தான்.
மிதுலா கண்கள் சொருக மூச்சுக்காற்றுக்கு ஏங்கி அரை மயக்க நிலைக்கு செல்ல ஆரம்பித்தாள்.
“சை! ராட்சஸி… உன்னால் தானே எல்லாம் செத்து தொலை என்று அவன் பாட்டிற்கு வெறி கொண்டவன் போல கழுத்தை நெறித்துக் கொண்டே இருந்தவன், மிதுலாவின் கண்கள் சொருகுவதை அப்பொழுது தான் கவனித்தான் சுயநினைவுக்கு வந்தவன் சடாரென்று கையை அவள் கழுத்திலிருந்து எடுத்து அவளை கட்டிலில் தள்ளி விட்டான்.
கட்டிலில் கிடந்தவளை திரும்பியும் பாராது அறையை விட்டு வெளியேறி விட்டான். சற்று நேரம் அசைவே இல்லாமல் படுத்துக் கிடந்த மிதுலா மெதுவாக சுய உணர்வை அடைந்தாள்.
வசீகரனின் வலியின் அளவை முதன்முதலாக உணர்ந்தாள் மிதுலா. திருடாதவனுக்கு திருட்டுப்பட்டம் கட்டினால் அவன் என்ன செய்வான்… ஆனால் இதில் என் பங்கு என்று எதுவும் இல்லையே… அன்று நடந்த அனைத்துமே யாரும் திட்டமிட்டு செய்த செயல் அல்லவே…
வசீகரனின் மனநிலையை முழுதாக உணர முயன்றாள் மிதுலா. வசீகரனின் மனநிலை. கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு புரியத் தொடங்கியது. அவனது கோபம் அவசியமற்றது என்று மிதுலாவால் நினைக்க முடியவில்லை.
என்ன செய்து தான் கணவனின் அன்பை பெறுவது! எப்படி என் உள்ளத்தை நான் அவருக்கு உணர்த்துவது! ஒன்றும் புரியாமல் அப்படியே கட்டிலில் முழங்கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்து விட்டாள் மிதுலா.
Facebook Comments Box
What’s your Reaction?
+1
2
+1
+1
+1
+1
+1
+1