NUNN Tamil Novels 28

0
6446

 

முன்னிலும் அதிகப் பயத்துடன் வசீகரனை பார்க்க, அவனோ அவளைக் கண்டு கொள்ளாது அவள் கைகளில் இருந்த கோட்டை வாங்கி மீண்டும் அணிந்து கொண்டு அதே இடத்தில் அமர்ந்து விட்டான்.

“மன்னித்துக்கொள்ளுங்கள் வசீகரன்… மூர்த்தி எப்பவும் இப்படித்தான் என்று இங்கே உள்ள எல்லாருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், இன்று இப்படி உங்களுக்கான பிரத்யேகமான விருந்தில் இப்படி நடந்து கொள்வார் என்று நாங்கள் யாருமே நினைக்கவில்லை”

“மன்னிப்பு எல்லாம் தேவையற்றது சுந்தர்… மேலும் அவர் பேசியதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?” அவரிடம் பேசிக் கொண்டே சட்டையை முழங்கைக்குக் கீழே இறக்கிவிட்டுக் கோட்டை சரி செய்து கொண்டான்.

“இருந்தாலும்…”

“பார்ட்டியை ஆரம்பிக்கலாமா ஃபிரண்ட்ஸ்…” வசீகரன் லேசாகப் பேச்சை மாற்றினான்.

“ஓ… எஸ்” என்று கோரசாக பதில் வந்தது.

அதன்பிறகு அங்கே இயல்பான கேலியும் கிண்டலும் மட்டுமே இருந்தது. மெலிதான இசையில் வசீகரனையும் மிதுலாவையும் ஆட சொன்னார்கள். ஆட மறுத்த மிதுலாவை கை பிடித்துத் தூக்கி நிறுத்தி அவள் இடையில் கை கொடுத்து மெதுவாக இசைக்கு ஏற்றவாறு ஆட ஆரம்பித்தான்.



ஆடத் தெரியாமல் மிதுலா தடுமாறிய பொழுதுகளில் அவளின் தடுமாற்றத்தை வெளியே தெரியாதவாறு அழகாகச் சமாளித்தான். தொடக்கத்தில் ஆட பயந்து உடலை விறைப்பாக வைத்து இருந்த மிதுலா கூட நேரம் ஆக ஆக வசீகரனின் கண் பார்வைக்கு ஏற்றவாறு அவனோடு இணைந்து நடனம் ஆட ஆரம்பித்தாள். ‘தாளம் தப்பாமல் ஆடுவது தான் தானா?’ என்று மிதுலாவே வியக்கும் வண்ணம் அவர்களின் நடனம் இருந்தது.
அதே ஆச்சரியத்தோடு நிமிர்ந்து வசீகரனை பார்க்க அவனும் பார்வையை அவளது முகத்தை விட்டு எங்கும் திருப்பினானில்லை. பார்வைகள் ஒன்றோடு ஒன்று சங்கமிக்க அவர்கள் இருவரும் தனி உலகில் சஞ்சரித்தனர். மிதுலாவால் தன் பார்வையை வேறு எங்கும் திருப்ப முடியவில்லை.
இரும்பை கவர்ந்திழுக்கும் காந்தம் போல வசீகரனின் பார்வை அவளைக் காந்தமாய் இழுத்தது. ஒரு வழியாக அவர்களின் நடனம் முடிவுக்கு வரும் போது, அடுத்த ஏற்பாடாக எல்லாருக்கும் கிளாசில் விஸ்கி போன்ற வகையறாக்கள் எடுத்து வரப் பட்டன.

‘அய்யயோ… இது வேறு உண்டா? இன்று இவர் குடிக்காமல் இருந்தால் நன்றாக இருக்குமே…’ என்று எண்ணி கலக்கத்தோடு வசீகரனை ஒரு பார்வை பார்த்தாள்.

அவளது பார்வையில் ஒரு நிமிடம் முகம் கடுத்தவன், அவளின் காதருகில் இயல்பாகப் பேசுவது போல் குனிந்து, “நான் ஒன்றும் குடிகாரன் இல்லை. மொடாகுடிகாரனை பார்ப்பது போல் என்னைப் பார்த்து வைக்காதே… புரிந்ததா?” சீற்றத்தோடு கூறிவிட்டு நிமிரும் போது முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டான்.

“என்ன வசீகரன் பார்ட்டியே உங்களுக்காகத் தான்… நீங்கள் இப்படிக் கிளாஸை ஒதுக்கலாமா?”

“என் மனைவிக்கு இதெல்லாம் பிடிக்காது… அதனால் தான் வேறு ஒன்றுமில்லை. நீங்கள் எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க” மேலும் இரண்டு முறை வற்புறுத்தி பார்த்துவிட்டு வசீகரன் மசியாததால் பிறகு விட்டு விட்டனர்.

“எனக்காகவா?” இமை சிமிட்டாமல் மெதுவாக விசாரித்தாள் மிதுலா.

“உனக்காக என்று யார் சொன்னது? பார்ட்டி முடிய வெகுநேரம் ஆகும்… அதுவரை தெளிவாக இருக்க வேண்டாமா? அதற்குத் தான்… மற்றபடி உனக்காக எல்லாம் ஒன்றும் இல்லை”

அசட்டையாகச் சொல்வது போல் சொன்னாலும் அவனது இதழோர கள்ள சிரிப்பு அவனைக் காட்டிக் கொடுத்து விட்டது.

“ஹே! எனக்காகத் தான் இல்லையா?” சந்தோஷத்தில் முகம் எங்கும் பூரிக்கக் கேட்டாள் மிதுலா.

இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் ஆவலில் ஏதேதோ பேசினர். ஒருவழியாகத் தள்ளாடிய படியே வந்த மற்றவர்களை வழி அனுப்பி வைத்து விட்டு மிதுலாவும் வசீகரனும் மட்டும் அந்த ஹாலில் தனித்து அமர்ந்தனர். அதுவரை இல்லாத தடுமாற்றம் இப்பொழுது வந்தது மிதுலாவிற்கு.



வசீகரனின் இன்றைய பார்வையும் அது உணர்த்திய செய்தியும் அவளைச் சிறகில்லாமல் பறக்க வைத்தது. வசீகரனுடன் தனித்து இருந்த நொடிகளை ஆழ்ந்து அனுபவிக்க எண்ணினாள். எதிரெதிரில் அமர்ந்து இருந்தாலும் வசீகரனை நிமிர்ந்து பார்க்க தயங்கினாள். அவளின் கன்ன சிவப்பில் தன்னைத் தொலைத்துக் கொண்டு இருந்தான் வசீகரன்.

எழுந்து மெதுவாக அவளருகில் நெருங்கி நின்று, “காரில் வரும் போது என்னிடம் என்னவோ கேட்டாயே… அதை இப்பொழுது கேள்” கிசுகிசுப்பாக வெளி வந்தது வசீகரனின் குரல்.

‘காரில் வரும் போது என்ன கேட்டேன்? ஒன்னும் ஞாபகத்திற்கு வரவில்லையே… எப்படி வரும்? இவர் கொஞ்சம் தள்ளி நின்னா வேணும்னா மூளை கொஞ்சம் ஒர்க் ஆகும். இவ்வளவு பக்கத்தில் நின்று கேட்டால்…’

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வசீகரனின் முகம் பார்க்காமல் பேசினாள்.
“நீங்க கொஞ்சம் தள்ளி நில்லுங்க”

“ஏன்?”

“எனக்கு வசதியா இல்ல”

“பட், எனக்கு இது தான் வசதியா இருக்கு” என்று பேசிக்கொண்டே மேலும் ஒரு அடி முன்னேறினான்.

“எனக்கு ஞாபகம் இல்லை… என்ன சொன்னேன்னு” தவிப்புடன் பின் வாங்கினாள்.

“நான் சொல்லட்டுமா?” காதோரத்தில் மீசை முடி உராயக் கேட்டான்.

“ம்…” மெல்லியதொரு முணுமுணுப்பு மட்டுமே பதிலாய் வந்தது.

“இந்த ஜிமிக்கி எப்படி இருக்குனு கேட்டியே!… சொல்லட்டுமா?” ஒற்றை விரலால் ஜிமிக்கியை லேசாக ஒரு சுண்டு சுண்டினான்.

அவனின் சிறு தீண்டலில் உச்சி முதல் பாதம் வரை சிலிர்த்துப்போய் நின்றாள் மிதுலா.



அவளின் மௌனத்தையே சம்மதமாக எடுத்துக் கொண்டு இன்னும் முன்னேறி அவளை உராய்வது போல் நின்றான். மிதுலா இது தான் பூலோகமா என்பது போல் ஒரு பார்வையைப் பார்க்க, அவளின் முகவாயை லேசாக ஆள் காட்டி விரலால் நிமிர்த்தி அவள் கண்ணோடு அவன் பார்வையைக் கலக்கவிட்டவாறு பேசினான்.

“இந்த ஜிமிக்கியை விட அதைத் தாங்கிக்கொண்டிருக்கும் இந்தக் காதுகள் அழகா இருக்கு…” பேசிக் கொண்டே காதுகளை நுனி விரலால் தீண்டினான்.

“நீ போட்டு இருக்கியே நெக்லஸ்… அதை விட உன் கழுத்து அழகா இருக்கு…” அவள் கழுத்தில் வாசம் பிடித்தான்.

வசீகரனின் வார்த்தையிலும் செயலிலும் ஒவ்வொரு நிமிடமும் அனலில் பட்ட மெழுகாகக் கரைந்து கொண்டு இருந்தாள் மிதுலா.

“அப்புறம் இந்தப் புடவை… இது தான் பிடிச்சு இருக்கா இல்லையானு சரியாய் தெரியலை. இந்தப் புடவை உனக்கு அழகாத்தான் இருக்கு… ஆனா, இத்தனை நாள் என்கிட்ட இருந்து நீ மறைச்சு வச்சதை எல்லாம் காட்டி கொடுத்துடுச்சு… அதனால இது பிடிச்சிருக்கு. அதே நேரம் அது என் கண்ணைத் தடுக்குது… என்னால அதைத் தாண்டி பார்க்க…”

மேற்கொண்டு என்ன பேசி இருப்பானோ வசீகரன்… பேச பேச இன்ப அவஸ்தையில் கிளர்ந்த மிதுலா மேற்கொண்டு அவன் பேசும் முன் தன் தளிர் கரங்களால் அவன் வாயை மூடினாள்.
“ப்ளீஸ்… போதும்… நிறுத்துங்க”

“ஏன் நீ தானே கேட்டாய்… இன்னும் சொல்கிறேன் கேள்”

“ஐயோ… வே… வேண்டாம்”

“நீதானே கேட்டாய்… இன்று நான் சொல்லித்தான் தீருவேன்” குழந்தையெனப் பிடிவாதம் பிடித்தான் வசீகரன்.

“ஐயோ… ப்ளீஸ்… வேண்டாம்”

“ஏன்?” பார்வையைக் கூர்மையாக்கி கேட்டான் வசீகரன்.

வெட்கம் தாளாமல் கண்கள் கலங்க நிமிர்ந்து அவனைப் பார்த்து, “என்னால் முடியவில்லை”

“அது தான்… ஏன் என்று கேட்கிறேன்…” அவளின் கண்கள் கலங்கவும் அவளுக்குப் பிடிக்கவில்லையோ என்று அவனுக்குக் கோபம் துளிர் விடத் தொடங்கியது.

“இ… இங்… இங்கே… யாரும்…” அதற்கு மேல் சொல்ல முடியாமல் தலையைத் திருப்பிச் சுற்றிலும் பார்வையை ஓட விட்டாள்.

அவளின் பார்வையையும், வார்த்தையின் பொருளையும் உணர்ந்து கடகடவெனச் சிரிக்க ஆரம்பித்தான் வசீகரன். சுற்றிலும் பயத்தோடு பார்வையை ஓட்டிக் கொண்டு இருந்தவள், வசீகரனின் சிரிப்பொலியில் திரும்பி வசீகரனை பார்த்தாள். தன்னைக் கேலி செய்து சிரிக்கிறாரோ என்ற யோசனையுடன் வசீகரனின் முகம் பார்க்க வசீகரன் மேலும் சிரிக்கத் தொடங்கினான்.

“அப்போ யாரும் வரலைன்னா… உனக்கு ஓகே வா?” கண்கள் சிரிக்கக் கேட்டான்.

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திருதிருவென முழித்தாள் மிதுலா. பக்கத்தில் இருந்த மிதுலாவை கை கொடுத்து எழுப்பி விட்டான் வசீகரன்.

“இந்த ஹால் இன்று இரவு முழுக்க நமக்காகத் தான் புக் ஆகி இருக்கிறது. நிவியின் பார்ட்டி ஆரம்பமாக இன்னும் ஒரு அரை மணி நேரம் இருக்கிறது. அதுவரை சும்மா இருப்பானேன்… வா”

எதற்குக் கூப்பிடுகிறான் என்று தெரியாமல் நீட்டிய அவன் கையைப் பற்றியபடியே எழுந்து நின்றாள் மிதுலா. பின்னணியில் ஓடிக் கொண்டு இருந்த மேற்கத்திய இசையை நிறுத்தி விட்டு இளையராஜாவின் இன்னிசை பாடல்களைத் தேர்வு செய்து ஒலிக்கச் செய்தான். அந்த ஹாலை இளையராஜாவின் இசை ஆக்கிரமித்தது. இன்ஸ்ட்ருமென்டல் மியூசிக்காக இன்னிசை கருவிகளின் ஒலி மட்டும் பாடலாக வெளி வந்து கொண்டு இருந்தது.
“சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல சேதி”

வார்த்தைகளுக்கு வேலையின்றி அந்த இடமே இசையால் கட்டுண்டு இருக்க, “வா…” என்று ஒற்றைச் சொல்லில் கை நீட்டி அழைத்தான் மிதுலாவை.

“எனக்கு ஆடத் தெரியாதே!”

“இத்தனை நேரம் உனக்குத் தெரிந்து தான் ஆடினாயா? ம்ம்ம்ம்… அத்தனை பேர் முன்னிலையில் ஆட முடிந்தது… தனியே என்னோடு ஆட மாட்டாயா?” பேசிக் கொண்டே ஒற்றைக் கையால் அவளை இழுத்து தன்னருகே நிறுத்திக் கொண்டு ஆடத் தொடங்கினான்.

இடையில் ஒரு கையைக் கொடுத்து தன்னருகே மிதுலாவை இழுத்துக் கொண்டு ஆட தொடங்கினான். அத்தனை பேர் முன்னிலையில் வராத வெட்கம் தனித்து ஆடும் போது வந்து மிதுலாவை ஆட்டுவித்தது.

குனிந்த தலை நிமிராமல் ஆடிக் கொண்டு இருந்தவளின் நெற்றியில் லேசாக ஒரு முட்டு முட்டி ‘என்ன‘ என்று கண்களாலேயே விசாரித்தான். ‘ஒன்றுமில்லை’ எனத் தலையை இடமும் புறமும் ஆட்டிவிட்டு மீண்டும் குனிந்து கொண்டாள் மிதுலா.

ஒற்றை விரலால் அவள் நாசியைப் பிடித்துத் தூக்கி தன் பார்வையோடு அவள் பார்வையைக் கலக்க துடித்தான் வசீகரன். அவளது கைகளை எடுத்து தன் தோளின் மீது போட்டுக் கொண்டு தொடர்ந்து அவளை ஆட வைத்தான்.

தோள்களை விட்டு இறங்க துடித்த மிதுலாவின் கைகளை மீண்டும் மீண்டும் தோளின் மீது எடுத்து வைத்து ஆடினான். யாரேனும் வந்து விடுவார்களோ என்ற பயத்தில் சுற்றும் முற்றும் பார்த்து தயங்கி தயங்கி ஆடிக் கொண்டிருந்தாள். அவளின் பயம் புரிந்து, “இப்போதைக்கு நம்மிடையே யாரும் குறுக்கே வர மாட்டார்கள்… நீ இன்னும் கொஞ்சம் பக்கத்தில் வா” கிறக்கமாகப் பேசினான்.
‘இதற்கு மேல் எப்படிக் கிட்டே வருவது’ என்று மிதுலா யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அவளை இழுத்து அணைத்தான் வசீகரன். கரங்களால் தன்னவளின் மென்மையைச் சோதித்து மிதுலாவின் பெண்மையை உயிர் கொள்ள வைத்தான். மிதுலாவின் நெற்றி வசீகரனின் மார்பில் புதைந்து இருக்கக் கணவனிடம் முதல் அணைப்பில் கட்டுண்டு இருந்தாள் மிதுலா.



ஒரு அளவிற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் வசீகரனின் கரங்கள் அத்துமீற, அவனின் அத்துமீறல்களுக்கு அனுமதி அளிக்க முடியாமல் மிதுலாவின் பெண்மை தடுமாறி வசீகரனின் கரங்களைச் சிறைபிடிக்க முயன்றாள்.

காற்றுக்கு அணை போடுவது போல அவள் தடுக்கத்தடுக்க… வசீகரனின் வேகம் அதிகரிக்க… பொறுக்க மாட்டாமல் அவள் முகத்தை நிமிர்த்தி இதழோடு இதழ் பொருத்தி முதல் முத்திரையை அழுத்தமாகப் பதித்தான்.

அவளை உணரும் வேகத்தில் வசீகரனின் உணர்வுகள் கொந்தளிக்க, தான் இருக்கும் இடமும் நிலையும் நினைவுக்கு வர, வசீகரனுடன் முழுதாக ஒன்றவும் முடியாமல் அவனைத் தடுக்கவும் முடியாமல் தவித்துப் போனாள் மிதுலா.

விலக எத்தனித்தவளை விட மறுத்து வசீகரன் ஒரு மௌன போரை நடத்திக் கொண்டு இருந்தான். மிதுலாவின் மென்மையில் தன்னைத் தொலைத்து அவளைக் கண்டு கொள்ள அவன் துடிக்க, மிதுலா மறுக்க அங்கே ஒரு அழகான காதல் போர் நடந்து கொண்டு இருந்தது.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here