வசீகரன் உறைந்து போய் அமர்ந்து இருந்தது ஒரு சில நொடிகளே. பின்னர் விறுவிறுவெனக் கீழே இறங்கி வந்தான். கேள்வியாக எதிர்கொண்ட சக்தியிடம், “அவளோட அம்மா வீட்டுக்கு தான் போய் இருக்கிறாளாம். பெரியம்மாவிடம் சொல்லிவிடு சக்தி. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீ இன்னிக்கு ஆஃபீஸ் போய் அங்கே இருக்கிற வேலை எல்லாம் பார்த்துக் கொள்” வார்த்தைகள் சலனமின்றி வெளிவந்தது.
“அம்மா வீட்டுக்கா? ஏன் நம்மிடம் சொல்லி இருந்தால் நாமே கூட்டிக்கொண்டு போய் விட்டு இருப்போமே! விடியற்காலையில் இப்படி யாரிடமும் தெரியாமல் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்புவானேன்?”
“நீ போன விஷயம் என்ன ஆயிற்று? காண்ட்ராக்ட் நமக்குத் தானே”
“டேய்… அதெல்லாம் பேசி முடிச்சுட்டேன். இன்னிக்கு விடியற்காலை தான் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். உனக்கும் மிதுலாவுக்கும் என்ன சண்டை? நீ எதுவும் திட்டினாயா அவளை? இதற்காகத் தான் ஊருக்குக்கூட நீ போகாமல் என்னை அனுப்பினாயா… கேட்கிறேன் இல்ல… சொல்லுடா”
எதற்காகத் தனக்குப் பதிலாக சக்தியை அனுப்பினோம் என்று ஒரு நிமிடம் சிந்தித்தவன் முகம் கல்லென இறுக, “இன்றைக்கு உன்னால் ஆஃபீஸ் போய் அங்கே இருக்கும் வேலைகளைப் பார்த்துக் கொள்ள முடியுமா முடியாதா?”
“ஏன்டா தங்கச்சியைப் போய்க் கூட்டிக் கொண்டு வர போகிறாயா?”
“நான் எதற்கு அவளைக் கூட்டிக் கொண்டு வர வேண்டும்?”
“என்னடா… இப்படிப் பேசுற”
“நான் அவளை அனுப்பவில்லை. அவளாக வந்தால் வரட்டும். நான் போய் எல்லாம் அவளைக் கூப்பிட மாட்டேன். நான் மட்டும் இல்லை, இங்கிருந்து வேறு யாரும் போய்க் கூப்பிட கூடாது. என் பேச்சை மீறி யாரேனும் போய் அவளை அழைத்துக்கொண்டு வந்தால், நான் என்ன செய்வேன் என்று தெரியாது. பெரியம்மாவிடமும் சொல்லிவிடு”
“கரெக்ட் அண்ணா… இப்ப தான் கரெக்ட்டா பேசுற”
“வர்ஷினி! நீ இதில் எல்லாம் தலையிடாதே உனக்கு ஒன்றும் தெரியாது” என்றான் சக்தி.
“சக்தி… நான் சொன்னால் சொன்னதுதான். யாரும் அவளைத் தேடி போகக்கூடாது… அவ்வளவு தான். நீ உன்னால் முடிந்தால் இன்று ஆஃபீஸ்க்கு போ. இல்லையென்றால் விட்டு விடு. சும்மா பேசி தொணதொணக்காதே” பேச்சு முடிந்தது என்பது போல் அங்கிருந்து சென்று மாடியில் தனது அறைக்குச் சென்று விட்டான் வசீகரன்.
சக்தியின் மீது ஒரு வெற்றி பார்வையைச் செலுத்தி விட்டு, “இனி அந்த மிதுலாவின் தொல்லை இருக்காது. என் அண்ணனின் வாழ்வில் இனி சந்தோஷம் மட்டுமே இருக்கப் போகிறது. பாருங்கள்!” மகிழ்ச்சி பொங்க கூறினாள் வர்ஷினி.
“இல்லை வர்ஷினி! உன் கணிப்புத் தவறு. உங்க அண்ணன் நடவடிக்கையைப் பார்த்தால் உனக்குத் தெரியவில்லையா?”
“என்ன சொல்றீங்க?”
“உங்க அண்ணனுக்கு மிதுலா வீட்டை விட்டுப் போனதில் சந்தோஷம் என்றால் அவன் பாட்டிற்குக் கிளம்பி ஆஃபீஸ்க்கு போய் இருப்பான். ஏன் இன்று போகாமல் தனிமையை நாடி போகிறான்? உனக்கு அவனைப் பத்தி நல்லா தெரியுமே வர்ஷினி… நல்லா யோசி!”
“எங்க அண்ணனை குழப்பியது போதாதா… என்னையும் குழப்ப ஏன் முயற்சி செய்றீங்க?”
“இதில் குழப்புவதற்கு என்ன இருக்கிறது வர்ஷினி? உன் அண்ணனுக்கு மிதுலாவை பிடிக்காத பட்சத்தில் அவள் வீட்டை விட்டு வெளியேறியதை உன் அண்ணன் கொண்டாடி அல்லவா இருக்க வேண்டும்? மாறாக ஒன்றுமே பேசாமல் தனியே போய் ஏன் முடங்கிக் கிடக்க வேண்டும்?”
“…”
“இன்னும் உனக்கு நம்பிக்கை இல்லையென்றால் நேரே உன் அண்ணனிடம் போ… ‘மிதுலா வீட்டை விட்டு போனதை கொண்டாட வேண்டும்… வா இன்று ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிடலாம்’ என்று சொல்லி பாரேன். அவனுடைய பதிலில் அவனுடைய மனநிலை உனக்கு புரிந்து விடும். ”
சக்தி பேசி முடித்தவுடன் ஒரு நொடி தாமதித்தவள் பின்னே விறுவிறுவென்று மாடிக்கு சென்றாள். அரை மணிக்கு மேல் முகம் இருண்டு போய்க் கீழே வந்தாள் வர்ஷினி.
“என்ன ஆச்சு வர்ஷினி?” நிதானமாகக் கேட்டான் சக்தி.
“அண்ணன் என்னை அடிக்கக் கை ஓங்கிடுச்சு” வருத்தத்துடன் நலிந்து ஒலித்தது வர்ஷினியின் குரல்.
“உன்னை அடிச்சானா?” கோபமாகக் கேட்டான் சக்தி.
“இல்லை. கை ஓங்கி அடிக்க வந்துச்சு. அப்பறம் ‘என்னை வெளியே போ’னு சொல்லி திட்டி அனுப்பிடுச்சு”
“இப்பொழுதாவது உனக்கு ஏதாவது புரியுதா?”
“…”
“சரி, இனி இது தொடர்பாக இனி நீ எதுவும் பேசாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்”
அறைக்குள் இருந்த வசீகரனின் நிலைமையோ வேறு விதமாக இருந்தது.
‘எப்படி அவள் போகலாம்? அதுவும் என்னை விட்டு? ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் கொள்ளாமல் விடிந்த பிறகு வாட்ச்மேனை கூட ஏமாற்றிப் பொய் கூறி அனுப்பி வைத்து விட்டு போய் இருக்கிறாள். அதுவும் எங்கே? அவளது காதலன் அந்த வினோத் வீட்டிற்கு. அவனை நினைத்து தான் இப்பொழுதும் அவள் பிரிந்து போய் இருக்கிறாள்’
அப்பொழுது வசீகரன் இருந்த மனநிலையில் மிதுலா போனது வினோத்திற்காக என்று தான் எண்ண தொடங்கினான்.
அன்று ஹோட்டலில் தன் கைகளில் அவள் கரைந்து நின்ற பொழுதுகளோ தன் கண்ணோடு கண் நோக்க வெட்கி தயங்கி நின்ற பொழுதுகளோ நினைவுக்கு வராதது அவனது கெட்ட நேரம் தான்.
முழுதாக இரண்டு நாள் ஆயிற்று. வசீகரன் அறையை விட்டு வெளியே வந்த பாடில்லை. வசீகரனின் கோபத்தை அறிந்து வைத்திருந்ததால் மற்றவர் யாரும் அவனிடம் போய்ப் பேச முயற்சிக்கவில்லை. ஓரிரு முறை சாப்பிட வருமாறு அழைத்து விட்டுக் காவேரியும் சோர்ந்த முகத்தோடு தான் கீழிறங்கி வந்தார்.
மிதுலா அந்த வீட்டிற்கு வருவதற்கு முன் அந்த வீடு ஒன்றும் எப்பொழுதும் ஆரவாரமாக இருக்காது தான். ஆனால் இப்பொழுது அந்த வீட்டில் வேறு வகையான அமைதி நிலவியது.
ஒருவர் மற்றவருடன் பேச விரும்பாது அவரவர் நினைவுகளில் மூழ்கி இருந்தனர். சமைத்து வைத்த சாப்பாடு அப்படியே வீண் ஆனது. வசீகரன் சாப்பிடாததால் வர்ஷினி உணவு உண்ண மறுத்து விட்டாள். பிள்ளைகள் இருவரும் சாப்பிடாமல் காவேரியும் சாப்பிடவில்லை.
வீடே ஒரு விதமான அமைதியில் மூழ்கி இருந்த நேரம் சக்தி வந்தான். ஒரே பார்வையில் வீட்டை அளந்தவன், விறுவிறுவென மாடிக்குச் சென்றான். தாளிடப்படாத கதவு கை வைத்த மாத்திரத்தில் திறந்து கொள்ள உள்ளே நுழைந்தான் சக்தி. படுக்கையில் அமர்ந்தபடி பால்கனியில் இருந்த ஊஞ்சலை வெறித்துப் பார்த்த வண்ணம் அப்படியே அமர்ந்து இருந்தான் வசீகரன்.
இரண்டு நாட்களாக ஷேவ் செய்யாத தாடி அவன் முகத்தை இன்னும் மெலிந்தார் போலக் காட்டியது. சக்தி வந்து நிற்பதை கூடக் கவனிக்காமல் ஏதோ சிந்தனையில் இருந்தான் வசீகரன்.
“வசி”
“டேய்! கூப்பிடுவது காதில் விழுகிறதா இல்லையா?” என்று தோளில் வலுவாக ஒரு அடி அடித்தான் சக்தி. திரும்பி ஒரு வெறுமையான பார்வை பார்த்து விட்டு பார்வையை மீண்டும் ஊஞ்சலில் பதித்துவிட்டான் வசீகரன்.
“வசி… ஏன்டா… ஏன் இப்படி உன்னை நீயே வருத்தி கொள்கிறாய்?
என்ன தான் பிரச்சினை உனக்கு? ஏன் இப்படி இருக்கிறாய்?”
“வசி, உன்னிடம் தான் கேட்கிறேன்”
“டேய்… ஊமை கோட்டான்! கல்லுளி மங்கா! வாயை திறந்து பேசி தொலையேன்” கோபத்தில் அதட்டினான் சக்தி.
“மிதுலா வீட்டுக்குப் போகலாம். வர்றியா?”
“எதுக்கு?”
“இது என்ன கேள்வி… அவளைக் கூட்டிக் கொண்டு வரத்தான்”
“வேண்டாம்”
“ஏன்?”
“நானா அவளைப் போகச் சொன்னேன்… அவளாகவே திரும்பி வரட்டும்”
“வசி, ஏன்டா இப்படிப் படுத்துற? ரெண்டு நாளா வீடே வீடு மாதிரி இல்ல. நீ சாப்பிடாம அம்மாவும் சாப்பிடலை… வர்ஷினியும் சாப்பிடலை. ஏன்டா, இப்படி நீயும் கஷ்டப்பட்டு மற்றவர்களையும் கஷ்ட படுத்துற!”
“ஆமாண்டா… நான் தான் எல்லாரையும் கஷ்டபடுத்துகிறேன்… அவள் ஒன்றுமே செய்யவில்லை பார்”
“இதோ பார் வசி… தங்கச்சி செய்தது சரினு நானும் சொல்லலை. உங்கிட்ட சொல்லிட்டு தகுந்த துணையோட அவங்க அம்மா வீட்டிற்குப் போய் இருக்கலாம். அதற்காக அப்படியே விட்டு விடுவதும் முறையல்ல வசி. இரண்டு நாட்களாக ஒரு ஃபோன் செய்து கூட யாரும் தங்கச்சிகிட்ட பேசலை…
சரி, இங்காவது எல்லாரும் நிம்மதியாக இருக்கிறீங்களானு கேட்டா அதற்கும் பதில் இல்லை. சொன்னா கேளு வசி… போய்க் குளிச்சுட்டுக் கிளம்பு. சிஸ்டர் வீட்டுக்குப் போய் சிஸ்டரை கூட்டிக் கொண்டு வந்துடலாம். வா”
“டேய்… உனக்குச் சொன்னால் புரியாதா? உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ”
“வசி… இதற்கெல்லாம் நீ ஒரு நாள் கண்டிப்பாக வருத்த படப்போகிறாய். உன்னுடைய இந்தக் கோபம் கண்டிப்பாக ஒருநாள் உன்னைப் புதைகுழியில் இழுத்து விடத்தான் போகிறது” என்று கூறிவிட்டு பட்டென்று கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியேறினான் சக்தி.
சற்று நேரம் பொறுத்து மெதுவாக அறை கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார் காவேரி.
“தம்பி, கீழே மிதுலா அம்மா வந்து இருக்காங்க… கொஞ்சம் கீழே வா”
“பெண்ணுக்காக அவர் வக்காலத்து வாங்க வந்து இருப்பார். யாரிடமும் பேச எனக்கு விருப்பம் இல்லை. அவரைக் கிளம்பச் சொல்லுங்கள்” பேச மறுத்து முகத்தைத் திருப்பிக் கொண்டான் வசீகரன்.
“அவர் உன்னிடம் பேச வரவில்லை தம்பி”
“பின்னே?” வசீகரனின் பார்வை கூர்மையானது.
“மிதுலாவிடம் பேச வந்து இருக்கிறார்” காவேரியும் வசீகரனை கூர்மையாக அளவிட்டபடியே பேசினார்.
“என்னம்மா சொல்றீங்க?” லேசான குழப்பம் தெரிந்தது வசீகரனின் குரலில்.
“ரெண்டு நாளா மிதுலா ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்னு வருதாம்… அவங்களுக்கும் பார்க்கணும் போல் இருந்துச்சாம்… அதான் நேரே கிளம்பி வந்துட்டாங்க…”
“மிதுலா எங்கே வசி? எனக்கு நீ பதில் சொல்ல வேண்டாம். பெண்ணைப் பெற்றவங்க கீழே வந்து காத்திருக்கிறாங்க. அவங்களுக்கு வந்து பதில் சொல்” குழம்பிய மனநிலையில் இருந்த வசீகரனின் கையைப் பற்றித் தரதரவென இழுத்துக் கொண்டு போனார் காவேரி.
கீழே ஹாலில் தெய்வானை அமர்ந்து சக்தியுடன் பேசிக் கொண்டு இருக்க, வசீகரனை பார்த்ததும் எழுந்து நின்றாலும் அவர் கண்கள் வசீகரனின் முதுகுக்குப் பின் மிதுலாவை தேடி அலை பாய்ந்தது. அவளைக் காணாமல் ஒரு நிமிடம் முகம் சோர்ந்தாலும் மறுநொடியே முகத்தைச் சீர் செய்து கொண்டார்.
“தம்பி… மாப்பிள்ளை… வந்து… உங்களுக்கு நான் இங்கே வருவது பிடிக்காது என்று தெரியும். ஆனாலும் என்னால் மிதுலா கூட பேசாமல் இருக்க முடியவில்லை. இத்தனை நாட்கள் ஃபோனிலாவது பேசிக் கொண்டோம். இரண்டு நாட்களாக அவள் ஃபோன் வேறு ரிப்பேர் ஆகி விட்டது போல… என்னால் என் தங்கத்திடம் பேசாமல் இருக்க முடியவில்லை…
இதுநாள் வரை நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து இருந்ததே கிடையாது. அது தான் ஒரு எட்டு வந்து பார்த்து விட்டு போகலாமே என்று வந்தேன். ரொம்ப நேரம் இருக்க மாட்டேன் மாப்பிள்ளை!
இதோ திரட்டுப்பாலில் செய்த பால்கோவா அவளுக்கு ரொம்பவும் இஷ்டம்… நானே செய்தது. இதை அவள் கையில் கொடுத்து விட்டு கிளம்பி விடுகிறேன். மறுபடி இங்கே வந்து நிற்க மாட்டேன். அவளைக் கொஞ்சம் கூப்பிடுங்களேன்” கண்கள் கலங்க கெஞ்சுதலாகப் பேசி முடித்தார் தெய்வானை.
அவர் பேச பேச காவேரி ஒரு பக்கம் வாயில் துணியை வைத்து அழ ஆரம்பித்தார். சக்தியோ வசியை கூர்மையாகப் பார்க்க, வர்ஷினி, வசீகரனின் முகபாவத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
பதில் சொல்ல வேண்டியவனோ அதிர்ந்து சிலையென நின்றான்.
அப்பொழுது அவன் மனதில் தோன்றிய கேள்வி ஒன்றே ஒன்று தான்.
‘எங்கே என் மிதுலா?’
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
1
+1
Super very interesting next part EPO eagerly waiting
I m out of town ma… Seekiram ooruku vanthathum ud tharen