NUNN Tamil Novels 33

2
4522

“பெரியம்மா! இவங்களை யார் இங்கே வர சொன்னது?”

“மாப்பிள்ளை… நா… நானாகத் தான் வந்தேன்”

“இதோ பாருங்க பெரியம்மா… இவர்களோடு பேசுவது பிடிக்காமல் தானே மிதுலாவுக்கு வேறு ஒரு புது சிம் கார்டு வாங்கிக் கொடுத்து இருக்கிறேன். இவர்களோடு தொடர்பே இருக்கக் கூடாது என்று நான் நினைத்தால், இவர்கள் இப்படி இங்கேயே வந்து நின்றால் என்ன அர்த்தம்? கிளம்பச் சொல்லுங்கள்”

வசீகரன் பேச பேச, இது என்ன புதுக் கதை என்று தெய்வானையைத் தவிர மீதி இருந்த மூன்று பேரும் குழம்பத் தொடங்கினர்.

“மாப்பிள்ளை… ஒரே ஒரு முறை மிதுலாவை மட்டும் பார்த்து விட்டு போய் விடுகிறேனே” கெஞ்ச தொடங்கினார் தெய்வானை.

“என் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு என் மனைவி உங்களிடம் பேசாமல் உங்களை ஒதுக்கி வைத்து இருக்கிறாள். அப்படி அவளை நீங்கள் பார்ப்பதானால் இப்பொழுதே கையோடு அவளையும் உங்களோடு கூட்டி சென்று விடுங்கள். சம்மதமா?”

“வே… வேண்டாம் மாப்பிள்ளை… நான் போய் விடுகிறேன்… இதையாவது அவளிடம் கொடுத்து விடுங்கள்”

“என் பொண்டாட்டிக்கு எதைக் கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். அவள் விரும்பிக் கேட்டால் இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் வாங்கித் தர என்னால் முடியும். இவர்களைக் கிளம்பச் சொல்லுங்கள் பெரியம்மா! நான் மிதுலாவோடு சினிமாவிற்குச் செல்ல வேண்டும். மிதுலா கிளம்பி வெளியே வரும் போது இவர்களைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை”



“நான் கிளம்புகிறேன் மாப்பிள்ளை… இனி இப்படிக் கிளம்பி வர மாட்டேன்… எனக்குத் தேவை மிதுலாவின் மகிழ்ச்சி தான்” கண்கள் கலங்க தொண்டை கரகரக்க பேசி விட்டு வேறு யார் முகத்தையும் நிமிர்ந்து கூடப் பார்க்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

சமாதானப்படுத்த வேண்டிய காவேரியோ ஒன்றுமே புரியாமல் மௌனமாய்க் குழம்பி தவிக்க, வர்ஷினி மிதுலாவை பற்றி எதையாவது பேச போய் மீண்டும் வசீகரனின் கோபத்திற்கு ஆளாகி விடுவோமோ என்ற பயத்தினால் வாயை திறக்கவே இல்லை.

அனைவரும் அப்படியே தேங்கி நிற்க வசீகரன் சக்தியை நோக்கி திரும்பி ஒரு அழுத்த பார்வையை வீசினான். அந்தப் பார்வையின் பொருளை உணர்ந்த சக்தி வாசலை நெருங்கிக் கொண்டிருந்த தெய்வானையை நோக்கி ஓடினான்.

“அம்மா… அதை என்னிடம் கொடுங்கம்மா. இதை உங்க மாப்பிள்ளைக்குத் தெரியாமல் மிதுலாவிடம் சேர்ப்பது என் பொறுப்பு. ” தெய்வானையின் கையில் இருந்த ஸ்வீட் டிபன் பாக்ஸை கையில் வாங்கிக் கொண்டான். லேசாக முகம் மலர்ந்தது தெய்வானைக்கு.

“தப்பா எடுத்துக்காதீங்கம்மா… மிதுலாவை அவன் மனைவியா இப்ப தான் ஏத்துக்க ஆரம்பிச்சுருக்கான். உங்க மேலே உள்ள கோபம் படிப்படியா குறைஞ்சுடும். கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்கம்மா… ப்ளீஸ்!”

“சே! சே! என்ன தம்பி… என்னிடம் போய் ப்ளீஸ் எல்லாம் சொல்றீங்க? எனக்குத் தெரியாதா மாப்பிள்ளையைப் பற்றி? எனக்கு தேவை என் பெண்ணின் மகிழ்ச்சிதான்… அவளுக்காக இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருக்க மாட்டேனா?” என்றவர்,

“எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான்… இவ்வளவு தூரம் வந்தும் என் பெண்ணின் முகத்தைக் கூடப் பார்க்க முடியவில்லையே என்பது தான். ஆனால் பரவாயில்லை… அவள் மாப்பிள்ளையுடன் சந்தோஷமாகத்தான் வாழ்கிறாள் என்பது மாப்பிள்ளையின் பேச்சில் தெரிகிறதே! இன்னும் கொஞ்ச நாள் தானே… மாப்பிள்ளையின் மனமாற்றத்திற்காக நான் காத்திருப்பேன். கிளம்புகிறேன் தம்பி”



அவரை வழி அனுப்பி வைத்து விட்டு விடுவிடுவென வீட்டிற்குள் நுழைந்தான் சக்தி. அவனுடைய கேள்விகளுக்குப் பதில் வேண்டுமே.
வீட்டின் உள்ளே நுழைந்தவன், அங்கே நடந்த பேச்சு வார்த்தையில் என்ன செய்வது என்றே தெரியாமல் ஸ்தம்பித்து நின்றான்.

“என்னடா தம்பி? நீ எப்படி எல்லாமோ பேசுகிறாய்? எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. உண்மையைச் சொல்லிவிடு வசீகரா… எங்கே மிதுலா?”

தொப்பெனச் சோபாவில் விழுந்தவன், இரு கைகளாலும் தலையைத் தாங்கிக் கொண்டு பேசத் தொடங்கினான்.

“என்னை வேறு எப்படிப் பேச சொல்கிறீர்கள் பெரியம்மா? கண் முழுவதிலும் பாசத்தை நிரப்பிக்கொண்டு மகளைப் பார்க்கவென்று ஓடி வந்திருப்பவரிடம் என்னால் உண்மையைச் சொல்ல முடியவில்லையே. நான் சபிக்கப் பட்டவன் பெரியம்மா…

இறைவன் எனக்கு அன்பான உறவுகளைக் கொடுப்பான்… உடனே பிடுங்கியும் கொள்வான்… ராட்சஸன்! நான் ஒரு நாள் ஒரு பொழுது மகிழ்ச்சியாக இருந்தால் கூட அவனுக்குப் பொறுக்காது. முதலில் என்னைப் பெற்றவர்கள்… இப்பொழுது மிதுலா… ஐயோ!” என்று கதறி முகத்தில் அறைந்து கொண்டு அழுதவனைத் தேற்றும் வழி அங்கிருந்த ஒருவருக்கும் புரியவில்லை.

கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவன் எஃகென உறுதியான குரலில் பேச ஆரம்பித்தான்.

“பரவாயில்லை பெரியம்மா… மிதுலாவை காணவில்லை என்று சொல்வதால் ஏற்படும் வருத்தத்தை விட இப்பொழுது அவருக்கு ஏற்பட்டிருக்கும் வருத்தம் குறைவு தான்”

“இனி நொடிபொழுது கூட தாமதிப்பதற்கு இல்லை பெரியம்மா. உலகில் எந்த மூலையில் இருந்தாலும் சரி… என் மிதுலாவை மீட்டுவிடுவேன். சக்தி… மாடிக்கு வா” என்று கூறிவிட்டு மாடி படிகளை நோக்கி ஓடினான்.

மாடியில் வசீகரனின் அறைக்குள் உள்ளே நுழைந்ததுமே வசீகரனின் குரல் ஃபோனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தது. மறுபுறம் கேட்க்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறிக் கொண்டிருந்தான்.

“ரெண்டு நாள் ஆகுது”

“இல்லை… வீட்டை விட்டு அவளாகத் தான் போனாள்… ஒரு சின்ன மனஸ்தாபம்”

“அவள் போட்டோ உடனே உங்களுக்கு ஈ மெயில் பண்ணிடறேன்… அப்பறம் சார் ஒரு சின்ன ரெக்வஸ்ட்… இந்த விஷயம் வெளியில் யாருக்கும் தெரிய வேண்டாம்”

“ஆமா சார்… எனக்கு ஒரு ஆள் மேலே சந்தேகம் இருக்கு. இல்லை சார்… நானே போய் முதலில் விசாரிக்கிறேன். தேவைப்பட்டால் உங்கள் ஆட்களை அனுப்பி வையுங்கள்…”

“ஆமாம் சார்… நான் போய் முதலில் கிளம்பி விசாரிக்கிறேன். அதற்குள் வீட்டு வேலையாட்களை உங்கள் ஆட்களின் மூலம் விசாரித்து விடுங்கள். ஒருவேளை இதில் எனது தொழில் எதிரி யாரேனும் சதி வேலை இருக்கக் கூடும்”

“இல்லை சார்… ஒருவேளை பணத்திற்காக என்றால் இந்நேரம் எனக்குப் பணம் கேட்டு யாரேனும் ஃபோன் செய்து இருப்பார்கள். இதுவரை அப்படி எந்த ஃபோன் காலும் வரவில்லை. ”

“சரி சார்… நீங்கள் எல்லாக் கோணத்திலும் உங்கள் விசாரணையை நடத்துங்கள்” பேசிக் கொண்டே லேப் டாப்பை எடுத்து மிதுலாவின் போட்டோவை எடுத்து மெயில் அனுப்பலானான் வசீகரன்.



வசீகரனின் செய்கை அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இருந்தான் சக்தி.

போன் பேசி முடித்ததும், “சக்தி உடனே இன்றைக்கே அந்த கங்காதரனின் வீட்டிற்குப் போக வேண்டும். காரில் போனால் லேட் ஆகிவிடும். போய் ஃபிளைட்டில் டிக்கெட் புக் பண்ணு… நீ இங்கேயே இரு. போலீஸ் கமிஷனிரிடம் பேசி விட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே போலீஸ் வருவாங்க… அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் நீ பார்த்துக் கொள். நான் அதற்கு முன் பெரியம்மாவிடம் போய்க் கொஞ்சம் பேசிவிட்டு வருகிறேன்”

“நீ எதற்கு இப்பொழுது கங்காதரனின் வீட்டிற்கு போகிறாய்?” நிதானமாகக் கேட்டான் சக்தி.

“என்னடா… விளையாட இதுதான் நேரமா உனக்கு?”

“நான் ஒன்றும் விளையாடவில்லை… இதோ இப்பொழுது இவ்வளவு பதட்டப்படுகிறாயே? இரண்டு நாளாக என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? உன்னை நம்பி எல்லாம் என் தங்கையைத் தேடும் பொறுப்பை நான் தருவதாக இல்லை… நீ ஒன்றும் போகவேண்டாம்”

“டேய்! நான் அவள் புருஷன்டா…”

“அப்படி நீ நடந்து கொள்ளவில்லை வசி. உனக்கு என் தங்கையை விட உன் ஈகோ தான் முக்கியம். அவள் மீது அன்போ, அக்கறையோ இல்லாத உன்னை நம்பி எல்லாம் என்னால் இருக்க முடியாது. நான் மிதுலாவை தேடி போகிறேன். நீ இங்கேயே இரு”

“என் மனைவியைத் தேட நான் போய்த்தான் தீருவேன் சக்தி. என்னைத் தடுக்க யாராலும் முடியாது. உன்னாலும் தான்” இரும்பென வந்து விழுந்தன வார்த்தைகள்.

“உன்னை நம்பிக்கொண்டு என்னால் இங்கே சும்மா இருக்க முடியாது”
“சக்தி… என் பொறுமையோடு விளையாடாதே. எனக்கு இப்பொழுது நேரம் இல்லை. முடிவாக என்ன தான் சொல்ல வருகிறாய்?”

“நானும் உன்னோடு வருகிறேன்”

“நீ எதற்குச் சக்தி? நீ இங்கே இருந்து போலீஸ்க்கு உதவி செய்…”

“இதோ பார்… மிதுலாவின் கடிதத்தின் படி அவள் அந்த கங்காதரன் வீட்டிற்குத் தான் போயிருக்க வேண்டும். அதனால் முதலில் அங்கே போய் விசாரிப்போம். இங்கே போலீஸில் சொல்லியாச்சு இல்லையா… அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்…
என்னால் உன்னை நம்பி இங்கே வீட்டில் இருக்க முடியாது… உனக்கு ஈகோ வந்தால் போன வேலையை மறந்து அப்படியே திரும்பினால் கூட திரும்பி விடுவாய். உன்னை நம்புவதற்கு இல்லை. நானும் கூட வரத்தான் செய்வேன்”

வசீகரனுக்கு சக்தியிடம் பேச்சை வளர்க்க நேரமோ பொறுமையோ இல்லாததால், “வந்து தொலை…” என்று கூறிவிட்டு டிக்கெட் புக் செய்து விட்டு மேலும் வேறு சிலரிடம் ஃபோனில் பேசி ஏதேதோ உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டு இருந்தான்.

சக்தி ஒருபுறம் தனது ஃபோனை எடுத்து பேச ஆரம்பித்தான். வசீகரன் ஃபோனில் பேசி முடித்து விட்டு அருகில் வரவும், சக்தி ஃபோனை வைக்கவும் சரியாக இருந்தது.



“யாரிடம் பேசினாய்?”

“டிடெக்ட்டிவ் ஏஜென்சிக்கு தான். போலீசில் சொல்லிவிட்டால் கடமை முடிந்தது என்று நீ இருந்து விடுவாய்… என்னால் அப்படி இருக்க முடியுமா? அது தான்” வசீகரனை வார்த்தைகளில் முடிந்த அளவுக்கு காயப்படுத்தினான் சக்தி.

“பேசுடா… இன்னும் பேசு. புரியவேண்டிய அவளுக்கே என் நிலைமை புரியாத பொழுது உனக்கு எப்படிப் புரிய போகிறது? அவள் என் கையில் சிக்கட்டும் பிறகு இருக்கிறது அவளுக்கு.

ஆனால் யாருக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டு இருக்க எனக்கு நேரம் இல்லை. இப்பொழுது கிளம்பு. டிராவல்ஸ் கார் கீழே வந்துவிடும்… வா போகலாம்”

வசீகரனின் பேச்சில் மிதுலாவை கண்டுபிடித்தால் அவளை அடித்து நொறுக்க வேண்டும் என்பது போன்ற கோபம் இல்லை… எப்படியாவது அவளைக் கண்டு பிடித்து விடுவேன் என்ற எண்ணம் இருந்தது. மாடியை விட்டு கீழே இறங்கி வந்து வசீகரன் யாரிடமும் ஒரு வார்த்தை பேசாமல் காரில் போய் அமர்ந்து விட்டான்.

கவலையோடு பார்த்த காவேரிக்கு, பார்வையாலேயே ஆறுதல் சொல்லிவிட்டு தானும் போய்க் காரில் அமர்ந்து விட்டான் சக்தி. காரில் ஏறிய பின் சக்தியோ, வசீகரனோ ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. காரில் மட்டுமில்லாது விமானத்திலும் ஒருவகையான இறுக்கமான சூழ்நிலையே நிலவியது.

சக்தியின் பார்வை அவ்வப்பொழுது வசீகரனின் மேல் ஆராய்ச்சியாகப் படிந்து விலகியது. வசீகரன் அமைதியாகவே இருந்தான்.

ஃபிளைட்டை விட்டு இறங்கி பின் வெளியே வந்து காரில் ஏறியும் இந்த அமைதி தொடர்ந்தது.

கார் நேராக கங்காதரனின் வீட்டை அடைந்தது. தோட்டத்தில் அமர்ந்து இருந்த கங்காதரன் புதிதாகக் கார் ஒன்று உள்ளே நுழையவும், ‘யார் அது?’ என்று எண்ணியபடி எழுந்து நின்றார்.

காரில் இருந்து இறங்கிய வசீகரனை அவர் நிச்சயம் எதிர் பார்த்து இருக்கவில்லை என்பது அவரது அதிர்ச்சியான முகப் பாவனையில் இருந்து தெரிந்தது.

ஒரு நொடியில் தன்னைச் சமாளித்து, “வாங்க… வாங்க” என்று அன்பொழுக வரவேற்றார்.

Facebook Comments Box

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here