மூச்சு வாங்க ஆவேசமாகக் கேள்வி கேட்டவளை பார்த்து மென்மையாகப் புன்னகைத்தான். “சொல்லத்தானே போகிறேன் பேபி… அதற்குள் ஏன் இப்படிக் கோபப்டுகிறாய்?”
“கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்க… பிறகு இந்தக் கொஞ்சலை எல்லாம் வைத்துக் கொள்ளலாம்” கறாராகப் பேசினாள் மிதுலா.
“மிதுலா… ஒரு விஷயத்தை கொஞ்சம் யோசித்துப் பார். அன்று ஹோட்டலில் பிரச்சினை நடந்த அன்று எப்படி பெரியம்மா அத்தனை சீக்கிரம் அங்கே வந்து சேர்ந்தார்கள்? திருச்சியில் இருந்து ஹோட்டலுக்கு எப்படி பத்தே நிமிடத்தில் வந்து சேர்ந்திருக்க முடியும்?. ”
“ஆமாம் எப்படி வர முடியும்? இங்கே இருந்து வருவது என்றால் காரில் என்றால் கூட அது சாத்தியம் இல்லையே” மிதுலா கொஞ்சம் குழம்பித்தான் போனாள்.
“அன்று பெரியம்மாவோடு வந்து உன் வீட்டில் உன்னை பெண் கேட்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன் மிதுலா”
அதிர்ந்து போய் நின்ற மிதுலாவை பார்த்து, ‘ஆம்’ என்ற பாவனையில் தலையை அசைத்துவிட்டுப் பேசலானான்.
“என்னால் முன்புபோல உன்னை என்றாவது ஒருநாள் பார்த்தால் போதும் என்று இருக்க முடியவில்லை. உன்னை அடிக்கடி வந்து பார்க்கவும் என்னால் முடியவில்லை… எத்தனை முறை இல்லாத வேலையைக் காரணம் காட்டி கொண்டு வந்து உன்னைப் பார்ப்பது?
அதற்காகவே உங்கள் ஊரிலும் எனது தொழிலை விரிவுபடுத்தினேன்… இந்த முறை புதிதாக ஆரம்பித்து உள்ள இடத்தின் பூஜைக்கு வருமாறு பெரியம்மாவை அழைத்துச் சென்றிருந்தேன். பெரியம்மாவிற்கு என்னுடைய காதல் விவகாரம் எதுவும் தெரியாது. பூஜைக்காக வந்திருப்பதாக தான் கருதினார்கள்.
அன்று அந்த பார்ட்டி நடந்து முடிந்த பிறகு அவர்களிடம் சொல்லி உன்னைப் பெண் கேட்கலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால்… ஆனால் அதற்குப் பிறகுதான் எல்லாமே மாறி போய்விட்டதே” என்று பெருமூச்சோடு சொன்னவனின் குரலில் இருந்த வருத்தத்தை மிதுலாவால் உணர முடிந்தது.
“ஒரு நாள் எப்பொழுதும் போல உனக்கு தெரியாமல் கோவிலில் உன்னைப் பார்க்க நான் காத்திருந்தேன். இந்த முறை உன்னிடம் பேசி முதலில் உன்னிடம் என் காதலை சொல்லி விட வேண்டும் என்று கோயிலில் உன் எதிரில் நின்று நான் சாமி கும்பிட்டேன்… கண்விழித்த நீ எதிரில் இருந்த என்னைக் கொஞ்சம் கூடக் கண்டு கொள்ளவே இல்லை. அதில் எனக்கு ரொம்பக் கோபம் வந்துவிட்டது”
“இது என்ன அநியாயமாய் இருக்கிறது? எனக்கு நீங்கள் யார் என்றே தெரியாது. நீங்கள் சொன்ன சம்பவமும் எனக்கு நினைவிலேயே இல்லை”
“அதற்காக என்று இல்லை மிது. அதன் பிறகு அன்று உன்னைத் தொடர்ந்து வந்து உன்னிடம் எப்படியும் பேசவேண்டும் என்று நினைத்து பின்னாலேயே வந்தேன். அப்பொழுதுதான் இன்னொரு கார் உன்னை பின் தொடர்வதை உணர்ந்தேன். இருட்டி விட்டு இருந்ததால் காரில் யார் இருந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை… காரில் உள்ள விளக்குகள் எல்லாம் அணைத்து வேறு வைக்கபட்டு இருந்தது.
உன்னைத் தொடரும் அந்த நபர் யார் என்று தெரிந்து கொள்வதற்காக அந்தக் காரை ஃபாலோ செய்தேன். அந்தக் காரிலிருந்து இறங்கிய உருவம், யாரையோ வழிமறித்துப் பேசிக்கொண்டு இருந்தது.
‘மிதுலாதான் என் உயிர்… நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம்… நான் இல்லாவிட்டால் அவள் செத்துவிடுவாள்’ என்று யாரிடமோ சொல்லிக்கொண்டு இருந்தது என் காதில் விழுந்தது.
அதற்குமேல் அங்கே நின்று கேட்கப்பிடிக்காமல் அங்கிருந்து வந்து விட்டேன். அநேகமாக அன்று பேசியது வினோத்தும், சுஜியாகவும் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். உன்னையே நினைத்து இங்கே நான் ஒருவன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். ஆனால் நீ அந்த வினோத்தை காதலித்து விட்டாயே என்ற ஆத்திரம் கோபம் எல்லாம் சேர்ந்து தான்…”
“என் மீது காரை ஏத்த சொன்னதாக்கும்?”
“இல்லை மிது… நீயும் எங்கே அவனைக் காதலித்து விட்டாயோ என்ற ஒரு எண்ணம்… அவனுடைய பணத்தில் நீ மயங்கிவிட்டாயோ என்று ஆத்திரம் எனக்கு… எப்படியும் உன்னை யாருக்கும் விட்டு தர என்னால் முடியாது என்று எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு என்ன செய்வது என்று புரியாமல், நீ எப்படி வேறு ஒருவனை மனதில் நினைக்கலாம் என்ற கோபத்தில் உன்னைப் பயமுறுத்த எண்ணித்தான் அப்படிச் செய்தேன். ஆனால், கோபத்தில் என்னை அறியாமல் வார்த்தை வெளி வந்து விட்டது”
“ஏன் சார்? ஏன் இப்படி? நீங்கள் என்னைக் காதலித்ததே எனக்கு தெரியாது… நீங்கள் தெரியப்படுத்தவும் இல்லை. தவறை எல்லாம் உங்கள் மீது வைத்துக் கொண்டு என்னைப் பழிசொல்றீங்களா? ரொம்ப நல்லா இருக்கு… உங்க நியாயம்” பொறிந்து தள்ளினாள் மிதுலா
“இல்லை மிது… உன்னிடம் என் காதலை அப்பொழுது சொன்னால் நீ ஏற்றுக் கொள்வாயோ என்று எனக்குத் தயக்கமாக இருந்தது… அதனால் தான் உன்னிடம் என் காதலை சொல்லாமல் நேரே உன் அம்மாவிடம் வந்து பெண் கேட்டால் நீ மறுக்க முடியாது என்று நினைத்தேன். அதிலும் என் காதலை உன்னிடம் சொல்லிய பிறகு நீ மறுத்தால் அதை என்னால் தாங்கவே முடியாது”
“சரி எது எப்படியோ… நீங்கள் நினைத்த மாதிரியே தான் என்னையே திருமணம் செய்து கொண்டீர்களே! அதற்குப் பிறகு கூட என்னிடம் வெறுப்பாகதானே இருந்தீர்கள்?”
“மிது… என்ன தான் நான் உன்னைக் காதலித்திருந்தாலும் என்னால் இன்னமும் நம் திருமணம் நடைபெற்ற முறையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை… அதற்குச் சில காரணங்களும் உண்டு.
முதலாவது அன்று நான் அடைந்த அவமானம்… என்னுடைய நண்பர்களின் இகழ்ச்சி பார்வை… அது என்னுடைய சுயமரியாதையைக் கிளறி விட்டுவிட்டது.
அடுத்தக் காரணம் உன்னுடைய கங்காதரன் மாமா… அன்று அந்த இடத்தில் நான் இருந்தேன், என்னை உனக்குத் திருமணம் செய்து வைத்தார்… ஒரு… ஒருவேளை என்னிடத்தில் வேறு யாரேனும் இருந்திருந்தால் அவனுக்கும் உன்னைத் திருமணம் செய்து வைத்து இருப்பார் இல்லையா?.
என்னுடையவள் நீ. உன்னை ஒருவேளை நான் பிரியும் படி நேர்ந்து இருந்தால் என் நிலைமை என்ன? அதற்கு என்ன செய்வது? என்று யோசித்தேன். அவர் வருந்தவேண்டும் என்றுதான் அவரை உன்னைப் பார்க்க வரக்கூடாது என்று நிபந்தனை விதித்தேன்”
“அப்போ… சுஜி?”
“அவளுக்கு எத்தனை தைரியம் இருந்தால், என்னிடமே வந்து நீயும் அந்த வினோத்தும் விரும்புவதாகச் சொல்வாள்? அதுவும் சுற்றி அத்தனை பேரை வைத்துக் கொண்டு. அது மட்டும் இல்லாமல் அவளும் நீயும் சந்தித்துக் கொண்டால் எங்கே என்னை உன்னிடம் இருந்து பிரித்து விடுவாளோ என்று பயந்தேன்”
“பயமா? யாருக்கு… உங்களுக்கு? அப்படி பயப்படுகிறவரா அன்று குடித்து விட்டு வந்தீர்கள்?”
“பயம் தான் மிதுலா… உன்னிடம் எனக்குப் பயம்தான். எங்கே நீ கடைசி வரை வினோத்தை மறக்க முடியாது என்று சொல்லி விடுவாயோ என்று பயம். உன்னை எதிர்கொள்ள எனக்கு மதுவின் துணை தேவை இருந்தது.
இதை எல்லாம் விட என்னை வருத்தியது உன்மேல் நான் வைத்த காதல். உன்மேல் எனக்கு இருக்கும் காதலை எப்படி உனக்குத் தெரியப்படுத்துவது என்று குழப்பம் ஒருபுறம்… உன்னை அருகில் வைத்துக் கொண்டே எத்தனை நேரம் தான் நானும் முறைத்துக் கொண்டே இருக்க முடியும்?”
“திருமணத்தன்று காலையில் கூட உனக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை என்று பெரியம்மா சொன்ன போது உள்ளுக்குள் எவ்வளவு வருந்தினேன் தெரியுமா? நான் வருட கணக்கில் காதலித்த என் காதலியை நான் திருமணம் செய்யப் போகிறேன், ஆனால்… ஆனால் அவள் என்னை விடுத்து வேறு ஒருவரை விரும்புகிறாள்… என் மனநிலையைக் கொஞ்சம் புரிந்து கொள் மிது”
“…”
“வர்ஷினி உன்னைக் காயப்படுத்தும் போது எனக்குள் இருந்த ஈகோ அதைத் தடுத்தது.
அவளை மறுத்தோ அல்லது தடுத்தோ பேசினால் எங்கே என்னையும் அறியாமல் என் காதல் வெளிப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன்… அதனால் தான் அவள் பேசும் போது அவளை என்னால் தடுக்க முடியவில்லை”
“அப்படியானால் எல்லாவற்றிற்கும் உங்கள் ஈகோதான் காரணம் இல்லையா? கட்டிய மனைவி என்னிடம் எதற்கு இந்த ஈகோ? ஒருவேளை ஆரம்பத்திலேயே மனம் விட்டு பேசி இருந்தால், இந்த அளவிற்கு நாம் வருந்த வேண்டி இருக்காதே”
மிதுலாவின் குரலில் இருந்த வருத்தத்தை உணர்ந்தவன், “நான் செய்தது தவறுதான் மிதுலா. அன்று உன்னை முழுமையாக இழந்துவிட்டேன் என்ற உண்மை நிலை தெரியும் வரை உன்னைப் பற்றியோ, உன் மனஉளைச்சலை பற்றியோ, நான் கொஞ்சம் கூட எண்ணவே இல்லாமல் என்னைப் பற்றி மட்டுமே தன்னலமாக யோசித்து விட்டேன் மிது.
அன்று ஹோட்டலுக்கு உன்னுடன் கிளம்பும்போதே என் மனம் உன்னை நோக்கி சாயத் தொடங்கியது. ஆனால், உன்னைக் கை வளைவுக்குள் வைத்திருந்த பொழுது எனக்கு வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை. நீ என் மனைவி… நான் ஆண்டாண்டாய் காதலித்த என் காதலி என்பது மட்டுமே என் நினைவில் இருந்தது”
“அதெல்லாம் சரிதான் புருஷர்ர்ர்ர். இன்னமும் உங்கள் நிவியைப் பற்றி நீங்கள் சொல்லவில்லை” வேண்டுமென்றே ‘உங்கள்’ என்பதை அழுத்திக் கூறினாள்.
“நிவி… என்னுடைய தோழி மட்டும் தான் மிது. அதற்கு மேல் எங்கள் இருவருக்கும் இடையில் வேறு எதுவும் இல்லை”
“பொய்… அன்று அவள் உங்களுடைய முன்னாள் காதலி என்று சொன்னாள்… நீ… நீங்களும் அதை மறுத்து பேசவே இல்லை”
“பள்ளியில் ஒன்றாகப் படிக்கும் போது ஆண்டு விழாவில் நாங்கள் இருவரும் சேர்ந்து ரோமியோ-ஜூலியட் நாடகத்தில் நடித்தோம். ரொம்ப இயல்பாக நடித்ததால் எங்கள் இருவரையும் எப்பொழுதும் நிஜ காதலர்கள் என்று எல்லோரும் வம்பிழுத்துக் கொண்டே இருப்பார்கள்… அதைதான் அவள் சொன்னாள்”
“அவ்வளவுதானா?” சுருதி இறங்கி போயிற்று மிதுலாவின் குரலில்
“அவ்வளவேதான்” இயல்பாகப் புன்னகைத்தான் வசீகரன்.
“இல்லையே… அன்று அந்தப் பார்ட்டியின் போது அவளிடம் அப்படிப் பேசினீர்கள்? என்னைக் கண்டுகொள்ளவே இல்லை… எனக்கு… எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?”
“தெரியும்” என்றான் கூலாக.
“தெரியுமா? என்ன… என்ன தெரியும் உங்களுக்கு?” படப்படத்தாள் மிதுலா.
“நான் அவளிடம் பேச பேச உன் முகம் மாறியதை பார்த்து விட்டுத்தான், மேலும் உன்னை வம்பிழுத்து உன் பொறாமையைத் தூண்டவே அப்படிப் பேசினேன். கோபப்படாதே மிதுலா! உன் மீது எனக்கிருக்கும் நேசம் நான் அறிந்ததே. ஆனால் நீயும் என்னை விரும்புகிறாயா… இல்லையா? என்பதை எனக்குத் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. அதனால்தான்…”
“அப்படியானால் நீங்கள் அவளைக் காதலிக்கவே இல்லையா?”
“என்ன கேள்வி இது மிது? என் மனதில் என்றென்றும் இருக்கும் ஒரே ஒரு பெண் நீ மட்டும் தான். உன்னை மட்டும் தான் நான் நேசிக்கிறேன். நேசிப்பேன். முதலில் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள் மிது, நிவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. அதுவும் என்னுடைய நண்பனைத்தான் அவள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டாள் போதுமா?”
“அப்பறம் எதற்கு அவளுக்கு பாதாம் பால் வேண்டுமானு கேட்டிங்க?”
மனைவியின் பொறாமையை உள்ளூர ரசித்தவன், சிரித்தபடியே பேச ஆரம்பித்தான்.
”வேறு என்ன செய்ய மிது? உன்னை நம்பி எப்படி எடுத்து வர சொல்வது? முதல் நாள் நீ எனக்கு டீ போட்டுக் கொடுத்தது எனக்கு ஞாபகம் வந்ததா… அதுதான் எதற்கு வம்பு என்று நானே அவளுக்குப் போட்டு தர முன் வந்தேன்”
“…”
“ இன்னும் என் மீது கோபமா மிது?”
“ஒருவேளை கங்காதரன் மாமா அன்று நடந்த விஷயத்தை உங்களுக்குத் தெளிவு படுத்தவில்லையெனில், இன்னும் நீங்கள் என்னைத் தவறாகத் தானே நினைத்துக் கொண்டு இருந்து இருப்பீர்கள்? நான் எத்தனை முறை உங்களிடம் சொன்னேன்… நீங்கள் என்னை நம்பவே இல்லையே?” மிதுலாவின் குரலில் இருந்த வருத்தத்தை வசீகரனால் உணர முடிந்தது.
“ உன் மேல் நம்பிக்கையில்லை என்று இல்லை மிது. ஆரம்பத்தில் நீ வினோத்தை தான் காதலிக்கிறாய் என்று என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன் அல்லவா? அது தான் என் கண்ணை மறைத்து விட்டது போலும். மற்றபடி உன்னை வருத்தும் நேரங்களில் உன்னை விட அதிகம் வருந்தியது நான் தான் பேபி.
காதலித்த பெண் நீயே என் மனைவியாகி என்னுடைய கைக்கெட்டும் தூரத்தில் இருப்பாய்… இருந்தும் என்னால் உன்னை நெருங்க முடியவில்லை. நீ என்னுடைய மனைவி என்று என் உள்மனது என்னிடம் சொல்லிய போது எல்லாம், இன்னொரு குரல் ‘அவள் என்ன உன்னை விரும்பியா மணந்தாள்? அன்று அந்த இடத்தில் நீ இருந்ததால்தான் உன்னை மணந்தாள் இல்லை இந்நேரம் வேறு ஒருவனின் மனைவியாகி இருப்பாள்’ என்று சொல்லி கொண்டே இருந்தது”
“அ… அன்று…” எப்படி ஆரம்பிப்பது என்று சற்று நேரம் விழித்தவள், ஒரு வழியாக தன்னை சரி செய்து கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தாள். “நம்முடைய வாழ்க்கையை நாம் முதன்முதலாக அப்படியா ஆரம்பிக்க வேண்டும்… எனக்கு எத்தனை கஷ்டமாக இருந்தது தெரியுமா?”
“இதோ பார் பேபி… அன்று என் மீது எந்தத் தவறும் இல்லை. சும்மாவே உன் மீது மயங்கிப்போய் இருப்பவனை, இன்னும் நன்றாக தலை சுற்றும் அளவுக்கு ஹோட்டலில் கூடச் சேர்ந்து டான்ஸ் எல்லாம் ஆடி உசுப்பேற்றி விட்டு, பிறகு என்னைத் தொடாதே என்றால் நான் என்ன செய்ய?
எங்கே இந்த முறையும் நீ கோபப்பட்டு விலகிப்போய் உன்னை ஒரேடியாக இழந்துவிடுவேனோ என்று பயந்து விட்டேன் மிது. அது தான் அன்று… அப்படி… எனக்கு மட்டும் நம்முடைய வாழ்வை அப்படி ஆரம்பிக்க ஆசையா என்ன? உள்ளுக்குள் எனக்கும் வருத்தம் தான் மிது”
“அதற்காக என்னை இத்தனை தூரம் ஏன் வருந்த செய்தீர்கள்?”
“என் நிலைமையும் கொஞ்சம் புரிந்து கொள் பேபி. நம்முடைய திருமணத்தில் அதிகம் அவமானபட்டது யார்? நானும் என் காதலும் தானே. அது நாள் வரை பெண்கள் விஷயத்தில் எடுத்த நல்ல பெயர் அத்தனையும் அன்று ஒரே நாளில் தலைகீழாக மாறி ஒரு பெண்பித்தன் என்று என்னை மற்றவர்கள் நினைக்கும் படி செய்தது, என்னை மனதளவில் எவ்வளவு பாடு படுத்தி இருக்கும் என்பதைக் கொஞ்சம் புரிந்து கொள் பேபி”
“அதற்காக நான் வீட்டை விட்டுப் போனதும் எக்கேடோ கெட்டு போகட்டும் என்று இரண்டு நாட்களாகக் கண்டு கொள்ளாமல் இருந்தீர்களா?”
“உஃப்ப்ப்… நான் என்ன செய்ய பேபி? அன்று சர்ப்ரைஸாக உன்னை வெளியில் அழைத்துச் சென்று என்னுடைய காதலை பற்றி முழுமையாக உனக்குச் சொல்லி விடலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் விழித்துப் பார்த்தால் உன்னை அருகில் காணவில்லை.
எங்கே போனாயோ… என்ன ஆயிற்றோ என்று நான் பதறிக் கொண்டிருந்தால், மேடம் கடிதம் எழுதி வைத்து விட்டு சென்று இருக்குறீர்கள். அதுவும் அந்த வினோத் வீட்டுக்குச் செல்வதாக. எனக்கு எப்படி இருந்திருக்கும் என்பதைக் கொஞ்சம் நினைத்து பார்.
ஒருவேளை நீயும் என்னை விரும்புவதாக நான் நினைத்தது தவறோ என்றெல்லாம் எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. ஒருவேளை நீ வினோத்தை காதலித்து இருக்கும் பட்சத்தில், அவனோடு உன் வாழ்க்கை…”
வசீகரன் பேசி முடிக்கும் முன், “ சீ… கருமம்… அந்தப் பொறுக்கி கூட என்னைச் சேர்த்து வைத்து பேச உங்களுக்கு எப்படி வாய் வருது? என் கூட பேசாதீங்க போங்க” என்று கூறி வசீகரனின் நெஞ்சில் தான் கைகளால் பலம் கொண்ட மட்டும் குத்த தொடங்கினாள் மிதுலா.
அவளின் அடி அனைத்தும் வசீகரனுக்குக் கொஞ்சம் கூட வலிக்கவே இல்லை. புன்சிரிப்போடு வாங்கிக் கொண்டவன், “என்னைச் செயலிழக்க செய்ய வேண்டும் என்றால் இப்படி எல்லாம் அடிக்கக் கூடாது பேபி… இப்படி அடிக்க வேண்டும்” என்று கூறி அவளின் இதழை மென்மையாக சிறை பிடித்தான். திமிற ஆரம்பித்தவள் பின்பு மெல்ல மெல்ல அவனுள் அடங்கித்தான் போனாள்.
மெல்ல அவளை விடுவித்தவன், “ ஹப்பா… இப்படியா? ரொம்ப வலிக்கிறது பேபி” என்று கூறி அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.
“ உங்களை…” என்று அவனை அடிக்கப் போனவளின் கைகளைப் பிடித்து அப்படியே நிறுத்தியவன், “இப்பொழுது தானே சொன்னேன்… அதற்குள் மறந்து விட்டாயா? வா மீண்டும் ஒரு முறை சொல்லி தருகிறேன்” என்றவன் தன் காரியத்தில் கண்ணாக சாதித்துக் கொண்டே அவளை விடுவித்தான். விலகியவள், ‘இப்பொழுது புருஷர்ரர்ர்ர்ரை அடிக்கலாமா… வேண்டாமா’ என்று தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள்.
“மிது உன்னுடைய மாமா எதற்காக இந்த திருமணத்தை இப்படி முடிவு செய்தார் என்று உனக்கு தெரியுமா?'”
“எனக்கு அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவர் எது செய்தாலும் அது என்னுடைய நன்மைக்காக மட்டுமே இருக்கும் என்பதை நான் நம்புகிறேன்.நான் வீட்டை விட்டு போனது உங்களுக்காக தான். எனக்காக இல்லை”
“எனக்காகவா மிது…என் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கும் உன்னை வருத்தி விட்டேனே….சாரிடா பேபி”
“உங்களுடைய சமாதானம் எதுவும் எனக்கு வேண்டாம்… நீங்கள் செய்த தவறுக்கு உங்களுக்கு கட்டாயம் தண்டனை உண்டு”
“என்ன செய்ய வேண்டும் சொல் பேபி… நீ எது சொன்னாலும் செய்யக் காத்திருக்கிறேன்”
“பேச்சு மாற மாட்டீர்களே?”
“நிச்சயம் இல்லை மிது… நீ எது கேட்டாலும் செய்வேன்”
“சத்தியம்?”
“சத்தியம்… சத்தியம்… சத்தியம்… போதுமா?” என்று அவள் கைகளில் அடித்துச் சத்தியம் செய்தான்.
“அப்படியானால் சக்தி அண்ணாவை இந்த வீட்டிலேயே தங்க வையுங்கள்… அவர் இங்கே என்னோடு இருந்தால் தான் எனக்குப் பாதுகாப்பு”
அவள் வேறு எதாவது கேட்பாள் என்று அவன் நினைத்திருக்க, இப்படி கேட்டதும் ஒன்றும் புரியாமல் வசீகரன் முழிக்கத் தொடங்கினான்.
“சக்தி எதற்கு பேபி இங்கே தங்க வைக்க வேண்டும்?”
“என்னுடைய பாதுகாப்பிற்காகத்தான்”
“என்ன சொல்ற மிது… அது தான் நான் கூட இருக்கிறேனே. பிறகு அவன் எதற்கு உன்னைப் பாதுகாக்க வேண்டும்? அதுவும் இல்லாமல் வயதுப்பெண் இருக்கும் வீட்டில் அவனை எப்படித் தங்க வைப்பது மிது?” பொறுமையாகவே எடுத்த உரைத்தான் வசீகரன்.
“பின்னே… வேறு என்ன செய்ய? அன்று நான் கிளம்பிய பிறகு என்னை காணவில்லை என்று அவர் தானே என்னை நினைத்து வருந்தினார். என்னைப்பற்றி அக்கறை படும் ஒருவர் எப்பொழுதும் என் பக்கத்தில் தான் இருக்க வேண்டும். நாளை மறுபடியும் நம் இருவருக்கும் ஏதேனும் சண்டை வந்தால், அவர் தான் எனக்குச் சப்போர்ட்டாக இருப்பார்”
“இனி அப்படி எதுவும் நடக்காது பேபி”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்கள் நான் எது கேட்டாலும் செய்வதாக வாக்கு கொடுத்து உள்ளீர்கள். எனக்கு வேண்டியது சக்தி அண்ணா இங்கே நம் வீட்டிலேயே இருக்க வேண்டும்… அவ்வளவு தான்” என்றாள் கறாராக.
“உனக்கும் அவர்களின் காதல் கதை தெரிந்து விட்டதா?” என்றான் நிதானமாக.
அதிர்ந்து போய், ‘உனக்கும்’ என்றால் என்ன அர்த்தம்? அப்படியானால் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?” என்று கேட்டாள் மிதுலா.
“நேற்று வந்த உனக்கே தெரியும்போது எனக்குத் தெரியாதா? எல்லாம் தெரியும். இருவரில் யார் வந்து முதலில் பேசுவார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்… அவர்களுக்குப் பதிலாக நீதான் பேசுகிறாய்”
“அப்படி என்றால் உங்களுக்கு இதில் துளி கூடக் கோபமோ வருத்தமோ இல்லையா?”
“இல்லை மிது. எனக்கு சக்தியை நன்றாகத் தெரியும். வர்ஷினியை மிகவும் நேசிப்பவன். அவளைச் சீண்டி விடுவதற்காக மட்டும் பிற பெண்களைப் பற்றி பேசுவான்… மற்றபடி வேறு பெண்களிடம் வலிய போய் பேசி அலைய மாட்டான். ஆனால், அவனாக வந்து பெண் கேட்கும் தைரியம் இன்னும் வரவில்லையே . அவன் கேட்டால் பெண்ணைத் தர நான் தயார். உன் அண்ணனை வந்து என்னிடம் பேச சொல்… புரிந்ததா?”
“ஆனால் வர்ஷினிக்கு இதில் விருப்பம் இருக்கிறதா இல்லையா என்று இன்னும் தெரியவில்லையே?”
“அதெல்லாம் அவளுக்கு விருப்பம் தான். அவளுக்கு கொஞ்சம் பயம், எங்கே நான் இருவர் மீதும் கோப படுவேனோ என்று. என் தங்கையைப் பற்றி எனக்குத் தெரியாதா?”
“மற்றவர்கள் விஷயம் எல்லாம் நன்கு புரிகிறது… மனைவியைப் பற்றி மட்டும் ஒன்றும் புரியவில்லை. அப்படித்தானே?”
“ஏன் புரியாமல்? உன்னை புரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும், இந்த கைகளால் உணர்ந்து கொள்ளவும்தான் நான் துடிக்கிறேன். எங்கே… நீ தான் ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறாய்!” என்றான் முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு.
“சீ… சீ… எப்பொழுது பார்த்தாலும் இதே பேச்சு. வேறு வேலை இல்லை உங்களுக்கு. நான் தோட்டத்திற்குப் போகிறேன் போங்க” என்று கூறிவிட்டு ஓட முனைந்தவளை கைகளுக்குள் சிறை பிடித்தான் அந்த மன்னவன்.
“தோட்டத்தை எல்லாம் பார்ப்பதற்கு ஆள் இருக்கிறது. உன் புருஷன் நான் தான் இங்கே ரொம்பவும் காய்ந்து போய் இருக்கிறேன்… கொஞ்சம் கரிசனம் காட்ட கூடாதா?” என்றவன் தன்னவளின் முகச் சிவப்பில் தன்னைத் தொலைத்து மீட்டெடுக்க அவளில் தொலைந்து போனான்.
சற்று நேரம் பொறுத்து ஃபோனில் ஏதோ அழைப்பு வரவும் அவளை விடுவித்தவன், “சை! யாருடா அது இந்த நேரத்தில் கரடி மாதிரி” என்று புலம்பியபடி போனை எடுத்து பார்த்தவன், சக்தியின் பெயரை பார்த்ததும் சற்றே சலிப்புடனே ஃபோனை எடுத்துப் பேசலானான்.
“என்னடா… இப்ப எதுக்கு கூப்பிட்ட?”
“…”
“அடி வாங்க போகிறாய். முதலில் எல்லாரையும் கூட்டிக்கொண்டு இங்கே வீட்டிற்கு வா. உன்னிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும்” என்று கூறி ஃபோனை கட் செய்து விட்டான்.
சக்தி காரின் ஹாரன் ஒலி கேட்கும் வரை சின்னச்சின்ன சில்மிஷங்களில் மனைவியைச் சிவக்க வைத்தவன், பிறகு அவளைத் தள்ளி நிறுத்தி, “கீழே வந்து வாயே திறக்ககூடாது புரிந்ததா?” என்று கூறி அவளின் இதழில் முத்திரையைப் பதித்தவன், அவளைக் கையோடு கீழே இழுத்துச் சென்றான்.
கணவன் எதற்குச் சொல்கிறான் என்று புரியாவிட்டாலும் மௌனமாக அவனுடன் இசைந்தே சென்றாள் மிதுலா.
அவர்கள் வரும் முன் ஹாலுக்கு சென்று கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் உள்ளே நுழைந்த எல்லாரையும் பார்த்தவன், “எல்லாரும் கொஞ்சம் இங்கே வாங்க. ஒரு பிரச்சினை… அதை இன்றே சரி செய்து ஆக வேண்டும்”
என்ன என்று தெரியாவிட்டாலும் வசீகரனின் பேச்சுக்கு கட்டுப்பட்டு அனைவரும் ஹாலில் அமர்ந்தனர்.
“எதற்காக சக்தி என் தங்கையை மிரட்டினாய்?”
வசீகரனின் கேள்வியில் அனைவரும் ஸ்தம்பிக்க மிதுலா திருத்திருத்தாள். ‘இவர் என்ன சொல்லுறார்’ என்று அவள் யோசித்து கொண்டிருக்கும் போதே கணவன் தன்னை அமைதியாக இருக்கச் சொன்னது நினைவில் வர அமைதி காத்தாள் மிதுலா.
“என்ன சொல்ற வசி… நான் யாரையும் மிரட்டலயே” பொறுமையாகப் பதில் சொன்னான் சக்தி.
“சும்மா நடிக்காதே சக்தி… எனக்கு எல்லாம் தெரியும். போனால் போகிறது நண்பன் என்று உன்னை நம்பி வீட்டிற்குள் விட்டது தப்பாகி விட்டது. இனி உனக்கு இந்த வீட்டில் இடமில்லை. இனி ஒருமுறை இந்த வீட்டிற்குள் காலடி எடுத்த வைக்க நினைக்காதே… வெளியே போ”
“வசி… கொஞ்சம் நான் சொல்வதையும் கேளேன். நான் யாரையும் மிரட்ட வில்லை என்று சொல்கிறேனே”
“அப்படியா… பிறகு ஏன் வர்ஷினி உன்னைக் கண்டு பயப்படுகிறாள்? சும்மா தேவை இல்லாததை எல்லாம் பேச வேண்டாம் சக்தி. போலீஸ் வரும் முன் இங்கிருந்து சென்று விடு. அது தான் உனக்கு நல்லது”
“இப்போ என்ன வசி? நான் இங்கிருந்து கிளம்ப வேண்டும் அவ்வளவு தானே. கிளம்புகிறேன். வா வனி… நாம் போகலாம்” கை நீட்டி வர்ஷினியை அழைத்தான் சக்தி.
வர்ஷினி மிரண்டு என்ன செய்வது என்று முழித்துக் கொண்டு நின்றது ஒரு நிமிடமே. சட்டெனச் சமாளித்து வசீகரனின் முன் நின்றாள்.
“அண்ணா அவர் ஒன்றும் என்னை மிரட்டவில்லை. அப்படியே அவர் மிரட்டினாலும் அது எங்கள் இருவரின் தனிப்பட்ட விஷயம்… நீ அதில் தலை இடாதே”
“என்ன புதுப் பழக்கம் இது வர்ஷினி? அண்ணனையே எதிர்த்து பேசுகிறாய்? ஒழுங்காக அண்ணனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு உள்ளே போ” காவேரி அதட்டினார்.
“மன்னிச்சுடுங்க அம்மா. எனக்கு… என்னால… அவர் அவமானப்படுவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. வெளியே போய்த்தான் ஆகணும்னா நானும் சேர்ந்தே போகிறேன்”
“வர்ஷினி!” என்று அதட்டியபடி அவளை அடிக்கக் கை ஓங்கினார் காவேரி. அவரின் அடி வர்ஷினியின் மேல் விழும் முன் குறுக்கே வந்து வர்ஷினிக்கு அரணாக நின்றான் சக்தி.
“என் கண்முன்னே அவளை அடிக்காதீர்கள்” என்ற கெஞ்சலோடு.
‘என்னடா இது?’ என்பது போன்ற பாவனையில் அனைவரும் திருதிருக்க வசீகரன் முன் வந்து பேசலானான்.
“என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க இரண்டு பேரும்… அவனைப் பேசினா உனக்குக் கோவம் வருது… இவளை அடிக்கக் கை ஓங்கினால் நீ வந்து தடுக்கிறாய்? என்ன தான் நினைச்சுகிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும். இதற்கு எல்லாம் நீ தான் காரணமா சக்தி? முதலில் நீ வெளியே போ”
“அண்ணா, அவர் போனா அவர் பின்னாடியே நானும் போவேன்” என்று தீர்மானமாகப் பேசினாள் வர்ஷினி.
“ஓ… அந்த அளவிற்கு வந்து விட்டதா? அதெல்லாம் எங்கேயும் போகக் கூடாது. எங்கள் எல்லாரையும் பார்த்தால் எப்படி இளிச்சவாய் போல இருக்கிறதா? அதெல்லாம் இந்த வீட்டைவிட்டு போக முடியாது. ஒழுங்கா கல்யாணத்திற்குப் பிறகு இருவரும் இங்கேயே தங்குங்கள் புரிந்ததா?”
வசீகரன் பேச பேச கோபத்தின் உச்சிக்குப் போய்க் கொண்டு இருந்த சக்தியும், வர்ஷிணியும் அவனது கடைசி வார்த்தையில் திகைத்து விழித்தனர்.
“என்னடா… வீட்டோட மாப்பிள்ளையாக இருக்க மாட்டியா?”
“எவன் சொன்னான்? நான் ரெடி மச்சான். கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம்னு மட்டும் சொல்லு”
சக்தியின் பேச்சில் அனைவரும் சிரிக்க, வர்ஷினி வெட்கி தாயின் பின் ஒளிந்து கொண்டாள்.
“ஆக இப்படி எல்லாம் மிரட்டினா தான் நீங்க ரெண்டு பேரும் காதலிக்கிற விஷயத்தை ஒத்துக்குவீங்க? இல்லேன்னா கடைசி வரை வாயை திறக்கவே மாட்டீங்க அப்படித்தானே”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை மச்சான். உன் தங்கை மனதில் நான் இருக்கிறேனா இல்லையா என்று தெரிந்த பின்பு உன்னிடம் வந்து பேசலாம் என்று நினைத்தேன். அது தான் இன்று இத்தனை பேர் முன்னிலையிலும் சொல்லி விட்டாளே!”
“ சரி சரி… சும்மா இப்படியே பேசிக் கொண்டு இருக்காதே. முதலில் உன் வீட்டுக்கு கிளம்பு”
“என்னடா அதுக்குள்ள கிளம்பச் சொல்ற? நான் இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருந்து பேசிவிட்டு போகிறேனே” முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு வர்ஷினியை பார்த்தவாறே பேசினான் சக்தி…
“அதெல்லாம் உன் வேலை எனக்குத் தெரியும். ஒழுங்கா இப்ப வீட்டுக்கு போ… ஆயிரம் வேலை இருக்கு… அதை எல்லாம் யார் பார்க்கிறது?” சக்தியை அங்கிருந்து கிளப்ப முயன்றான் வசீகரன்.
“சரி டா… ரொம்பச் சந்தோஷம். அட்லீஸ்ட் என் தங்கச்சிகிட்ட பேசலாமா?”
“ம்ம்ம்ம்…” என்று பெரிதாகப் பெர்மிஷன் கொடுத்தான் வசீகரன்.
“நேரம் தான்” என்று வாயினுள் முணுமுணுத்து விட்டு வேகமாக மிதுலாவின் அருகில் சென்று அவள் கைகளைப் பற்றிக் கொண்டான் சக்தி.
“தேங்க்ஸ் தங்கச்சி. சொன்ன மாதிரியே என் விஷயத்தை உன் கணவனிடம் சொல்லி எங்களைச் சேர்த்து வைத்து விட்டாயே” உச்சி குளிர்ந்து போனான் சக்தி.
“சரி அண்ணா… நீங்கள் எனக்கு ஒரு வாக்குறுதி கொடுத்து இருக்கீர்கள் அது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறது அல்லவா?” தூண்டில் போட்டாள் மிதுலா.
“என்னம்மா?”
“உங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கும் அனுமதி வாங்கி தந்தா நான் என்ன சொன்னாலும் கேட்பேன்னு சொல்லி இருக்கீங்க… நினைவிருக்கா?”
“ஓ! நல்லா ஞாபகம் இருக்கு… என்ன செய்யணும்? சொல்லு தங்கச்சி” என்று கேட்டவன் அவள் சொன்ன பதிலில் அரண்டு போனான்.
“வேணாம் தங்கச்சி… வேறு எதுவானாலும் கேளு. இது எப்படி… என்னை அவன்கிட்ட மாட்டி விடறியே… ப்ளீஸ்மா” என்று கெஞ்சத் தொடங்கினான்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு வேண்டியது இது தான். கொடுத்த வாக்கின் படி உங்களால் செய்ய முடியுமா? முடியாதா?”
“வேற வழியே இல்லையா தங்கச்சி?”
“இல்லை”
“அண்ணன் மேல கொஞ்சம் கருணை காட்டுமா” கெஞ்சினான் சக்தி.
“வேண்டுமானால் உங்கள் திருமணத்தை ஒரு ஆறு மாதம் தள்ளி வைக்கச் சொல்லட்டுமா?”
“அய்யயோ… வேண்டாம்… வேண்டாம். சரி எப்படியாவது முயற்சி செய்கிறேன். இனி ஆண்டவன் தான் என்னைக் காப்பாற்றணும்”
“ம்ம்ம்ம்… சும்மா பேசிக் கொண்டு நேரத்தை வீணாக்காமல் வேலையைப் பாருங்கள்” சக்தியை விரட்டினாள் மிதுலா.
“இதுக்கு நான் அப்போவே கிளம்பி இருக்கலாம். எங்கே… அவன் பேச்சை கேட்காமல் போய் தங்கச்சிகிட்ட போய் பேசி ஆப்பை தேடி போய் உட்காருவேனா?” என்று புலம்பியபடியே சென்றான் சக்தி.
அதன் பிறகு சக்தி வசீகரனையும் மொத்த குடும்பத்தையும் கிளம்பி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வர சொல்லி, வசீகரனை அங்கிருந்த தாயார் சன்னதியை நூற்றியெட்டு சுற்று சுற்ற வைத்தான்.
முடியாது என்று மறுத்து பேசிய வசீகரனை தெய்வ காரியம் நிறைவேற்றவில்லை எனில் தெய்வ குற்றம் அது இது என்று எல்லோரும் சேர்ந்து மிரட்டி அதை செய்து முடிக்க வைத்தனர்.
எல்லாம் முடிந்து சோர்ந்து போய் வெளியே வரும் போது தான் சக்தி மிதுலாவின் குட்டை போட்டு உடைத்து விட வசீகரன் முகம் இறுகி போய் அமர்ந்து இருந்தான்.
காரில் ஏறி வீட்டுக்கு வந்ததும், “மிதுலா கொஞ்சம் காபி எடுத்துக்கொண்டு ரூமுக்கு வா” என்று சொல்லி விட்டு மாடி அறைக்குள் சென்று விட்டான்.
அங்கிருந்த எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்தது. வசீகரன் காபிக்காக மிதுலாவை அழைக்கவில்லை என்று புரிந்து போயிற்று. எல்லாரும் அஞ்சி நடுங்கிக் கொண்டு இருக்க மிதுலா சாவகாசமாக படியேறி போனாள். உள்ளே நுழைந்தவளின் கரங்களைச் சுண்டி இழுத்தான் வசீகரன்.
“ஏன்டி இப்படிச் செஞ்ச?”
“எப்படி?”
“வர்ஷினிக்காக வேண்டி இருப்பதாய் நீயே என்னிடம் சொல்லி இருக்கலாமே? இன்னும் ஏன் மிது என்னை விட்டு தள்ளி இருக்கிறாய்?”
“இப்பொழுது தெரிகிறதா? விலகி இருந்தால் எப்படி இருக்கும் என்று… அதற்காகத்தான்”
“சாரி மிது”
“என்ன சொன்னீங்க? சாரியா?” யாரிடமும் தலை வணங்காதவன் தன்னிடம் மன்னிப்புக் கேட்கிறான் என்பதில் காதல் கொண்ட அவளது உள்ளம் துள்ளியது. இருந்தாலும், வெளியே விறைப்பாக வைத்துக் கொண்டு, “சரி… சரி போகட்டும்… பிழைத்து போங்க” என்றாள் முகத்தைக் கெத்தாக வைத்துக் கொண்டு.
“கால் வலிக்குது மிது…” பாவமாகச் சொன்னான் வசீகரன்.
“நன்றாக வலிக்கட்டும். நான் வீட்டை விட்டுப் போனபோது இந்த கால்கள் என்னை தேடி புறப்படவில்லை இல்லையா… அதற்கான தண்டனை தான் இது”
வலிக்காமல் அவள் காதை திருகியவன், “உனக்கு ரொம்பக் கொழுப்புடி. புருஷன் இத்தனை இறங்கி பேசுகிறேன்… கொஞ்சம் கூட இரக்கப்படாமல் இப்படியா இருப்பாய்? ராட்சஸி” என்றவன் வலிக்காமல் அவளது கன்னத்தைக் கடித்தான்.
“பின்னே சும்மாவா? நான் வசீகரனின் பொண்டாட்டியாக்கும். கெத்து, திமிர் எல்லாம் காட்ட வேண்டும். இரக்கம் எல்லாம் காட்ட கூடாது” என்றாள் லேசான சிரிப்புடன்.
“அப்படியா? சரி அது போகட்டும்… போ… ஒரு முத்தம் கொடு”
“ம்ஹூம்… என் கணவரின் அகராதிப்படி அதெல்லாம் தப்பு. அதனால் அதுவும் கிடையாது” என்றாள் சிவந்திருந்த முகத்தை அவனுக்குக் காட்டாமல்.
“ஓ…” என்றவன், “சரி… நீ கொடுக்க வேண்டாம் நானே தருகிறேன்” என்றவன் அவள் முகம் நோக்கி குனிந்தவனைக் கடைசி நொடியில் தள்ளி விட்டு, “மாட்டேன் போடா” என்று ‘டா ‘ வை அழுத்திச் சொல்லி விட்டு அறையை விட்டு வெளியே ஓடினாள்.
“ ‘டா’ வா சொல்ற… உன்னை விட்டேனா பார்…” என்று அறைக்கு வெளியிலும் அவளைத் துரத்தி வந்தவன் சுற்றி யார் இருக்கிறார்கள் என்ற நினைவே இல்லாமல் மனைவியைத் துரத்தி பிடித்தான்.
மாடிப்படி வளைவில் அவளைப் பிடித்தவன், “மாட்டினாயா? இப்ப எப்படி ஓடுவ?” என்று கேட்டபடியே அவள் முகம் நோக்கி குனிந்தவன், சுற்றிலும் எழுந்த சிரிப்பொலியில் தன்னை மீட்டு திரும்பி பார்த்தான்.
மொத்த குடும்பமும் இவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு இருந்தது.
சட்டென அவளை விட்டு விலகினாலும் மனைவியைக் கைப்பிடியை விட்டு தள்ளி நிறுத்தவில்லை.
“ஏன்டா… உள்ள போய் மிதுலாவை எப்படிக் கொடுமை செய்கிறாயோ என்று கீழே நாங்கள் எல்லாம் பதறிக் கொண்டு இருந்தால்? நீ என்னடாவென்றால்? ஹம்ம்… சத்தியமா சொல்றேன்டா… என்னை மாதிரி பேச்சுலர் பாவம் எல்லாம் உன்னைச் சும்மா விடாது சொல்லிட்டேன்…” என்று அங்கலாய்த்தான் சக்தி.
மிதுலா எல்லோர் முன்னும் இப்படி ஆனதால் வெட்கத்தில் தடுமாற, அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே, “என் பொண்டாட்டியை நான் கொஞ்சினால் உனக்கு என்னடா இவ்வளவு வயிற்றெரிச்சல்… அது தான் உனக்கும் திருமணம் முடிவாகி விட்டது இல்லையா? திருமணத்திற்குப் பிறகு நீயும் கொஞ்சிக்கொள்”
இவர்களின் உரையாடலை கேட்ட வர்ஷினி வெட்கி அங்கிருந்து ஓட, “ஹ்ம்ம் சுத்தம்… ஏதோ கொஞ்ச நேரம் தரிசனமாவது கிடைச்சது, அதுலயும் உன் திருவாயால் ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டு விட்டாயே. இனி எங்கே… கல்யாணத்தை வேறு ஒரு மாதம் கழித்து வைத்து இருக்குறீர்கள்… அதுவரை இங்கே நான் வரவும் முடியாது… நல்லா இருடா…” என்று கடுப்பாக வாழ்த்தி விட்டு வர்ஷினியின் அறை பக்கம் சென்றான் சக்தி.
“டேய்… வாசல் அந்தப் பக்கம்… இங்கே எங்கே நுழைய பார்க்கிறாய்?”
“ஹி ஹி ஹி ஹி… ஓ… இது வர்ஷினி ரூம் இல்ல… அடையாளம் தெரியலை”
“தெரியாது… தெரியாது… போடா… உன் வீட்டுக்கு”
“ஹ்ம்ம்… நீயெல்லாம் என் ஃபிரண்டா? ஒண்ணாம் நம்பர் வில்லன்டா”என்று திட்டிக் கொண்டே வெளியேறினான் சக்தி.
காவேரியும் தெய்வானையும் நிறைவான மனதுடன் இவர்களைப் பார்த்து சிரித்தபடி அங்கிருந்து வெளியேற, மனைவியை மீண்டும் கை வளைவுக்குள் கொண்டு வந்தான் வசீகரன்.
கணவனின் கைகளுக்குள் வாகாக ஒண்டிக் கொண்டு ஈருடல் ஓருயிராகி நின்றனர் இருவரும். கணவனின் மனதில் தனக்கு இடமில்லையோ என்று எண்ணி மறுகிக் கொண்டு இருந்த பேதை, தன் மனதின் சஞ்சலங்கள் அனைத்தும் நீங்கி நிம்மதியுடன் தன் கணவனின் தோளில் உரிமையுடன் சாய்ந்து நின்றாள்.
******* சுபம்*******
Facebook Comments Box
What’s your Reaction?
+1
2
+1
+1
+1
+1
+1
+1