Siragilla Devathai 6

0
340

ஹரிஹரன் ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிதானமாக சொன்ன பிறகு அவள் முகத்தில் ஒரே ஒரு நிமிடம் பயம் மின்னல் போல மின்னி மறைந்தது. பின்னலை எடுத்து முன்னால் விட்டு கைகளில் சுழட்டியவாறே அவனிடம் வாதம் செய்ய தயாரானாள் அந்த சண்டி ராணி.

“பெருசு… யாருகிட்ட கதை விடுற… இது என் பிரண்டு தேவியோட தோப்பு. அவங்க அப்பா தான் இந்த தோப்புக்கு சொந்தக் காரர்” என்று முகத்தை கெத்தாக வைத்துக் கொண்டு பேசினாள்.

“அது பழைய கதை… என்னோட அப்பா இந்த தோப்பை விலைக்கு வாங்கிட்டார். ஸோ…இப்போ இது என்னோட தோப்பு…” இப்பொழுதாவது அவள் கொஞ்சம் பவ்யமாக பேசுகிறாளா என்ற எண்ணத்தோடு அவளது முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான் ஹரிஹரன்.

அவனின் அழுத்தமான பதிலில் இவன் ஒருவேளை உண்மை சொல்கிறானோ என்று சற்று சிந்தித்தவள் சட்டென குனிந்து தன்னுடைய படை வீரர்களிடம் ரகசிய ஆலோசனை நடத்தினாள். சற்று நேரம் பொறுத்து நிமிர்ந்து பார்த்தவள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அவனை பார்த்து கேள்விகளை கேட்டாள்.

“இதை நான் எப்படி நம்புறது? நீ பொய் சொல்லி என்னை ஏமாத்திட்டா? இந்த ஊர்லயே நான் தான் பெரிய அறிவாளின்னு எங்க அப்பா சொல்லி இருக்கார்… என்னை அவ்வளவு சீக்கிரம் யாரும் ஏமாத்த முடியாது தெரியுமா?” கைகளை இடுப்பில் வைத்த படி குழந்தை போல அவள் பேசிய விதம் அவனுக்குள் சிரிப்பை தோற்றுவித்தது. இருந்தாலும் முகத்தை வெகு சீரியஸாக வைத்துக் கொண்டான்.

“இப்போ என்ன செய்யலாம்னு சொல்ற?” முடிவை அவள் வசமே விட்டு விட்டான் ஹரிஹரன்.ஏனோ அவளிடம் வார்த்தை வளர்க்க அவனுக்கு பிடித்து இருந்தது.

“ இங்கிருந்து மாங்காய் பறித்துக் கொண்டு கிளம்பிப் போய் தேவிகிட்ட நானே நேர்ல போய் கேட்டுக்கிட்டு வரேன். அதுவரை நீ இங்கே இருந்து நகரக் கூடாது புரிந்ததா? டேய் பசங்களா நான் திரும்பி வரும் வரை இந்த பெருசு எங்கேயும் ஓடிடாம பார்த்துக்கோங்கடா” என்று அந்த பொடியர்களுக்கு உத்தரவு வேறு பிறப்பித்தாள்.

அவள் சொன்னதை கேட்டு உடனே தலை ஆட்டினாலும் சட்டென அவளை தன் புறம் இழுத்து அவளின் காதில் குனிந்து ரகசியம் போல ஏதோ சொன்னான் ஒரு பொடியன். அவன் சொல்லி முடிக்கும் வரை திரும்பி திரும்பி நோடிக்கொரு தரம் ஹரிஹரனை பார்த்துக் கொண்டாள் அவள். அவளின் அந்த செய்கையிலே அவர்கள் தன்னை பற்றித்தான் பேசிக் கொள்கிறார்கள் என்பது அவனுக்கு தெளிவாக புரிந்து போயிற்று.

‘சரி பெரிய மனிதர்கள் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்’ என்ற நினைவுடன் லேசான சிரிப்புடன் கைகளை பேன்ட் பாக்கெட்க்குள் நுழைத்தபடி அவர்களையே சுவாரசியமாக பார்த்துக் கொண்டு இருந்தான் ஹரிஹரன். மேலும் சில நிமிடங்கள் தங்களுக்குள் பேசி முடித்துவிட்டு நிமிர்ந்து அவனை பார்த்தாள் அவள்.

‘என்ன சொல்ல போகிறாள்’ என்ற நினைவுடன் அவன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். லேசாக தொண்டையை செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

“அது ஒன்னும் இல்லை… எங்க கணேசனுக்கு உன்னை பார்த்தா ரொம்ப பாவமா இருக்காம்… அதனால காவக்காரன்கிட்ட மாட்டி விட வேண்டாம்னு சொல்றான். அது… அதற்கு பதிலா நீ மரத்தில ஏறி மாங்காய் பறிச்சு தந்தா உன்னை மன்னிச்சு விட்டுடலாம்னு சொல்றான். உனக்கு எப்படி வசதி?” சாதாரணமாக ஆரம்பித்து மிரட்டலுடன் முடித்தாள் அவள்.

பொங்கி வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு, “ஆமா அது யாரு கணேசன்? என்னை உங்களோட கோபத்தில் இருந்து காப்பாற்றிய பெரிய மனுஷன்?” “இதோ இவன் தான்” என்று அவள் கை காட்டிய திசையில் இடுப்பில் போட்டு இருக்கும் டவுசர் அவிழ்ந்து விழாமல் இருக்க ஒரு கையால் அவனுடைய டவுசரை பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் வாயில் வைத்து விரலை சூப்பிக் கொண்டு இருந்த ஒரு மூன்று வயது மதிக்கத்தக்க பெரிய மனிதனை பார்த்ததும் அடுத்த நிமிடம் அடக்க மாட்டாமல் சிரித்தவன், “மாங்காய் பறிச்சு தரணும்னா நேரடியாவே சொல்லலாமே? எதற்கு இவ்வளவு பில்ட் அப்?” அவனின் சீண்டலில் ரோஷம் வந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

“ஏன் எங்களுக்கு தனியா மாங்காய் பறிக்கத் தெரியாதா? இத்தனை நாள் நீங்க வந்து தான் பறிச்சு கொடுத்தீங்களா? இங்கே பாருங்க இதுக்கு பேரு தான் கவட்டை இதுல கல்லு வச்சு குறி பார்த்து அடிச்சா எவ்வளோ பெரிய மாங்காயா இருந்தாலும் கீழே விழுந்துடும் தெரியுமா?” என்று கையில் வைத்து இருந்த பொருள், ஆங்கில எழுத்து Y போன்ற வடிவில் இருந்தது.

இதுவரை அப்படி ஒரு பொருளை ஹரிஹரன் பார்த்ததே இல்லை. ஏதோ அதிசய பொருளை பார்ப்பது போல அதை அவன் உன்னிப்பாக பார்த்துக் கொண்டு இருக்க அதற்குள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்ட அந்த வம்பர் பட்டாளம் அடுத்த அம்பை ஹரிஹரனை நோக்கி  வீசத் தயார் ஆனது.

“எங்க அக்கா குறி வச்சா அவ்வளவு கரெக்ட்டா மாங்காய் அடிக்கும். இன்னைக்கு தான் நீ குறுக்கே வந்து கெடுத்துட்ட. எங்க அக்காவுக்கு கோவம் வர்றதுக்குள்ள ஒழுங்கா நீயே மரத்தில் ஏறி மாங்காய் பறிச்சு கொடுத்துடு… இல்லை எங்க அக்காவுக்கு கெட்ட கோபம் வரும். அப்புறம் நீ இங்கே இருந்து ஒழுங்காக வெளியே போக முடியாது சொல்லிட்டேன்” மிரட்டியது இன்னொரு அரை டவுசர் போட்ட வாண்டு ஒன்று.

“ஐயோ… எல்லாரும் என்ன இப்படி மிரட்டுறீங்க? எனக்கு பயமா இருக்கே… நானேத் தனியா வந்து இருக்கேன். நீங்க இப்படி இத்தனை பேர் சேர்ந்து மிரட்டினால் என்ன ஆவது? வேணும்னா உங்க தலைவியை என்னோடு ஒண்டிக்கு ஒண்டி சண்டை போட சொல்லுங்க. மோதி பார்த்துடுவோம். என்ன ரெடியா?” என்று கேட்டபடி சட்டையின் முழங்கையை லேசாக மடித்து விட்டான்.

அப்படி கைகளை மடித்து விடும் போது பார்வையில் பட்ட அவனது உருண்டு திரண்ட புஜங்களை பார்த்ததும் அவர்களுக்கு லேசான பயம் எழ அதை மறைத்துக் கொண்டு பேசினார்கள்.

“உன்னை மாதிரி பெருசுங்க கூட எல்லாம் சண்டை போட்டா அது எங்க அக்காவோட வீரத்துக்குத் தான் அசிங்கம். நீ போய் ஒழுங்கா மரத்தில ஏறி மாங்காய் பறிச்சு கொடு… இல்லை காவக்காரன்கிட்ட சொல்லி உன்னை கட்டிக் வைக்க சொல்லிடுவோம்” அசராமல் பதில் கொடுத்தது அந்த வாண்டுகள் பட்டாளம்.

அடுத்து அவன் என்ன பதில் சொல்லி இருப்பானோ, அவனுக்கு பின்னே யாரையோ பார்த்து அவர்களின் முகம் வெளுப்பதை பார்த்ததும் சட்டென திரும்பி பார்த்தான் ஹரிஹரன். நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் மூச்சிரைக்க  வேகமாக ஓடி வந்து கொண்டு இருந்தார்.

“வணக்கம் தம்பி என் பேரு முனியன்… நான்தாங்க இந்த தோப்புக்கு காவக்காரன். உங்க அப்பாரை பார்க்கலாம்னு வீட்டு பக்கம் போய் இருந்தேன். அப்போ தான் உங்க அய்யன் சொன்னாருங்க தம்பி தோப்புக்கு வந்து இருக்கீங்கன்னு… அதான் ஓடி வந்தேங்க… என்ன சாப்பிடறீங்க அய்யா? இளநீர் சீவட்டுங்களா? நம்ம தோப்பு இளநீர் சும்மா தேனாட்டம் இனிச்சு கிடைக்குமுங்க. வெட்டட்டுங்களா?” பணிவாக கேட்டபடி நின்றான் முனியன்.

அவன் பேச பேச அவனை விடுத்து எதிரில் நின்றவர்களின் முகபாவனையை தான் அவனும் பார்த்துக் கொண்டு இருந்தான். அனைவரும் நன்றாக மாட்டிக் கொண்டு முழிக்க அவள் மட்டும் ஒரே நொடியில் தன்னை சமாளித்துக் கொண்டு மீண்டும் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாள். அப்பொழுது தான் கவனிப்பவரை போல முனியன் அவர்களை பார்த்து ஒரு அதட்டல் ஒன்று போட்டார்.

“ஏய்… உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது… இப்படி மாங்காய் திருட வராதீங்கன்னு… சொன்னா கேட்க மாட்டீங்களா? ஏன் தாயி இவங்க தான் சின்ன பசங்க நீங்களாவது இவங்களுக்கு புத்தி சொல்லி திருத்தாமல் இப்படி இவங்க கூட சேர்ந்து சுத்தினால் என்ன அர்த்தம்? உங்க அய்யன் காதுக்கு இந்த விஷயம் போச்சுனா அப்புறம் ரொம்ப வருத்தப்படுவார் தாயி… போங்க வீட்டுக்கு. இனி இந்த பக்கம் வராதீங்க” என்று சொல்லி விட்டு முதலாளி மகனுக்கு உட்கார சேரை எடுக்க அந்த பக்கம் நகர்ந்தார்.

அவர் பேசும் போதெல்லாம் ஒரு வித அலட்சிய தன்மையுடனே கேட்டுக் கொண்டு இருந்தவள் அப்பா என்ற வார்த்தையில் முகத்தில் லேசான ஒரு பயம் கலந்த மரியாதை வந்து போனது.

ஒன்றும் சொல்லாமல் முகம் வாடி அங்கிருந்த மாங்காய்களை ஏக்கமாக திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே அந்த வாண்டுகளை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் அவள். ஏனோ ஹரிஹரனால் அவள் முகம் வாடி இருப்பதை தாங்க முடியவில்லை. உடனே திரும்பி முனியனை அழைத்தான்.

“முனியா… இவங்களுக்கு எந்த பழம் எவ்வளவு வேணுமோ பறிச்சு கொடுங்க” என்று கூறிவிட்டு அவள் முகத்தை பார்த்தான். அத்தனை நேரம் வாடி இருந்த அவளது முகம் நொடியில் மலர்ந்தது. மாங்காய் பறித்து கொடுக்க முனியன் அங்கிருந்து நகர, வாண்டுகள் அக்காவை மறந்து அவரின் பின்னால் சென்று விட அவள் மட்டும் அங்கே நின்று கொண்டு இருந்தாள். நன்றாக அவள் புறம் திரும்பி பேசலானான் ஹரிஹரன்.

“ஒரு தேங்க்ஸ் கிடையாதா?” எதையாவது அவளிடம் பேசி பேச்சை வளர்க்க விரும்பினான் ஹரிஹரன்.

“எதுக்கு”

“எதுக்கா? மாங்காய் பறிச்சுத் தர சொன்னேனே அதுக்கு தான்”

“அதுக்கு எதுக்கு நான் உங்ககிட்டே தேங்க்ஸ் சொல்லணும்?”

“நீ தானே ஆசைப்பட்ட?”

“நான் ஆசைப் பட்டதெல்லாம் சரி தான். அதுக்கு எதுக்கு உங்ககிட்ட தேங்க்ஸ் சொல்லணும்? இந்த தோப்பு உங்க அப்பாவோடது தானே? நன்றி சொல்றதா இருந்தா உங்க அப்பாவுக்கு தான் சொல்லணும்… உங்களுக்கு இல்லை. ஒருவேளை நீங்கள் மரத்தில் ஏறி எங்களுக்காக கஷ்டப்பட்டு பறித்து கொடுத்து இருந்தீங்கன்னா உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லலாம். இப்படி எதுவுமே செய்யாம உங்களுக்கு எதுக்கு நான் தேங்க்ஸ் சொல்லணும்?” என்று அழுத்தம் திருத்தமாக கேட்டாள்.

“சரி தேங்க்ஸ் சொல்ல வேண்டாம் சாரியாவது சொல்வாயா இல்லை அதுவும் கிடையாதா?”கண்களில் சிரிப்போடு கேட்டான் ஹரிஹரன்

“நான் எதுக்கு சாரி சொல்லணும்?” அதற்கும் எதிர்க்கேள்வி கேட்டாள் அவள்.

“என்னை பார்த்து திருடன்னு சொன்னியே… அதுக்கு” அவனின் உள்மனது சொன்னது கண்டிப்பாக அவள் மன்னிப்பு கேட்க மாட்டாள் என்று. இருந்தும் என்ன பதில் சொல்கிறாள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தான் அவன் அந்த கேள்வியை கேட்டான்.

“இந்த தோப்பு உங்களோடதா?”

“ஆமாம்”

“இல்லை உங்க அய்யனோடது… உங்க அய்யன் வருமானத்தில வாங்கினது… அவர் கஷ்டப்பட்டு வாங்கிய தோப்பு உங்களுக்கு சொந்தம் இல்லை. அதனால் நீங்க திருடன்னு நான் சொன்னது தப்பே இல்லை” என்று சொன்னவள் சிட்டாக பறந்து அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள்.

‘என்னையே கடைசியில திருடன்னு சொல்லிட்டாளே’என்ற நினைவுடன் லேசான புன்னகையில் உதடுகள் நெளிய அவள் போன பாதையை பார்த்துக் கொண்டு அப்படியே நின்றான் ஹரிஹரன்.          

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here