Siragilla Devathai – Episode 1 Tamil Novels

4
3951நீல வானில் வெண்பஞ்சு மேகங்கள் மிதந்து கொண்டு இருக்க அதை விட மென்மையான பாதங்கள் ஒன்று ஒரு மானின் வேகத்துடன் துள்ளி துள்ளி ஓடிக் கொண்டு இருந்தது. அந்த பாதங்களின் அழகில் கவரப்பட்டவன் அவளை பிடிக்க அதன் பின்னாலேயே சென்று அவளை துரத்தி பிடித்தான். 

அந்நிய ஆடவனின் கைகள் பட்டதும் கண்கள் இரண்டும் பட்டாம்பூச்சியென படபடவென அடித்துக் கொள்ள நிமிர்ந்து அவனை பார்த்தவள் அவன் கண்களில் வழிந்த காதலில் தடுமாறி விழுந்தாள். அவளின் கண்களிலும் அப்பட்டமான காதலை பார்த்தவன் மெல்ல அவளின் மதி முகத்தை நெருங்கி அதில் முத்தமிட முயன்றான். 

அதில் கலவரமாகி அவனை தள்ளி விட்டு அவள் ஓட, பின்னாலேயே துரத்திக் கொண்டு அவனும் ஓடினான். இதோ… இதோ கைக்கு எட்டும் தூரத்தில் அவள். இதோ பிடிக்க போகிறேன் என்று எண்ணியவாறே கைகளை இன்னும் நீட்டி கால்களால் பூமியில் ஒரு உந்து உந்தி அவளை எட்டிப் பிடிக்க பாய்ந்த அந்த நொடி கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து இருந்தான் நம்முடைய கதையின் நாயகன் ஹரிஹரன்.

  கீழே விழுந்ததும்,ஒரு நொடி ஒன்றுமே புரியாமல் திகைத்து விழித்தான் ஹரிஹரன்.எது மாறினாலும் இந்த இரண்டு வருடங்களாக மாறாமல் வரும் இந்த கனவை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று புரியாமல் கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்து இருந்தான்.


 நேற்று தான் அவளை பார்த்தது போல இருந்தது. ஆனால் அதற்குள் இத்தனை வருடம் எப்படி ஓடியது? நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து சென்றாலும் அவளின் அந்த கள்ளமில்லா குழந்தை முகம் மட்டும் அவன் நெஞ்சை விட்டு நீங்காது அவன் உடலில் ஒவ்வொரு அணுவிலும் கலந்து இருந்தது. இதை இப்படியே விடுவது சரியல்ல என்ற முடிவுக்கு வந்தவன் இன்றைக்கே இதற்கு ஒரு தீர்வை காண வேண்டும் என்ற எண்ணத்துடன் எழுந்து குளிக்கப் போனான். 

 ஹரிஹரன் இருபத்து எட்டு வயது கட்டிளங் காளை. வால்பாறையில் தன்னுடைய தாய் தந்தையுடன் வசித்து வந்தான். அவனுடைய அப்பா விஸ்வநாதனுக்கு அதே ஊரில் சொந்தமாக நிறைய பண்ணைகளும் , தோப்புகளும், பங்களாக்களும் இருக்க ஏனோ ஹரிஹரனுக்கு படிப்பை முடித்ததும் அதை பார்த்துக் கொள்வதில் நாட்டம் வர மறுத்தது.

 தீவிர சிந்தனைக்கு பின் பட்டய கணக்காளர் (Chartered Accountant) படிப்பை தேர்வு செய்தான். வீட்டில் தாயும் தந்தையும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் ஏதோ காரணத்தை எண்ணி பயந்தவன் போல குடும்பத் தொழிலை பார்த்துக் கொள்ள மறுத்து விட்டு பிடிவாதமாக தான் விரும்பிய படிப்பையே எடுத்து படித்து முடித்தான். 

 அதில் அவனுடைய தந்தைக்கு கொஞ்சம் வருத்தமும் உண்டு. அவரை சமாதானப் படுத்த முயன்ற அவரின் மனைவி ஈஸ்வரியின் எந்த பேச்சும் அவர் மனதை குளிர்விக்கவில்லை. பின்னே அவர்களுக்கு இருப்பது ஹரிஹரன் ஒருவன் மட்டுமே. அவனும் தந்தையுடைய சொந்த தொழிலை பார்க்காமல் இப்படி வேறு ஏதோ ஒரு படிப்பை படித்தால் அதனால் அவருக்கு எப்படி மனமகிழ்ச்சி கிடைக்கும்?

  தனக்கு பின் தன்னுடைய மகன் தன்னுடைய தொழிலை பார்த்துக் கொள்வான் என்று அவர் எண்ணி இருக்க அதற்கு எதிராக ஹரிஹரன் செய்த அந்த செயல் அவர் மனதில் வருத்தத்தையே ஏற்படுத்தியது. ஹரிஹரனுக்கும் அது நன்றாக தெரியும். ஏனோ அவனால் தான் செய்தது தான் சரி என்று தந்தையிடம் மறுத்து வாதாடவும் முடியவில்லை. 

அவருக்காக அவன் ஆசைப்பட்ட படிப்பை படிக்காமலும் விட முடியவில்லை. பிறிதொரு நாளில் தந்தையை சமாளித்து விடலாம் என்று எண்ணியே அவன் அந்த படிப்பை படித்து முடித்து தனியாக ஒரு கம்பெனியையும் ஆரம்பித்து இப்பொழுது வெற்றிகரமாக அதை நடத்தியும் வருகிறான். தொழிலில் அவனுக்கு தெரியாதது என்ற பேச்சுக்கே இடம் இல்லை. 

அனைத்து விதமான கணக்கு வழக்குகளையும் கரைத்து குடித்து இருந்தான். அவனும் எல்லாரையும் போல நிம்மதியாக தான் இருந்தான் அவளை பார்க்கும் வரை. ஹரிஹரன் இதுவரை தன்னுடைய மனதில் இருப்பதை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. அவன் அந்த நிகழ்வை மறந்து போய் விட்டான் என்று அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்க அவன் மனமோ அவளை மறக்க மாட்டேன் என்று சண்டித்தனம் செய்து கொண்டு இருந்தது.

  அவனும் அவளை மறந்து விட வேண்டும் என்று என்னென்னவோ முயற்சிகளை செய்து பார்த்து விட்டான்.ஆனால் அது அவனால் முடியவில்லை.ஒரு மரத்தின் வேர் எப்படி நிலமெங்கும் பரந்து விரிந்து படர்ந்து இருக்குமோ, அதுபோல அவளின் நினைவுகளும் அவன் நெஞ்சம் முழுக்க பரவி இருந்தது.இத்தனை ஆண்டுகளாக அவன் செய்த அத்தனை முயற்சியும் தோல்வியில் தான் வந்து முடிந்திருந்தது. 

குளித்து முடித்து டிரெஸ்ஸிங் டேபிளுக்கு வந்தவன் காற்றில் பறந்த தன்னுடைய கேசத்தை ஒற்றை கையால் கோதி விட்டுக் கொண்டே கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய உருவத்தை பார்த்தான். அதில் இருந்த அவனது உருவம் மெல்ல மெல்ல மங்கி மறைந்து அவளின் உருவம் தெளிவாக தெரிந்தது. ஒற்றை கண்ணை மூடி திறந்து அவனை பார்த்து சிரிக்கிறாள்.

 “என்ன பெரிசு… நினைப்பு எல்லாம் எங்கே இருக்கு… பார்த்து போக மாட்டீங்களா?” ஒற்றை புருவம் ஏற்றி அவள் கேள்வி கேட்ட விதத்தில் அவனின் உதடுகள் அவனையும் அறியாமல் மென்மையாக அவளின் பெயரை உச்சரித்தது ‘வெண்ணிலா’ என்று. 

 மெல்ல தன்னை அவளின் நினைவில் இருந்து மீட்டவன் டைனிங் டேபிளுக்கு சென்று அமர்ந்தான். மகனுக்காக சாப்பிடாமல் காத்திருந்த விஸ்வநாதனும் மகன் வந்ததும் மனைவியை கண்ணாலேயே உணவு பரிமாற சொல்லி அழைப்பு விடுக்க தந்தைக்கும், மகனுக்கும் உணவு பரிமாறினார் ஈஸ்வரி.

  “அப்பா… நாளைக்கு சிவாவை பார்க்க கோயம்புத்தூர் வரை போக வேண்டி இருக்குப்பா… போய்ட்டு ஒரு இரண்டு நாளில் திரும்பி வந்துடுவேன்”

 “ம்” என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே பதிலாக வந்தது. 

எப்பொழுது ஹரிஹரன் விஸ்வநாதன் சொன்னதை கேட்காமல் பிடிவாதமாய் தனக்கு பிடித்த படிப்பை படித்தானோ அப்பொழுதே தந்தைக்கும் மகனுக்கும் இடையில் லேசான உரசல் வந்தது.அத்தோடு நில்லாமல் படிப்பு முடித்த கையுடன் தந்தையின் தொழிலுக்கு வர மறுக்கவே விரிசல் இன்னும் கொஞ்சம் அதிகமாகி அதன் பிறகு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை இப்படி தான் ஒற்றை வார்த்தைகளில் இருந்தது. 

 நன்றாக தெரிந்த ஒன்று தான் என்றாலும் ஈஸ்வரிக்கு உள்ளுக்குள் இதை நினைத்து பெரும் கவலை உண்டானது. வீட்டில் இருப்பது மூன்றே மூன்று பேர். இதிலும் ஒருவரோடு ஒருவர் பேசாமல் இருந்தால் எப்படி?… இதை யாரிடம் போய் எடுத்து சொல்லி புரியவைப்பது? தனக்கு விருப்பப்பட்ட படிப்பை படித்து அதையே தொழிலாக செய்து வருவதை தவிர இன்றளவும் ஹரிஹரன் வேறு எந்த தவறும் செய்தது கிடையாது.

குணத்தில் கூட குறை சொல்ல முடியாத மாணிக்கம் அவன்.எந்த வித கெட்டப் பழக்கமும் இல்லாத அருமையான பையன் அவன்.அப்படிப்பட்டவனை சொந்த தொழிலை பார்த்துக் கொள்ள மறுத்து விட்டான் என்ற ஒற்றை காரணத்திற்காக ஒதுக்கி வைக்கும் கணவரின் செயலை சரியெனப் படவில்லை தான். 

அதே போல கணவரின் கோபத்தில் நியாயம் இல்லை என்றும் அவரால் ஒதுக்க முடியவில்லை. நாளாக நாளாக ஒற்றை ஆளாய் தொழிலை பார்த்துக் கொள்ளவும் முடியாமல், அதற்காக உள்ள சொத்துக்களை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுமோ என்று உள்ளுக்குள் தவிக்கும் கணவரின் நிலை அவர் நன்றாக அறிந்த ஒன்றாயிற்றே. 

சீக்கிரம் இவர்களுக்குள் உள்ள இந்த பிணக்கு சரியாக வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுவதைத் தவிர அவருக்கு அப்பொழுது வேறு வழி தெரியவில்லை. சாப்பாட்டை உண்டு முடித்ததும் விஸ்வநாதன் அவருடைய பண்ணைக்கு கிளம்பி போய் விட அன்னையிடம் சொல்லிவிட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பியவன் நேராக சென்ற இடம் தன்னுடைய நண்பனின் மனநல மருத்துவமனைக்கு.

தேவதை வருவாள்…
Facebook Comments Box
Click to rate this post!
[Total: 1 Average: 1]

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here