Siragilla Devathai Episode 2 Tamil Novels

0
2504

ஹரிஹரன் டாக்டர் வசந்தின் நெருங்கிய நண்பன் என்பதால் அங்கே மருத்துவமனையில் அவனை யாரும் தடுக்கவில்லை. நேராக டாக்டரின் அறைக்குள் நுழைந்தான் ஹரிஹரன். இத்தனை சீக்கிரம் அதுவும் காலை நேரத்தில் நண்பனை வசந்தன் எதிர்பார்க்கவில்லை என்பது அவனது முகக் குறிப்பிலேயே தெரிந்தது.

 “ஏன்டா… கொஞ்சம் வெயிட் பண்ணி ரிசப்ஷன்ல சொல்லிட்டு அப்பறம் வரலாம் இல்லையா? . உள்ளே யாராவது பேஷன்ட் இருக்கும் போது இதே மாதிரி வந்து நின்று விடாதே…” எச்சரிக்கை போல சொன்னாலும் வசந்தின் முகத்தில் சிரிப்பு இருந்தது.

 “ஏன்டா இப்படி புளுகுற… உன் ஹாஸ்பிடலுக்கு வர ஒரே ஆளு நான் மட்டும் தான்… இதில என்னமோ உன்கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்துக்க ஏதோ ஆயிரக்கணக்கான பேர் வரிசை கட்டி நிற்கிற மாதிரி இல்ல பேசுற…” நண்பனை வாரியபடியே நிதானமாக எதிரில் இருந்த சேரில் அமர்ந்தான் ஹரிஹரன்.

“சரி சரி… மானத்தை வாங்காதே… என்ன விஷயம் சொல்லு” ஒரு நிமிடம் கண்களை இறுக மூடியவன் சேரில் சாய்ந்து அமர்ந்தவாறு ஒரே வார்த்தையில் பதில் அளித்தான்.

 “வெண்ணிலா”

 “இன்னும் அதே கனவு வருதா ஹரி…” வசந்தின் கேள்வியில் கவலை இருந்தது.

 “ம் ஆமா வசந்த்… இன்னிக்கு காலையில கூட அதே கனவு வந்துச்சு… கொஞ்சம் கூட மாறாம…” ஹரிஹரனின் குரலில் கொஞ்ச முன்பு இருந்த வேடிக்கைப் பேச்சு இப்பொழுது துளியும் இல்லை.

 “நான் கொடுத்த மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடறியா… மெடிட்டேஷன் எல்லாம் சரியாய் தானே செய்ற… ?” மருத்துவனாக மாறி கேள்விகளை கேட்கத் தொடங்கினான் வசந்த்.

 “எல்லாம் சரியா நீ சொன்ன மாதிரியே தான் செய்றேன்டா” சலிப்போடு வெளிவந்தது ஹரிஹரனின் குரல்.

“அப்புறம் எப்படி மறுபடி அதே கனவு வருது…” மருத்துவனான வசந்த் கொஞ்சம் குழம்பித் தான் போனான்.

 “உன்னோட மருந்து மாத்திரை இதனால எல்லாம் என்னோட மனசில இருந்து என் வெண்ணிலாவை மறக்க வச்சுட முடியுமா? அது உன்னால் மட்டும் இல்ல யாராலும் முடியாது…” ஹரிஹரனின் குரலில் தெரிந்த உறுதி வசந்த்தை யோசிக்க வைத்தது.

 “ஹரி குழந்தை மாதிரி பேசாதே… நீ அவளை பார்த்தது ஐந்து வருடங்களுக்கு முன்பு… இப்பொழுது அவள் எங்கே இருக்கிறாள்னு கூட தெரியாது… ஒரு… ஒருவேளை அவளுக்கு கல்யாணம் கூட ஆகி இருக்கலாம். அப்படி இருக்கும் போது இன்னொருவனின் மனைவியை பற்றி நீ…”

“அந்த வார்த்தையை மட்டும் சொல்லாதே வசந்த்… என்னால் தாங்க முடியாது… அவள் என்னுடையவள் என்ற எண்ணத்தோடு என் வாழ்க்கையின் கடைசி நொடி வரை வாழ்ந்து விடுவேன். ஆனால் அவள் எனக்கு இல்லை என்ற எண்ணத்தோடு ஒரு நாள்… ஒரு நிமிடம் கூட என்னால் வாழ முடியாது”

 “அப்படினா நமக்கு இருக்கிற ஒரே வழி அது தான்…”

 “என்னடா சொல்ற? கொஞ்சம் புரியற மாதிரி தான் சொல்லி தொலையேன்…” அலுத்துக் கொண்டான் ஹரிஹரன்.

“அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்து விட்டால் அவள் இனி உனக்கு கிடைக்க போவதில்லை என்பதும் உன் மனதில் பதிந்து விடும். அதன் பிறகு இப்படி ஒரு கனவு உனக்கு வரவே வாய்ப்பு இல்லை… அவளை பற்றிய எண்ணங்களை நீ விடாமல் இன்னும் உனக்குள் பொத்திப் பொத்தி வைத்து இருப்பதனால் தான் உனக்கு இப்படி ஒரு நிலை.

 உன் மனதில் இருப்பதை எல்லாம் யாரிடமாவது மனசு விட்டு பேசுன்னு எத்தனை தடவை சொல்றேன்… ஒரு டாக்டர் என்கிட்ட கூட அந்த பொண்ணை பத்தி எதுவுமே சொல்ல மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிற… சொன்னால் கேளு ஹரி… உன் மனதில் இருப்பதை வெளிப்படையாக யாரிடமாவது சொல்லி விடு. அடம் பிடிக்காதே ஹரி…”

“இல்லை வசந்த்… அவளை பற்றிய ஒவ்வொரு நிகழ்வும் எனக்கு பொக்கிஷங்கள் அது யாரிடமும் பகிர்ந்து கொள்வதற்கு இல்லை… எனக்கு மட்டுமே சொந்தம்… அப்படி பகிர்ந்து கொள்ள எனக்கு விருப்பமும் இல்லை” அழுத்தம் திருத்தமாக சொன்னான் ஹரிஹரன்.

 “இந்த விஷயத்தில் நீ ரொம்பவும் பிடிவாதம் பிடித்தால் இதை பற்றி உன் அப்பா அம்மாவிடம் நான் சொல்ல வேண்டி இருக்கும் ஹரி…” வசந்த்தின் குரலில் உறுதி இருந்தது.

 “வேண்டாம் வசந்த்… அதை மட்டும் செய்து விடாதே…” பதட்டமானான் ஹரிஹரன்.

“அப்படியானால் முதலில் அவளை தேடிப் புறப்பட்டு போ…”

 “இல்லை வசந்த்… அது…”

 “அப்ப எனக்கு வேற வழியில்லை ஹரி… இன்னிக்கே நான் உங்க வீட்டுக்கு வரேன். நாம இரண்டு பேரும் ஒண்ணா கிளம்பிப் போய் அந்தப் பெண்ணை தேடி கண்டுபிடிக்கலாம்…”

 “வீட்டுக்கெல்லாம் நீ வர வேண்டாம் வசந்த்…நான் போகிறேன்.ஆனால் நீ எதற்கடா உடன் வருகிறாய்?”

 “நானும் உன்னுடன் வரத் தான் போகிறேன். உன்னை எல்லாம் நம்ப முடியாது…”

 “உனக்கு எதற்கு வீண் அலைச்சல்? உனக்கு இங்கே எவ்வளவு வேலை இருக்கும்”

 “சும்மா என்னை கழட்டி விடப் பார்க்காதே… உன்னை விட எனக்கு ஒன்றும் இந்த வேலை முக்கியம் இல்லை. நானும் உன் கூட வந்து தான் தீருவேன். நாளை நாம இரண்டு பேரும் கிளம்பி போகிறோம் சரி தானா” நண்பனின் அக்கறையில் நெகிழ்ந்து போனான் ஹரிஹரன்.

 “இல்லை வசந்த் நாளை கோயம்புத்தூர் போகிறேன்டா… நம்ம சிவா வர சொல்லி இருக்கிறான்… போய் பார்த்துட்டு ஒரு இரண்டு நாளில் திரும்பி விடுவேன்… அதன் பிறகு போகலாம்”

 “உன்னை நம்பலாமா?”

“பின்னே வேறு வழி… அது தான் வீட்டிற்கு வந்து அப்பா அம்மாவிடம் சொல்லுவேன் என்று மிரட்டுகிறாயே…” ஹரிஹரனின் குரலில் அப்பட்டமான எரிச்சல் இருந்தது.

 “உன்னோட நல்லதுக்கு தான் ஹரி…” மருத்துவனாக நண்பனின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பேசினான் வசந்த்.

“எது எனக்கு நல்லது வசந்த்? அவள் எனக்கு இல்லை என்று என்னுடைய மனதை தேற்றிக் கொள்வதா” ஹரிஹரனின் குரலில் ஆதங்கம் இருந்தது.

 “உண்மையை ஏற்றுக் கொள்ள பழகி கொள்ள வேண்டும் ஹரி…” நிதானமாக நண்பனுக்கு எடுத்து சொன்னான் வசந்த்.

“எனக்கு இது தான் சந்தோசம்னா இப்படியே விட்டு விட வேண்டியது தானே…”

 “இது பொய்யான சந்தோசம் ஹரி… இது நிலைக்காது…” பொறுமையாக எடுத்து சொன்னான் வசந்த்.

 “அப்படி சொல்லாதே வசந்த்… அதை என்னால் தாங்க முடியவில்லை…” ஹரிஹரனின் குரலில் இருந்த துயரம் வசந்தை அசைத்து பார்த்தது. அதற்காக இப்படியே விட்டால் நண்பனின் வாழ்வு கேள்விக்குறியாகி விடும் என்பதால் அடுத்து ஆக வேண்டியதை பற்றி யோசித்தான்.

 “ஹரி எனக்கு ஒரு சந்தேகம் பதில் சொல்றியா”

 “கேளுடா வசந்த்”

“உனக்கு அந்த பெண்ணை ஐந்து வருடங்களாக தெரியும்… ஆனால் இந்த கனவு உனக்கு ஏன் கடைசி இரண்டு வருடமா மட்டுமே வருது. அதுக்கு முன்னாடி ஏன் உனக்கு அப்படி ஒரு கனவு வரவில்லை. ? இது ஒரு டாக்டரா என்னோட சந்தேகம்”

 “எனக்கு அவளை ஐந்து வருடங்களுக்கு முன்பே தெரிந்தாலும் அவளை எனக்கு திருமணம் செய்து தர இரு வீட்டாரும் பேசியது இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் வசந்த்… அதற்கு அப்புறம் தான் எனக்கு இந்த கனவு வர ஆரம்பிச்சது… ஆனா அதற்கு அப்புறம்…” வேதனையோடு விழிகளை மூடிக் கொண்டான்.

 “ஓ… சரிடா… நீ முதல்ல போய் சிவாவை பார்த்துவிட்டு வா… அதன் பிறகு நாம இரண்டு சேர்ந்து அந்த பொண்ணோட ஊருக்கு போகலாம்” நண்பனின் வார்த்தைக்கு மறுத்து பேச முடியாமல் அங்கிருந்து கனத்த இதயத்தோடு கிளம்பினான் ஹரிஹரன்.

 ஹரிஹரன் இருதலைகொள்ளியாக தவித்துக் கொண்டிருந்தான். அவனால் வெண்ணிலாவுக்கு வேறு திருமணம் ஆகி இருக்கும் என்பதை ஏற்கவும் முடியவில்லை.அதே சமயம் இதே கனவு தொடர்ந்து வருவதால் அவளின் நினைவுகள் கொடுக்கும் தாக்கத்தையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதிலிருந்து மீளுவதற்காக வசந்திடம் வந்தது தவறோ என்று இப்பொழுது சிந்திக்கத் தொடங்கினான்.காலம் கடந்த சிந்தனை தான்.இருந்தும் என்ன செய்ய… நண்பன் தன்னுடைய நன்மைக்குத்தான் இதெல்லாம் செய்கிறான் என்பது புத்திக்கு தெரிந்தாலும்,மனமோ அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

 தேவதை வருவாள்….

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here