Siragilla Devathai Tamil Novels 10

0
1817

அவளை பார்த்ததும் துள்ளிய மனதை கஷ்டப்பட்டு அடக்கி முகத்தை வேண்டா வெறுப்பாக  வைத்துக் கொண்டு அவளை நோக்கி சென்றான்.அடிபட்ட இடத்தை ஒரு கையால் தடவிக் கொடுத்தவாறே அவளிடம் போய் நின்றான்.

“ஏன் தாயே பரதேவதை அப்படி என்ன தாயே உனக்கு வேண்டுதல்? எப்ப பாரு கல்லை வச்சு என் மண்டையை உடைக்கணும்ன்னு  கங்கணம் கட்டிக்கிட்டு திரியிற.தினம் கல் அடி வாங்குற அளவுக்கு என் தலை ஒண்ணும் ஸ்ட்ரோங் இல்லை.தயவு செஞ்சு அடிக்காம என்னை கூப்பிடு.” பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு பேசினான் ஹரிஹரன்.

“ரொம்ப வலிக்குதா? சாரி…நான் வேணும்னு அடிக்கலை உங்களை எப்படி கூப்பிடறதுன்னு தெரியாம தான் அடிச்சேன்.” மனமாற வருந்தி சொல்லுகிறாள் என்பதை அவளது குரலில் இருந்து உணர முடிந்தது.

“என் பேரு ஹரி” வந்த வாய்ப்பை விடாமல் தன்னுடைய பேரை அவளிடம் சொல்லி மனதுக்குள் காலரை தூக்கி விட்டுக் கொண்டான் ஹரிஹரன்.
“அதெப்படி வயசுல பெரியவங்களை அப்படி பேர் சொல்லி கூப்பிட முடியும்.அதெல்லாம் தப்பு.எங்க அய்யனுக்கு தெரிஞ்சா கோபப் படுவாங்க.” என்று சொல்லி அவனை பேர் சொல்லி அழைக்க மறுத்துவிட்டாள் அவள்.

“அப்போ பெருசுன்னு சொன்னா உங்க அய்யா கோபப்பட மாட்டாரா?” சரியான இடத்தில் தாக்கினான் ஹரிஹரன்.

“அச்சச்சோ! அதை மட்டும் சொல்லி விடாதீங்க…எங்க அப்பா உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாரு.” பயத்தில் வியர்வை வேர்த்து வழிந்தது அவளுக்கு.
“அப்பானா ரொம்ப பயமோ?” அவளை பற்றி கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள முயன்றான்.

“இப்போ உங்களுக்கு அந்த நிலம் வேணுமா இல்லை உங்க கேள்விக்கு பதில் வேணுமா?” அவன் எய்த அம்பை புஸ்வானம் ஆக்கினாள் அவள்.“உன்கிட்ட எதுவும் ஐடியா இருக்கா? சொல்லு சொல்லு” பரபரத்தான் ஹரிஹரன்.

“ஒரு வேளை இந்த இடத்தை வேறு யாராவது பிளாட் போட்டு விற்பதற்காக கேட்டு இருந்தா கண்டிப்பா இப்படி வந்து பேசி இருக்க மாட்டேன்.ஏற்கனவே எங்க ஊரில் பாதி இடம் வறண்டு போச்சு.நீங்க அந்த இடத்தை வாங்கி விவசாயத்துக்கு தான் பயன்படுத்த போறீங்கனு தெரிஞ்சதால மட்டும் தான் இப்போ உங்ககிட்ட வந்து பேசுறேன்.” அழுத்தமாக உரைத்தாள் அவள்.

‘மேலே சொல்’ என்பது போல ஒன்றும் பேசாமல் அமைதி காத்தான் ஹரிஹரன்.

“அந்த இடம் என் பிரண்டோடது தான்.அவளோட வீட்டில் வேறு ஆண் வாரிசு கிடையாது.அவங்க அப்பா அதை நம்பி தான் அவளோட கல்யாணத்தை வச்சு இருக்கார்.இங்கே எங்கள் ஊர் பக்கத்தில் எல்லாம் கல்யாணத்தின் போது நகை பணத்தை விட பொண்ணுக்கு சீரா எவ்வளவு நிலம் வரும்னு பார்ப்பாங்க… இப்போ அவங்க வீடு ரொம்ப கஷ்டத்துல இருக்கு.இருக்கிற இந்த நிலத்தை வித்துட்டா மறுபடி அவளோட கல்யாணத்தின் போது அவங்களால நிலம் வாங்க முடியுமா? அவ கல்யாணம் இன்னும் ஒரு இரண்டு வருஷம் கழிச்சு செய்வாங்க.அதுவரை நீங்க கொடுத்த பணம் செலவாகாம அப்படியே இருக்குமா? இல்லை நிலத்தோட மதிப்பு உயராம அப்படியே இருக்குமா? ரெண்டுமே நடக்க வாய்ப்பு இல்லை.அதனால தான் அவங்க இந்த இடத்தை விற்க மறுக்கறாங்க.” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் அவள்.

“ஓ இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா? இது தெரியாம போச்சே”

“தெரிஞ்சுடுச்சு இல்ல … இப்ப என்ன செய்றதா இருக்கீங்க”

“அதை இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிஞ்சுக்குவ” என்று சொன்னவன் நொடியும் தாமதிக்காமல் மீண்டும் அவரின் வீட்டை நோக்கி சென்றான்.
அவன் போவதையே நின்று பார்த்துக் கொண்டு இருந்தவள் மின்னலென அங்கிருந்து புறப்பட்டு அவளின் வீட்டை நோக்கி ஓடினாள்.

மாலை வீட்டிற்கு வந்து அந்த இடத்தை தருவதற்கு அதன் உரிமையாளர் ஒப்புக் கொண்ட விஷயத்தை சொன்னதும் விஸ்வநாதனுக்கு தலைகால் புரியாத அளவிற்கு பெருமிதம். பார்வதிக்கும் மகனின் சாதித்து விட்டானே என்ற பெருமையும் பூரிப்பும் முகத்தில் பொங்கி வழிந்தது.விஷயத்தை கேள்வி பட்டு நம்ப முடியாமல் வீட்டிற்கு ஓடோடி வந்த ப்ரோக்கரை பால் பாயாசத்துடன் வரவேற்றனர் வீட்டினர்.

“எப்படி தம்பி? எப்படி அவரை சம்மதிக்க வச்சீங்க? நாம காலையில் பேசுனப்போ கூட அவர் தர முடியாதுன்னு தானே சொன்னார்.அப்புறம் எப்படி?” தெரியாவிட்டால் தலை வெடித்துவிடும் போல இருந்தது அவருக்கு.

“அதெல்லாம் சொல்றேன் உட்காருங்க..முதலில் பாயசத்தை குடிங்க… என் பையன் தொழிலில் சாதித்த முதல் வெற்றி” என்று பெருமை பொங்க மகனை பார்த்தபடியே கூறினார் விஸ்வநாதன்.
தந்தை தாயின் மகிழ்ச்சி ஹரிஹரனுக்கு சந்தோசமே ஆனால் இதற்கெல்லாம் காரணம் அவள் இல்லையா’ என்று மனதுக்குள் நினைத்தவன் இன்னும் அவளது பெயரை தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோமே மறுமுறை அவளை பார்க்கும் பொழுது கண்டிப்பாக அவளின் பெயர் என்ன என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

கடகடவென்று பாயசத்தை குடித்து முடித்தவர் , “ குடிச்சுட்டேன் இப்போ சொல்லுங்க சார்” என்று காரியத்தில் கண்ணாக கேட்டார் ப்ரோக்கர்.
“தெரிந்து கொள்ளாவிட்டால் தூங்க மாட்டீர்கள் போல” என்று அவரை கேலி பேசி விட்டு மகன் நிலத்தை விற்க ஒத்துக் கொள்ள வைத்த விதத்தை விவரிக்கலானார்.

பேசிமுடித்து பத்தே நிமிடத்தில் மீண்டும் தன் முன்னால் வந்து நிற்கும் ஹரிஹரனை பார்த்த அந்த பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன தம்பி இப்பொழுது தானே சொன்னேன்…நிலத்தை விற்க மனமில்லை.மறுபடி மறுபடி இப்படி வந்து என்னை சங்கடப் படுத்துறீங்களே.இது உங்களுக்கே நல்லா இருக்கா?”

“தொந்தரவுக்கு மன்னிக்கணும் அய்யா…கடைசியா ஒரே ஒரு முயற்சி.இதிலும் உங்களுக்கு விருப்பம் இல்லைனா அதன் பிறகு நானோ அல்லது என் வீட்டு ஆட்களோ இங்கே வந்து உங்களை தொந்தரவு செய்ய மாட்டோம்.ஒரு ஐந்து நிமிடங்கள் மட்டும் கொடுங்கள். நான் சொல்ல வந்ததை சொல்லி விட்டு கிளம்பி விடுகிறேன்” என்று சொன்னவனை மறுக்க முடியாமல் வாசலில் இருந்த கயிற்று கட்டிலில் அமர சொன்னார் அவர்.“அய்யா இப்போ உங்களுக்கு அந்த நிலம் தேவை படுவது உங்கள் பெண்ணிற்காக தான் இல்லையா?அதுவும் அவங்களோட கல்யாணத்திற்காக…அப்படினா உங்க நிலத்துக்கு பதிலா இதே ஊரிலே வேறு ஒரு நல்ல நஞ்சை நிலமா ரெண்டு ஏக்கர் நான் வாங்கி கொடுத்து விடுகிறேன்.அது தவிர நீங்கள் உங்கள் பெண்ணின் திருமணத்திற்கு  பணமாக எவ்வளவு கேட்டாலும் சரி ஒரு அண்ணனாக அதையும் தருகிறேன்.இப்பொழுது உங்களுக்கு சம்மதமா?” வெறும் வாய் வார்த்தையாக சொல்லாமல் உணர்ந்து பேசினான் ஹரிஹரன்.

ஹரிஹரனின் பேச்சில் கண்களில் கண்ணீர் வழிய தன்னுடைய தலையை அசைத்து சம்மதம் தெரிவித்தார் அதன் உரிமையாளர்.“தம்பி பணத்துக்காக இல்லை… அண்ணன் முறையில் இருந்து செய்கிறேன் என்று சொன்னாய் இல்லையா அந்த வார்த்தைக்காக நான் சம்மதிக்கிறேன்.” என்று சொன்னவரின் கண்களில் இப்பொழுது ஹரிஹரனை பார்க்கும் பொழுது பாசம் மட்டுமே தெரிந்தது.இது தான் கிராமத்து மக்களின் உள்ளம்.அவர்கள் வெறும் வாய் வார்த்தையாக எதையும் சொல்வது இல்லை.ஆண் வாரிசு இல்லாத தனக்கு கடவுள் அனுப்பி வைத்த மகனாகவே ஹரிஹரனை அவர் பார்த்தார்.

விஸ்வநாதன் சொல்லி முடித்ததும் ப்ரோக்கருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. “எப்படியோ தம்பி ஒரு நல்ல திறமையான தொழில் அதிபரின் மகன் என நிருபித்து விட்டீர்கள் என்று ஆளாளுக்கு அவனை பாராட்ட அவன் மனமோ இதற்கு எல்லாம் காரணமானவளை எண்ணிக் கொண்டு இருந்தது.

தேவதை வருவாள்….

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here