Siragilla Devathai Tamil Novels 17

0
1540

அத்தியாயம் 17

சில மணிநேர பயணத்திற்கு பிறகு கார் அவர்களின் வீட்டை வந்து அடைந்தது. ஹரிஹரன் வரப் போகும் விஷயத்தை ஏற்கனவே தகவல் சொல்லி இருந்ததால் வீடு சுத்தமாக துடைத்து, இவர்களுக்கான உணவும் தயாராக இருந்தது. குளித்து முடித்து வந்ததும் இருவரும் உணவை மௌனமாகவே உண்டு முடித்தனர்.

வசந்த்திற்கு ஹரிஹரனின் மௌனத்திற்கான காரணம் புரியவில்லை. ‘இவனுடைய அமைதி ஆபத்து ஆயிற்றே! ஒருவேளை வெண்ணிலா இப்பொழுது வேறு ஒருவரின் மனைவி என்பதால் பார்க்க வர மாட்டேன் என்று சொல்லி விடுவானோ’ என்று வசந்த்தின் மனதில் ஒரு ஐயம் ஏற்பட்டது.

சாப்பிட்டு முடித்தவுடன் வசந்த் கிளம்பி தயாராக, ஹரிஹரனோ அறையை விட்டு வெளியே வரவே இல்லை. வசந்தின் மூளையில் அபாய மணி அடிக்க வேகமாக சென்று ஹரிஹரனின் அறைக்குள் பார்த்தான். அறைக்குள் அவன் கண்ட காட்சியில் சிரிப்பதா இல்லை அழுவதா என்று புரியாமல் திகைத்துப் போனான்.

நண்பனின் மனநிலையை அவனால் தெளிவாக உணர முடிந்தது.தன்னுடைய காதலியை பார்க்கப் போகும் நினைவில் தன்னை அலங்கரித்துக் கொள்கிறான் என்ற எண்ணம் தோன்றிய அதே நொடி ஹரிஹரனின் மீது அவனுக்கு பரிதாபமும் தோன்றியது.இப்பொழுதும் தானும் அவன் மீது பரிதாபப்பட்டு பேசினால் இவனை இந்த நிலையிலிருந்து மீட்பது கடினம் என்பதை உணர்ந்தவன் கோபத்துடன் பேசத் துவங்கினான்.ஹரிஹரன் கண்ணாடியின் முன் நின்று தலையை சீவுவதும், பின் கலைப்பதும் பிறகு மீண்டும் சீவுவதுமாக இருந்தான். ஏற்கனவே போட்டு இருந்த சட்டையை கழட்டி விட்டு அங்கே இருந்த சட்டைகளில் சிலதை போட்டு பார்த்து இருக்கிறான் என்பது கட்டிலில் குமிந்து கிடந்த சட்டைகளின் மூலம் உணர முடிந்தது.

“டேய் கிளம்புடா நேரம் ஆச்சு” வசந்த் குரலில் அடக்கப்பட்ட ஆத்திரம் இருந்தது.

“ஒரு ஐந்து நிமிஷம் வசந்த்” வசந்தின் பொறுமையை மேலும் சோதித்தான் ஹரிஹரன்.

“இப்போ எதுக்குடா இப்படி இம்சை பண்ற? சீக்கிரம் கிளம்புடா”

“இரு வசந்த்… ஒருவேளை நாம போகும் போது அங்கே வெண்ணிலா இருந்தாலும் இருக்கலாம் இல்லையா? ரொம்ப நாள் கழிச்சு அவ என்னை பார்க்க போறா. அவ பார்க்கும் போது அவளுக்கு என்னை அடையாளம் தெரியணும் இல்ல. அதான்” ஹரிஹரனிடம் பரபரப்பு இருந்தது.

“டேய் இதுக்கு மேலே என்னை சோதிக்காதே சொல்லிட்டேன். கிளம்பு” . ஒருவழியாக ஹரிஹரனின் கைகளை பிடித்து தரதரவென இழுக்காத குறையாக இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.

வசந்த் நண்பனின் நிலையை எண்ணி கலங்கியபடி இருக்க ஹரிஹரனுக்கு அப்படி எந்த வருத்தமும் இல்லை. அவன் மீண்டும் வெண்ணிலாவை சந்திக்க போகும் மகிழ்ச்சியில் இருந்தான். இதுநாள் வரை அவளை மீண்டும் சந்திக்கவே கூடாது என்று மனதுக்குள் உறுதி எடுத்துக் கொண்டவன் மனதில் இருந்ததை எல்லாம் வெளியே கொட்டி விட்டதாலோ என்னவோ இப்பொழுது ஹரிஹரனின் மனதில் எந்த விதமான குழப்பமும் இல்லை. மீண்டும் தன்னுடைய மனதுக்கு இனியவளை காணப்போகும் அந்த மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருந்தான்.

ஹரிஹரன் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் ஊரார் அவனை சுற்றி வளைத்துக் கொண்டு நலம் விசாரிக்க அவர்கள் கேள்விகளுக்கு முடிந்த அளவு பொறுமையுடன் பதில் அளித்து விட்டு அங்கிருந்து கிளம்பினான். ‘யாரிடம் சென்று வெண்ணிலாவின் வீட்டிற்கு செல்லும் வழியை கேட்பது?’ என்று அவன் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அவனை எதிர் கொண்டார் காவக்காரன் முனியன்.

‘இவருக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்கும்’ என்ற எண்ணத்துடன் மனதின் மகிழ்ச்சியை வெளியில் காட்டி விடாமல் கவனத்துடன் அவரிடம் முதலில் பொதுப்படையாக பேசினான் ஹரிஹரன். வசந்த் கண்ணைக் காட்ட மெதுவாக வெண்ணிலாவின் வீட்டைப் பற்றிக் கேட்டான் ஹரிஹரன்.

முனியன் ஹரிஹரனை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, “அவங்க இங்கே இல்லையே” என்று கூற, வசந்தன் உள்ளுர மகிழ்ந்து போனான்.

“அது எங்களுக்கு தெரியும் அய்யா… அவங்க அப்பா வீடு இங்கே தானே? அதுக்கு வழி சொல்லுங்க நாங்க வெண்ணிலாவின் அப்பாவை தான் பார்க்க வந்தோம்” முந்திரிக் கொட்டை போல பதில் அளித்தான் வசந்த்.

“அவரையும் சேர்த்து தான் சொல்றேன் தம்பி… அவங்க எல்லாரும் ஊரை விட்டு காலி பண்ணிட்டு போய்ட்டாங்க”

“எப்போ போனாங்க? எங்கே போனாங்க? ஏதாவது விவரம் தெரியுமா உங்களுக்கு?” பதட்டத்தில் குரல் நடுங்க கேட்டான் ஹரிஹரன்.

“அது ஒரு இரண்டு வருஷம் இருக்கும் தம்பி… ஒரு நாள் விடிஞ்சு பார்த்தப்போ அவங்க வீடு பூட்டி இருந்துச்சு. ஊர்ல எல்லாரும் அவங்க வீட்டை காலி பண்ணிட்டு போய்ட்டாங்கன்னு சொன்னாங்க. சரியான விவரம் ஊருக்குள் யாருக்கும் தெரியலைங்க”

சற்று முன் ஹரிஹரனின் முகத்தில் பொங்கி வழிந்த உற்சாகம் எங்கே போயிற்று என்பதே தெரியாமல் முகம் இருண்டு விட்டது. ‘இனி அவளை எங்கே போய் தேடிக் கண்டுபிடிப்பது?’ என்று சோர்ந்து போய் ஒன்றுமே பதில் பேசாமல் திரும்பி வந்து விட்டான் ஹரிஹரன்.

வசந்தின் நிலைமையோ இன்னும் மோசமாக இருந்தது. சும்மா இருந்தவனின் மனதில் பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டோமோ என்று உளமாற வருந்தினான் வசந்த். ஹரிஹரனுக்கு உள்ளுக்குள் ஏதோ எண்ணம் தோன்ற சட்டென முனியனின் பாதையை மறித்து அவரிடம் பேசலானான்.“அய்யா இங்கே இருக்கும் அவர்களின் நிலம் வீடு இதை எல்லாம் யாருடைய பராமரிப்பில் இருக்கிறது?”

“இங்கே அவர்களுடைய சொத்து எல்லாவற்றையும் விற்று விட்டார்கள் போல தம்பி. இப்பொழுது அதன் உரிமையாளர்கள் வேறு யாரோ”

“அவங்க யார்?”

“அதெல்லாம் எனக்கு தெரியாது தம்பி. வாங்கினவங்க உள்ளூர் கிடையாது. உங்களை மாதிரியே வெளியூர். எப்பவாவது இங்கே வருவாங்க” என்றவர் சற்று இடைவெளி விட்டு, “தோப்புக்கு வரீங்களா தம்பி… இல்லைனா இங்கேயே இருங்க நான் போய் இளநீர் வெட்டி எடுத்து வரேன்”

“வேணாம்… நாங்க இப்பவே ஊருக்கு போகணும்” இடைவெட்டி பேசினான் வசந்த்.

முனியன் அங்கிருந்து நகர்ந்ததும், “உடனே போகணுமா வசந்த்… ஒரு ரெண்டு நாள் இங்கேயே இருந்து வெண்ணிலாவை பற்றி ஏதேனும் விசாரிக்க முடிந்தால் விசாரித்து விட்டு அப்புறம் கிளம்பலாமே” கிளம்பும் எண்ணமில்லாமல் எப்படியாவது தன்னுடைய காதலியை பற்றி தெரிந்து கொள்ள ஏதேனும் வழி கிடைக்குமா என்ற ஏக்கத்தோடு பேசினான் ஹரிஹரன்.

“எனக்கு உன்னோட மனசு புரியுது ஹரி. எனக்கு நாளைக்கு சென்னைல ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. எனக்கு இப்போ நீ இருக்கிற மனநிலைல உன்னை தனியா விட்டுட்டுப் போக ஒரு டாக்டராகவும் சரி ஒரு நண்பனாகவும் சரி என்னால முடியலை. அதனால் இப்போ நீ என்கூட கிளம்பி வா. நாளைக்கு மீட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் வேணும்னா மறுபடி இங்கே வந்து விசாரிக்கலாம். இந்த இடத்தை இப்போ யார் வாங்கி இருக்காங்களோ அவங்ககிட்டயே விசாரிக்கலாம்”

ஹரிஹரனின் முகத்தில் இன்னும் தெளிவு வராததை கண்ட வசந்த் மேலும் பேசி நண்பனுக்கு புரிய வைக்க முயற்சித்தான். “ இதோ பார் ஹரி உன்னை விட வெண்ணிலாவை பார்க்க வேண்டும் என்பதில் நான் ரொம்ப உறுதியா இருக்கேன். அதனால இப்போ வா கிளம்பி ஊருக்கு போகலாம். என்னை நம்பு” என்று அழுத்தமாக உரைத்தவன் நண்பனுடன் அன்றே அங்கிருந்து புறப்பட்டும் விட்டான்.

ஹரிஹரன் காதலின் சக்தியோ என்னவோ வெண்ணிலாவை பற்றி அவனுக்கு அறிய நேர்ந்தது. ஆனால் அவன் கொஞ்சமும் எதிர்பாரா இடத்தில் இருந்து… அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில்…

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here