Siragilla Devathai Tamil Novels 19

0
1828

அத்தியாயம் 19

ஹரிஹரனின் பேச்சில் உள்ள அர்த்தத்தை உணர்ந்து கொள்ள வசந்திற்கு சில நிமிட இடைவெளி தேவையாக இருந்தது. ‘இது எப்படி சாத்தியம்? ஹரிஹரன் சொன்னதை வைத்துப் பார்க்கும் பொழுது அந்தப் பெண் மென்மையின் மறு இலக்கணமாக கொஞ்சம் துறுதுறுவென்று இருப்பாள் என்று தான் வசந்த் நினைத்துக் கொண்டு இருந்தான்.ஆனால் இப்பொழுது தான் கேட்ட குரலில் இருந்த வஞ்சம்?இல்லை ஆத்திரம்…ஊஹும் அதுவும் இல்லை.. வெறிஎன்று தான் சொல்ல வேண்டும்…இது எப்படி இவன் சொன்ன அந்த தேவதைக்கு பொருந்தும்’ என்று குழம்பிப் போனான் வசந்த்.

அவளைப்பற்றி வெறுமனே கேள்விப்பட்ட தனக்கே இப்படி இருந்தால் ஹரிஹரனின் நிலைமையை வசந்தால் உணர முடிந்தது. தான் காதலித்த பெண், அதுவும் அவளை ஒருவன் தேவதையாக நெஞ்சில் வைத்து பூஜித்துக் கொண்டு இருக்கும் நிலையில் அவள் இப்படி மாறி இருப்பதை அறிய நேரும் போது ஏற்படும் அதிர்ச்சி இது என்பதை உணர்ந்து கொண்டான். ஆனால் அதற்காக இதை இப்படியே விட முடியாதே?

அதே நேரம் அருகில் இருந்த சிவாவின் முகத்தை பார்த்தான் வசந்த்.சிவாவுக்கு நடப்பது எதுவும் துளியும் புரியவில்லை என்பது அவனது முக பாவனையிலேயே தெரிந்தது.

‘தன்னை மிரட்டி வந்து இருக்கும் கேசட்டில் ஒலித்த பெண் குரலை கேட்டு ஹரிஹரன் ஏன் இவ்வளவு அதிர்ச்சியாக வேண்டும்?’ என்ற கேள்வியை தாங்கியபடி இருந்தது சிவாவின் முகம்.

ஒரு பக்கம் சிவா, மறுபக்கம் ஹரிஹரன் இருவருமே வசந்திற்கு நண்பர்கள் தானே! இதில் ஒருவனுக்கு மட்டும் நன்மை அளிக்க கூடிய முடிவாக எடுப்பது கடினம். ஏற்கனவே மனதளவில் பாதிக்கப் பட்டு இருக்கும் நண்பனை தான் முதலில் கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஹரிஹரனின் அருகில் சென்று கண்களாலேயே சிவாவையும் அழைத்து பேச ஆரம்பித்தான்.

ஹரிஹரனின் இந்த அதிர்ச்சிக்கு காரணம் புரியாமல் குழம்பி நின்ற சிவா வசந்தின் கண் அசைவில், தன்னுடைய குழப்பங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு ஹரிஹரனின் அருகில் போய் அமர்ந்தான்.

“டேய் ஹரி! ரிலாக்ஸ்… ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற? எதை வச்சு இது வெண்ணிலாவோட குரல்னு சொல்ற? இது வேற யாரோட குரலா கூட இருக்கலாம் இல்லையா?” ஒரு மனநல மருத்துவராக முடிந்தவரை ஹரிஹரனை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயன்றான் வசந்த்.

“இல்லை வசந்த் எனக்கு நல்லா தெரியும். இது அவ குரல் தான். அஞ்சு வருஷமா என் காதில் ஒலிச்சுக்கிட்டு இருக்கிறது அவளோட குரல் தான். எனக்கு துளி கூட சந்தேகமே இல்லை.” ஆணித்தரமாக பேசினான் ஹரிஹரன்.

“ஹரி ஒரு வேளை அந்த பொண்ணை போலவே குரல் இருக்கிற வேற யாராவது இருக்கலாம் இல்லையா? நீ சொன்னதை வச்சு பார்க்கும் போது வெண்ணிலா ரொம்ப பயந்த சுபாவம், சாப்ட் நேச்சர், கலகலன்னு இருக்கிற பொண்ணு அந்த பொண்ணு ஏன் இப்படி எல்லாம் பேசப் போகுது? கொஞ்சம் பொறுமையா யோசி ஹரி” ஹரிஹரனை இயல்புக்கு கொண்டு வர அவரை பேச வைக்கும் முயற்சியில் ஈடுபட்டான் வசந்த்.

“வசந்த் ப்ளீஸ்! என் மனசு பொய் சொல்லாது. எனக்கு நல்லா தெரியும். இது என் வெண்ணிலாவோட குரல் தான். அவள் குரலில் கொஞ்சம் கடுமையும், வன்மமும் இருக்கு தான். அதனால எல்லாம் இது வெண்ணிலா குரல் இல்லைன்னு ஆகிடுமா என்ன?” ஹரிஹரனின் குரலில் இருந்த உறுதி வசந்த்தை கொஞ்சம் அசைத்துப் பார்த்தது.

“ஹரி நீ தேவை இல்லாமல் கவலைப்படுறனு எனக்கு தோணுது. வெண்ணிலா ஏன் இப்படி எல்லாம் செய்யப் போறா? கொஞ்சம் பொறுமையா இரு… மனசை நிதானத்துக்கு கொண்டு வா. அப்புறம் இதை பத்தி யோசிக்கலாம்”

“இன்னும் பொறுமையா? இல்லை வசந்த். ஏற்கனவே நான் ரொம்ப பொறுமையா இருந்துட்டேன். இனியும் பொறுமையா இருந்தா… அப்புறம் என்னாலேயே என்னை மன்னிக்க முடியாது” ஹரிஹரனின் பதிலில் அழுத்தம் இருந்தது.

“இப்போ என்ன செய்யலாம்னு சொல்ற ஹரி” வசந்தின் குரலில் பயம் இருந்தது.ஹரிஹரன் ஏதேனும் விபரீதமாக செய்ய திட்டமிடுகிறானோ என்று அவனுக்குள் கவலை வந்தது.

மூச்சை நன்றாக இழுத்து விட்டு சில நிமிடங்கள் கண்களை மூடி ஆழ்ந்து சிந்தித்த ஹரிஹரன், “எனக்கு என்னவோ சிவாவின் கணக்கு வழக்குகளில் ஏற்பட்டு இருக்கும் குளறுபடிகளை நன்றாக ஆராய்ந்தால் அது என்னை வெண்ணிலாவிடம் கொண்டு போய் சேர்க்கும்ன்னு தோணுது” என்றவன் திரும்பி சிவாவை பார்த்து அவனிடம் பேச ஆரம்பித்தான்.

“சிவா வெண்ணிலாவிற்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் எந்த வகையில் பழக்கம்?”

“ஹரி எனக்கு அந்த பொண்ணு யாருனே தெரியாதுடா. நானே படிப்பை முடிச்சுட்டு இப்போ தானே இந்தியா வந்தேன்” சிவாவின் குரலில் நண்பன் தன்னை நம்ப வேண்டுமே என்ற பயமும் பதட்டமும் இருந்தது.

“உனக்கு தெரியாமல் இருக்கலாம். உன்னுடைய அப்பாவிற்கு?” கேள்வியாக சிவாவை பார்த்தான் ஹரிஹரன்.

“எனக்கு சரியா தெரியலையே ஹரி”

“சரி சிவா நீ இப்போ கிளம்பி ஊருக்கு போ… உன் வீட்டில் யாரிடமும் எதையும் சொல்ல வேண்டாம். நான் என்னுடைய வீட்டில் சொல்லி விட்டு நாளை வருகிறேன். இதை பற்றி இனி நீ எதையும் யோசிக்க வேண்டாம். இனி இது என்னுடைய பிரச்சினை. இன்னும் சொல்லப் போனால் என்னுடைய வாழ்க்கை பிரச்சினை” உறுதியான குரலில் அழுத்தம் திருத்தமாக சொன்னான் ஹரிஹரன்.

“ஹரி” என்று தயக்கமாக இழுத்த சிவாவின் கைகளை ஆதரவாக பற்றிக் கொண்டான் ஹரிஹரன்.

“உங்க அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாத விஷயம் எனக்கு நினைவில் இருக்கு சிவா… நீ பயப்படாமல் போ” நண்பனை தேற்றும் விதமாக சொல்லி விட்டு வசந்த்தை கூட்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் ஹரி.

“இப்போ என்ன செய்யப் போற ஹரி” சிவாவின் கண்பார்வையில் இருந்து மறைந்ததும் கேட்டான் வசந்த்.

“நான் நாளைக்கு கிளம்பி சிவா வீட்டுக்குப் போகப் போகிறேன் வசந்த்”

“நீ அங்கே செல்வதால் என்ன பயன் ஹரி? இது அவனோட பிரச்சினை”

“இல்ல வசந்த் இது என்னோட பிரச்சினை. வெண்ணிலா வேறு ஏதாவது ஆபத்தில் மாட்டிக் கொள்வதற்கு முன் நான் அவளை சந்தித்து அவளை மீட்டாக வேண்டும்”

“ஹரி சும்மா பேசிக் கொண்டே போகாதே… இப்பொழுதும் அவளுக்கு திருமணம் ஆகி இருக்கலாம் என்ற ஒரு விஷயம் இருக்கிறது அதை மறந்து விடாதே” மருத்துவனாக நண்பனுக்கு நினைவூட்டினான் வசந்த்”

“வசந்த் இப்போ அதை எல்லாம் யோசிக்கக் கூட நான் விரும்பலை. அவ என்னோட வெண்ணிலா இப்பவும்… எப்பவும்… அவ என்னோட தேவதைடா… அவ எப்பவுமே தேவதையாகத் தான் இருப்பாள். இப்போ இப்படி பேசுறான்னா அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்னு நான் நம்புறேன்”

“ஹரி அது வெண்ணிலா தான் நீ உறுதியா நம்பறியா?”

“வசந்த் திரும்ப திரும்ப என்னை சொல்ல வைக்காதே… எனக்கு அவளை தெரியும். அவளை விட அவளது குரலை எனக்கு நல்லா தெரியும். இந்த ஐந்து வருடமா தினமும் காலையில் என் காதில் ஒலிச்சுக்கிட்டு இருக்கிறது அவளோட குரல் தான்”

“சரி ஹரி. நீ போய் சிவாவுக்கு உதவி செய்… ஆனால் நானும் உன் கூடத் தான் இருப்பேன். அதுக்கு சரின்னு சொன்னா நீ இதை செய்வதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. அதுக்கு நீ மறுத்து பேசினால் அதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. ஒரு டாக்டராகவும் சரி, நண்பனாகவும் சரி”

“வசந்த் நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி செய்… இதிலே விஷயம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். சிவாவுடைய வீட்டில் அத்தனை பாதுகாப்பையும் மீறி தோட்டத்தில் அந்த சிடியை வைத்து இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் அவனுடைய கம்பெனியிலும் புகுந்து அவன் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டுகிறார்கள். அப்படி இருக்கும் பொழுது அந்த மாதிரி ஒரு ரிஸ்க்கான இடத்திற்கு உன்னை அழைத்து செல்வதில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை”

“அப்படிப்பட்ட இடத்திற்கு நீ மட்டும் தனியே போகலாமா ஹரி”

“இது என்னுடைய வாழ்க்கை பிரச்சினை வசந்த். நான் போராடித்தான் தீர வேண்டும். இதில் நீ ஏன் வீணாக வந்து உன் தலையை கொடுக்கிறாய்?”

“நான் வந்து தான் தீருவேன் ஹரி… உனக்கு வரும் ஆபத்து எனக்கும் வரட்டும்”

நண்பனின் பாசத்தில் உருகி நின்ற ஹரிஹரன் நொடியில் தன்னை சமாளித்துக் கொண்டான். அடுத்தடுத்து தான் செய்ய வேண்டியது என்ன என்பதை நண்பனுடன் விவாதித்தவாறே சென்று தன்னுடைய வீட்டை வந்து சேர்ந்தான்.

வசந்துடன் பேசிக் கொண்டே வீட்டிற்குள் நுழையும் ஹரிஹரனை ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டு இருந்தார் விஸ்வநாதன். வெளியே செல்லும் போது இருந்த மகனின் நலுங்கிய தோற்றமும் இப்பொழுது திரும்பி வரும் போது மகனின் தோற்றத்தில் தெரிந்த தீவிரமும் அவனது தந்தையின் கண்களில் இருந்து தப்பவில்லை.

மகனின் நடையில் இருந்த வேகம், அவனது தீர்க்கமான பார்வை அனைத்தையும் ஒற்றை பார்வையில் கணித்தவர் மகனிடம் தோன்றிய இந்த மாற்றத்திற்கு காரணம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் ஈடுபட்டார்.

தந்தை தன்னை பார்ப்பதை எல்லாம் உணர்ந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் வசந்துடன் பேசிய படியே ஹாலை தாண்டி தன்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டான் ஹரிஹரன்.

அவனது மூளை பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது. அடுத்து தான் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன என்பதை வேகமாக பட்டியலிட்டு அதை வசந்த்துடன் சேர்ந்து எப்படி சரி வர செய்து தன்னுடைய தேவதையை மீட்பது என்ற எண்ணத்தோடு அன்றைய பொழுதை ஓட்டினான்.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here