Siragilla Devathai Tamil Novels 20

0
1848

அத்தியாயம் 20

அடுத்த நாள் பொழுது விடியும் வரை யோசித்து தெளிவான ஒரு முடிவுக்கு வந்து இருந்தான் ஹரிஹரன். அருகிலேயே படுத்து உறங்கிக் கொண்டு இருந்த வசந்தை பார்க்கும் பொழுது ஒருபுறம் மகிழ்ச்சியும், ஒருபுறம் குற்ற உணர்வும் ஏற்பட்டது. தனக்கு துணையாக இரவு முழுவதும் இங்கேயே தங்கி இருந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக சிந்திக்க உதவி இருக்கிறான். அதே நேரம் இப்படி தன்னுடைய சுயநலத்திற்காக வசந்தை தேவை இல்லாமல் அலை கழிக்கிறோமோ என்ற குற்ற உணர்வும் ஹரிஹரனுக்கு ஏற்பட்டது.

மற்ற நேரங்களில் இதை விட கடுமையான பிரச்சினைகளை எல்லாம் சமாளிக்க முடிந்த ஹரிஹரனால், இப்பொழுது இருக்கும் மனநிலையில் தெளிவாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதை உணர்ந்து தானாகவே ஹரிஹரனுக்கு உதவ முன் வந்தான் வசந்த். இரவு இருவரும் சேர்ந்து பேசி எடுத்த முடிவு தான். ஆனால் அதை ஒழுங்காக செயல்படுத்தி தன்னுடைய தேவதையை மீட்டாக வேண்டுமே என்ற எண்ணம் ஹரிஹரனை பயமுறுத்திக் கொண்டே இருந்தது.

தூங்கும் நண்பனை தொந்தரவு செய்யாமல் லேசாக கிழக்கு வெளுத்ததும் அறையை விட்டு வெளியேறி தந்தையை பார்க்க சென்றான் ஹரிஹரன். தோட்டத்தில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டு இருந்த விஸ்வநாதன் இந்த நேரத்தில் மகனின் வருகையை எதிர்பார்க்காததால் கேள்வியாக மகனை பார்த்தார். தந்தையின் முன் அமர்ந்து சற்று நேரம் மௌனமாக இருந்த ஹரிஹரன் லேசாக தொண்டையை செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“அப்பா உங்கக்கிட்டே கொஞ்சம் பேசணும். பேசலாமா?” என்று கேட்டவன் அனுமதி வேண்டி அவரின் முகத்தை பார்த்தான். ‘மேலே சொல்’ என்பது போன்ற தோரணையில் அமர்ந்து இருந்த விஸ்வநாதன் மெல்ல தலையை அசைத்தார். அதையே சம்மதமாக எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான் ஹரிஹரன்.

“அப்பா நான் கொஞ்ச நாள் சிவா கூட அவன் ஊரில் தங்கி இருக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்”

“சரிப்பா உன் இஷ்டம்… இதை ஏன் என்கிட்டே சொல்ற… இதுவரை என்கிட்டே அனுமதி வாங்கிட்டு தான் நீ எல்லாத்தையும் செஞ்சியா என்ன?” விஸ்வநாதனின் குரலில் கோபத்திற்கு பதிலாக ஆற்றாமையே இருந்தது.

தந்தையின் வார்த்தைகளில் மனம் வலித்தாலும் தான் செய்த செயல் அப்படிப்பட்டது தானே என்ற நினைவில் தயவாகவே பேசினான். “தப்பு தான் டாடி… நான் உங்களை விட வயசில சின்னவன் தானே, தப்பு செய்தால்  நீங்க மன்னிச்சு திருந்த ஒரு வாய்ப்பு தர மாட்டீங்களா”

“ஹரி… என்னோட சொத்து எல்லாமே உனக்கு தானே? அப்படி இருந்தும் அதை எல்லாம் விட்டுட்டு எதுக்காக இப்படி இருக்க  நீ?… எதுக்கு இந்த ஒதுக்கம்? எல்லாம் அந்த பொண்ணு உன்னை கல்யாணம் செஞ்சுக்க மறுத்ததுக்கா? “ தன்னுடைய இத்தனை நாள் ஆதங்கத்தை எல்லாம் ஒற்றை கேள்வியாக கேட்டார் விஸ்வநாதன்.

அதுவரை தந்தைக்கு தன்னுடைய நடவடிக்கைக்கு என்ன காரணம் என்று தெரியாது என்று நினைத்துக் கொண்டு இருந்தவனுக்கு அவரின் இந்தக் கேள்வி ஆச்சரியத்தை கொடுத்தது.

“நிச்சயமா உங்க மேலே எந்த கோபமோ, வருத்தமோ இல்லை டாடி. நான்… நான்…” அதற்கு மேல் எப்படி சொல்வது என்று தெரியாமல் திக்கித் திணறினான் ஹரிஹரன்.

“சொல்ல கஷ்டமா இருந்தா விட்டுடு தம்பி…”

நன்றியுடன் தந்தையை பார்த்தவன், “இப்போ என்னால சொல்ல முடியலை தான் டாடி… கூடிய சீக்கிரம் எல்லாத்தையும் உங்ககிட்ட எதையும் மறைக்காம சொல்லிடறேன்… சாரி டாடி”

“சரி தம்பி… உன் இஷ்டம்… உனக்கு எப்ப வசதிப்படுமோ அப்போ என்கிட்டே சொல்லு. ஆமா ஊருக்கு எப்ப கிளம்புற?” மேற்கொண்டு வேறு எதையும் தோண்டித் துருவாமல் அடுத்த விஷயத்திற்கு தாவிய தந்தையை நன்றியுடன் பார்த்தான் ஹரிஹரன்.

“இன்னைக்கே ஊருக்கு போறேன் டாடி. எப்போ திரும்ப முடியும்னு என்னால உறுதியா சொல்ல முடியலை. எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்திடறேன். கொஞ்சம் அம்மாகிட்டயும் நீங்களே இதை பத்தி பேசிடுங்க டாடி. ப்ளீஸ்” என்று கெஞ்சலாக முடித்தான் ஹரிஹரன்.

“ஹ்ம்ம்… கடைசியில் என் பக்கம் பந்தை திருப்பிட்டியா… சரி விடு நான் பார்த்துக்கிறேன்” என்றவர் வெகுநாள் கழித்து திருப்தியான மனநிலையுடன் காணப்பட்டார்.

“ரொம்ப தேங்க்ஸ்ப்பா” என்றவன் எழுந்து கொள்ள முயல ஹரிஹரனை ஒற்றை கண் அசைவில் தடுத்து நிறுத்தினார் அவனுடைய தந்தை விஸ்வநாதன்.

“இரண்டு வருஷம் ஆச்சு ஹரி…என்னோட பழைய ஹரியை நான் பார்த்து…உன் மனசில் எதுவோ உறுத்திக்கிட்டு இருக்குனு எனக்கு தெரியும்.அது என்னன்னு என்கிட்டே சொல்ல முடியாம நீ தவிக்கிற…என்ன பிரச்சினையா இருந்தாலும் அப்பா நான் உன் பக்கம் தான் இருப்பேன்.அதை மறந்துடாதே.புரிந்ததா?”

“சரிப்பா” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னவன் அதன்பிறகு வேகவேகமாக தன்னுடைய அலுவலகத்திற்கு சென்று அங்கே இருக்கும் வேலைகளை பொறுப்பான நபர்களிடம் தனித்தனியே பிரித்து ஒப்படைத்துவிட்டு வசந்த்துடன் கோயம்புத்தூரை நோக்கி பயணமானான்.

நேரே சிவாவின் வீட்டிற்கு சென்ற ஹரிஹரனையும், வசந்த்தையும் வாசலிலேயே காத்திருந்து வரவேற்றான் சிவா.

“ஹரி அப்பாவும் அம்மாவும் பக்கத்தில இருக்கிற கோவிலுக்கு போய் இருக்காங்க. அதுக்குள்ளே நாம பேச வேண்டிய விஷயத்தை எல்லாம் பேசி முடிச்சிடலாம். அவங்களுக்கு இது எதுவும் தெரியாமல் இருப்பது தான் நல்லது ஹரி ப்ளீஸ்!” கெஞ்சுதலாக வெளிவந்தது சிவாவின் குரல்.

ஹரிஹரனும் மறுப்பேதும் சொல்லாமல் மாடியில் இருந்த தனி அறைக்கு நண்பர்களுடன் சென்றான். உபச்சாரமாக கொடுக்கப்பட்ட காபியை அருந்தியபடியே பேச ஆரம்பித்தனர்.

“சிவா சொல்வதை கொஞ்சம் கவனமாக கேள். உன்னுடைய ஹோட்டல் பிசினஸ் மட்டும் இல்லாம மத்த எல்லா பிசினஸ்லயும் என்னை உன்னுடைய பார்ட்னெரா சேர்த்துக்கோ. எதுவுமே பெயரளவில் இல்லாம முறைப்படி செய்யணும். புரியுதா? ஆனா ஒரு சின்ன திருத்தம் பேர் மட்டும் ஹரிஷ்ன்னு எல்லா டாக்குமென்ட்லயும் ரெஜிஸ்டர் பண்ணு”தன்னுடைய திட்டத்தை மெல்ல விவரிக்கலானான் ஹரிஹரன்.

“என்னடா சொல்ற… முதல்ல உன்னை பார்ட்னரா சேர்க்க சொன்ன… அது சரின்னு ஒத்துக்கிட்டா கூட பேரை ஏன்டா ஹரிஷ்னு மாத்த சொல்ற? எனக்கு ஒண்ணும் புரியல”

“நீ எல்லாத்துலையும் புதுசா ஒரு பார்ட்னரை சேர்க்க போகிற அது அமெரிக்கால இருக்கிற உன்னோட அண்ணன் ஹரிஷ். அது நான் தான்” என்று அழுத்தம் திருத்தமாக கூறியவனை பார்த்து இப்பொழுது மண்டையை பிய்த்துக் கொள்ள தொடங்கினான் சிவா.

“ஐயோ ஒரே குழப்பமா இருக்கே!” வெளிப்படையாகவே தலையை பிய்த்துக் கொண்டான் சிவா.” டேய்! என் அண்ணா தான் அங்கே புதுசா ஒரு கம்பெனி ஆரம்பிச்சு அதை எடுத்து நடத்திக்கிட்டு அங்கேயே செட்டில் ஆகிட்டாரே. அவர் இந்தியா வந்தே எப்படியும் ஒரு ஏழு வருசம் இருக்குமே. இப்போ அவரை எதுக்கு பார்ட்னர் ஆக்க சொல்ற? அதுவும் இல்லாம நீ என்னோட அண்ணன்னு வேற சொல்ற. தெளிவா குழப்புற ஹரி”

“ஒரு குழப்பமும் இல்லை சிவா. ஹரி என்ன சொல்ல  வர்றான்னு உனக்கு புரியலையா? ஒரு சின்ன ஆள் மாறாட்டம். அதுவும் ரெண்டு காரணத்திற்காக ஒண்ணு இப்போ புதுசா ஒரு ஆள் உள்ளே வந்து கணக்கு வழக்கை எல்லாம் விசாரிச்சா அவங்களுக்கு எப்படியும் தகவல் போயிடும். அதே  உன்னோட கம்பெனில பார்ட்னர்ங்கிறதால ஹரி அங்கே வந்து பார்க்கிறது தப்பா இருக்காது. அதே நேரத்தில் இவனுடைய கேள்விகளுக்கு யாரா இருந்தாலும் பதில் சொல்லித் தான் ஆகணும். இதுவும் அவங்களை கொஞ்சம் குழப்ப மட்டும் தான்.

அதுவும் இல்லாம நாளைக்கு இந்த மாதிரி புதுசா பார்ட்னரை உள்ளே சேர்த்த விஷயம் உங்க அப்பா அம்மாவுக்கு தெரிய வந்தா கூட அப்போ இந்த டாக்குமென்ட்ஸ்சை வச்சு அவங்களுக்கு கிளியர் பண்ணிடலாம். அவங்க மூத்த பையன் பேர்ல இருக்கிறதால அவங்களுக்கு பெருசா எந்த கோபமோ வருத்தமோ வருவதற்கு வாய்ப்பு இல்லை” என்று எடுத்துக் கூறினான் வசந்த்.

“அதெல்லாம் சரிடா… இவனை எதுக்கு உள்ளே கொண்டு வரீங்க. இதனால இவனுக்கு ஏதாவது ஆபத்து வந்தா?”

“இல்லை சிவா. நான் நேரடியா இந்த விஷயத்தில் இறங்கினா மட்டும் தான் என்னால உனக்கு உதவி செய்ய முடியும். வெளியாள் மாதிரி தள்ளி நின்னு வேடிக்கை பார்த்தா இதை சீக்கிரம் முடிக்க முடியாது” என்றான் ஹரிஹரன் தெளிவாக.

“இல்லை ஹரி. நீ ஏற்கனவே ஹோட்டலுக்கு ஆடிட்டிங் வேற வந்து இருக்க. இப்போ நீ ஆடிட்டர் இல்ல. என்னோட பார்ட்னர்னு சொன்னா அவங்களுக்கு சந்தேகம் வராதா?” சிவாவிற்கு இன்னும் தெளிவு பிறக்கவில்லை.

“இல்லை சிவா! டாக்குமென்ட்ஸ்ல  உங்க அண்ணன் பேரை போட சொன்னேன் அது உன் அப்பா அம்மாவிற்காக. வெளியில் இருக்கிறவங்களுக்கு இந்த ஆடிட்டர் உன்னுடைய கம்பெனி பார்ட்னரா ஆன மாதிரி தான் இருக்கணும். நம்ம தான் இந்த டாக்குமென்ட்ஸ்சை யார்கிட்டயும் காட்டப் போவது இல்லையே…

உன்னோட அப்பா அம்மா கேட்டா உன்னோட அண்ணன் தான் என்னை வைத்து செக் பண்ண சொல்லி இருக்கார்னு சொல்லிடு… சரியா? அது மட்டும் இல்லாமல் இதில் என்னுடைய சுயநலமும் இருக்கு சிவா. உங்க அண்ணன் பேருக்கும் என்னுடைய பேருக்கும் பெரிதா ஒரு வித்தியாசமும் இல்லை. அதை வச்சு ஒரு சின்ன ஆட்டம் இருக்கு”

சிவா தலையை இடமும் இல்லாமல் வலமும் இல்லாமல் எல்லா பக்கமும் ஆட்டி வைக்க நண்பர்கள் இருவரும் சிரித்து விட்டனர்.

“டேய்! இப்பவே இப்படி முழிக்காதே… நமக்கு இன்னும் நிறைய வேலை இருக்கு. பார்ட்னர்ஷிப் அக்ரீமென்ட் எல்லாம் இன்னைக்கு மதியத்துக்குள் ரெடி ஆகணும். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் உங்க அண்ணன் கையெழுத்து எப்படி போடுவார்னு உனக்கு தானே தெரியும். அதனால நீயே அவர் கையெழுத்தையும் போட்டுடு”

“டேய் என்னடா என்னை கிரிமினல் வேலை எல்லாம் செய்ய சொல்றீங்க” அலறினான் சிவா

“ஆமா அப்படியே உங்க அண்ணன் சொத்தை ஏமாற்றி உன் பேருக்கு மாத்திக்கப் போற பாரு… சொன்னதை செய்டா. ஸ்கூல் படிக்கும் போது எத்தனை தடவை உங்க அப்பா கையெழுத்தை ரேங்க் கார்ட்ல போட்டு இருக்க. அப்போ தெரியலையா இதெல்லாம் தப்புன்னு. இப்பயும் போடு இல்லேன்னா உங்க அப்பாகிட்ட நீ ஸ்கூல் டைம்ல அந்த காயத்ரிக்கு ரூட் போட்டியே அதையும் சேர்த்து சொல்லிடுவேன்” என்று கித்தாப்பாக சொன்னான் வசந்த்.

“அட கிராதகா! அது ஏழாவது படிக்கும் போது நடந்ததுடா. அந்த பொண்ணு இப்ப எங்கே இருக்கிறான்னு கூட எனக்கு தெரியாதே. இப்ப ஏன்டா அதை எல்லாம் நினைவு படுத்துற?”

“அப்ப ஒழுங்கா சொல்றதை மட்டும் செய். சும்மா தேவை இல்லாத கேள்வி எல்லாம் கேட்காதே” என்று மிரட்டலாக  முடித்தான் வசந்த்.

“என்னவோ வசந்த் எல்லாம் நல்லபடியாக முடிந்தால் சரி. இன்னைக்கு மதியமே எல்லா டாக்குமெண்ட்சும் ரெடி பண்ணிடறேன். நீங்க ரெண்டு பேரும் இங்கே என் வீட்டிலேயே தங்கிக்கோங்க. சாயந்திரம் நம்ம எல்லாரும் என்னோட கம்பெனிக்கு போகலாம்.அங்கே  உன்னை எல்லாருக்கும் அறிமுகப் படுத்தி வச்சுடறேன். சரியா”

சரி என்று நண்பர்கள் இருவரும் ஆமோதிப்பாக தலை அசைக்க அடுத்த கட்ட வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தான் சிவா.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 1 Average: 1]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here