Siragilla Devathai Tamil Novels 21

0
1928

அத்தியாயம் 21

அன்றைய தினத்தில் கம்பெனி மீட்டிங்கின் போது புதிதாக வந்து இருக்கும் பார்ட்னரை சிவா அறிவிக்கும் பொழுது எல்லார் மத்தியிலும் சின்ன சலசலப்பு ஏற்பட்டாலும் யாரும் மறுப்பாக எதையும் சொல்லவில்லை.

அந்த நேரம் யார், யார் முகத்தில் என்ன விதமான உணர்வுகள் வந்து போகிறது என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தான் ஹரிஹரன். யார் முகத்தில் எல்லாம் அதிர்ச்சியும், கோபமும், எரிச்சலும் தோன்றியதோ அவர்களை எல்லாம் மனதில் நன்றாக குறித்து வைத்துக் கொண்டான் ஹரிஹரன்.

மீட்டிங் முடிந்து எல்லாரும் வெளியேறிய பின் சிவாவும், ஹரிஹரனும் மட்டும் தனித்து விடப்பட எல்லாரும் வெளியேறி விட்டதை உறுதிபடுத்திக் கொண்டு நண்பர்கள் இருவரும் பேச்சை ஆரம்பித்தனர்.

“ஹரி… எல்லாம் சரியா வரும் இல்லையா?” கவலை நிறைந்து இருந்தது அவன் குரலில்.

“சரியா வரும். அதை எல்லாம்  நான் பார்த்துக்கிறேன். நீ இப்போதைக்கு நான் சொல்வதை மட்டும் செய்… அப்புறம் இன்னொரு விஷயம் எனக்கு தனி வீடு வேணும். உன் வீட்டிலேயே தங்குவது வசதிப்படாது”

“ஏன்டா… ப்ரைவசி வேணும்னு பார்க்கறியா? அதெல்லாம் என் வீட்டில் உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது ஹரி”

“அதுக்காக இல்லை சிவா. இப்பொழுது மற்றவர்களை பொறுத்தவரை நான் உன்னுடைய கம்பெனியில் ஒரு பார்ட்னர். நான் எதற்கு உன் வீட்டில் தங்க வேண்டும்… தனியே இருப்பது தான் வசதி. எதற்காக என்னை உன் வீட்டிலேயே தங்க வைத்து இருக்கிறாய் என்ற அனாவசிய கேள்விகள் வரக்கூடும். அதற்குத்தான் சொல்கிறேன். உன் வீட்டுக்கு அருகில் இருந்தால் இன்னும் நல்லது”

“சரிடா நீ சொல்றதும் சரி தான். என் வீட்டிற்கு எதிர்வீடு எங்க மாமாவோடது தான். சும்மா பூட்டி தான் இருக்கு. அதை வேணும்னா நீ வாடகைக்கு எடுத்து தங்கிக்கோ”

“குட்… அங்கே இருந்து உன் வீட்டில் எது நடந்தாலும் என்னால் பார்க்க முடியும் இல்லையா? நல்லது… அப்ப அதையே பேசி முடிச்சுடு”

நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போதே ஹரிஹரனின் மொபைலுக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வர கொஞ்சம் யோசனையுடன் அதை எடுத்து ஸ்பீக்கரில் போட்டு விட்டு பேசத் தொடங்கினான் ஹரிஹரன்.

“ஹலோ… யார் பேசுறது?”

“அது உனக்குத் தேவை இல்லை. சொல்லப் போற விஷயத்தை மட்டும் கேளு” உத்தரவாக சொன்னது ஒரு ஆண் குரல்.

“என்ன விஷயம்? சொல்லுங்க”“நீ எதுக்காக இந்த கம்பெனியில் பார்ட்னரா சேர்ந்தியோ எனக்கு தெரியாது. உனக்கு நஷ்டம் வரக் கூடாதுனா உடனடியா பார்ட்னர்ஷிப்பை கேன்சல் பண்ணிட்டு ஓடிடு. இல்லை அதுக்கு அப்புறம் விளைவுகள் பயங்கரமா இருக்கும்”

“நான் இந்த கம்பெனி பார்ட்னரா சேர்ந்தால் அப்படி  என்ன கெடுதல் நடக்கும்னு சொல்றீங்க? எனக்கு ஒண்ணும் புரியலையே” போனில் பேசிக் கொண்டே இந்த போன் காலை ட்ராக் செய்யும்படி சிவாவிடம் சைகை செய்ய, சிவா அந்த வேலையில் இறங்கினான்.

“என்ன நடக்குமா? என்ன வேணா நடக்கலாம். உதாரணமா உனக்கு இந்த தொழில்ல நிறைய நஷ்டம் வரலாம். கடன் பிரச்சினை வரலாம். கடன் தொல்லை தாங்காம நீ தூக்கில் தொங்கலாம்… நீயா தொங்கலைனா நாங்களே உன்னை கொன்னுட்டு நீ கடன் தொல்லை தாங்காம தூக்கில் தொங்கிட்டன்னு எல்லாரையும் நம்ப வைப்போம்”

“ம்… அப்புறம்” கதை கேட்கும் பாவனை ஹரிஹரனிடம்.

“ஏய்! நான் என்ன கதையா சொல்றேன். ஒழுங்கா மரியாதையா சொல்றதை கேட்டு ஊரை விட்டு ஓடு… இல்லேன்னா…”

“இல்லேன்னா?” அலட்சியமான முறையில் கொஞ்சமும் பயமே  இல்லாமல் வார்த்தைகள் வெளிவந்தது.

“உன் நல்லதுக்கு தான் சொன்னேன். கேட்க மாட்டேன்னு நீ அடம்பிடிச்சா நான் என்ன செய்ய? இனி உன் வாழ்க்கையை யாராலும் காப்பாத்த முடியாது”

“என் வாழ்க்கையை காப்பாத்த எனக்கு தெரியும். பேர் கூட சொல்ல பயப்படுற உன்னை மாதிரி ஒரு பயந்தவன் பேச்சை எல்லாம் நம்பினால் நான் எப்படி தொழில் செய்வது?”

“உனக்கு இவ்வளவு திமிரா? உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று சொல்லிவிட்டு எதிர்முனை போனை கட் பண்ணி விட்டது.

“யார் பேசினாங்க ஹரி?” சிவா பதட்டத்துடன் கேட்டான்.

“எல்லாம் அவங்க தான். அதுக்குள்ளே அவங்களுக்கு விஷயம் போய்டுச்சு பாரு. நான் சந்தேகப்பட்டது சரி தான் சிவா. அவங்க ஆட்கள் இங்கே உன்னுடைய கம்பெனியில் இருந்து கொண்டே அவங்களுக்கு வேலை பார்க்கறாங்க”

“என்னடா புதுசு புதுசா என்ன என்னவோ சொல்ற? இங்கே எத்தனை பேர் வேலை பார்க்கிறாங்க… இதில் அவங்களை எப்படி கண்டுப்பிடிக்கிறது?” கவலை தெரிந்தது சிவாவின் குரலில்.

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். இப்போ நம்ம கூட மீட்டிங் அட்டென்ட் பண்ணின ஸ்டாப்ஸ் எல்லாரோட பயோடேட்டாவை உடனே எடுத்து வர சொல்லு”

“அது எதுக்குடா கேட்கிற? அதை வச்சு என்ன செய்யப்போற?”

“சொன்னதை செய்டா… சும்மா கேள்வி கேட்காதே… சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு போய் வசந்தை பார்க்கணும்”

சில நொடிகளில் ஹரிஹரனுக்கு அவன் கேட்ட விவரங்கள் வந்து சேர அதில் இருந்த ஒரு சிலரின் பயோடேட்டாவை மட்டும் தனியே எடுத்து சிவாவின் கையில் கொடுத்தான்.

“உனக்கு தெரிஞ்ச நல்ல டிடெக்டிவ் ஏஜென்சில சொல்லி இவங்களை கண்காணிக்க சொல்லு. அது மட்டும் இல்லாம இவங்களோட போன் நம்பரை எல்லாம் ட்ராக் பண்ண சொல்லு. அதுவும் இன்னைக்கு நம்ம மீட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் அவங்க யாருக்கு எல்லாம் போன் பண்ணி பேசி இருக்காங்க, மெசேஜ் அனுப்பி இருக்காங்கன்னு டீடைல்ஸ் எல்லாம் கலக்ட் பண்ணு”

“இதெல்லாம் எதுக்குடா… அதுவும் எதுக்கு இவங்களை மட்டும் தனியா கண்காணிக்க சொல்ற?” புரியாமல் கேட்டான் சிவா.

“இல்ல சிவா நான் மீட்டிங் நடக்கும் போது கவனிச்சேன். அப்போ இவங்க முகத்தில் மட்டும் தான் அதிர்ச்சி ஏற்பட்டுச்சு. மீட்டிங் முடிஞ்சு பத்து நிமிஷம் கூட ஆகலை அதுக்குள்ள அவங்ககிட்ட இருந்து எனக்கு மிரட்டல் போன் வேற வருது. கண்டிப்பா அவங்க எனக்கு கால் பண்ணின நம்பரை வைத்து நாம ஒண்ணும் செய்ய முடியாது. ஏன்னா அந்த நம்பர் போலியானதா தான் இருக்கும். அதனால தான் இவங்களை கண்காணிக்க சொல்றேன். புரியுதா?”“ஒரே நாள்ல எப்படிடா இவ்வளவு விஷயம் நோட் பண்ணின? ஆனால் இவங்க எல்லாரும் இங்கே முக்கியமான பொறுப்பில் இருக்கிறவங்க ஹரி”

“அதை எல்லாம் இப்போ பார்த்தா ஒண்ணும் வேலைக்கு ஆகாது சிவா.அப்புறம் இன்னொரு விஷயம்  இவங்களை பத்தி விசாரிக்கும் போது இவங்களோட பர்சனல் டீடெயில்சும் சேர்த்து கலக்ட் பண்ண சொல்லு”

“ஹரி நீ என்னென்னவோ சொல்ற? இதெல்லாம் வெளியே தெரிஞ்சா பிரச்சினை ஆகிடும். வேலை பார்க்கிறவங்களை இப்படி கண்காணிக்க ஆள் ஏற்பாடு செய்யறோம்னு தெரிஞ்சா அவங்க ஸ்ட்ரைக் எல்லாம் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க ஹரி.அப்பாவுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரிஞ்சா என்னை ஒரு வழி பண்ணிடுவார்.எதுவா இருந்தாலும் நல்லா யோசிச்சு செய்டா”

“அதெல்லாம் நீ ஒண்ணும் கவலைப்படாதே… எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்” என்று ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தான் ஹரிஹரன்.

அதே நேரம் ஹரிஹரனிடம் போனில் பேசிய அதே  ஆண் குரல் ஹரிஹரனை பற்றித் தான் பேசிக் கொண்டு இருந்தது.

“அவன் கொஞ்சம் திமிர் பிடிச்சவனா இருக்கான் பாப்பா… நான் எவ்வளவோ பொறுமையா சொன்னேன். ஆனா அவன் கேட்கிற மாதிரி இல்லை. நீ எதுக்கு பாப்பா அவன்கிட்ட எல்லாம் பேச சொன்ன”

“நம்ம எதிரி அந்த குடும்பம் மட்டும் தான். அதோட அழிவு மட்டும் தான் நமக்கு முக்கியம் புதுசா இந்த ஆடிட்டர் எதுக்கு நஷ்டப்படணும்னு நினைச்சேன். ஆனா சொல்லியும் கேட்காம வீம்புக்கு நடந்தா என்ன செய்யுறது? அப்போ புதுசா வந்து இருக்கிறவனும்  சேர்த்து அனுபவிக்கட்டும்” கொஞ்சமும் அலட்டல் இல்லாமல் சொன்னது அந்த பெண் குரல்

“அடுத்து என்ன செய்ய போற பாப்பா?”

“புதுசா வந்து இருக்கும் அந்த ஆளை பத்தி டீடைல்ஸ் கலெக்ட் பண்ணுங்க. இப்போ அவர் எங்கே தங்கி இருக்காரோ அந்த இடத்தில் நம்ம ஆள் ஒருத்தரை வேலைக்கு சேர்த்து விடுங்க… ஒரு இரண்டு நாள் போகட்டும். அடுத்து என்ன செய்யலாம்னு சொல்றேன்”

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here