Siragilla Devathai Tamil Novels 22

0
1910

அத்தியாயம் 22

ஹரிஹரன் எந்த செயலையும் நிதானமாகவே செய்து பழக்கப்பட்டவன் அவனது இந்த அதிரடி இரண்டு நண்பர்களையும் ஆச்சரியப்படுத்தியது. அப்படிப்பட்ட நண்பனின் அதிரடியில் பின்னணியில் இருப்பது அவனுக்கு வெண்ணிலா மீது இருக்கும் காதல் என்பதை உணர்ந்த நண்பர்கள் அவனுடைய காதலை எண்ணி வியந்து கொண்டு இருந்தனர்.

ஹரிஹரன் மீண்டும் அனைத்து கணக்கு வழக்குகளையும் சரி பார்த்தான். இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்தான். இதற்கிடையில் சொற்ப நேரம் தூங்கி ஏனோ தானோ என்று சாப்பிட்டு மொத்த கணக்கு வழக்குகளையும் நுனி விரலில் கொண்டு வந்தான். ஆடிட்டர் என்பதாலோ என்னவோ அதை எல்லாம் புரிந்து கொள்ள அவனுக்கு சிரமமாக இருக்கவில்லை.

எல்லா கணக்குகளையும் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தவன் ஒரு வாரத்திற்கு பிறகு லேசாக கண்ணயர்ந்து தூங்கினான். வசந்த் விடியற்காலை எழுந்தவன் அயர்ந்து உறங்கும் நண்பனை எழுப்ப மனமில்லாமல் எழுந்து குளித்து முடித்து தானே நண்பனுக்கு காபியும் போட்டு எடுத்துக் கொண்டு வந்து நண்பனை எழுப்பினான்.

“என்ன ஹரி நல்ல தூக்கத்தில் தொந்தரவு பண்ணிட்டேனா?”

“அதெல்லாம் இல்லைடா… வழக்கம் போல இப்ப தான் வெண்ணிலா கையை பிடிச்சேன் அதுக்குள்ளே எழுப்பிட்ட”

“என்னது இன்னைக்கும் அதே கனவா?” சலிப்பு தெரிந்தது வசந்தின் குரலில்

“அதுக்கு ஏன் இவ்வளவு சலிச்சுக்கிற வசந்த்? நான் இப்போ இதை நல்லா என்ஜாய் பண்ண ஆரம்பிச்சுட்டேன் தெரியுமா? முன்னே எல்லாம் இந்த கனவு வந்தா இது தப்புன்னு எனக்கு நானே சொல்லிப்பேன். ஆனா… இப்போ நான் இதை ரசிக்க ஆரம்பிச்சுட்டேன். அவ என்னை வேண்டாம்னு சொன்னதுக்கு வேற ஏதோ ஒரு காரணம் இருக்கும்னு இப்போ நான் ரொம்ப திடமா நம்புறேன்”நண்பனின் பேச்சில் ஏற்பட்டு இருக்கும் மாற்றத்தை வசந்த் உணர்ந்து கொண்டான்.ஹரிஹரனின் பேச்சில் ஒவ்வொரு வார்த்தையிலும்  நம்பிக்கை துளிர்த்து இருந்தது. இது சந்தோசப்பட வேண்டிய விஷயம் தான் என்று எண்ணிக் கொண்ட வசந்த் மறுத்து பேசாமல் ஹரிஹரன்  காபி குடித்து முடிக்கும் வரை அமைதி காத்தான்.

“ஹரி நீ ஆரம்பிச்ச வேலை எல்லாம் எந்த அளவில் இருக்கு. ஏதாவது விஷயம் கண்டுபிடிச்சியா?” பேச்சை அழகாக மாற்றினான் வசந்த்

“ஹம்ம் கிட்டத்தட்ட முடிஞ்ச மாதிரி தான். இன்னும் சிவா கிட்ட சில தகவல் கேட்டு இருக்கேன் அதுவும் கிடைச்சுட்டா மேற்கொண்டு மத்த விஷயத்தை கவனிக்கலாம்னு இருக்கேன். சிவா எல்லா விவரமும் கலக்ட் பண்ணிட்டேன்னு நேத்து ராத்திரி போன்ல  பேசினப்போ சொன்னான். இன்னைக்கு காலையில டிபன் சாப்பிட இங்கே  வரும் போது அதை பத்தி பேசிக்கலாம்னு சொன்னான்”

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே சிவா கையில் சில பேப்பர்களுடன் வந்து சேர்ந்தான்.

“டேய் ஹரி டிடெக்டிவ் ஏஜென்சிகிட்ட கேட்டு இருந்த தகவல் எல்லாம் வந்துடுச்சு. இதை வச்சு என்ன செய்யலாம்னு சொல்லுடா” என்று அந்த பைலை ஹரிஹரனிடம் தர, அதை மேலோட்டமாக பார்வையிட்டவன், “இதை நாம ஆபீஸ் போய் பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டான்.

ஆபீஸ்க்கு சென்றதும் முதல் வேலையாக அவர்கள் மூவரும் பேச ஆரம்பிக்கும் முன் செல்போன் உள்ளிட்ட அனைத்து விதமான கருவிகளின் செயல்பாடுகளையும் முடக்கும் சிக்னல் ஜாமரை அந்த அறையில் பொருத்தினான். கேள்வியாக பார்த்த நண்பர்களுக்கு விளக்கமும் அளித்தான்.

“இந்நேரம் வரை அவங்க சும்மா இருந்து இருக்க வாய்ப்பு இல்லை. நம்ம என்ன பேசிக்கிறோம் அப்படிங்கிறதை தெரிஞ்சுக்க இங்கே மினி மைக் ஏதாவது செட் பண்ணி இருக்கலாம். அதுவும் இல்லைனா மினி கேமரா இல்லை வேற ஏதாவது இங்கே வச்சு நம்மை உளவு பார்க்கலாம். அது நடக்க கூடாது அதுக்கு தான் இந்த ஏற்பாடு” என்று விளக்கினான்.

“டேய் ஹரி… என்னடா என்ன என்னவோ செய்ற? நீ செய்றதை எல்லாம் பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்குடா… இப்படி எல்லாம் நம்மை கண்காணிக்கறாங்களா என்ன?அந்த அளவுக்கு என்னையும் என் குடும்பத்தையும் பழி வாங்கணும்னு வெறியோட இருக்காங்களா” சிவாவின் குரலில் பயம் நிரம்பி வழிந்தது.

“அதை என்னால் உறுதியா சொல்ல முடியலை சிவா… இதெல்லாம் ஒரு சின்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். சரி அதை விடு… அந்த டிடெக்டிவ் கொடுத்த ரிப்போர்டை படிச்சு பார்த்தியா? உனக்கு ஏதாவது புரிஞ்சுதா?”

“டேய் நீ ரிப்போர்ட் வாங்கி தர சொன்ன? நானும் வாங்கி தந்துட்டேன்… அதுக்கு மேலே எனக்கு ஒண்ணும் தெரியாதுடா ஹரி … இத்தனை நாள் விளையாட்டுத்தனமா இருந்தது ரொம்ப தப்புன்னு இப்போ நடக்கிறதை எல்லாம் பார்த்தா தோணுது.எனக்கு இதை எல்லாம் பார்த்தா ஒரே குழப்பமா இருக்கு”

சிவாவின் வார்த்தைகளில் பயம் நிறைந்து இருந்தது. அவனை பார்க்கையில் ஹரிஹரனுக்கும் வசந்துக்கும் கொஞ்சம் பரிதாபமாகத் தான் இருந்தது. இதுவரை எந்த கவலையும் இல்லாமல் அமெரிக்காவில் படித்துக் கொண்டும், ஊர் சுற்றிக் கொண்டும் இருந்தவன் இப்படி ஒரு நிலை தனக்கு வரும் என்று கனவிலும் நினைத்து இருக்க மாட்டான். தந்தைக்கு உடல் நலம் சரி இல்லாமல் போனதால் தொழிலை பார்த்துக் கொள்ள வந்த இவன் இப்படிப்பட்ட பிரச்சினைகளை நிச்சயம் எதிர்பார்த்து இருக்க மாட்டான்.

தொழிலை கற்றுத் தர வேண்டிய தந்தையும் உடல்நலம் இல்லாமல் போய்விட, உதவி செய்வார்கள் என்று எதிர்பார்த்த அவனுடைய வேலையாட்களும் அவனுக்கு உண்மை இல்லாமல் போய்விட, யாரை நம்புவது என்று குழம்பிக் கொண்டு இருக்கும் நண்பனை பார்க்கையில் கொஞ்சம் பரிதாபமாகத் தான் இருந்தது இருவருக்கும்.என்ன ஏது என்று கேள்வி கேட்காமல் தன்னை நம்பி இந்த முழு பொறுப்பையும் ஒப்படைத்து இருக்கும் நண்பனுக்கு நிச்சயம் தான் நல்லது செய்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்த ஹரிஹரன் சிவா கொடுத்த விவரங்களை நன்கு அலசி ஆராய்ந்து  தான் தெரிந்து கொண்ட விஷயங்களை பேசத் தொடங்கினான்.

“சிவா நான் சொல்வதை கொஞ்சம் நன்றாக கவனி… நான் உன்னிடம் விசாரிக்க சொன்ன ஆட்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் அம்பாசமுத்திரம் ஊரோடு தொடர்பில் இருந்தவர்கள் தான். என்னோட கணிப்பு சரியா இருந்தா இவங்க எல்லாரும் வெண்ணிலாவிற்காகவோ அல்லது அவங்க அப்பாவிற்காகவோ தான் இப்போ இந்த உளவு வேலையை பார்க்கிறாங்க… அது மட்டும் இல்லாமல் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கு சிவா… இவங்க யாருமே உன்னுடைய கம்பெனிக்கு நேரடியா தேர்வு ஆகலை” என்று சொன்னவன் சிறிது இடைவெளி விட்டு நிறுத்தினான்.

“பின்னே?” கோரசாய் கேட்டனர் நண்பர்கள் இருவரும்.

“அவங்க எல்லாரும் ஷைன் கன்சல்டன்சி (shine consultancy) மூலம் வேலைக்கு வந்தவங்க” என்றவன் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடந்தான்.

“நாம சரியான பாதையில் தான் போய்க்கிட்டு இருக்கோம்னா அந்த கம்பெனியை நிர்வகிக்கிறது என்னோட வெண்ணிலாவா தான் இருக்கணும் அல்லது அதை நிர்வாகம் செய்றவங்களுக்கு நெருக்கமான ஒருத்தியா வெண்ணிலா இருக்கணும்”

“அது எப்படிடா அவ்வளவு உறுதியா சொல்ற?”

“அதை அங்கேயே நேரில் போய் பார்த்து உறுதி செஞ்சுக்க வேண்டியது தான்” இலகுவாக பதில் சொன்னான் ஹரிஹரன்.

“டேய் என்னடா இவ்வளவு அசால்டா சொல்ற? அது அவ்வளவு ஈஸியா?”

“கண்டிப்பா ஈஸி தான். அவங்க நம்ம கம்பெனி கூட அக்ரீமென்ட் போட்டு இருக்காங்க. நமக்கு எப்போ வேலைக்கு ஆள் தேவை அப்படினாலும் அவங்க தான் ஏற்பாடு பண்ணி தந்து ஆகணும். அது விஷயமா பேசப் போற மாதிரி போவோம்”

“என்னவோ சொல்ற எனக்கு என்னவோ பயமா இருக்குடா… அவங்க தான் எதிரின்னு தெரிஞ்ச பிறகும் எதுக்குடா அவங்க இடத்துக்கு போயே ஆகணும்னு அடம்பிடிக்கிற”

“ஒரு சின்ன கரெக்ஷன் சிவா… நான் உன்னுடைய எதிரியை சந்திக்க வரவில்லை. என்னோட காதலியை பார்க்க வரப் போறேன்” காதலியின் நினைவில் கண்கள் ஜொலிக்கப் பேசினான் ஹரிஹரன்.

“சரிடா… என்னமோ பண்ணு… எனக்கு பிரச்சினை தீர்ந்தால் சரி… வேலை எல்லாம் முடிச்சுட்டு நாளைக்கு போகலாம்”

“நாளைக்கா? ஏன் இப்போ என்ன பிரதமர் கூட மீட்டிங் இருக்கா உனக்கு? இன்னும் அரை மணி நேரத்தில் நாம கிளம்பி ஆகணும். நான் வீட்டுக்கு போய்ட்டு ரெடியாகி வரேன். அதுக்குள்ள உனக்கு  ஏதாவது முக்கியமான வேலை இருந்தா முடிச்சு வச்சுட்டு என் கூட கிளம்பு” என்று கட்டளையிட்டவன் வசந்தை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பத் தொடங்கினான்.

‘வர வர இவன் தான் கம்பெனி முதலாளின்னு என்னையே நம்ப வச்சுடுவான் போல… எனக்கே ஆர்டர் பண்ணிட்டு போறான்’ என்று உள்ளுக்குள் நொந்தவன் அவன் செய்வது அனைத்தும் தன்னுடைய நன்மைக்கே என்பதை உணர்ந்து இருந்ததால் மௌனமாக அங்கே செல்ல கிளம்பிக் கொண்டு இருந்தான்.

காரில் செல்லும் வசந்தோ ஹரிஹரனை எண்ணி கவலையோடு பேசிக் கொண்டு இருந்தான். “டேய் ஹரி திடீர்னு ஏன் உன்கிட்ட இவ்வளவு வேகம்? எப்பவும் போல இயல்பா இரு. அதிக வேகத்தில் போகாதடா. உன்னோட செயல்ல இருக்கிற வேகத்தை பார்க்கும் போது ஒரு நண்பனா எனக்கு சந்தோசம் தான். ஆனா ஒரு டாக்டரா எனக்கு பயமா இருக்கு ஹரி. கொஞ்சம் நிதானமாவே இருடா”“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் வசந்த்… நீ கவலைப்படாதே… நீ வீட்டிலேயே இருந்துக்கோ உன்னை இறக்கி விட்டுட்டு நான் மறுபடி கிளம்பி வெண்ணிலாவை பார்க்க போகணும்”

“அதுக்கு நேரா நீ அப்படியே போய் இருக்கலாமே… என்னை இறக்கி விட இவ்வளவு தூரம் அலையணுமா நீ” தனக்காக நண்பன் இப்படி அலைகிறானோ என்ற எண்ணத்தில் வசந்த் கேட்க,

“உன்னை இறக்கி விடுறது ஒரு சாக்கு தான் வசந்த். ரொம்ப நாள் கழிச்சு வெண்ணிலாவை பார்க்க போறேன்ல அதான் கொஞ்சம் டிரெஸ்ஸை மாத்திட்டு போகலாம்னு வரேன்”

ஹரிஹரன் சொல்லி முடித்ததும் வசந்திற்கு நினைவுகள் கொஞ்சம் பின்னோக்கி சென்று அன்று வெண்ணிலாவை காணும் ஆவலில் இவன் அத்தனை உடைகளை மாற்றி மாற்றிப் போட்டு பார்த்த கூத்து நினைவுக்கு வர, இன்று என்ன செய்யப் போகிறானோ என்று கவலையுடன் நண்பனை பார்த்துக் கொண்டு இருந்தான்.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here