Siragilla Devathai Tamil Novels 26

0
2200

அத்தியாயம் 26
அதிகாலையில் எழுந்தது முதல் பரபரப்பாக கிளம்பிக் கொண்டு இருந்தான் ஹரிஹரன். ஆறு மணி அளவில் எழுந்து கொண்ட வசந்த்தும் உடன் கிளம்ப தயாராக அவனை தடுத்து விட்டான்.

“எங்களோடு நீ வர வேண்டாம் வசந்த். நானும் அவளும் மட்டும் தனியாப் போறோம்”

“என்னது தனியாவா? வேண்டாம் ஹரி. ஒரு டாக்டரா நான் உன்னோட இருக்கிறது அவசியம்”

“உன்னுடைய பயம் அவசியமற்றது வசந்த். நான் இருக்கப்போவது என்னோட வெண்ணிலா கூட. அப்படி இருக்கையில் எனக்கு மருந்து மாத்திரை எதுவும் தேவைப்படப் போவதில்லை. என்னோட நோயும் அவள் தான்! மருந்தும் அவள் தான்!”

நண்பனின் ஆழமான காதலில் உள்ளம் சிலிர்த்தாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு ஒரு மருத்துவனாக நண்பனிடம் மீண்டும் பேச முயற்சித்தான் வசந்த்.
“அதெல்லாம் சரிதான் ஹரி இருந்தாலும்…”

“இல்லை வசந்த். எனக்கு அவளோட இருக்கிற தனிமையான தருணங்கள் ரொம்பவே அவசியம். அவளோட மனசில் தைத்து இருக்கிற முள்ளை எடுக்கணும்னா நாங்க ரெண்டு பேரும் மனசு விட்டு பேசணும். நீ இருந்தால் அவள் வாய் திறந்து பேசுவாள். ஆனா மனம் திறந்து பேச மாட்டாள்”

தாங்கள் திரும்பி வர சில நாட்கள் ஆகும் என்பதால் ஹரிஹரன் வசந்தை தன்னுடைய சொந்த ஊருக்கு புறப்படும் படி சொல்ல வசந்த்தும் தன்னுடைய மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வேண்டி இருந்ததால் மறுத்து பேசாமல் கிளம்பி விட்டான். அதே போல சிவாவிற்கும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சில கட்டளைகள் இடத் தவறவில்லை ஹரிஹரன்.

ஊருக்கு கிளம்பும் முன் வசந்த் ஒரு டாக்டராக ஆயிரம் அறிவுரைகள் கூறி ஹரிஹரனை அனுப்பி வைத்தான். கார் வந்ததும் தன்னுடைய பெட்டியை காரில் ஏற்றிவிட்டு நேராக வெண்ணிலாவின் அலுவலகத்திற்கு சென்றான் ஹரிஹரன்.அங்கே அவனுக்கு முன்பாக வாசலிலேயே காத்திருந்தாள் வெண்ணிலா. மரகத பச்சை நிற சுடிதாரில் ஆங்காங்கு கல் வைத்து வேலைப்பாடுகளுடன் அழகாக இருந்த உடையில் அவளது அழகு மேலும் மின்னியது. முடிந்த வரை இயல்பாக இருப்பது போல காட்டிக் கொள்ள முயல்கிறாள் என்பது அவளது முக பாவத்தில் இருந்து அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஹரிஹரன் அவளின் முயற்சிகளை கண்டும் காணாததும் போல காரை விட்டு சிரித்தபடியே இறங்கினான். கையில் கொண்டு வந்து இருந்த போக்கேவை அவளிடம் கொடுத்து விட்டு இயல்பாக அவளது கரத்தை பற்றி மென்மையாக குலுக்கி விட்டு விடுவித்தான்.

இது அத்தனையையும் வெண்ணிலா மறுக்கவோ முகம் சுளிக்கவோ இல்லை. மாறாக மிகவும் சிரமப்பட்டு உதட்டை இழுத்து பிடித்துக் கொண்டு சிரிப்பதை ஹரிஹரனால் உணர முடிந்தது. பின்னே அவளின் ஒவ்வொரு அசைவையும் நன்கு உணர்ந்தவன் ஆயிற்றே. அவளது சிரிப்பு எப்பொழுதும் மலர்ந்து மணம் வீசும் பூவை போல அவ்வளவு அழகாக இருக்கும்.

இப்பொழுது அவள் கடமைக்காகத் தான் சிரிக்கிறாள் என்பது அவள் சொல்லித் தான் அவனுக்கு தெரிய வேண்டுமா என்ன? அவளுடைய வேலையாட்கள் பெட்டிகளை ஏற்றும் வரை அமைதியாக வேடிக்கை பார்த்தவன், பொருட்களை ஏற்றி முடித்ததும் காரின் பின் சீட்டில் முதலில் அவள் ஏறுவதற்காக கதவை திறந்து விட்டான்.

அவனது செய்கையை விழி விரிய பார்த்தவள், தோளை குலுக்கிவிட்டு ஒன்றும் பேசாமல் உள்ளே போய் அமர்ந்து கொண்டாள். அவளுக்கு பின்னே காரில் ஏறாமல் காரின் மறுபுறம் சென்று அவளின் பக்க கதவு சரியாக லாக் ஆகி இருக்கிறதா என்பதை ஒரு முறை உறுதிபடுத்திக் கொண்ட பின்பு தான் மீண்டும் வந்து காரிலேறினான்.

ஹரிஹரனின் செய்கையில் இருந்த கவனிப்பும், அக்கறையையும் வெண்ணிலா கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். ஆனால் அதை குறித்து எந்த விதமான பாராட்டும் கண்களால் கூட வெளிப்படுத்தாமல் இறுகிப் போய் இருந்தாள்.

காரில் ஏறி கார் கொஞ்ச தூரம் போனதும் மெல்ல வேடிக்கை பார்ப்பது போல அவள் புறம் திரும்பி அவளது முகபாவனையை அளவிட்டான். முகம் இறுகிப் போய் அமர்ந்து இருந்தாள். ‘இவளை எப்படி ஊரில் தனியா வச்சு சமாளிக்கப் போறேனோ… ஆண்டவா காப்பாத்துடா’ என்று வேண்டிக்கொண்டவன் அவள் தன்னை கவனிக்கும் முன் பார்வையை மாற்றிக் கொண்டவன் மீண்டும் வேடிக்கை பார்க்கலானான்.

அரை மணி நேர பயணத்தில் கார் ரயில்வே ஸ்டேஷன் வந்து விட இருவரும் பொருட்களோடு பிளாட்பாரத்தில் வந்து நின்றனர்.

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… இப்போ வந்திடறேன்” என்று சொல்லிவிட்டு அவளின் அனுமதிக்காக அவளின் அருகில் கொஞ்சம் நெருங்கி சென்றான்.

“ம்” என்ற ஒற்றை முணுமுணுப்பு மட்டுமே அவளிடம். அவனுடைய அருகாமையை எல்லாம் அவள் உணரவும் இல்லை, கண்டு கொள்ளவும் இல்லை. அவளது பார்வை ஏக்கத்தோடும் ஒரு வித பயத்தோடும் சற்று தொலைவில் அமர்ந்து குச்சி மிட்டாயை சப்பி சப்பி சாப்பிட்டுக் கொண்டு இருந்த அந்த குழந்தையிடமே இருந்தது.

“ஹ்ம்” என்ற பெருமூச்சோடு அருகில் இருந்த கடைக்கு சென்றவன் குடிக்க தண்ணீர் பாட்டில், பழங்கள், பிஸ்கட் எல்லாம் வாங்கிக் கொண்டு ஹரிஹரன் வந்து நிற்கவும் ட்ரைன் வரவும் சரியாக இருக்கவே தங்களுடைய டிக்கெட்டை பார்த்து சரியான பெட்டியை தேடி அதில் ஏறி அமர்ந்தார்கள்.

ஏ. சி. கோச்சில் வெண்ணிலாவும் ஹரிஹரனும் ஏறியதும் ட்ரைன் மெல்ல நகரத் தொடங்கியது. பெட்டிகளை அடுக்கி விட்டு சீட்டில் அமர்ந்ததும் வெண்ணிலா தன்னுடைய ஹேன்ட் பேகில் இருந்து ஒரு ஆங்கில புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.

இன்னும் பன்னிரெண்டு மணி நேரம் நீளும் இந்த பயணத்தில் என்ன செய்து இவளது மனதை அறிந்து கொள்வது என்ற சிந்தனையில் ஹரிஹரன் மூழ்கி இருந்தவன் போன் ஒலிக்கவும் தன்னுணர்வு அடைந்தான். போனை எடுத்து பேசிவிட்டு வைத்தவன் திரும்பி மெல்ல அவளைப் பார்க்க,அவளோ புத்தகத்தில் மூழ்கி முத்தெடுப்பவளை போல முகத்தை வைத்துக் கொண்டாள்.

‘ஊர் போய் சேருற வரை இவ இப்படியே வந்தா அப்புறம் எப்படி நான் இவ மனசை தெரிஞ்சுக்கிறது?முதலில் இவ என்கிட்டே கொஞ்சம் நார்மலா பேசுற மாதிரி செய்யணும். இல்லேன்னா இந்த சண்டி ராணி நிச்சயம் வாயே திறக்க மாட்டா’என்று எண்ணிக் கொண்டவன் அவளிடம் வம்புக்கு சென்றான்.

“ஹலோ மேடம்… என்ன டூர் போயிட்டு இருக்கிற மாதிரி நீங்க பாட்டுக்கு புக் படிச்சுக்கிட்டு வரீங்க?”

“ப்ச்… இப்போ என்ன செய்யனும்னு சொல்றீங்க. இன்னும் பன்னிரெண்டு மணி நேரம் ஆகும் நாம இறங்க. அது வரை என்ன செய்யுறது?” கொஞ்சம் எரிச்சலாகவே பேசினாள் வெண்ணிலா“என் கூட பேசிக்கிட்டு இருக்கலாம்ல”

“என்னது உங்க கூடயா? அதில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை”

“நான் என்ன உங்களை என் கூட கடலை போடவா கூப்பிட்டேன் இப்படி சலிச்சுக்கறீங்க! நான் நம்ம வேலையை பத்தி சொன்னேன்… ஒருவேளை உங்களுக்கு அந்த மாதிரி எதுவும் எண்ணம் இருந்தால் அதை மாத்திக்கோங்க. ஏன்னா அய்யாவுக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு. புரியுதா?” வேண்டுமென்றே சீண்டினான்.

‘ஹுக்கும்… நினைப்பு தான். பேச்சைப் பார் ’ என்று உதட்டை சுழித்து கழுத்தை ஒரு வெட்டு வெட்டினாள்.மனதின் உள்ளுக்குள் லேசாக ஒரு வலி ஒரு நிமிடம் தோன்றி மறைந்தது. ‘ஒருவேளை இரண்டு பேரும் வேறு வேறு நபர்களாக இருக்குமோ?அவராக இருந்தால் என்னை தெரியாதது போல ஏன் நடிக்க வேண்டும்?’என்று சிந்தித்தவள் அதை ஒதுக்கி தள்ளி வைத்து விட்டு ஹரிஹரனுடன் பேச ஆரம்பித்தாள்.

“ சரி சொல்லுங்க என்ன பேசணும்”

“எல்லாம் என் ஆளை… அதாவது என் கம்பெனிக்கு நீங்க தேர்ந்தெடுக்க போகும் ஆட்களைப் பற்றி தான்” என்று சொன்னவன் சிறிது நேரம் சீரியஸாக பேச ஆரம்பித்தான்.

அவளுடன் பேசிக் கொண்டு இருக்கும் போதே வாங்கி வந்து இருந்த சாத்துக்குடி பழங்களை எல்லாம் உண்பதற்கு ஏதுவாக உரித்து வைத்து விட்டு அவளிடம் சாப்பிட நீட்டினான்.

அவன் நினைத்தது போலவே வெண்ணிலா அதை வாங்கி உண்ண மறுக்க அவளை நோக்கி விசித்திரமான சிரிப்பு ஒன்றை சிரித்தான்.

“இன்னைக்கு மட்டும் இல்லை இனி வரப் போகிற நாட்களும் நீங்க என் கூட என்னோட பாதுகாப்பில் தான் இருக்கப் போறீங்க. அங்கே ஊருக்கு போன பிறகும் சரி உங்களோட சாப்பாடு, நீங்க தங்குறது எல்லாம் என்னோட செலவில்… அதாவது என்னோட கம்பெனி செலவில் தான் செய்யப் போறேன். ஏதோ தெரியாதவன் கிட்ட வாங்க மறுக்கிற மாதிரி இப்படி எல்லாம் செய்யாதீங்க… புரிஞ்சுதா?”

அவனுடைய வார்த்தையில் உள்ள நியாயம் புரியவும் ஒன்றும் பேசாமல் வாங்கிக் கொண்டாள். அடுத்த இரண்டு மணி நேரம் அவர்கள் இருவரும் தொழிலைப் பற்றி பேசிக் கொண்டே வந்தாலும் வெண்ணிலாவின் வயிறு வாடாத வண்ணம் பார்த்துக் கொண்டான். வெண்ணிலா முதலில் இதை உணரவில்லை.

கொஞ்ச நேரம் கழித்துத் தான் உணர்ந்தாள்.தன்னுடைய வயிறு நிறைய பழங்களால் நிரம்பிய பிறகு தான் அவளுக்கே அது தெரிந்தது.அந்த அளவிற்கு ஹரிஹரனின் பேச்சு சாமர்த்தியம் இருந்தது.ஹரிஹரனின் இந்த தன்மையை பார்த்து உள்ளுக்குள் கண்ணீர் வடித்தாள் வெண்ணிலா.

கிராமத்தில் இருக்கும் பொழுது தான் ஆயிரம் சேட்டைகள் செய்தாலும் தன்னுடைய வயிறு வாடாத வண்ணம் நேரா நேரத்திற்கு சரியாக உணவை ஊட்டி விடும் தாயை பற்றிய எண்ணம் அவளுக்கு எழவும் தான் அவள் ஹரிஹரனின் செயலை உணர்ந்து கொண்டாள்.

‘இவன் ஏன் இத்தனை அக்கறையாக பார்த்துக் கொள்கிறான்? காரில் ஏறியதில் இருந்து இவனுடைய ஒவ்வொரு செயல்களிலும் என் மீதான அக்கறை மட்டுமே வெளிப்படுகிறதே… இவனுடைய சுபாவமே இது தானா? அல்லது நான் தான் இப்போது இருக்கும் மன உளைச்சலால் தேவை இல்லாமல் குழப்பிக் கொள்கிறேனா?’

அவளுடைய முகத்தில் தெரிந்த குழப்பத்தை பார்த்ததும் பேசுவதை நிறுத்தி விட்டு அவளது முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தான். அதையெல்லாம் அவள் உணரவே இல்லை.

அவன் பேச முற்படும் போது ட்ரெயினில் அவர்கள் ஏற்கனவே பதிவு செய்து இருந்ததால் அவர்களுக்கு மதிய உணவு கொடுப்பதற்கு ஆட்கள் வரவே அவனது பேச்சு அப்போதைக்கு தடைப்பட்டுப் போனது. வெண்ணிலாவிற்கு கொஞ்சமும் பசி இல்லை தான். இருந்தாலும் இந்த உணவை விட்டால் அதன்பிறகு இரவு உணவு ட்ரைனை விட்டு இறங்கிய பின் தான் கிடைக்கும் என்பதால் அதை வாங்கி உண்ண ஆரம்பித்தாள்.முதல் வாய் வாயில் வைத்ததுமே அந்த உணவின் சுவையின்மையால் முகத்தை சுளித்தவள் வேறு வழி இன்றி அதையே சாப்பிடலாம் என்று எண்ணி ரொம்ப கஷ்டப்பட்டு இரண்டாவது கவளத்தை உண்ண முனைகையில் அவளை தடுத்து நிறுத்தினான் ஹரிஹரன்.
“வேண்டாம் … அதை சாப்பிடாதே.அந்த சாப்பாடு தான் உனக்கு பிடிக்கலையே,அப்புறமும் ஏன் அதையே சாப்பிடற…சாப்பிடறீங்க”

அவன் முதலில் ஒருமையில் பேசிவிட்டு பின் அதை பன்மைக்கு மாற்றியதை எல்லாம் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.அவளது கையில் இருந்த சாப்பாட்டை வாங்கி கீழே வைத்து விட்டு வீட்டில் இருந்து ஏற்கனவே எடுத்து வந்து இருந்த டிபன் பாக்சை எடுத்து அவளிடம் நீட்டினான்.

“ஒருவேளை இங்கே சாப்பாடு சரியில்லேன்னா என்ன பண்றதுன்னு ஒரு முன்னெச்சரிக்கையாக வீட்டில் இருந்தே எடுத்து வந்தேன். இதை சாப்பிடுங்க” அவளிடம் நீட்டினான்.

ஹரிஹரன் இப்படி பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயமும் செய்வதில் கடுப்பானவள் அவனை கோபப்படுத்தும் விதமாக பேசத் தொடங்கினாள்.

“இதில என்ன கலந்து வச்சு இருக்கீங்க?”

“புரியலைமா… இது வெறும் தயிர்சாதம் தான். இதில என்ன கலந்து இருக்கப் போறேன். தயிர், பால், கொத்தமல்லி, இஞ்சி அப்புறம் டெஸ்ட்க்காக கொஞ்சம் மாதுளம் பழம் அப்புறம்…”

“மயக்க மருந்தை விட்டுட்டீங்களே” வேண்டுமென்றே குதர்க்கமாக பேசினாள்.

அவளது கேள்வியையே அப்பொழுது தான் உணர்ந்தான் ஹரிஹரன். முகம் இறுகி விட ஒரு நொடி கண்களை மூடி தன்னை சமனப்படுத்திக் கொண்டவன் பிறகு அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே பேச ஆரம்பித்தான்.

“எனக்கு என்ன பைத்தியமா? உன்னை இவ்வளவு திட்டம் போட்டு இப்படி தனியாக் கூட்டிட்டு வந்து ட்ரெயினில் வச்சு மயக்க மருந்து கொடுக்க? ஏன்னா இது நாலு பேர் வந்து போகும் இடம் பார்… யாராவது திடீர்னு வந்தால் என்னுடைய வேலைக்கு தான் இடைஞ்சல் இல்லையா? அதையெல்லாம் ஊரில் போய் தான் ஆரம்பிப்பேன்” என்று சாதாரணமாக சொல்லி விட்டு அவன் சாப்பிட ஆரம்பித்தான்.

வெண்ணிலா தான் சாப்பிட்ட உணவை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ‘ஞே’ என்று முழித்துக் கொண்டு இருந்தாள். ஹரிஹரனின் குரலும்,முக பாவனையும் அவளுக்கு உள்ளுக்குள் குளிரூட்டியது.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 1 Average: 4]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here