Siragilla Devathai Tamil Novels 27

0
3057

அத்தியாயம் 27
மணி இரவு ஏழை நெருங்கிக் கொண்டு இருந்தது. இன்னும் சில நிமிடங்களில் இருவரும் இறங்க வேண்டும் என்பதால் பொருட்களை சரிபார்த்து இறங்குவதற்கு தயாராக இருந்தனர் இருவரும். வெண்ணிலா அப்படி தன்னை கீழ்த்தரமாக பேசியதில் இருந்து ஹரிஹரன் தானாக முன்வந்து அவளிடம் பேசவில்லை. அதற்காக அவளை கண்டு கொள்ளாமலும் இருக்கவில்லை. அவளுக்கு வேண்டியதை எல்லாம் பார்த்து பார்த்து சரியாக செய்து கொண்டு இருந்தான்.

அவள் மறுக்கும் போது அழுத்தமான ஒற்றை பார்வையிலேயே அவளை ஒத்துக் கொள்ள வைத்தான். தான் அப்படி பேசியும் கோபமாக ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கும் ஹரிஹரனின் முகத்தை குழப்பத்தோடு பார்த்துக் கொண்டு இருந்தாள் வெண்ணிலா.

‘இவன் பாம்பா? பழுதா? நான் அப்படிப் பேசியதும் கோபப்பட்டவன் இப்பொழுது ஒன்றுமே நடக்காதது போல இயல்பாக இருக்கிறானே? ஒருவேளை இவன் சொன்னது போல ஊருக்கு போனதும் என்னை பழி வாங்குவானோ?’ என்றெல்லாம் எண்ணி அவள் குழம்பியபடி இருக்க ஹரிஹரன் அவளையோ அவளது குழப்பத்தையோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.

ஊர் நெருங்குவதை உணர்ந்த வெண்ணிலா ஹரிஹரனை பற்றிய எண்ணங்களை மனதில் இருந்து தற்காலிகமாக துரத்தி விட்டு எப்படி அங்கே போய் இருக்கப் போகிறோம்? அந்த ஊரில் தெரிந்தவர்கள் என்னை பார்க்கும் போது பழங்கதை எதையாவது பேசினால் என்ன செய்வது? ஏன் ஊரை விட்டு போனீர்கள் என்றெல்லாம் கேட்பார்களே அவர்களுக்கு என்ன பதில் சொல்வது?’ என்றெல்லாம் குழம்பிக் கொண்டு இருக்க அவர்கள் இறங்க வேண்டிய இடமும் வந்து சேர்ந்தது.

கடைசி நாள் அந்த ஊரை விட்டு கிளம்பும் போது தான் எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தோம் என்பதெல்லாம் அவளுடைய மனக்கண்ணில் வந்து போக அவளுடைய முகம் முற்றிலும் இறுகிப் போனது. இலக்கின்றி இருளை வெறிக்கத் தொடங்கினாள்.ட்ரைன் நின்ற பிறகே தூக்கத்தில் இருந்து விழிப்பவள் போல பேந்த பேந்த விழித்தவள் சட்டென எங்கே இருக்கிறோம் என்பது புரிபட இயல்பு நிலைக்கு ஏற்றவாறு தன்னை சமப்படுத்திக் கொண்டாள்.தன்னுடைய பெட்டிகளை தூக்கி கொள்ள முனைந்த வெண்ணிலாவை பார்வையாலேயே பொசுக்கி விட்டு தன்னுடைய பெட்டிகளுடன் வெண்ணிலாவின் பெட்டிகளையும் சேர்த்து எடுத்துக் கொண்டு இறங்கியவன் ஏற்கனவே அங்கு அவர்களுக்காக வந்து காத்திருந்த டிரைவரை அடையாளம் கண்டு அவருடைய வண்டியில் போய் ஏறினார்கள். வண்டியில் ஏறி அமர்ந்த பின் தான் ஹரிஹரன் வெண்ணிலாவின் முகத்தை உற்றுப் பார்த்தான்.

ஊரில் இருந்த போது அவள் கொஞ்சமேனும் சிரமப்பட்டாவது இயல்பாக இருப்பது போல காட்டிக் கொண்டாள். இங்கே அவளால் அது முடியவில்லை. அவளுடைய முகம் வெளுத்து போய் விட்டது. ஹரிஹரன் நினைத்து இருந்தால் அவளை அணைத்து ஆறுதல் சொல்லி இருக்கலாம். ஆனால் இப்பொழுது இருக்கும் சூழலில் அது நிச்சயம் நன்மையை பயக்காது.

இங்கே வந்து இருப்பது அவளுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை என்பதை ஹரிஹரன் உணர்ந்து தான் இருந்தான்.ஆனால் அதற்காக இதை அப்படியே விட்டு விட முடியாதே…

வெண்ணிலா இதுநாள் வரை அவனுடைய மனதில் எப்பொழுதும் நிலவு போல குளிர்ச்சியை மட்டும் தான் அளித்துக் கொண்டு இருந்து இருக்கிறாள். இப்பொழுதும் அவள் குளிர்ச்சியாகத் தான் இருக்கிறாள் அவன் கண்களுக்கு. ஆனால் ஒரு சிறு வித்தியாசம். இப்பொழுது அவள் இருக்கும் குளிர்ச்சி உறைபனியின் குளிர்ச்சி.

அது அவளை மட்டும் இல்லாது அவளுக்கு அருகில் செல்வோரையும் மரணத்தை நோக்கி அழைத்து சென்று விடும் என்பதை உணர்ந்து கொண்டவன் அவளை எப்படியும் அதிலிருந்து மீட்டே ஆக வேண்டும் என்ற உறுதியோடு தன்னுடைய மௌனத்தை கலைத்து விட்டு அவளுடன் பேச ஆரம்பித்தான்.

“இங்கே பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் இன்னைக்கு நைட் தங்கிக்கலாம். நாளைக்கு காலையில ஊருக்கு உள்ளே போகலாம். சரியா?”

“ஏன் இப்போவே ஊருக்கு போகலாமே?” அங்கே வர அவளுக்கு துளியும் விருப்பம் இல்லை தான். இருப்பினும் ஹரிஹரன் தன்னுடைய கோபத்தை விட்டு விட்டு இறங்கி பேசும் போது மௌனமாக இருப்பது நன்றாக இருக்காது என்பதால் அவளும் பேசினாள்.

“அங்கே ஊரில் உனக்கு துணைக்கு ஒரு அம்மாவை வர சொல்லி இருந்தேன். அவர்களால் இப்பொழுது வர முடியவில்லை போல . நாளை காலையில் தான் வர முடியுமாம். அதனால் தான் இப்பொழுது அங்கே போகவில்லை. உனக்கும் நான் எப்பொழுது உன் மீது பாய்ந்து விடுவேனோ என்ற பயம் இல்லாமல் இருக்கும் பார்” என்று சன்னக் குரலில் டிரைவருக்கு கேட்காத வண்ணம் கூறிவிட்டு கோபமாக அந்தப் பக்கம் திரும்பி வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.

ஹரிஹரனின் குரலில் இருந்த குற்ற சாட்டையும், கோபத்தையும் அவளால் உணர முடிந்தது. இருப்பினும் ஒன்றும் பேசாமல் இதழ் கடித்து மௌனமானாள். அவளை பொறுத்தவரை அவள் அப்படிக் கேட்டதில் நியாயம் இருப்பதாகவே எண்ணினாள்.

முதல் நாள் தன்னை நேரில் பார்த்த போதும் சரி, அதன் பிறகு போனில் பேசிய போதும் சரி அவளிடம் அப்படி ஒன்றும் ஹரிஹரன் இணக்கமாக நடந்து கொள்ளவில்லை. இப்பொழுது அவனின் ஒவ்வொரு செயலிலும் இருக்கும் அக்கறை அவளுக்கு சந்தோசத்தை கொடுப்பதற்கு பதிலாக சந்தேகத்தையே கொடுத்தது.

‘அனைத்திற்கும் மேலாக ஹரிஹரனை பார்க்கும் பொழுதெல்லாம் அவளுக்கு ‘அவரின்’ நினைவு வந்து மேலும் இம்சித்தது. ஏனெனில் தன்னை பார்த்த அந்த நொடியில் இருந்து ஒரு நொடி  கூட தன்னை தெரிந்த மாதிரி இவன் காட்டிக் கொள்ளவே இல்லையே.அதனால் இருவரும் நிச்சயம் வேறு ஆட்கள் தான் என்ற முடிவுக்கு வந்து விட்டாள் வெண்ணிலா. இவனுடன் பேசினால் தானே அவரின் நினைவு வருகிறது!.பேசாமலே ஒதுங்கி இருந்து கொண்டால் இப்படி தோன்றாது இல்லையா?’ என்று நினைத்தவள் அதை செயல்படுத்தும் பொருட்டே வேண்டுமென்றே அவனுக்கு கோபமூட்டினாள்.

அங்கிருந்து நேரே ஹோட்டலுக்கு போனவர்கள் அருகருகே அறை எடுத்துக் கொண்டனர். குளித்து வேறு உடை மாற்றிவிட்டு அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அறையில் அமர்ந்து இருந்தவளுக்கு இன்டர்காம் மூலம் அழைத்து சாப்பிட வருமாறு ஹரிஹரன் அழைக்க, வேண்டா வெறுப்பாகக் கிளம்பி வெளியே வந்தாள்.
அறையின் வாசலில் அவளுக்காக காத்திருந்த ஹரிஹரனை கண்டு புருவம் உயர்த்தியவள் ஒன்றும் பேசாமல் அவனுடன் இணைந்து நடந்தாள். ஹரிஹரனை பற்றி அவளுக்குள் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் அது எதையும் அவனிடம் கேட்டு தெளிவு பெரும் மனநிலையில் இப்பொழுது அவள் இல்லை.

தெரிந்தவர்கள் யாரேனும் வந்து விடுவார்களோ யாரையேனும் எதிர் கொள்ள வேண்டி இருக்குமோ என்ற கேள்வியே அவள் மனதில் வண்டாக குடைய இயந்திரம் போல அவனை பின் தொடர்ந்தாள்.

நகரின் மையப் பகுதியில் இருந்த பிரம்மாண்டமான நட்சத்திர ஹோட்டல் அது. சுற்றிலும் அலங்கார மின் விளக்குகள் கண்ணை பறிக்க, பூமியா அல்லது தேவலோகமா என்று பார்த்தவர் சந்தேகம் கொள்ளும் வகையில் அமைந்து இருந்த அந்த இடம் கொஞ்சமும் அவளது கண்ணையோ கருத்தையோ கவரவில்லை.

அவளின் மனநிலையை உணர்ந்ததாலோ என்னவோ இருவர் மட்டும் அமரும் வண்ணம் இருந்த டேபிளை நோக்கி அவளை அழைத்து சென்றான். மெனு கார்டை அவளிடம் கொடுத்து உணவு வகைகளை தேர்ந்து எடுக்கக் சொல்ல மெனு கார்டை கொஞ்ச நேரம் வெறித்தவள் பெயருக்கு ஏதோ ஒரு உணவை சொல்லி விட்டு பார்வையை வேறு எங்கும் செலுத்த பயந்து மேசையின் மீது இருந்த பூச்சாடியை வெறிக்கத் தொடங்கினாள்.அவள் இப்படி இருக்க ஹரிஹரன் ஹோட்டலில் இருந்த எல்லா உணவு வகைகளையும் ஒன்று விடாமல் ஆர்டர் செய்து வைத்தான். ஏதேதோ நினைவுகளில் உழன்றவள் எதேச்சையாக நிமிர்ந்து டேபிளை பார்க்க டேபிள் முழுக்க உணவு வகைகளால் நிரம்பி இருந்ததை கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்தே போனாள்.

அவளது அதிர்ச்சியை வேண்டுமென்றே அலட்சியப்படுத்தி விட்டு அவளை சாப்பிடக் கூட சொல்லாமல் அவன் பாட்டிற்கு உணவு வகைகளை வெளுத்துக் கட்டிக் கொண்டு இருந்தான் ஹரிஹரன், கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தவள் அவனிடம் வாய் விட்டே கேட்டு விட்டாள்.

“நான் இன்னும் சாப்பிடக் கூட இல்லை. நீங்க கொஞ்சமும் கண்டுக்காம சாப்பிட்டுகிட்டு இருக்கீங்க?”

“இப்போ உங்களுக்கு என்ன தான் வேணும்? ட்ரெயினில் சாப்பிடுங்கன்னு சொன்னதுக்கு தான் இதுல என்ன கலந்து வச்சு இருக்கன்னு கேட்டு அசிங்கப் படுத்தறீங்க? சரின்னு இப்ப நான் பாட்டுக்கு சாப்பிட்டுட்டு இருக்கேன். இப்ப ஏன் என்னை கண்டுக்காம இருக்கேன்னு சண்டைக்கு வரீங்க? உங்களுக்கு என்ன தான் பிரச்சினை?” இயல்பாக கேட்பது போல கேட்டாலும் அவன் குரலில் அத்தனை அழுத்தம் இருந்தது.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருதிருவென முழித்தாள் வெண்ணிலா. ‘இவன் சொல்வதும் சரிதானே? நான் ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறேன்? இந்த ஊருக்கு வந்ததால் ஏற்பட்ட குழப்பமா? இல்லை இவனுடைய அருகாமையினால் ஏற்பட்ட மன சஞ்சலமா’ என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டவள் ஒன்றும் பேசாமல் மெளனமாக உணவை சாப்பிட ஆரம்பித்தாள்.

அவளின் அருகே அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தவன் பேசாமல் உணவை உண்டானா? இல்லை. உணவின் ஒவ்வொரு கவளத்தையும் ரசித்து ருசித்து உண்டான்.

“ம்ம்ம்ம்… ஆஹா என்ன டேஸ்ட்… சான்சே இல்லை. இந்த சிக்கன் ஷ்ஷ்ஷ் அப்பா… மிளகை போட்டு பக்குவமா செஞ்சு இருக்கான். வாயில் போட்டதும் என்னமா இருக்கு…”

“கொஞ்சம் நேரம் பேசாம சாப்பிடுங்களேன்”

“அட ராமா! உங்களுக்கு என்ன தான் பிரச்சினை?. உங்க கூட தான் பேசக் கூடாதுன்னு சொன்னீங்க. சரின்னு கேட்டுகிட்டேன். என் டேபிள்ல நான் ஆர்டர் பண்ணின செத்துப்போன கோழிக்கிட்ட பேசினா கூட உங்களுக்கு பொறுக்க மாட்டேங்குதே. ஏன்?”

இதற்கு என்ன பதிலை சொல்வது என்று கொஞ்சம் முழித்தவள் சட்டென தன்னை சுதாரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள். “எனக்கு சாப்பிடும் போது பேசினால் பிடிக்காது”

“உங்களை பேச சொல்லி நான் சொல்லலியே. நானே தானே தனியா பேசிக்கிட்டேன்” வசீகரமாக ஒற்றை புருவத்தை உயர்த்தி குறும்பாக பதில் அளித்தான் ஹரிஹரன்.

“தனியா பேசினா அதுக்கு வேற பேர் தெரியுமா?” அவள் குரலில் கிண்டல் இருந்தது.

“சம்பந்தமே இல்லாமல் அடுத்தவங்க விஷயத்தில் மூக்கை நுழைத்து அவங்களை கேள்வி கேட்கிறதுக்கும் ஒரு பேர் இருக்கு அது தெரியுமா உனக்கு?” சளைக்காமல் எதிர் கேள்வி கேட்டான் ஹரிஹரன்.

“என்னை என்ன முந்திரிக்கொட்டைன்னு சொல்றீங்களா?” வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு தயாரானாள்.
“என்னை நீ பைத்தியம்ன்னு சொல்ல வரியா?” நானும் சண்டைக்கு தயார் தான் என்று ஹரிஹரனும் போர்க்கொடியை பறக்க விட்டான்.

“சே! உங்களோடு எனக்கென்ன பேச்சு?” என்று கோபமாக முகத்தை திருப்பிக்கொண்டு அமர்ந்தவள் ஹரிஹரன் மீது எழுந்த கோபத்தில் தட்டில் இருந்த உணவு வகைகளை வேகமாக உண்ண ஆரம்பித்தாள்.

அவளை சாப்பிட வைக்க தான் செய்த உத்தி பலித்ததை எண்ணி மனதுக்குள் சந்தோசம் அடைந்தவன் வெளியே முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு சாப்பிடலானான்.

சாப்பிட்டு முடித்ததும் அறை வாசல் வரை அவளுக்கு துணையாக வந்தவன் அவள் அறைக் கதவை சாத்த போகும் கடைசி நொடியில் அவள் கண்களை நேருக்கு நேராக சந்தித்து பேசினான்.“நாளைக்கு காலையில் ஊருக்குள்ள போகணும். ரொம்ப சீக்கிரம் எழுந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பத்து மணிக்கு கிளம்பினால் போதும். அதுவரை தேவை இல்லாமல் எதையும் போட்டுக் குழம்பிக் கொள்ளாமல் நிம்மதியாக படுத்து தூங்கு. டிபன் சாப்பிட ஒரு ஒன்பது மணிக்கு தயாராக இரு. நான் வந்து அழைத்து செல்கிறேன். இரவு எந்த காரணம் முன்னிட்டும் அறையை விட்டு வெளியே வர வேண்டாம்.

என்னடா இப்படி சொல்கிறானே என்று நீ பயப்பட வேண்டாம். இது பாதுகாப்பான இடம் தான். இருந்தாலும் உன்னுடைய பாதுகாப்பிற்காக தான் சொல்கிறேன். வீண் விவாதம் செய்யாமல் புரிந்து கொள்வாய் என்று நினைக்கிறேன்” என்று மென்மையாக அவளுக்கு எடுத்து சொன்னவன் லேசாக தலை அசைத்து அவளுக்கு விடை கொடுத்தான்.

அவன் சொன்னது புரிந்ததோ இல்லை அவனது குரலின் மென்மையோ ஏதோ ஒன்றில் கட்டுப்பட்டவள் மௌனமாக தலையை அசைத்து அவனுக்கு விடை கொடுத்து விட்டு அறைக் கதவை சாத்திக் கொண்டாள்.

அவன் அங்கிருந்து சென்று விட்டான் என்பதை அவனது காலடியோசை மூலம் உணர்ந்து கொண்டவள் கதவை விட்டு விலகாமல் கதவிலேயே சாய்ந்து அமர்ந்து விட்டாள். ‘இப்போ அவர் பேசினதுக்கு என்ன அர்த்தம்? நான் ஏதோ குழப்பத்தில் இருக்கிறேன்னு அவருக்கு எப்படி தெரிஞ்சது? என் முகமே காட்டிக் கொடுத்துடுச்சா? எப்படி தெரிஞ்சு இருக்கும்? அதுக்காகத்தான் என்னிடம் வம்பு இழுத்தாரோ’ என்று தன்னை தானே கேள்விகள் கேட்டுக் கொண்டாள். இந்த கேள்விகள் அனைத்திற்கும் பதில் தெரிந்தவன் சொல்வானா?

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here