Siragilla Devathai Tamil Novels 29

0
3066

கார் அமைதியாக போய்க் கொண்டு இருந்தது. காரில் இருந்த இருவரும் எதுவும் பேசாமல் தத்தமது சிந்தனையில் மூழ்கி இருந்தனர். வெண்ணிலா ஹரிஹரனின் முகத்தை பார்க்க தயங்கிக் கொண்டு இருக்க, ஹரிஹரனோ அவளை தொந்தரவு செய்ய விரும்பாமல் அமைதியாகவே வந்தான். அரை மணி நேரத்தில் அவர்கள் கார் ஊருக்குள் வந்து விட ஹரிஹரன் லேசாக திரும்பி வெண்ணிலாவின் முகத்தை நோட்டம் விட்டான்.

அவள் முகத்தில் இப்பொழுது ஊர் நெருங்கி விட்டது என்ற பயம் இல்லை. அதற்கு பதிலாக தீவிர சிந்தனையில் இருந்தாள். அவளது முக பாவனையில் திருப்தியானான் ஹரிஹரன். அதற்குள் வீடு வந்து விடவே இருவரும் காரை விட்டு இறங்கினர். அங்கே வாசலில் அவர்களுக்காக ஒரு பெண்மணி காத்திருந்தார். காரை விட்டு இறங்கியதும் வேலையாள் வந்து பெட்டிகளை எடுத்து செல்ல இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

காலை எழுந்தது முதல் இருவரும் எதுவும் உண்ணாததால் இருவருக்குமே பசி வயிற்றை கிள்ள காற்றில் வந்த உணவின் வாசனை அவர்களை நேராக டைனிங் டேபிளுக்கு இழுத்து சென்றது. சுடச்சுட ஆவி பறக்க இருந்த இட்டிலிகளும், அதற்கு தோதாக வைக்கப் பட்டு இருந்த சாம்பாரும், புதினா சட்டினியும் தேவாமிர்தமாக இருக்க இருவரும் திருப்தியாக உண்டு முடித்தனர். சாப்பிட்டு முடித்ததும் காபியை மெதுவாக உறுஞ்சியவாறே அந்த பெண்மணியிடம் பேச ஆரம்பித்தான் ஹரிஹரன்.

“மூன்று வேளையும் சமையல் உங்கள் பொறுப்பு. பகலில் நாங்கள் கிளம்பி வெளியே போனால் மறுபடி திரும்ப மாலை ஆகிவிடும். இதற்கு நடுவில் சமையலை முடித்து எங்களுக்கு நாங்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்து விட்டு நீங்கள் கிளம்பி விடலாம். இரவு நீங்கள் இங்கே இந்த பெண்ணிற்கு துணையாக இங்கேயே தங்கி கொள்ள வேண்டும். சரிதானா”

“ தம்பி சாயந்திரம் பலகாரமுங்க” பவ்யமாக கேட்டார் அந்தப் பெண்மணி.

“அதை நாங்கள் வெளியே பார்த்து கொள்கிறோம்” என்றவன் அப்படியே வெண்ணிலாவின் புறம் திரும்பினான்.“எனக்கு கொஞ்சம் வேலை இருக்குமா. அதை முடிச்சுட்டு நான் வரேன். ரெண்டு பேருமா கிளம்பி ஊருக்குள்ளே போகலாம். அது வரை நீ ஓய்வெடு” என்று சொல்லிவிட்டு லேப்டாப்பை எடுத்து தன்னுடைய வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.

மறுத்து பேச முடியாமலோ அல்லது விரும்பாமலோ அங்கிருந்து அகன்றாள் வெண்ணிலா. அவள் அருகில் இல்லாததை உறுதி செய்து கொண்டவன் போனில் யாருக்கோ அழைத்து சில உத்தரவுகளை பிறப்பித்தான்.

வேலைகளை முடித்து கொண்டு கண்களாலேயே வெண்ணிலாவை தேட அவள் தட்டுப்படவில்லை. மெல்ல அவளை வீடு முழுக்க தேடியவன் அவளை கண்டது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில்.

அந்த வீட்டின் தோட்டத்தை ஹரிஹரன் கொஞ்சம் வித்தியாசமான முறையில் அமைத்து இருந்தான். இருபுறமும் பச்சை பசேலென புற்கள் அழகாக வளர்ந்து இருக்க, அதற்கு இடையிடையே வித்தியாசமான சிறு பூச்செடிகள் வளர்க்கப்பட்டு இருந்தன. அவை குட்டையாக வளரும் இயல்புடைய தாவரம் என்பதால் அந்த செடியின் பூக்கள் பார்ப்பதற்கு புல்லின் பூக்களை போலவே தோன்றும்.

அதற்கு கொஞ்சம் தள்ளி நன்றாக காய்த்து குலுங்கும் மாமரங்களும் அணிவகுத்து நின்றன. அந்த தோட்டத்தில் தான் வெண்ணிலா இருந்தாள். நின்று கொண்டு அல்ல! முழங்காலிட்டு அமர்ந்து இருந்தவளின் கைகள் அந்த புற்களையும் பூக்களையும் பாசமாக வருடிக் கொண்டு இருந்தது. கண்களில் மட்டும் லேசான ஏக்கம் இருந்தது.

“இங்கே என்ன செய்கிறாய்” மென்மையான குரலில் கேட்டவாறே அவளுக்கு அருகில் அவனும் அமர்ந்து கொண்டான்.

“ஒன்றுமில்லை”

“ வா உனக்கு இந்த வீட்டை சுத்தி காமிக்கிறேன்” என்றவன் அவளுக்கு கை கொடுத்து எழுப்பி விட்டு அவளுடன் சேர்ந்து நடந்தபடி ஒவ்வொரு இடமாக காட்ட ஆரம்பித்தான்.

“இந்த வீட்டை இதற்கு முன் யாரோ ஒரு வெளியூர்காரர் தான் வச்சு இருந்தாராம்”

“ தெரியும்”

‘எப்படி தெரியும்’ என்று அவனும் கேட்கவில்லை… அவளும் சொல்லவில்லை. அதுக்கு அப்புறம் இந்த வீட்டை என்னோட அப்பா எனக்காக வாங்கினார். என்னோட கல்யாணத்துக்கு பரிசா தர. இந்த வீட்டை வாங்கியதும் நானே வந்து என் மனைவியின் ரசனைக்கு ஏற்ற விதத்தில் கொஞ்சம் மாறுதல் செய்தேன்” என்று சொல்லிக் கொண்டே வந்தவன் வெண்ணிலாவின் கசங்கிய முகத்தை பார்த்ததும் ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் முழித்தான்.

தன்னுடைய திருமண செய்தி அவளை பாதிக்கிறதோ என்று எண்ணி குதூகலம் அடைந்தவன் மேலும் தொடரலானான்.

“இங்கே தோட்டத்திலும் சரி வீட்டிலும் சரி அவளுக்காக நிறைய விஷயங்களை நானே நேரில் வந்து பார்த்து பார்த்து செய்தேன். இது மட்டும் இல்லாமல் நிறைய செய்து இருக்கிறேன் வா காட்டுகிறேன்” என்று கூறியபடி அவள் கையை பற்றியவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் வீட்டினுள் அழைத்து சென்றான்.

அந்த வீட்டின் மாடிக்கு செல்லும் படிகள் நேராக இல்லாமல் வளைந்து வளைந்து செல்லும் விதமாக மிக்க கலைநயத்தோடு இருந்தது. அதை எதையும் அவள் ரசிக்கவில்லை. அவள் முற்றிலும் அதிர்ந்து போய் இருந்தாள். இதை அவள் எதிர்பார்க்கவில்லையே. அவனுக்கு கல்யாணம் ஆகி மனைவி என்று ஒருத்தி இருப்பாள் என்ற எண்ணமே அவளுக்கு தோன்றவில்லையே …

அவனை உணர்ந்து கொண்டதுமே அவள் மனமும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்தது. வெகுநாட்களுக்கு பிறகு அவள் மனது நிம்மதியாக இருந்தது. ஆனால் தன்னுடைய நிம்மதிக்கு ஆயுள் இத்தனை குறைவாக இருக்கும் என்பதை அவளால் ஏற்க முடியவில்லை.

இத்தனை வருடங்களில் அவன் தனக்காக காத்திருப்பான் என்று தான் நினைத்தது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம். அதுவும் அவனை வேண்டாம் என்று தான் மறுத்த பிறகும் கூட அவன் அப்படி எதற்காக தன்னுடைய வாழ்க்கையை தொலைத்து விட்டு காத்திருக்க வேண்டும். அவளுடைய மனச்சாட்சி ஹரிஹரனின் செயலுக்கு ஆதரவாக பேசினாலும் அவளிடம் அதற்கு பதில் இல்லை.

நான் அவனை மறுத்த பிறகு அவன் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து இருப்பான் போலும். ‘ஏன் என்னை விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாய்’ என்று அவனிடம் எப்படி கேட்பது. ‘ வேண்டாம் என்று போனவள் நீ தானே?’ என்று அவன் திருப்பிக் கேட்க கூடுமே என்ற எண்ணத்தில் அவள் உழன்று கொண்டு இருந்தாள்.

அவன் அந்த வீட்டில் ஒவ்வொரு இடத்தையையும் சுத்திக் காட்டிக் கொண்டே வந்தான். இதை எதற்காக செய்தான். எவ்வளவு ரசனையோடு செய்தான் என்று ஒவ்வொன்றாக விவரித்துக் கொண்டே வந்தான். அது எதுவும் அவளது செவிகளை தீண்டவில்லை.

ஒரு அறைக்கு முன் வந்தவன் அவளுடைய கைகளை லேசாக ஒரு அழுத்து அழுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வந்த பின் பேச தொடங்கினான். “இந்த அறைக்கு நான் கடைசியாக வந்து ஒரு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் இருக்கும். அதன்பிறகு இன்று தான் வருகிறேன். இங்கே தான் என்னுடைய காதலின் பொக்கிஷம் இருக்கு. நீ விரும்பினால் அதை பார்க்கலாம்.”

“அவசியம் இல்லை. நான் போறேன்”

“உனக்கு அவசியம் இருக்குனு நானும் சொல்லலியே… ஜஸ்ட் உள்ளே போய் ஒரு பார்வை மட்டும் பார்த்து விட்டு வாயேன்” லேசான வற்புறுத்தல் அவன் குரலில்.

“நான் இங்கே வந்தது உங்கள் நிறுவனத்திற்கு வேண்டிய ஆட்களை தேர்ந்தெடுக்க மட்டுமே. உங்கள் சொந்த கதை எல்லாம் கேட்க எனக்கு நேரம் இல்லை” .அவள் குரலில் பிடிவாதம் இருந்தது.

“ஓஹோ… தாடையை தடவி கொஞ்சம் யோசித்தவன் இன்னமும் நம்முடைய அக்ரீமென்ட் விஷயம் அப்படியே தான் இருக்கிறது வெண்ணிலா” அவன் குரலில் தீவிரம் இருந்தது.

“அது கம்பெனி சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு மட்டும் தான் பொருந்தும்” அவளும் இறங்கி வரத் தயாராயில்லை.“நான் வேறு கம்பெனி வேறு இல்லை. கம்பெனியின் பார்ட்னரான என்னோடு நீங்கள் சுமூகமாக இல்லை என்றாலும் அதே நிலை தான் என்பதை மறக்க வேண்டாம்” . அவளுக்கு நினைவுறுத்தினான்.

“சின்ன பிள்ளை போல நடந்து கொள்றீங்க. எதற்கு எடுத்தாலும் கம்பெனி அக்ரீமென்ட் பற்றி சொல்லியே என்னை பணிய வைக்க நினைக்கறீங்க” குற்றச்சாட்டு அவள் குரலில்.

“சின்ன பிள்ளை போல அடம் பிடிப்பது நீ தான். அறைக்குள் சென்று ஒரு பார்வை பார்த்து விட்டு வருவதால் என்ன குறைந்து விடப் போகிறது உனக்கு” குற்றத்தை அப்படியே அவள் புறம் திருப்பினான் அவன்.

“நான் தான் ஏற்கனவே சொன்னேனே… நான் இங்கே வந்து இருப்பது உங்கள் வீட்டில் தங்கி உங்கள் காதல் கதையை தெரிந்து கொள்வதற்காக அல்ல. உடனே கிளம்புங்கள் ஊருக்குள் போய் நாம் வந்த வேலையை தொடரலாம்”

“எனக்கு இப்போ மூடு இல்லை. அதனால் இப்போ போக வேண்டாம். இப்போது மட்டும் இல்லை. நீ இந்த அறையை பார்க்காத வரை எனக்கு மூடு சரி ஆகாது” குழந்தையை போல முகத்தை திருப்பிக் கொண்டான் ஹரிஹரன்.

வெண்ணிலாவின் கண்களில் கண்ணீர் இறங்கி வழிய தயாராக இருந்தது. ‘ஏன் என்னை இப்படி வதைக்கிறாய். உன் மனைவியின் பெருமைகளை கேட்கவா நான் இங்கு வந்தேன்? என்னால் நீ வேறு ஒருத்தியை பற்றி ரசித்து பேசுவதை எப்படி கேட்க முடியும்? அதற்கு தானே வர மாட்டேன் என்கிறேன். புரிந்து கொள்ளேன்’ அவளுடைய விழிகளின் கெஞ்சலை கொஞ்சமும் கண்டுகொள்ளாது அப்படியே அசையாமல் நின்றான்.

அவன் ஒரு வேளை இதை எல்லாம் காட்டி என்ன பழி வாங்க எண்ணுகிறானோ என்ற எண்ணம் அவளுக்கு தோன்ற ஆரம்பித்தது. ‘நீ மறுத்துவிட்டால் எனக்கு வேறு பெண்ணா கிடைக்காது திருமணம் செய்து கொள்ள என்று காட்ட நினைக்கிறானோ அல்லது என்னுடைய மனைவி உன்னை விட அழகு, அடக்கம் என்று பெருமை பீத்திக் கொள்ள நினைக்கிறானோ’ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தவள் மனதை கல்லாக்கி கொண்டு அந்த அறையின் உள்ளே செல்ல முடிவு செய்தாள்.

ஹரிஹரன் அவளையே பார்த்துக் கொண்டு தலையை ஒற்றை கையால் அழுந்த கோதிக் கொண்டான். ஒவ்வொரு அடியையும் பயந்து பயந்து எடுத்து வைத்தாள் வெண்ணிலா. ஒவ்வொரு இடமாக பார்வையை பயந்து பயந்து நகர்த்திக் கொண்டே வந்தவளின் கண்கள் ஒரு இடத்தில் ஆணி அடித்தது போல நிலைத்து நின்றது.

அவளின் கண்கள் நிலை குத்தி அப்படியே ஆடாமல் அசையாமல் இருந்தது. கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது. அங்கே இருந்தது அவளுடைய கவட்டை. அதை வைத்து தான் எத்தனையோ முறை ஹரிஹரனின் தலையை பதம் பார்த்து இருக்கிறாள்.

அவளுடைய நிலையை உணர்ந்த ஹரிஹரன் மெல்ல அவளை நெருங்கினான். பின்னால் இருந்து அவளின் தோள்களின் மீது தலையை வைத்தவன், “இதை நியாபகம் இருக்கிறதா? உன்னோடது தான். என்னுடைய காதல் மனைவியை பற்றி என்ன நினைக்கிறாய்? உனக்கு பிடித்திருக்கிறதா” அவளுடைய தோளில் மென்மையாக ஒரு அழுத்து அழுத்தினான். கண்களை அவன் அறியாமல் மெல்ல துடைத்தவள் அவன்புறம் திரும்பி அழுத்தமான குரலில் பதில் சொன்னாள்.

“அன்று நான் சொன்ன அதே பதில் தான் இன்றும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. இப்பொழுதும் எப்பொழுதும்” என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறி விட்டாள்.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here