Siragilla Devathai Tamil Novels 30

0
2691

வெண்ணிலா தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் அழுகையில் கரைந்து கொண்டு இருந்தாள். அவளால் எப்படி ஹரிஹரனின் வாழ்க்கையை வீணாக்க முடியும். முன்பு அவள் என்ன காரணத்திற்காக மறுத்தாளோ அந்த காரணம் இன்னமும் அப்படியே தானே இருக்கிறது. சூழ்நிலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாத பொழுது அவள் மட்டும் எப்படி மாற முடியும்?

ஒருவேளை இன்று தன்னுடைய காதலை அவனிடம் சொன்னாலும் முன்பு ஏன் மறுத்தாய் என்று அவன் கேட்கும் கேள்விக்குத் தான் அவளால் பதில் அளிக்க முடியுமா? இதை எல்லாம் எண்ணித்தான் தான் தன்னுடைய மனதின் தளர்வை அவன் கண்டுகொள்ள கூடாது என்று விரைவாக அங்கிருந்து வெளியேறி வந்து விட்டாள்.
வெண்ணிலா தன்னுடைய அறையில் இருந்த மனநிலைக்கு அப்படியே நேர் எதிரான மனநிலையில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான் ஹரிஹரன்.

‘அவளுக்கு என்னை நினைவு இருக்கிறது. நான் என்று தெரிந்த பிறகு தான் அன்று ஹோட்டலில் என்னை நெருங்க அனுமதித்து இருக்கிறாள் .என்னை தடுக்க விரும்பாமல் தான் அவள் அப்படி உறைந்து போய் இருந்து இருக்கிறாள். தனக்குள்ளேயே எண்ணி எண்ணி குதூகலித்துக் கொண்டவன் அதை மேலும் உறுதி செய்ய அடுத்த கட்ட முயற்சிக்கு தயாரானான்.

ஒரு வழியாக இருவரும் தங்களது அறையை விட்டு வெளியே வரும் போது மணி ஒன்றைத் தாண்டி இருக்க வேலையாள் மூலம் அவளை சாப்பிட அழைத்தவன் அவளுக்காக சாப்பாட்டு மேடையில் காத்திருந்தான். நிமிர்ந்த நடையோடு வந்தாலும் அவள் கண்களில் ஏறி இருந்த சிகப்பு நிறம் அவள் அழுததைக் கூற அவளிடம் வம்பளக்காமல் உணவை உண்ணலானான்.

தட்டில் இருந்த உணவுகளின் பெயரையோ ருசியையோ துளியும் உணராது கஷ்டப்பட்டு விழுங்கிக் கொண்டு இருந்தாள் வெண்ணிலா. ஹரிஹரன் அவளின் நினைவுகளை கலைக்க ஏதாவொரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஹரிஹரன் நினைத்து இருந்தால் முன்தினத்தை போலவே அவளை வேண்டுமென்றே சீண்டி அவளை உண்ண வைத்து இருக்கலாம். அவன் செய்யவில்லை.

மாறாக ஹரிஹரனையும் அவன் காதலையும் ஒதுக்குவதால் ஏற்படும் இழப்புகளை அவள் உணர வேண்டும் என்பதால் அமைதி காத்தான்… தன்னுடைய காதலை ஒதுக்குவதால் ஏற்படும் மன இழப்புகளை அவள் மனம் உணர வேண்டும்… விலக நினைக்க, நினைக்க தன்னுடைய காதல் மேலும் வலுப்பெறும் என்று அவன் உறுதியாக நம்பினான்.

சாப்பிட்டு முடித்து அவள் எழுந்திருக்கும் போது அவளை தடுத்து நிறுத்தி பேசலானான். நீங்க போய் காரில் வெயிட் பண்ணுங்க மேடம். இப்போ கிளம்பிடலாம்”. வேண்டுமென்றே மேடம் என்ற வார்த்தையை அழுத்தி உச்சரித்தான்.

‘நேற்று வரை நீ, வா, போ ன்னு ஒருமையில் தானே பேசிக்கிட்டு இருந்தார். இன்னைக்கு என்ன வந்தது? எதுக்கு இப்படி மரியாதை கொடுத்து பேசறார்’ என்று தனக்குள் சிந்தித்தாள்.

‘ஓ…மரியாதை கொடுத்து என்னை தள்ளி நிறுத்தப் பார்க்கிறாரா?’ என்று எண்ணி உள்ளம் கொதித்தவள் சட்டென அடங்கியும் போனாள்.‘இதை தானே நீயும் எதிர்பார்த்தாய்… னக்கு எதற்கு இந்த வீண் கோபம்? விலகி விடுவது என்று முடிவெடுத்த பின் அதை முழு மனதாக செய்’. என்று அவளுடைய மனசாட்சி அவளை அதட்ட அதற்குப் பணிந்து போனாள்.

அறைக்கு சென்று முகத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொண்டு விறுவிறுவென காரில் போய் ஏறி அமர்ந்து கொண்டாள். ஹரிஹரன் வருகிறானா என்று எதேச்சையாக திரும்பியவளின் பார்வை எதிரில் நின்றவனை கவ்விக் கொண்டது. ப்ளூ கலர் ஜீன்ஸ் பேண்ட்டும் லேசான சந்தன நிறத்தில் முழுக்கை சட்டையும் அணிந்து இருந்தவன், ஒற்றை கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு ஆளை மயக்கும் அசாத்திய புன்னகையுடனும் யாருடனோ போனில் பேசிக் கொண்டு இருந்தான்.

‘கொஞ்சம் கூட கல்மிஷம் இல்லாத அழகான சிரிப்பு ‘ஐந்து வருடங்களுக்கு முன் எப்படி கண்ணுக்கு நிறைவாக இருந்தானோ இப்பொழுதும் அப்படியே தான் இருக்கிறான்’ என்று எண்ணிக் கொண்டே போனவள் உள்ளம் அதிர்ந்து பார்வையை திருப்பினாள்.

‘வெண்ணிலா… இப்படி செய்யாதே… இது தவறு. அவன் உன்னை உண்மையாக நேசிப்பவன். அவனிடம் காதலிக்கிறேன் என்ற வார்த்தையை சொல்லி அவனை பழி வாங்காதே. நிச்சயம் அவனுக்கு உன்னை விட நல்ல பெண் மனைவியாக கிடைப்பாள் அதை கெடுத்து விடாதே’ என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டவள் அவன் அருகில் வந்து அமர்ந்து கார் புறப்பட்ட பிறகும் கூட அவன் புறம் திரும்ப மறுத்து விட்டாள்.

கார் மெல்ல ஊருக்குள் பயணமானது. தான் சிறு வயதில் ஓடியாடி விளையாண்ட இடங்களை உணர்வற்ற மனநிலையில் பார்த்துக் கொண்டே வந்தாள் வெண்ணிலா.இதற்கு முன் அவளின் மனதில் இருந்த பயம் எதுவும் இப்பொழுது அவளிடம் இல்லை.அவளின் மனதில் இப்பொழுது அவளது ஊரைப் பற்றியோ,வேறு யாரைப் பற்றியும் எந்த எண்ணமும் இல்லை.

அவள் மனதில் இப்பொழுது இருந்தது ஹரிஹரன் மட்டுமே.அவனை தான் இழக்கப் போகிறோமே என்ற உணர்வு அவளை வாட்டி எடுத்துக் கொண்டு இருந்தது. கார் நேராக ஹரிஹரனின் தோப்பிற்குள் நுழையவே சுய உணர்வுக்கு வந்தாள்.

‘இங்கே ஏன் போகிறாய்? உன் கம்பெனித் தானே போக வேண்டும் என்று என்னிடம் சொன்னாய்?’ என்ற கேள்வியை கண்களில் சுமந்தபடி அவள் அவள் அவனையே பார்த்துக் கொண்டு இருக்க அவளையும், அவளது கேள்வியையும் கொஞ்சமும் சட்டை செய்யாது காரை விட்டு கீழே இறங்கி நின்றான்.

வெண்ணிலா இங்கே வருவதாக முடிவு ஆன உடனே பழைய காவலாளி முனியனுக்கு ஒரு மாதம் விடுமுறை அளித்து வெளியூருக்கு தன்னுடைய சொந்த செலவில் புண்ணிய யாத்திரைக்கு அனுப்பி வைத்து இருந்தான் ஹரிஹரன்.

சம்பளமும் கொடுத்து தன்னுடைய சொந்த செலவில் இப்படி பெரிய பெரிய கோவில்களை எல்லாம் பார்க்க ஏற்பாடு செய்து இருந்த ஹரிஹரனை மனதார வாழ்த்தி விட்டு அன்று இரவே முனியன் கிளம்பி விட்டான். இதை எல்லாம் அறியாமல் வெண்ணிலா பயந்து கொண்டு இருந்தாள்.

வெண்ணிலா கார் நின்ற பிறகும் காரை விட்டு கீழே இறங்கவில்லை. எப்படி இறங்குவாள்? ‘காவக்காரன் முனியன் இங்கே தானே இருப்பார். அப்பாவின் அபிமானி ஆயிற்றே அவர். தன்னுடைய தந்தை எதை செய்தாலும் அது சரியாகவே இருக்கும் என்று ஆணித்தரமாக நம்பும் ஊர் மக்களில் அவரும் ஒருவர். அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டால்?’காரை விட்டு இறங்கும் எண்ணமே இல்லாதவள் போல ஏதேதோ யோசித்துக் கொண்டு இருந்தவளின் கைகளை பிடித்து சட்டென வெளியே இழுத்தான் ஹரிஹரன். அவனுடைய இந்த செய்கையை எதிர்பாராதவள் வெளியே வந்ததும், அவனிடம் பட்டாசாக பொரிந்து தள்ளினாள்.

“என்னை தொடாதீங்கனு உங்களுக்கு ஏற்கனவே சொல்லி இருக்கேன்”கையை ஹரிஹரனிடம் இருந்து விடுவித்த படியே பேசினாள் வெண்ணிலா.

“அது எனக்கு நல்லாவே நினைவில் இருக்கு. ஆனா உங்களுக்கு தான் நீங்க இங்கே எதற்காக வந்து இருக்கீங்கன்னு கொஞ்சமும் நினைவில் இல்லை போல” நக்கலாக வெளிவந்தது ஹரிஹரனின் குரல்.

“எனக்கு எல்லாம் நினைவு இருக்கு”

“ஓ… உனக்கு எல்லாம் நினைவு இருக்கா?” அழுத்தமானப் பார்வை ஒன்றை அவள் புறம் வீசினான்.

“நான் இங்கே செய்ய வந்து இருக்கும் வேலையை பத்தி சொன்னேன்”

“அப்படி நினைவு இருக்கிறவங்க. இறங்க வேண்டிய இடம் வந்த பிறகும் கூட இறங்காம கனவு கண்டுக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்?” அவன் கேள்விகள் கூர்மையாக வெளிவந்தது.

“உங்க கம்பெனிக்குத் தானே போகலாம்னு சொன்னீங்க?”

“இது தான் என்னுடைய கம்பெனி”

“இதுவா?” அவள் குழப்பமாக மீண்டும் ஒருமுறை பார்வையை சுற்றி ஓட விட்டாள்.

“ஏன் இந்த இடத்திற்கு என்ன?”

“இதை பார்த்தால் கம்பெனி போல இல்லையே?”

“இப்போ இது ஒரு பிரச்சினையா?” உன்னிப்பாக கை நகங்களை அளந்து கொண்டு இருந்தான் ஹரிஹரன்.

“உங்களுக்கு எதுவுமே பிரச்சினை இல்லை” அவனின் அலட்சியத்தால் கொதிநிலைக்கு போய் இருந்தாள் வெண்ணிலா.

“ஆமாம்… எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை… பிரச்சினை எல்லாம் உனக்கு தான். நீ தான் எதையோ பிடித்துக் கொண்டு இப்படி கண்டதையும் கற்பனை செய்து கொண்டு அடுத்தவர் மனதை நோகடிக்கிறாய்”

“நா… நான் என்ன செய்தேன்?”

“ஒன்றுமே இல்லாத விஷயம் இதற்கு போய் அரைமணி நேரமாக என்னிடம் வாயாடிக் கொண்டு இருக்கிறாய்” ஹரிஹரனின் குரலில் லேசான சலிப்பு இருந்தது.

‘அவன் சொல்வது நிஜம் தானே’ என்ற நினைவில் மௌனமானாள் வெண்ணிலா. அவனிடம் முழுமையாக தணிந்து பேசிட மனம் இன்றி பிடிவாதமாக சண்டையை வளர்த்தாள். தன்னால் ஹரிஹரனிடம் இயல்பாக பேச முடியவில்லையே என்பதை நினைக்க நினைக்க அவளின் ஆத்திரம் பெருகியது.அதை யார் மீது காட்டுவது என்பது தெரியாமல் ஹரிஹரனையே வம்புக்கு இழுத்து திட்டித் தீர்க்க எண்ணினாள்.

“இதை பார்த்தால் தொழில் செய்யும் இடத்தை போல இல்லையே” உதட்டை சுளித்தாள்.

“நானும் இது தொழில் செய்யும் இடம் என்று சொல்லவில்லையே”இவள் இடக்காக கேள்வி கேட்டால் ஹரிஹரன் ஒன்றும் சோர்ந்து போய் விடவில்லை.அவளுக்கு எப்படி பேசினால் கோபம் வருமோ அதே போல அசட்டையாகவே பேசினான்.“இப்படி பேசி என்னை குழப்ப நினைக்காதீர்கள்” அவள் குரலில் இருந்த ஆத்திரம் அவனுக்கு புரிந்தது.

“இதில் நீங்க குழம்ப வேண்டிய அவசியமே எதுவும் இல்லை மேடம்… இந்த இடம் எனக்கு சொந்தமானது. எப்படியும் ஒரு இருபது, முப்பது ஏக்கர் வரும். இந்த இடத்தை எல்லாம் மொத்தமாக அழித்து விட்டு இங்கே தான் எங்களோட பாக்டரி வர போகுது”

“என்ன எல்லாத்தையும் அழிச்சுட்டு இங்கே பாக்டரி கட்டப் போறீங்களா? இதை ஏன் என்னிடம் முன்னமே சொல்லவில்லை” ஆத்திரத்தில் பட்டாசாக பொரிந்தாள்.

“உங்களிடம் ஏன் சொல்ல வேண்டும்?” மிக மிக நிதானமாக அதே சமயம் அழுத்தமான குரலில் கேட்டான்.

“ஏன்னா… ஏன்னா…” என்னவென்று சொல்லுவாள். வார்த்தைகள் வராமல் தடுமாறினாள்.

“எனக்கு வேலைக்கு ஆட்களை தேர்ந்தெடுத்து கொடுப்பதோடு உங்கள் வேலை முடிந்தது. அதற்கு மேல் என்னை கேள்வி கேட்கும் அதிகாரம் உங்கள் கம்பெனிக்கு இல்லை. பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை” தீர்மானமாக கூறினான்.

“கேள்வி கேட்க ஆள் இல்லையென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா?”

“ஹலோ என்னங்க… இப்போ என்ன நடந்துடுச்சுன்னு இப்படி குதிக்கறீங்க? இங்கே என்ன தீவிரவாத வேலையா நடக்குது”
“நாட்டின் இயற்கை வளங்களை அளிப்பதும் கிட்டத்தட்ட அப்படித்தான். இதற்கு நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்”

“உங்களிடம் நான் அனுமதி கேட்ட மாதிரி எனக்கு நினைவு இல்லையே” அசால்ட்டாக தோளை குலுக்கியவனின் கழுத்தை பிடித்து நெரித்தால் தான் என்ன , என்று அவளுக்குள் அப்படி ஒரு கோபம் மூண்டது.

“என்னை மீறி இதை நீங்கள் செய்ய முடியாது” சவால் விட்டாள்.

அவளை உச்சி முதல் பாதம் வரை நிதானமாக பார்வையிட்டவன் கேட்ட ஒற்றை கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திருதிருத்தாள் வெண்ணிலா.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here