Siragilla Devathai Tamil Novels 31

0
2434

“இயற்கையை அழிக்கக் கூடாது என்று இவ்வளவு ஆர்வமாக இருப்பவள் உனக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை எல்லாம் வந்த விலைக்கு விற்று விட்டு இரவோடு இரவாக தலைமறைவானது ஏன்?” அம்பை விட வேகமாகவும் கூர்மையாகவும் வார்த்தைகள் வந்து விழுந்தன ஹரிஹரனிடம் இருந்து.

‘என்ன பதில் சொல்வது’ என்று புரியாமல் வாயடைத்து போனாள் வெண்ணிலா. ‘இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது? யார் சொல்லி இருப்பார்கள்? ஒருவேளை ஊருக்கு வந்து என்னை பற்றி ஏதேனும் விசாரித்து இருப்பானோ?’ தன் போக்கில் சிந்தித்துக் கொண்டு இருந்தாள் வெண்ணிலா.

அவளின் கண்களில் தோன்றிய உணர்ச்சிகளுக்கு காரணம் என்ன என்று அவளை ஊடுருவும் பார்வை பார்த்தவாறே அசையாமல் நின்றான் ஹரிஹரன். அவனது பார்வை அவளை மெல்ல ஊடுருவி அவள் மனதில் இருப்பதை அறிய துடித்தது. பெண்ணவளோ தன் மனதை சுற்றி கட்டி இருக்கும் அந்த மாயத்திரை அறுந்து விழுவது பிடிக்காமல் பிடிவாதமாக மனதை மீண்டும் கல்லென மாற்றிக் கொண்டாள்.

“சொல்லு வெண்ணிலா… இப்ப எதுக்காக இந்த மௌனம்?” எதை மறைக்க இப்படி போராடுற?”

“நான் எதையும் மறைக்கவில்லை” அவள் குரல் இறுகிப் போய் இருந்தது.“இரவோடு இரவாக நீயும் உன் குடும்பமும் இந்த ஊரை விட்டு ஏன் மறைந்து போனீர்கள்?” விடாமல் கேள்வி கேட்டான் ஹரிஹரன்.
“நாம் இங்கே வந்த வேலையை ஆரம்பிப்போமா?” பேச்சை திசை திருப்பி அங்கிருந்து விறுவிறுவென வேறுபக்கம் திரும்பி நடக்க தொடங்கினாள்.

ஹரிஹரனுக்கு சுறுசுறுவென கோபம் ஏறத் தொடங்கியது. ‘நாம கெஞ்சினா இவ ரொம்ப மிஞ்சுறா… இப்படியே விட்டா இவள் வாயில் இருந்து வார்த்தையை வர வைப்பதற்க்குள் நான் கிழவன் ஆகிடுவேன் போல’ என்று மனதுக்குள் நினைத்தவன் வேகமாக தன்னை தாண்டிச் செல்லும் அவளின் முன் சென்று பாதையை மறித்து நின்றான்.

“ஏன் வெண்ணிலா என்னிடம் சொல்லக் கூடாதா? என்னால் முடிந்த உதவியை நான் நிச்சயம் செய்வேன்” கோபத்தை குறைத்து மென்மையாகவே வினவினான்.

“இங்கே என்ன கம்பெனி ஆரம்பிக்க போறீங்க?”

“வெண்ணிலா… தயக்கம் வேண்டாம். எந்த மாதிரி உதவி என்றாலும் உனக்காக நான் செய்வேன்” அவள் பேச்சை மாற்றுவது புரிந்தாலும் விடாமல் பேசினான் ஹரிஹரன்.

“உங்களுக்கு மொத்தம் எத்தனை ஆட்கள் தேவைப்படுவார்கள்?” அவன் பேச்சை அசட்டை செய்யும் விதமாகவே அவள் பேசிக் கொண்டே போனாள்.

“நீ ஊரை விட்டு காலி செய்வதற்கு முன் உன் வாழ்க்கையில் என்ன நடந்தது?” அவனின் கேள்வியை கேட்டதும் ஒரு நிமிடம் அவளது உடல் விறைப்பாக இருந்தது. தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள அவள் முயல்கிறாள் என்பது இறுக மூடி இருந்த அவளது கை விரல்களை பார்க்கும் பொழுது அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

‘அதற்காக இதை இப்படியே விட்டுவிட முடியுமா? காயம் வலிக்கிறது என்று நினைத்து மருந்து போடாமல் விட்டால் அது வியாதியை இன்னும் தீவிரப்படுத்துமே தவிர குறைக்காது’ என்று நினைத்தவன், “பதில் சொல் வெண்ணிலா” என்றான் அதட்டலாக.

“அது உங்களுக்கு தேவை இல்லாதது” பட்டென கூறிவிட்டு அங்கிருந்து கிளம்ப முற்பட்டாள். அவளின் கைகளை இறுக பற்றிய ஹரிஹரன் தன்னருகே அவளை இழுத்து, அவளின் முகத்தை ஒற்றை கையால் நிமிர்த்தினான்.

அவனின் கோபத்திற்கு காரணம் புரிந்தும் வலியை தாங்கிக் கொண்டு அவனை பார்க்காமல் பார்வையை வேறு எங்கோ திருப்பிக் கொண்டு நின்றாள் வெண்ணிலா.அவளின் செய்கை ஹரிஹரனை மேலும் சீண்ட, மேலும் அவளை நெருங்கி வந்து அவளின் முகத்தில் இருந்து பார்வையை அகற்றாமல் அவளையே பார்த்தபடி பேசினான்.

“எதுடி எனக்கு தேவை இல்லாதது?” அவனின் குரல் உறுமலாக வெளிப்பட்டது.

‘டி யா?’

“ஒருநாள்… ரெண்டு நாள் இல்லடி… கிட்டத்தட்ட ஐஞ்சு வருசமா உன்னையே நினைச்சுக்கிட்டு இருக்கேன். ஒரு நாள் கூட உன்னை நான் மறக்கலை. ஒவ்வொரு நாளும் உன்னை பற்றிய நினைவுகளோடு தான் என்னோட நாள் விடிந்தது…
பைத்தியம் பிடிக்காதது ஒண்ணு மட்டும் மட்டும் தான் பாக்கி… அப்படி ஒரு நிலைமைக்கு நான் வந்ததுக்குக் காரணம் யாரு? நீ தான்டி. ஆனா நான் கேட்டா நீ பதில் சொல்ல மாட்ட அப்படித் தானே? உனக்காக இத்தனை வருஷமா காத்திருக்கிறேனே… உனக்கு என்னை பார்த்தா எப்படி இருக்கு? பைத்தியக்காரன் மாதிரி இருக்கா?”

அவன் பேச பேச அவள் உடலில் நடுக்கம் தோன்றுவதை அவன் உணர்ந்தாலும் அவளை விடுவிக்க அவனுக்கு மனம் இல்லை.

“உங்களை யார் எனக்காக காத்திருக்க சொன்னது?”

“சரி தான்… அருமையான கேள்வி… யார் காத்திருக்க சொன்னா? எதுக்கு காத்திருக்கணும்? நான் உன்னை காதலிக்கிறேன். எனக்கு நல்லா தெரியும். நீயும் என்னை காதலிக்கற அப்படின்னு…” என்றவன் சிறிது இடைவெளி விட்டு ஆழ்ந்த பார்வையுடன் குரலில் ஒரு வித அழுத்தத்துடனும் பேச ஆரம்பித்தான்.

“நாம் நம்முடைய வாழ்க்கையை இப்பவே வாழ ஆரம்பிக்கலாம்” என்று சொன்னவன் அத்தோடு நில்லாமல் குனிந்து அவளின் இடையை பற்றி தூக்கியவன் தோளில் துண்டை போடுவது போல அவளை போட்டுக் கொண்டு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான்.

வெண்ணிலா அதிர்ந்து நின்ற சில நொடிகள் அவனுக்கு சாதகமாகி போக வேக நடையுடன் அவளை தோப்பின் மறு மூலைக்கு நொடியில் தூக்கி சென்று விட்டான். அவனிடம் இருந்து தப்பி கீழே இறங்க வெண்ணிலா செய்த முயற்சிகள் அனைத்தும் பயன் இன்றி போக மிகப்பெரிய மாமரம் ஒன்றின் பின் மறைவாக அவளை இறக்கி விட்டவன் அவள் விலகுவதற்கு அவகாசம் கொடுக்காமல் அவளை சுற்றி தன்னுடைய கைகளால் அரண் அமைத்து இருந்தான்.

“எ… எ… என்ன செய்றீங்க? வழியை விடுங்க நான் போகணும்?” தைரியமாக இருப்பது போல சமாளிக்க முயன்றாள்.

“இல்லை வெண்ணிலா. இனியும் என்னால் உனக்காகக் காத்திருக்க முடியாது. ஏற்கனவே கனவில் உன்னை பார்த்தே வெறுமனே ஐந்து வருடங்களை வீணடித்து விட்டேன். இனி ஒரு நொடியும் தாமதிக்க முடியாது” என்று சொல்லிக் கொண்டே அவனுடைய முழுக்கை சட்டையின் கைகளில் இருந்த பட்டனை கழட்டி விட்டுக் கொண்டே வெண்ணிலாவை இன்னும் கொஞ்சம் நெருங்கினான்.“பிடிக்காத பொண்ணுக்கிட்டே இப்படி நடந்து கொள்ள உங்களுக்கு வெட்கமா இல்லையா? நீங்க எல்லாம் ஆம்பிளையா?” எதையாவது பேசி அவனை கோபப்படுத்தி இந்த இடத்தில் இருந்து நகர செய்து விட வேண்டும் என்று வாயில் வந்த அனைத்தையும் பேசத் தயார் ஆனாள் வெண்ணிலா. ஏனெனில் ஹரிஹரன் விழுங்கும் பார்வையுடன் அவளை நெருங்கும் ஒவ்வொரு வினாடியும் அவளின் மன உறுதி குலைந்து விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

அவனோ அவளின் வார்த்தைகளால் கொஞ்சமும் பாதிக்கப்படாமல் இருவருக்கும் இடையில் இருந்த சில அடி இடைவெளியை மேலும் குறைக்கும் பொருட்டு அவளையே தீர்க்கமாக பார்த்தவாறு இன்னும் நெருங்கினான்.

“நான் சொல்வது உங்கள் காதில் விழவில்லையா? தள்ளிப் போங்க… உங்க முகத்தை பார்க்கவே எனக்குப் பிடிக்கலை” ஆவேசம் வந்தவள் போல பயத்தில் கத்த ஆரம்பித்தாள் வெண்ணிலா.

“ஓ! உனக்கு என் மேல் அவ்வளவு வெறுப்பா வெண்ணிலா?” தாடையை தடவியவாறே அவன் யோசிப்பது போல கேட்டான்.
நொடியும் தாமதிக்காமல் அவள் தலை வேகமாக ஆம் என்று ஆடியது.

“சரி அப்படினா அதை நிருபித்து காட்டு” என்று சொன்னவன் மேலும் அவளை நெருங்கி அவளின் இடையை வளைத்து தன்னோடு சேர்த்து அணைத்தான்.

வெண்ணிலாவின் கண் முன்னே உலகம் ஸ்தம்பித்து நின்றது. அவளின் காது மடலில் அவன் உதடுகள் கோலம் போட, அவனுடைய கை விரல்கள் அவளுடைய முதுகில் ஓவியம் வரைந்து கொண்டு இருந்தது.

அவனை தடுக்கும் வகை அறியாது தடுமாறினாள் வெண்ணிலா. அவள் நேசிக்கும் ஒரே ஆண்மகன். மனம் முழுக்க காதலோடு அவளை அணைக்கிறான். அவனை எப்படி விலக்குவது என்று புரியாமல் வெண்ணிலா தயங்கி நின்ற சில நொடிகளில் அவளை அவன் முழுதாக தன் வசம் கொண்டு வந்து இருந்தான்.

‘இது தப்பு… இதை தடுத்து நிறுத்து’ என்று மூளை ஆயிரம் கட்டளைகள் பிறப்பிக்க அதை எதையும் செய்து அவனை தடுக்க முடியாமல் அவனுள் மெல்ல புதைந்து கொண்டு இருந்தாள் வெண்ணிலா.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here