Siragilla Devathai Tamil Novels 32

0
2530

வெண்ணிலாவால் ஹரிஹரனை விலக்க முடியவில்லை. விளையாட்டாக இதை ஆரம்பித்த ஹரிஹரனாலும் நிறுத்த முடியவில்லை. ஐந்து ஆண்டுகளாக யாரை எண்ணி எண்ணி தன்னுடைய ஒவ்வொரு நாளையும் கழித்தானோ அவனுடைய அந்த தேவதை இப்பொழுது அவன் கரங்களுக்குள் இருக்கிறாள் என்பது மட்டுமே அவன் நினைவில் இருந்தது.

இதற்கு முன்பு கூட ஒருமுறை வெண்ணிலாவை அணைத்து இருக்கிறான் தான். அன்றைய நாளை விட இன்று ஹரிஹரனின் காதலின் வேகம் கூடி இருந்ததை இறுகிப் போன அவனின் அணைப்பே வெண்ணிலாவிற்கு சொல்லாமல் சொல்லியது.

அன்றைய மழை நாள் இரவில் ஹரிஹரன் அணைத்த பொழுது பயத்தில் இறுகிப் போய் இருந்த வெண்ணிலா இன்றோ அதற்கு எதிரான மனநிலையில் இருந்தாள். எந்த ஹரிஹரனை இனி சந்திக்கவே மாட்டோம் என்று நினைத்தாளோ அந்த ஹரிஹரன் இன்னும் அவளை மட்டும் தான் மனதில் வைத்துக் கொண்டு இருக்கிறான் என்பதில் அவளது மனம் நெகிழ்ந்து போய் இருந்தது.ஹரிஹரனின் கரங்களுக்குள் அவளுடைய தேகம் குழைந்தது. இடையை சுற்றி வளைத்து இருந்த ஹரிஹரனின் கரங்களை விலக்க எத்தனித்தவள் தோற்றுப் போய் அவனது பின்னந்தலையில் கைகளை கோர்த்து இன்னும் அவனோடு ஒட்டிக் கொண்டாள்.

ஹரிஹரனோ காதலும், தாபமும் இரண்டும் ஒன்றையொன்று வெல்வதற்கு போராடுவதை உணர்ந்தாலும் அதை தடுக்க முயற்சி செய்யாமல் அவளுள் மூழ்கி முத்தெடுக்க விழைந்தான்.

ஹரிஹரனின் கரங்கள் அவனின் கட்டுப்பாட்டை மீறத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் ஹரிஹரன் அவளை அணைத்தவாறே அவள் கழுத்தை சுற்றி போட்டு இருந்த துப்பட்டாவை விலக்க முயற்சிக்க வெண்ணிலாவின் பெண்மை விழித்துக் கொண்டது.

சட்டென தன்னுடைய மொத்த பலத்தையும் திரட்டி ஹரிஹரனை தள்ளி விட்டாள். ஹரிஹரனும் வெண்ணிலா அவனை எதிர்க்காமல் இருந்ததால் தன்னுடைய பிடியின் இறுக்கத்தை குறைத்து விட்டு இருந்தான். அது அவளுக்கு வசதியாக போயிற்று.

ஹரிஹரன் அவள் தன்னை விட்டு விலகி நின்ற வெண்ணிலாவை ஒற்றை பார்வை பார்த்து தன்னுடைய அதிருப்தியை காட்டினான். மீண்டும் தன்னுடைய கை வளைவுக்குள் கொண்டு வர முயன்றவனை கண்டு ஜாக்கிரதையாக விலகி சற்று தள்ளி நின்று கொண்டாள் வெண்ணிலா.

“உன்னால் தப்பிக்க முடியாது வெண்ணிலா… நீ எவ்வளவு விலகி போனாலும் என்னுடைய காதல் உன்னை விலக விடாது. இனி நீ என்றும் என் கரங்களுக்குள் தான் இருந்தாக வேண்டும் என்றவன் தாவி பிடித்து மீண்டும் அவளை அவனுடைய ஆளுகைக்குள் கொண்டு வந்தான்.

இதற்குள் ஓரளவிற்கு தெளிந்து இருந்த வெண்ணிலா மீண்டும் அவனிடம் இருந்து தன்னை விடுவிக்க முயற்சித்துக் கொண்டு இருந்தாள். அதை கண்ட ஹரிஹரனின் கோபம் அதிகமானது.

“எதுக்காக வெண்ணிலா இப்படி பண்ற… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னோட அணைப்பில் பாந்தமா அடங்கிப் போய் இருந்தியே. இப்போ எங்கிருந்து வந்தது இந்த வெறுப்பு. இன்னும் எதுக்காக உன்னை நீயே ஏமாத்திக்கிற. போதும் வெண்ணிலா… வந்துடு. என்கிட்டே வந்துடு. உன்னை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கறேன்டி”

ஹரிஹரன் பேசப்பேச பாகாக உருகிக் கொண்டு இருந்தாள் வெண்ணிலா. தனக்காக யாருமே இல்லை என்று எத்தனை நாள் அவள் தூக்கத்தை தொலைத்து இருந்து இருக்கிறாள். அப்படி தனிமையில் தவித்துக் கொண்டு இருந்தவளுக்கு ஹரிஹரனின் வார்த்தைகள் ஆயிரம் மடங்கு தெம்பை கொடுக்கிறதே…

ஆனால் அதற்காக அவளால் ஹரிஹரனுடன் சேர்ந்து விட முடியுமா என்ன? நிச்சயம் இல்லை. அவளுகென்று கடமைகள் இருக்கிறதே. அதை முடித்தே ஆக வேண்டும். அதற்கு இவனை தள்ளி நிறுத்தித் தான் தீர வேண்டும். என்ற முடிவை எடுத்தவள் முயன்று எந்த உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டாது முகத்தை கல்லென மாற்றிக் கொண்டாள்.

“நீங்க சொல்றதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை மிஸ்டர் ஹரி… நமக்குள்ளே இருக்கிறது வெ… வெறும் இனக்கவர்ச்சி தான். மத்தபடி காதல் எல்லாம் இல்லை. சும்மா கண்டதையும் நினைச்சு குழப்பிக்காம வந்த வேலையை பாருங்க…” விட்டேற்றியாக பேசிக் கொண்டே ஹரிஹரனின் பிடியில் இருந்து விலக முயன்றாள்.

“அது எப்படிடி மனசார உன்னால பொய் பேச முடியுது… நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில் இருக்கிறது வெறும் இனக்கவர்ச்சியா? எப்படிடி உன்னால இப்படி பேச முடியுது?” ஆதங்கத்தோடு கேட்டான் ஹரிஹரன்.தன்னவன் தன்னை உரிமையோடு அழைக்கும் ‘டி’ யை ரசித்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளும் நிலைமையில் தான் இப்பொழுது இல்லை என்பதை உணர்ந்து தொடர்ந்து மௌனம் காத்தாள் வெண்ணிலா.

“சரி வெண்ணிலா நீ சொல்ற மாதிரி இது வெறும் இனக்கவர்ச்சியாகவே இருந்து விட்டு போகட்டும். நாம ரெண்டு பேரும் கல்யாணம் செய்து கொள்ளலாம். நீ சரின்னு மட்டும் சொல்லு. மத்ததெல்லாம்…” என்று பேசிக்கொண்டே போனவன் வெண்ணிலா இடைவிடாது தொடர்ந்து சிரிக்கவும் பேச்சை நிறுத்தி விட்டு அவளையே விசித்திரமாக பார்த்தான்.

கண்களில் இருந்து கண்ணீர் வழிய வழிய அதை துடைக்கக் கூட தோன்றாமல் அப்படியே சிரித்துக் கொண்டே இருந்தாள் வெண்ணிலா. சில நிமிடங்களுக்கு பிறகு ஹரிஹரனின் பார்வையை உணர்ந்தோ என்னவோ சிரிப்பை நிறுத்தி விட்டு தீர்க்கமான குரலில் பேச ஆரம்பித்தாள்.

“வெறும் இரவு வாழ்க்கைக்காக என்னுடைய மொத்த வாழ்க்கையை தியாகம் பண்ண சொல்றீங்களா?”

“அடிச்சு பல்லை கழட்டிடுவேன் வெண்ணிலா… இனி ஒருமுறை இப்படி பேசி உன்னுடைய தரத்தை தாழ்த்திக் கொள்ளாதே. இது உன்னுடைய தகுதிக்கு அழகு இல்லை”

“என்னுடைய தகுதி எது என்பது உங்களுக்கு மட்டும் தெரியுமா?”

“என் தெரியாது? நீ தேவதை… என்னோட தேவதை… சிறகில்லா தேவதை…” பரவசமாக சொன்னான் ஹரிஹரன்.

அவனுடைய அந்த பரவசத்தை வெறுமையான மனதோடு வேடிக்கை பார்த்தாள் வெண்ணிலா. ‘என்னை பற்றித் தெரிந்தால் இவன் என்ன ஆவான்? இவன் என் மீது கொண்டு இருக்கும் காதலே இவனை பைத்தியம் ஆக்கிவிடும் போல் இருக்கிறதே… கூடாது இவனை இதில் இருந்து மீட்டே ஆக வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தாள்.

“இல்லை ஹரி… நான் தேவதை இல்லை… ராட்சசி என்னை இவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்காதீர்கள். நான் செய்து கொண்டு இருக்கும் வேலை தெரிந்தால் என்னைப் பற்றி இப்படி எல்லாம் நினைக்கக் கூட மாட்டீர்கள்” கண்கள் கலங்க உதடு துடிக்க பேச ஆரம்பித்தாள் வெண்ணிலா.

“நீ என்ன செய்து இருந்தாலும் சரி என்னுடைய தேவதை நீ தான். நீ மட்டும் தான்” தெளிவான குரலில் அழுத்தம் திருத்தமாக சொன்னான் ஹரிஹரன்.

“என்னுடைய மொத்த குடும்பத்தையும் கொன்று இருந்தால் கூடவா?” முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாது இயந்திரம் போல கேட்டாள் வெண்ணிலா.

“வெண்ணிலா…” வார்த்தைகள் இல்லாமல் அப்படியே நின்று விட்டான் ஹரிஹரன்.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here