Siragilla Devathai Tamil Novels 36

0
2128

கண்களை மெல்ல திறந்த வெண்ணிலா முதலில் கண்டது சோகமே உருவாக தனக்கு எதிரில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டு இருந்த அவளுடைய சித்தப்பா சுந்தரத்தை தான். அவரின் உடலிலும் ஆங்காங்கே வெட்டுக்காயங்கள் இருந்தது. இவளிடம் அசைவை உணர்ந்ததும் மெல்ல அவளருகில் வந்தவர் நின்று கண்ணீர் விட ஆரம்பித்தார்.

“இப்படி நடக்கும்னு நினைக்கலையே வெண்ணிலா… பாவிப்பய… நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டானே…” வாயில் துண்டை பொத்திக் கொண்டு அழுதார். நடந்த அனைத்தும் மீண்டும் ஒருமுறை நிழலாக வெண்ணிலாவின் கண் முன்னே ஓட மொத்த குடும்பத்தையும் ஒரே நாள் இரவில் இழந்து விட்ட கொடுமையை தாங்க முடியாமல் அழுது ஒய்ந்தாள் வெண்ணிலா.

யாருக்காக அழுவது? பாசத்தை ஊட்டி வளர்த்த தாயிற்காகவா? , எந்த நேரமும் கண்களில் கனிவு சொட்ட வளர்த்த தந்தைக்காகவா? , அன்னையை போல போற்றி பாதுகாத்த சித்திக்காகவா? , அக்கா… அக்கா என்று எந்நேரமும் தாவணியை பிடித்துக் கொண்டே சுற்றும் தம்பிக்காகவா?இருவரும் நன்றாக அழுது ஓய்ந்தனர். மெல்ல தன்னை ஒரு நிலைக்கு கொண்டு வந்த வெண்ணிலா மெல்லிய குரலில் அவரிடம் விசாரிக்க தொடங்கினாள்.

“என்ன ஆச்சு சித்தப்பா? ஏன் இப்படி நடந்தது? அவருக்கு ஏன் நம்ம குடும்பத்து மேல இவ்வளவு வன்மம்?”

“அந்தப்பாவிப் பய உன்னை மருமகளா ஆக்கிக்க இவ்வளவு நாளும் நம்மை ஏமாத்தி இருக்கான் தாயி. அண்ணன் ஒரே வார்த்தையா பிடிவாதமா மறுத்துட்டார். அந்த ஆளும் எவ்வளவோ பேசிப் பார்த்தான். ஆனா அண்ணன் கொஞ்சமும் இறங்கி வரலை… என்ன காரணம்னு தெரியலை. ஒருவேளை உன்னை அவரோடப் பையனுக்கு கல்யாணம் செஞ்சு தர சம்மதம் சொல்லி இருந்தா இப்படி நடந்து இருக்காதோ என்னவோ? அண்ணன் ஏன் சம்மதிக்கலைன்னு காரணம் தான் தெரியலை”

‘ஏன் சம்மதிக்கவில்லை’ என்று காரணம் தெரிந்தவளோ காரணத்தை வெளியே சொல்ல முடியாது மேலும் கண்ணீரை பொழியலானாள். தன்னால் தானே தன்னுடைய மொத்த குடும்பமும் அழிந்து போனது என்ற எண்ணம் அவளுக்கு குற்ற உணர்வை அளித்தது.அழுகையை நிறுத்தி விட்டு தான் இருந்த இடத்தை சுற்றிலும் பார்வையை ஓட விட்டாள் பெண்ணவள்.

“எங்கே இருக்கிறோம் சித்தப்பா?”

“என் சிநேகிதனின் வீடு தான் தாயி”

“வாங்க உடனே ஊருக்கு போகலாம்… நம்ம ஊர் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம். நம்ம ஊரு ஆட்கள் கிட்ட நடந்ததை எல்லாம் சொல்லி அந்த ஆளை…” ஆவேசமாக பேசிக் கொண்டே போனவள் சுந்தரத்தின் விசித்திரமான பார்வையில் பேச்சை நிறுத்தினாள்.

“எ… என்ன சித்தப்பா?”

“அந்த ஆள் என்ன செய்து வைத்து இருக்கிறான் தெரியுமா தாயி”“…”

“ஊரில் உங்க அப்பா பொதுமக்கள் கிட்ட வசூலித்த பணத்தையும் மொத்தமா உங்க அப்பா எடுத்துக்கிட்டு ஓடிட்டார்ன்னு தான் சொல்லி இருக்கான். இது தவிர உங்க அப்பா கையெழுத்து போட்டுக் கொடுத்த வெற்று பத்திரம் அவனுக்கு இன்னும் சாதகமா போச்சு தாயி… உங்க அப்பாவோட சொத்தை எல்லாம் அவனுடைய பினாமி பெயருக்கு மாற்றி விட்டான். நம்மகிட்டே இப்போ எதுவுமே இல்லை தாயி…”
“இருக்கட்டும் சித்தப்பா… அந்த ஆள் சொன்னா நம்ம ஊர் மக்கள் அப்படியே நம்பிடுவாங்களா? அவங்களுக்கு அப்பாவை பற்றி தெரியாதா? ஊர் மக்கள் நிச்சயம் நம்ப மாட்டாங்க” உறுதியோடு மறுத்தாள்.

“நம்ப வச்சுட்டான் தாயி… அந்த படுபாவி… உங்க அப்பாவே கைப்பட எழுதின மாதிரி ஒரு போலி கடிதத்தை ஊரில் உள்ள மற்ற பெரியவங்களுக்கும் அனுப்பி வச்சு இருக்கான். இனி யாரு நம்புவா?”
“ஏன் சித்தப்பா நாம போய் நேரில் சொல்லுவோம்” மெலிந்த குரலில் சொன்னாலும் உறுதியாக ஒலித்தது அவள் குரல்.

“வேணாம் தாயி… வேணாம்… அவன் சரியான கொலைகாரன். நீ உயிரோட இருக்கிற விஷயம் தெரிஞ்சா நம்ம ரெண்டு பேரையும் கொல்லவும் அவன் தயங்க மாட்டான். அப்புறம் நம்ம சந்ததியே அழிஞ்சிடும் தாயி… எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. உனக்கு எதுவும் ஆனா என் அண்ணன் என்னை மன்னிக்கவே மாட்டார் தாயி”
‘ஆபத்து என்று வந்தால் தனக்கு மட்டுமா வரும்… தப்பி பிழைத்து வந்து இருக்கும் சித்தப்பாவை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன?’அவள் முகம் சிந்தனையை தத்தெடுத்தது.

“எதுக்காக இவ்வளவு கொடூரம் நடந்தது சித்தப்பா… கேவலம் பணத்துக்காகவா?”

“முதலில் உனக்காகத் தான் இது ஆரம்பிச்சு இருக்குமா. அப்புறம் அண்ணனோட சொத்து அவன் கண்ணை உறுத்தி இருக்கும் போல. அண்ணன் பேரில் இருந்த சொத்தை எல்லாம் வித்து அவன் புதுசா கட்டப்போற ஹோட்டலுக்கு இடத்தை வாங்கி இருக்கான்மா.

“அந்த துரோகியை அப்படியே விட்டு விட சொல்றீங்களா சித்தப்பா?”

“வேறு என்ன செய்யுறது தாயி… அவன் பக்கம் பண பலம், படை பலம்ன்னு எல்லாம் இருக்கு… நம்மகிட்டே என்ன இருக்கு” விரக்தியாய் ஒலித்தது அவர் குரல்.

“நான் இருக்கிறேன் சித்தப்பா…” இரும்பை போல உறுதியுடன் ஒலித்தது வெண்ணிலாவின் குரல்.

“நீ என்ன செய்வ தாயி… பொட்டை புள்ள… இப்படியே கொஞ்ச நாள் யாருக்கும் தெரியாம மறைஞ்சு வாழலாம். ஏற்கனவே பார்த்து இருக்கும் மாப்பிள்ளைக்கு உன்கிட்டே முன்னே இருந்த அளவுக்கு சொத்து இல்லைன்னு தெரிஞ்ச பிறகு உன்னை கல்யாணம் செஞ்சுக்க பிடிக்குமோ இல்லையோ? அதுவும் இல்லாம அதே பையனை நீ கல்யாணம் செஞ்சுகிட்டா கண்டிப்பா அந்த விஷயம் சதாசிவம் காதுக்கு போய்டும். ஏன்னா இப்போ அந்த பையனையும் அவன் கண்காணிக்க ஆரம்பிச்சு இருப்பான். அதனால வேற ஒரு நல்ல பையனா பார்த்து உனக்கு கல்யாணம் செஞ்சு வச்சிடறேன் தாயி”
‘வேறு ஒருவனை மணப்பதா?’திடுக்கிட்டது வெண்ணிலாவின் உள்ளம்.

“எனக்கு கல்யாணமே வேணாம் சித்தப்பா… அதை விட முக்கியமான காரியம் ஒண்ணு இருக்கு” அவளின் முகமும் குரலும் இறுகிப் போய் இருந்தது.

“என்ன காரியம் தாயி”“அந்த சதாசிவத்தை பழி வாங்கணும்… எந்த பணத்துக்காக என் குடும்பத்தை அழிச்சானோ… அந்த பணத்தை எல்லாம் அவன் கிட்ட பறிக்கணும். அதுவும் எப்படி அவன் என் அப்பாவை ஏமாற்றி நம்ப வைத்து கழுத்தை அறுத்தானோ அதே மாதிரி கூடவே இருந்து அவனுக்கு குழி பறிக்கணும். அப்போ தான் நாம நம்புனவங்க நம்மளை ஏமாத்தினா எப்படி இருக்கும்னு அந்த வலி அந்தாளுக்கு புரியும். அதை எல்லாம் சாதிச்ச பிறகு அந்தாள் வாயாலேயே என்னோட மொத்த குடும்பத்தையும் அழிச்சு, என்னையும் உங்களையும் இப்படி நிராதரவா நிக்க வச்சு இருக்கானே… அதை நம்ம ஊர் ஜனங்க முன்னாடி சொல்ல வச்சு எங்க அப்பாவோட பேரை நான் காப்பாத்தியே தீருவேன் சித்தப்பா” சூளுரைத்தாள் வெண்ணிலா.

“என்ன தாயி… நீ என்னென்னவோ பேசற? இதெல்லாம் வேண்டாம் வெண்ணிலா… நம்மகிட்டே இப்போ எதுவுமே இல்லை”

“இருக்கு சித்தப்பா… என்னோட பேரில் இருக்கிற சொத்துக்கள் எல்லாம் இன்னமும் பத்திரமா தானே இருக்கு. அது போதும். அப்பாவின் பேரில் இருந்த சொத்துக்களை விட அதன் மதிப்பு அதிகம்”
வெண்ணிலாவின் கண்கள் இருந்த மானின் மருட்சி மறைந்து மெல்ல மெல்ல புலியின் ஆக்ரோஷம் வந்தது.

“ஸோ… இந்த காரணத்தினால் தான் நீ என்னை கல்யாணம் செஞ்சுக்க விருப்பம் இல்லைன்னு அன்னைக்கு சொன்னியா வெண்ணிலா?” சாதாரணமாக கேட்டாலும் உள்ளுக்குள் துடித்துக் கொண்டு இருந்தான்.

‘என்னுடைய நிலா எவ்வளவு தூரம் தவித்துப் போய் இருக்கிறாள். அந்த சமயத்தில் அவளுடன் இல்லாமல் போனேனே… அவள் போனில் பேசியதுமே என்ன ஏது என்று யோசித்து அவளை தேடி வந்து இருந்தால் இத்தனை தூரம் அவள் வருந்தியிருக்க நான் அனுமதித்தே இருக்கவே மாட்டேனே’

“ஆம்” என்பது போல மெல்ல விழியை திறந்து மூடினாள் வெண்ணிலா. உணர்ச்சிகளின் குவியலாக நின்று கொண்டு இருந்தாள் வெண்ணிலா. இப்பொழுது எதையும் பேச முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை. இத்தனை நாளாய் மனதுக்குள்ளேயே அடைத்து வைத்து இருந்த அத்தனையையும் வெளியில் கொட்டி விட்டதாலோ என்னவோ அதன்பிறகு வேறு எதையும் பேசத் தோன்றாது அப்படியே நின்று கொண்டு இருந்தாள் வெண்ணிலா.

ஹரிஹரன் வெண்ணிலாவை தன்னுடைய அணைப்பை விட்டு விலக்கவில்லை… விலக அவளும் நினைக்கவில்லை. அந்த நேரத்தில் அவளுக்கு சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவையாக இருந்தது. கடந்த வந்த பாதையின் சுவடுகள் மனதை தாக்க அப்படியே கண் மூடி ஹரிஹரனின் தோளில் சாய்ந்து நின்று கொண்டு இருந்தாள் வெண்ணிலா.ஹரிஹரனும் அவளை ஆதரவாக அணைத்தவாறே போனை எடுத்து யார், யாரிடமோ பேசினான். பேசி முடித்து விட்டு போனை அணைத்து சட்டைப் பையில் போட்டவனின் முகமோ யோசனையில் சற்று நேரம் சுருங்கி இருந்தது.

வெண்ணிலாவை மெதுவாக விலக்கியவன் அவளின் கண்களை நேருக்கு நேராக உற்றுப் பார்த்தான்.

“வெண்ணிலா… நான் கேட்கிற கேள்வியை நல்லா புரிஞ்சுக்கிட்டு யோசிச்சு பொறுமையா பதில் சொல்லு…” ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி நிதானமாக உச்சரித்தான் ஹரிஹரன்.

வெண்ணிலாவின் தலை தானாகவே சரி என்பது போல தலை அசைக்க, மனதுக்குள் ஒருமுறை போனில் கேட்ட விவரங்களையும், வெண்ணிலா சொன்ன விவரங்களையும் ஒன்றாக தொகுத்துக் கொண்டவன் அவளை பார்த்து தீர்க்கமாக கேட்டான்.

“அந்த வீட்டிற்கு உன்னை கூட்டிக் கொண்டு போன பொழுது நீ மாடி அறையில் இருந்து ஜன்னலில் குதித்து தப்பித்தாய்… உன்னுடைய சித்தப்பா எப்படி தப்பித்தார்?”

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here