Siragilla Devathai Tamil Novels 38

0
2579

Siragilla Devathai Tamil Novels 38

“என்னையே கேள்வி கேட்கும் அளவுக்கு வளர்ந்துட்டியா நீ? அப்பன், ஆத்தா இல்லாத பிள்ளையாச்சேன்னு நான் பாவப்பட்டு உன்னை வளர்த்தா நீ என்னையே சந்தேகப்படுறியா? இதுக்கு பேர் தான் தானம் கொடுத்த மட்டை பல்லை பிடித்து பார்க்கிறதுன்னு சொல்வாங்க” ஆத்திரத்தில் பேசிக் கொண்டே போனார்.

“சித்தப்பா?” அதிர்ந்து போய் நின்று விட்டாள் வெண்ணிலா.

ஹரிஹரன் இருவரும் மாறி மாறி பேசுவதை எல்லாம் வேடிக்கை பார்த்தபடியே அப்படியே நின்றானே ஒழிய வாயை திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.

“என்ன… அப்படி நடிக்கிற… உன்னால தான் இப்படி என்னோட குடும்பத்தை எல்லாம் இழந்துட்டு இப்படி தனிமரமா நிக்குறேன்”
“சித்தப்பா” கண்களில் இருந்து வழிய தயாராய் இருந்த கண்ணீரை இமை சிமிட்டி அடக்கினாள்.

“அவளை நீங்க வளர்த்தீங்களா? இது எப்போ… அவள் பணத்தில் உங்க உடம்பை வளர்த்து வச்சுகிட்டதா வேணா சொல்லுங்க சரியா இருக்கும்” நக்கலாக ஒலித்தது ஹரிஹரனின் குரல்.

“டேய்… என்னோடு நீ பேசாதே உனக்கும் எனக்கும் பேச்சு வார்த்தை இல்லை. ஏய் வெண்ணிலா… கிளம்புன்னு சொல்றேன்ல”

சற்று நேரத்திற்கு முன் அவளை அழைத்த அழைப்பிற்கும் இப்பொழுது பேசும் தொனிக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை தெளிவாக உணர்ந்து கொண்டாள் வெண்ணிலா. அது இத்தனை நாள் பாசமாக! தன்னிடம் பேசிய குரலாக இல்லை என்பதை வேதனையுடன் உணர்ந்தவள் நிமிர்ந்து ஹரிஹரனை பார்த்து கண்களால் மன்னிப்பு வேண்ட ஹரிஹரன் இமை மூடி திறந்து அவளை சமாதானம் செய்தான்.இவர்கள் இருவரின் மௌன பாஷையில் எரிச்சல் உற்ற சுந்தரம் மேலும் வார்த்தைகளை கொட்டினார்.

“வெண்ணிலா உன்னை கிளம்ப சொன்னேன். அதை விட்டுட்டு என்ன செய்ற… பக்கத்தில் என்னை வைத்துக் கொண்டே இப்படி அநாகரிகமான ஒரு ஆம்பிளை கிட்டே கண்ணாலேயே பேசறியா? என்ன அவன் கூட கூட்டு சேர்ந்து அப்படியே ஓடிடலாம்ன்னு பார்க்கறியா? அதுக்காகவா நான் இத்தனை நாள் கஷ்டப்பட்டேன்”

ஆரம்பத்தில் அவர் பேசப்பேச கூனிக்குறுகி கொண்டே போனவள் ஆவரின் கடைசி வரிகளில் நிமிர்ந்து நின்று அவரது கண்களை நேருக்கு நேராக பார்த்தாள்.

“எதுக்காக இத்தனை நாள் கஷ்டப்பட்டீங்க” சித்தப்பா என்ற வார்த்தையை கவனமாக தவிர்த்து விட்டு ஹரிஹரனின் அருகில் போய் நின்று கொண்டாள். கரங்களை ஹரிஹரனின் கரத்தோடு கோர்த்துக் கொள்ள, அதில் ஹரிஹரன் கொடுத்த அழுத்தம் அவளுக்கு மேலும் தெம்பை தர நிமிர்வாகவே நின்றாள்.

அவர்களின் இருவரின் கரங்களும் கோர்த்து நிற்பதும், வெண்ணிலாவின் நிமிர்வும் மேலும் ஆத்திரத்தையே கொடுக்க ஓநாய் தன்னுடைய பசுத் தோலை மெல்ல கழற்றி எரிந்தது.

“இது தான்… நீங்க ரெண்டு பேரும் இப்படி ஒண்ணா… நிக்கறீங்களே அது தான். உனக்கு கடைசி வரையில் கல்யாணம்னு ஒரு எண்ணம் வரக்கூடாதுன்னு நினைச்சு தான் உன் மனசில் பழி வெறியை தூண்டி விட்டேன்”

“ஏன்… நான் கல்யாணம் செஞ்சுக்கிட்டு குடும்பம் குழந்தைன்னு வாழக் கூடாதா?” அவளையும் மீறி அவள் கண்களில் துயரம் எட்டிப் பார்த்தது.

“நீ எக்கேடோ கேட்டுப்போ… அதை பத்தி எனக்கு கவலை இல்லை…”
“அப்படி என்ன உங்களுக்கு என் மேல் வெறுப்பு?”

“வெறுப்பா? ஹ… உன் மேல் எனக்கு இருப்பது ஆத்திரம், வெறி…” கண்கள் வெறியில் பளபளக்க சொன்னார் சுந்தரம்.

வெண்ணிலா பதிலே பேசவில்லை. ஆனால் சுந்தரம் கண்கள் ஆத்திரத்தில் பளபளக்க பேசிக் கொண்டே போனார்.

“அந்த ஊரில் ஒரு பய மதித்தானா என்னை? எப்போ பார் உங்க அப்பனை தான் தலையில் தூக்கி வச்சு கொண்டாடினாங்க. கோவில் முதல் மரியாதைல இருந்து எல்லா இடத்திலும் உங்க அப்பனுக்கு தான் மதிப்பு.கையில் அவ்வளவு பணம் இருந்தும் உங்க அப்பன் எனக்குனு ஒரு தொழில் அமைச்சு கொடுத்தானா?எப்பப் பார்த்தாலும் அவனிடம் கை கட்டி வாய் பொத்தி பதில் சொல்ல வேண்டிய நிலைமையில் தானே என்னை வச்சிருந்தான்.”

எப்பொழுதும் ‘அண்ணா’ என்று அழைத்தபடி அப்பாவின் அருகில் குனிந்த தலை நிமிராமல் நிற்கும் சுந்தரத்தின் முகம் அவள் மனக்கண்ணில் வந்து போனது. கண்களை இறுக மூடி தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவள் எதிரில் நின்று கத்திக் கொண்டு இருந்த சுந்தரத்தை வெறிக்க தொடங்கினாள்.

“ஏற்கனவே என்னை பெத்தவங்க சேர்த்து வச்ச சொத்தை தவிர புதுசா வாங்கின சொத்து எல்லாத்தையும் உன் பேரில் தான் வாங்கினான்”

“இல்லையே… கணேசன் பேரிலும் சில இடங்களை வாங்கினாரே…”

“ஆமா… ஆமா நல்லா வாங்கி போட்டார். உன் பேரில் பத்து ஏக்கர் கணேசன் பேரில் இரண்டு ஏக்கர்… ஊரை ஏமாற்ற அப்படி செய்தான் அவன்” மரியாதையை இப்பொழுது முற்றிலும் குறைத்து விட்டு இருந்தார் சுந்தரம்.

“அவன் சின்ன பையன்… அதை ஈடு செய்யத்தான் சித்திக்கு மட்டும் நகையாக நிறைய வாங்கிக் கொடுத்தாரே”“பின்னே ஆசை நாயகிக்கு கொடுக்காமல் எப்படி” ஓநாய் தன்னுடைய கோரப் பற்களை காட்டி இளிக்கத் தொடங்கியது.

கண்களோடு காதுகளையும் இறுக மூடிக் கொண்டாள் வெண்ணிலா. சித்தி எப்பொழுதும் தன்னுடைய தந்தையை பார்க்கும் மரியாதையான பார்வையும், தந்தை சித்தியை பார்க்கும் கனிவு நிறைந்த பார்வையும், சொல்லும் அவர்கள் இருவரின் பார்வையும் ஒரு அண்ணன், தங்கச்சிக்கு இடையேயான உறவை தான் வெளிப்படுத்தும் என்று.

“கணேசன் உங்க பிள்ளை தானே? அவனையும் சேர்த்துக் கொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு” ஹரிஹரன் பொறுக்க மாட்டாமல் வாயை திறந்து கேட்டே விட்டான்.

“யார் என் பிள்ளை? அவனா? சை! பார்க்கிறதுக்கு அப்படியே உங்க அண்ணனை உரிச்சு வச்சு பிறந்து இருக்கிறான் அப்படின்னு மொத்த ஊரும் என் மூஞ்சியில் காரி துப்புச்சு”

“வீட்டில் பிறக்கும் குழந்தைகள் அந்த வீட்டு பெரியவர்களின் சாயலில் தானே இருப்பார்கள்” என்று ஹரிஹரன் எடுத்து சொல்ல நன்றி கலந்த பார்வையை அவன் புறம் வீசினாள் வெண்ணிலா.

“நீ சொல்றதை எல்லாம் எவனாவது இளிச்சவாயன் நம்புவான் என்கிட்டே சொல்லாதே”

“ உன்னோட என்னகென்னப் பேச்சு. கிளம்பு வெண்ணிலா” வெண்ணிலாவின் கைகளை இறுகப் பற்றிய ஹரிஹரன் அங்கிருந்து நகர முற்பட எக்காளமாக சிரித்தார் சுந்தரம்.

“அவ்வளவு சீக்கிரம் அவளை போக விட்டு விடுவேனா?” சுந்தரம் கையை தட்ட தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் பின்னால் இருந்து திபுதிபுவென ஆஜானுபாகுவான ஆறேழு பேர் ஓடி வந்தனர்.
அடியாட்களை கண்டதும் வெண்ணிலா ஒன்று பயந்து போய் விடவில்லை. ஹரிஹரனின் அணைப்புக்குள் இருக்கும் போது தன்னை யார் நெருங்கி விட முடியும் என்ற எண்ணம் தோன்ற கொஞ்சமும் அஞ்சாமல் அப்படியே நின்றாள்.

“உங்களுக்கு சொத்து மட்டும் தான் முக்கியம்னா அன்னைக்கே என்கிட்ட இருந்து அதையும் எழுதி வாங்கி இருக்கலாமே” வேதனை தாங்காமல் மனதை உறுத்திக் கொண்டு இருந்த கேள்வியை கேட்டே விட்டாள் வெண்ணிலா.

“எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா என்ன? ரொம்ப வருசமாவே என் மனசுக்குள்ள அப்படி ஒரு ஆசை இருந்தது நிஜம் தான். ஆனா சாகப் போற கடைசி நிமிசம் உங்கப்பன் ஒரு வார்த்தை சொன்னான். ‘என்னை என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோ. ஆனா என் மகளை வாழ விடு. அவ என் குலசாமிடா. அவ நல்லபடியா சந்தோசமா வாழ்ந்து அதை பார்த்தா கூட போதும்.என்னோட ஆத்மா சாந்தி ஆகிடும்னு’ சொன்னான்.” வெறியில் ஆங்காரமாக சொன்னார் சுந்தரம்.“அப்போ இவளை சந்தோசமா வாழ வைக்கிறதுன்னு முடிவு செஞ்சு இருந்தீங்களா?” நம்ப மறுத்துக் கேட்டான் ஹரிஹரன்.

“இவ சந்தோசமா வாழ்றதா… அதுவும் நான் இருக்கும் போதா? இப்ப கூட ஒவ்வொரு ரூபாய்க்கும் இவகிட்ட கை கட்டி வாய் பொத்தி இவ அப்பன் கிட்ட கேட்ட மாதிரி கணக்கு சொல்லி இல்ல வாங்க வேண்டி இருக்கு”

“அப்புறம்… ?”

“இவ உயிரோட இருக்கணும்… ஆனா அதே நேரம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் சாகணும். அப்பத்தான் செத்துக் கூட நிம்மதி இல்லாம அவங்க அப்பன் சுத்துவான்”

“உங்க பேச்சு புரியலையே?” தாடையை தடவியபடி யோசித்தான்.

“நீ எல்லாம் யோசிக்கிற மாதிரி அவ்வளவு சாதரணமா திட்டம் தீட்டி இருந்தா இந்நேரம் வரை இவள் என்னை கண்டு பிடித்து இருக்க மாட்டாளா?” ஒவ்வொரு நாள் இவள் தூங்கும் போது இரவில் அப்படியே தலையணையால் இவளை அழுத்திக் கொன்றால் என்ற எண்ணம் வராமல் இல்லை. ஆனால் ரொம்ப கஷ்டப்பட்டு முயற்சி செய்து என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன்.

இவள் மனசுல பழி வெறியை நல்லா ஏத்தி விட்டேன். இவளும் பூம் பூம் மாடு மாதிரி நான் சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டினா… அதனோட விளைவு என்ன தெரியுமா? அந்த சதாசிவத்தின் கம்பெனி எல்லாத்திலயும் எங்களோட ஆட்கள் வச்சு கொஞ்சம் கொஞ்சமா பணத்தை திருட சொன்னேன். அந்த பணத்தை எல்லாம் அப்படியே கோவில் உண்டியலிலும், அனாதை ஆஸ்ரமத்திற்கும் கொடுக்க சொன்னாள் இந்த பைத்தியக்காரி.

நானா கொடுப்பேன். அத்தனையும் இப்போ என் கையில் இருக்கு… இவ மொத்தமா அந்த குடும்பத்து சொத்து எல்லாத்தையும் அழிச்ச பிறகு இவளை நானே போலீசில் மாட்டி விட்டுடுவேன். அது எப்படின்னு பார்க்கறியா?

இந்த லூசு தான் நான் கேட்ட இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டு வச்சு இருக்கே… அதே மாதிரி என்னுடைய ஆட்கள் யாராவது ரெண்டு பேருக்கு பணத்தை வாரி இறைச்சா அப்ருவர் ஆகிடுவாங்க. இதை எல்லாம் மனசில் வச்சு தான் இந்த கம்பெனியை இவ பேரில் ஆரம்பித்தேன். கம்பெனியின் எல்லா கணக்கு வழக்குகளும் இவ பேரில் தான் இருக்கு. நாளைக்கு மோசடி நிருபணம் ஆனாலும் இவ தான் உள்ளே போவா.திட்டம் போட்டு எல்லா வேலைகளையும் செய்தது நான்.ஆனா ஜெயிலுக்குப் போய் களி தின்னப் போவது இவள்…எப்படி என் திட்டம்? ஹா ஹா ஹா…” என்று பெருங்குரலெடுத்து அந்த இடமே அதிரும்படி சிரித்தார் சுந்தரம்.

“அப்போ இவ பெயரில் இருக்கிற சொத்து?” முன்னிலும் அதிக நிதானத்துடன் கேட்டான் ஹரிஹரன்.

“ஏற்கனவே இவ கையெழுத்து போட்ட பத்திரம் இருக்கே… இவ ஜெயிலுக்கு போனதும் அதை எல்லாம் என் பேரில் மாத்திப்பேன்”

“அவ ஜெயிலில் இருந்து தண்டனை காலம் முடிஞ்சு ஒரு நாள் நிச்சயம் திரும்பி வருவா இல்லையா? அப்போ என்ன செய்வீங்க?”

“இவ ஜெயிலில் இருந்து உயிரோட திரும்பி வெளியே வர மாட்டா… வந்து இருக்கவும் நான் விட மாட்டேன். அவளுடைய சொத்தை எல்லாம் என் பெயருக்கு மாற்றின உடனே இவளை பார்த்து எல்லா விஷயத்தையும் நேரில் போய் சொல்லி இவ துடிக்கிறதை கண்ணாரப் பார்த்து சந்தோசப் பட்டு இருப்பேன்”“எதை சொல்லி இருப்பீங்க?” குரல் நடுங்க கேட்டாள் வெண்ணிலா.

“மொத்த குடும்பமும் குற்றுயிரும் குலை உயிருமா இருக்கிறப்போ நெருப்பை பத்த வச்சிட்டு நான் வந்து அவங்க இறந்திட்டாங்கன்னு சொன்னதும் நெருப்பை அணைக்காமல் நான் சொன்னதை நம்பி மயங்கி விழுந்து வைத்தாயே அதை சொல்லுவேன்…

காதலிச்ச உன்னை கல்யாணம் செஞ்சு குடும்பம், குழந்தைன்னு வாழ விடாம உன்னை பயமுறுத்தி இவன் கிட்ட இருந்து பிரிச்சதை சொல்லுவேன்…

இவங்க அப்பன் என்கிட்ட சதாசிவத்துகிட்ட கொடுக்க சொன்ன வெத்து பத்திரங்களை எல்லாம் வச்சு இவங்க அப்பன் சொத்தை எல்லாம் என் பேருக்கு ஏற்கனவே மாத்திக்கிட்டேனே. அதை சொல்லுவேன்…

தப்பே செய்யாத அந்த சதாசிவத்தோட சொத்தை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா திருடி எனக்கு கொடுத்து என்னை பணக்காரன் ஆக்கி இருக்காளே அதை சொல்லுவேன்…

வெளியே வந்த பிறகு சோத்துக்கு கூட வழியில்லாமல் இவ ரோட்டில் பிச்சை எடுப்பாளே அதை சொல்லுவேன்…

இது அத்தனையும் தெரிஞ்ச பின்னர் இவ எப்படி நிம்மதியா இருப்பா? ஜெயிலுக்குள்ளேயே செத்துடுவா”

சுந்தரம் சொன்ன ஒவ்வொரு விஷயத்திற்கும் வெண்ணிலாவின் உடலில் நடுக்கம் ஏற்பட்டு உடல் தூக்கிப் போடுவதை ஹரிஹரனால் உணர முடிந்தது. வெண்ணிலாவின் தோளை சுற்றி கரங்களால் அவளை அணைத்தவன் அவளுக்கு இமாலய தெம்பைக் கொடுத்தான்.

“சதாசிவத்தின் மேலே உனக்கு என்ன வெறுப்பு?” ஹரிஹரன் மரியாதையை இப்பொழுது கை விட்டு இருந்தான்.

“பின்னே அவன்கிட்ட போய் ஊரில் வசூலிச்ச மொத்த காசையும் என்கிட்டே கொடுடான்னு நான் போய் கேட்டா அதை ஏற்கனவே ஊர் பெரியவங்க கிட்ட கொடுத்து பஞ்சாயத்துல கட்ட சொல்லியாச்சுன்னு சொல்றான். இவங்க அப்பனை ஊரே செத்த பிறகு தூத்தணும்ன்னு நான் நினைச்சு வச்சு இருந்த என்னோட திட்டம் பலிக்காம போச்சே… அதுக்கு அவன் தான் காரணம். அதுக்கான கூலி தான் அவனுக்கு இந்த தண்டனை.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவனை ரோட்டில் பார்த்தப்போ அந்த பயகிட்டே எல்லா உண்மையையும் பிட்டு பிட்டு வச்சேன்… நண்பன் குடும்பம் அழிய தானே காரணம் ஆகிட்டோம்ன்னு நினைச்சு நினைச்சு தான் அந்த பய உடம்புக்கு முடியாம படுத்துக்கிட்டான்”

“அப்போ இந்த சதியில் அவருக்கு எந்த பங்கும் இல்லையா?” ஹரிஹரன் கேட்க…

“அவன் ஒரு பைத்தியக்காரன்.இவளை வீட்டு மருமகள் ஆக்குறேன்னு நான் சொன்னதும் அப்படியே நம்பிட்டான்.நான் தான் அண்ணனை கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கலாம்னு சொல்லி என்னோட நண்பன் பேர்ல இருக்கிற தோப்பு வீட்டுக்கு அந்த சதாசிவம் வர சொன்ன மாதிரி சொல்லி எல்லாரையும் கூட்டிட்டு போனேன்.அங்கே வந்த பிறகு எவ்வளவோ எடுத்து சொல்லியும் அண்ணன் அந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கலை.அப்புறம் ஒண்ணுமே பேசாமல் அங்கிருந்து போய்ட்டான்.ஆனா நான் விடுவேனா?எவ்வளவு அருமையான சந்தர்ப்பம் எனக்கு அது…அது தான் எல்லாரையும் நானே கொன்னேன்”

“இப்படி எல்லார் வாழ்க்கையையும் அழிச்சுட்டா, உங்களுக்கு அதில் என்ன கிடைக்க போகுது” வெண்ணிலா மரத்த பார்வையுடன் கேட்டாள்.

“பணம் கிடைக்குமே… பணம்…” கண்கள் பளபளக்க கூறிக் கொண்டே போனவன் ஹரிஹரனை பாவமாய் பார்த்தான்.

“என்னோட குறி நீ கிடையாது. ஆனா இவளுக்கு உதவறேன்ன்னு வந்து நீயே இப்படி மாட்டிக்கிட்டியே.ச்சு… உங்க ரெண்டு பேரையும் இங்கேயே கொன்னு புதைச்சுட்டு நான் பாட்டுக்கு சந்தோசமா இருப்பேன்… என்ன இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு நீ வந்து இருந்தால் அந்த சதாசிவத்தின் முழு சொத்தையும் நான் சுருட்டி இருப்பேன்” எக்காளமாக பேசிக் கொண்டே போனான்.“யார் வந்து யார்க்கிட்டே மாட்டி இருக்கா? நீ தான் வகையாய் வந்து என் கையில் சிக்கி இருக்க” கிரேக்க சிலையின் நிமிர்வோடு சொன்னவன் மெதுவாக இடுப்பில் சொருகி வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து நீட்டினான்.

துப்பாக்கியை பார்த்ததும் வெண்ணிலா கண்களை சாசர் போல விழிக்க ஹரிஹரன் அவளை திரும்பிப் பார்த்து மெல்ல ஒற்றைக் கண்ணை சிமிட்டினான். அந்த சிறு செய்கையில் முகம் சிவந்த வெண்ணிலாவை ஆசையோடு ஹரிஹரன் பார்க்க அந்த நொடியை சரியாக பயன்படுத்திக் கொண்ட சுந்தரம் ஹரிஹரனின் கையில் இருந்த துப்பாக்கியை தட்டி விட அது சில அடி தூரம் தள்ளி விழுந்தது.
அதை எடுக்க அங்கிருந்த அடியாட்கள் முதற்கொண்டு எல்லாரும் ஓடும் முன் ஒரு கரம் அவர்களை முந்திக்கொண்டு அதை கைப்பற்றியது. அது ஹரிஹரனின் நண்பன் சிவா. அவனுடன் வசந்த்தும் நிற்க ஹரிஹரனும் வெண்ணிலாவும், நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அதன்பிறகு மளமளவென அனைத்தும் நடந்தேறியது. போலிசுக்கு தகவல் சொல்லி போலீஸ் வந்து சுந்தரத்தையும் அவருடைய ஆட்களை கைது செய்ய, அப்படியும் அடங்காமல் “என்னை கைது செய்ய என்ன ஆதாரம் இருக்கு உங்ககிட்டே” என்று போலீசிடம் எகிற அவரது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தார் போலீஸ்காரர்.
“இதை பாருடா நாயே… ஆதாரம் வேணுமாமே ஆதாரம்” என்று சொன்னவர் ஹரிஹரனின் முகப் புத்தகத்தில் (facebook) அவ்வளவு நேரம் தான் பேசிய அனைத்தும் லைவ் (live) செய்து தன் வாயில் இருந்து ஒவ்வொன்றாக உண்மையை பிடுங்கி சொல்ல வைத்ததை உணர்ந்தவர் ஹரிஹரனின் புறம் வெறுப்பாக திரும்பினார்.

“என்னை உள்ளே தள்ளியாச்சுன்னு சந்தோசம் எல்லாம் படாதடா… ஜாமீனில் வெளியே வந்து உன்னை என் கையால கொல்லு…” என்று சொல்லிக் கொண்டே சென்றவர் கையும் காலும் ஒரு பக்கமாக இழுத்துக் கொள்ள வாய் ஒரு பக்கமாக கோணி அப்படியே நிலை தடுமாறி விழுந்தார்.

வசந்த் ஒரு மருத்துவராக உடனே அவருக்கு முதலுதவி செய்ய முற்பட்டான். ஆனால் வசந்தின் முயற்சி எதுவும் பலிக்கவில்லை. போலிசின் புறம் திரும்பிய வசந்த், “ சார் இவருக்கு பேரலைஸ் (Paralyse) அட்டாக் ஆகி இருக்குனு நினைக்கிறேன். சீக்கிரம் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போங்க”

“இந்த நாய் எல்லாம் பொழைச்சு என்ன செய்ய போகுது டாக்டர்… நானும் தான் பார்த்தேன் அந்த வீடியோவை… கூட பிறந்த அண்ணன் மேல சந்தேகப்பட்டு, அண்ணன், அண்ணி, தன்னோட பொண்டாட்டி, பிள்ளைன்னு ஒருத்தர் விடாம எல்லாரையும் சேர்த்து வச்சு கொன்னு இருக்கான்.

இவன் செஞ்சு இருக்கிற குற்றத்துக்கு நியாயப்படி இவனுக்கு மரண தண்டனை தான் கிடைக்கணும். ஆனா இப்படி இழுத்துக்கிட்டு இருக்கிறதால அவனுக்கு அதைத் தர மாட்டாங்க. சாகுறவரை இவன் கதி இது தான். ஏதாவது ஒரு அரசாங்க இல்லத்தில் ஒவ்வொரு வேலைக்கும் அடுத்தவங்க உதவியை எதிர்பார்த்து காலம் பூரா இப்படியே கிடக்க வேண்டியது தான். இத்தனை நாள் இந்த சின்ன பொண்ணை ஏமாத்தி சேர்த்து வச்சானே சொத்து… அதனால இவனுக்கு ஐஞ்சு பைசா கூட பிரயோஜனம் இல்லை.எத்தனை பேரோட உயிரை கொன்னு, இந்த பொண்ணையும் ஏமாத்தி, இன்னும் இவங்க ரெண்டு பேரையும் கொல்லப் பார்த்து… இவனை விட்டு வைத்தால் இன்னும் என்னென்ன அக்கிரமம் செய்வானோ? நீங்க போங்க சார்… நாங்க பாத்துகிறோம்” என்று சொல்லிவிட்டு ஆம்புலன்ஸில் சுந்தரத்தை ஏற்றிக் கொண்டு செல்ல, அப்படி வசந்தை கடந்து செல்லும் போது ஒரு நொடி அவரின் முகத்தை பார்த்தவன் பயத்தில் வெளிறிப் போய் இருந்த அவரது முகத்தை பார்த்தான்.
அவரது முகமே அவர்கள் இருவரும் பேசிய பேச்சை அவர் கேட்டு விட்டதையும், இனி எதிர்காலம் என்ற ஒன்று தனக்கு இல்லை என்பதையும் அவர் புரிந்து கொண்டு விட்டார் என்ற உண்மை புலப்பட லேசாக தோளைக் குலுக்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அதற்குள் ஊருக்குள் போலீஸ் வந்ததை பார்த்த மக்கள் என்ன ஏது என்று தெரிந்து கொள்ள வந்தவர்கள் அனைவரும் சுந்தரத்தை சபிக்க தவறவில்லை. “எப்பேற்பட்ட நல்ல மனுஷன் அவர்… அவருக்கு இப்படி ஒரு தம்பியா? சை… பாவம் அந்த மனுஷன்… குடும்பத்தோட எங்கேயோ போய் செட்டில் ஆகிட்டார்னு நினைச்சா, கடைசியில் இந்தப் பாவி இப்படி செஞ்சுட்டானே… இவன் எல்லாம் நல்லா இருப்பானா?

செஞ்ச பாவம் சும்மா விடுமா அதான் கடவுள் அவனுக்கு சரியான தண்டனையை கொடுத்துட்டார். இனி தாகத்துக்கு தண்ணி வேணும்னா கூட அவனால தானே எழுந்து போய் குடிக்க முடியாது. திங்குற கைல தான் கழுவணும்… கழுவுற கைல தான் திங்கணும்… நல்லா வேணும்” என்று திட்டியபடியே அங்கிருந்து ஊரார் கலைய ஆரம்பித்தனர்.

இத்தனை காட்சிகள் இங்கே நடந்து கொண்டு இருக்க அவ்வளவு நேரமாகியும் சிவா மட்டும் அப்படியே நின்ற நிலை மாறாமல் இருந்தான். கையில் துப்பாக்கியை பிடித்தவாறே.

‘இவன் ஏன் இப்படி நிற்கிறான்?’ என்ற எண்ணத்தோடு மெதுவாக சிவாவின் தோளை தொட ரப்பர் பந்து போல எகிறிக் குதித்தான் சிவா.

“டேய்… நான் தான்டா… சுட்டு கிட்டு தொலையாதே” அலறினான் வசந்த்.

“டேய்… வ… வசந்த்…”

“என்னடா… என்ன ஆச்சு”

“துப்பாக்கிடா… என் கையில் நான் வச்சுக்கிட்டு இருக்கேன் பார்த்தியா. இதை வச்சு தான் நான் எல்லாரையும் காப்பாத்தினேன்” என்னவோ இமயமலையை கையில் வைத்திருப்பது போன்ற பாவனையில் உள்ளம் சிலிர்க்க துப்பாக்கியை கையில் தாங்கியபடி சொன்னான் சிவா.

“ரொம்ப உணர்ச்சி வசப்படாதே… அதில குண்டு இல்லை” அசால்ட்டாக சொன்னான் வசந்த்.

“என்னது?” என்று அதிர்ந்த சிவாவின் முகம் போன போக்கில் வசந்த் சிரிக்கத் தொடங்கினான்.

“அது ஒண்ணும் இல்லை மச்சி… ஊரில் இருந்து கிளம்பிய அன்னைக்கே ஹரிஹரன் சூட்கேசில் இது இருந்ததை நான் பார்த்தேன். ஒருவேளை இந்த மடையன் எசகுபிசகா ஏதாவது ஆத்திரத்தில் தற்கொலை எதுவும் செஞ்சுகிட்டா என்ன செய்றதுன்னு பயந்துக்கிட்டு அதுல இருந்த குண்டை எடுத்து தனியா வச்சிட்டேன்”

கூலாக சொன்ன வசந்தை வெட்டவா குத்தவா என்பது போல சிவா பார்த்த பார்வையில் மேலும் சிரிக்க தொடங்கினான் வசந்த்.

“மகனே போலீஸ் வர்றதுக்கு முன்னாடி மட்டும் அந்த சுந்தரத்துக்கோ இல்லை அவனோட அடியாட்களுக்கோ இந்த விஷயம் தெரிஞ்சு இருந்துச்சுனு வை… அப்புறம் உன் கதி… அதோ கதி தான்”

“அட கிராதகா… இவ்வளவு நேரம் எப்படி பயந்துக்கிட்டு இருந்தேன் தெரியுமா? தப்பித் தவறி கை பட்டு யாரையும் சுட்டுடாம இருக்கணும்ன்னு எங்க குலதெய்வத்துக்கு தேங்காய் உடைக்கிறதா எல்லாம் வேற வேண்டிக்கிட்டு இருந்தேன்டா” முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொல்ல அப்பொழுது தான் அவர்கள் கவனித்தனர் முக்கியமான இருவர் அங்கு இல்லாததை.

அதே நேரம் வெண்ணிலாவும் ஹரிஹரனும் தோப்பின் மறுமூலையில் இருந்த பரண் மேல் இருந்தனர்.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here