மாங்கல்யம் தந்துனானே-6

Post Reply
yaazhistories
Moderators
Posts: 10
Joined: Mon May 25, 2020 3:05 pm
Been thanked: 1 time

மாங்கல்யம் தந்துனானே-6

Post by yaazhistories »

FB_IMG_1598148218923.jpg

அன்றைய இரவுகள் அவர்களுக்கு மகிழ்ச்சியாக கடந்தது.  சிவநாதனும் மனதில் ஒரு நிம்மதியோடு உறங்கினார்.

விடிந்ததும் முதல் வேளையாக அம்ரிஷ் வித்யுதாவிற்கு போன் செய்தான். "ஏய் லூசு சொந்தக்காரங்க கிட்ட என்னன்னு போய் சொல்வேன்?. ஏதாவது ஐடியா கொடுடி" என்றான்.

"சார் உருப்படியா எதுவும் யோசிக்கமாட்டீங்கனு தெரியும்.அதையும் நானே ப்ளான் பண்ணிட்டேன். இன்னைக்கு நானும் லீவு சொல்லிட்டேன். உனக்கும் லீவு சொல்லிட்டேன். 9.30 மணிக்கு நாம ரெகுலரா மீட் பண்ற ரெஸ்டாரன்ட்க்கு வந்துடு" என்று சொல்லி பதிலேதும் கேட்காமல் போனை‌ துண்டித்தாள்.


"இவ இப்பவே இப்படி பண்றாளே. கல்யாணம் ஆச்சுன்னா உன் நிலைமை ரொம்ப கஷ்டம்டா அம்ரிஷ்" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு புறப்பட்டு சென்றான்.

நேரம் 12.30ஐ நெருங்கும் போது சந்திரசேகரும் ஷர்மிளாவும் அம்ரீஷ் வீட்டுக்கு வந்தனர்.
"வாங்க வாங்க. என்ன போன் கூட பண்ணாம வந்துட்டீங்க சம்மந்தி" என்று வரவேற்றார் சிவநாதன். அப்போது சந்திரசேகர் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தையும் கண்டார்


"சமந்தி மாப்ள தான் போன்பண்ணி வரச்சொன்னார். உங்களுக்கு தெரியும்னு நினைச்சேனே" என்றார். இருவருக்குள்ளும் குழப்பம் ஏற்பட்டது. பார்வதி  தண்ணீர் கொடுத்துவிட்டு, "காலையில் நேரமே ஆபீஸ் கிளம்பி போனான். ஏதோ சொல்லிட்டு போகலையே அண்ணா" என்று சொல்லி முடிப்பதற்குள் வீட்டுக்குள அம்ரீஷ் வந்தான். கூடவே வித்யுதாவும் வந்தாள்.


"என்னடா ஆபீஸ் போகலையா. அவங்களையும் வீட்டுக்கு வரசொல்லி‌ இருக்க. ரெண்டு பேரும் ஆபீஸ் போகாம எங்க போயிட்டு வரீங்க" என்று வேகமாக கேட்டு முடித்தார் பார்வதி.

"அம்மா முதல்ல இந்த தண்ணிய குடி. இன்னைக்கு நானும் வித்யுதாவும் லீவு போட்டுட்டோம். எங்க அண்ணனும் அப்பாவும் ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் சந்திக்க போறாங்க. அதுக்கும் சொந்தக்காரங்க முன்னாடி சொல்ல காரணம் வேணுமே. அதான்" என கவரில் இருந்த பத்திரிகையை எடுத்து தன் அப்பாவிடம் நீட்டினான்.

அனைவருக்குமே அதிர்ச்சி.  பத்திரிகை வாங்கி படித்தவுடன் பேரதிர்ச்சி.

"என்னடா இது. உன் இஷ்டத்துக்கு பண்ணிட்டு இருக்க. ஏற்கனவே சொந்தபந்தமெல்லாம் பிரிஞ்சது போதாதா? ஏதாவது சுயபுத்தியோட தான் பண்றியா?" என்று கேட்டார் சிவநாதன்.

"ஏன்மா. அவன் தான் புத்திக்கெட்டு இப்படி பண்ணினான்னா நீயாவது சொல்லி இருக்க கூடாதா?" என்று பார்வதி வித்யுதாவை பார்த்து கேட்க,

"அத்த இது முழுக்க முழுக்க என் ஐடியா தான்" என்று சொன்னவுடன்,

"ஏன்டி. இதனால என்னென்ன பிரச்சினை வரும்னு நினைச்சயா? பெரியவங்க கிட்ட கேட்காம இப்படி பண்ணுனா என்ன அர்த்தம். சின்ன பசங்கன்னு நிருப்பிச்சீட்டீங்க" என்று கத்தினார் ஷர்மிளா.

"நல்ல விசயம் பண்ணி இருக்கீங்க மாப்ள.  இது சரியான முடிவு தான்" என்று சந்திரசேகர் சொல்ல, சிவநாதனும் பார்வதியும் குழப்பமாக பார்த்தார்கள் அவரை.


"உங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சா? எல்லாம் நீங்க கொடுத்த செல்லம்தான். இந்த அளவுக்கு வந்து நிக்குது" என்று தன் கணவரை திட்டினாள் ஷர்மிளா.

"என் பொண்ணு ஏன் இதை செஞ்சான்னு எனக்கு தெரியும். உங்களுக்கு புரியிற மாதிரி இப்ப அவளே சொல்லுவா" என்று தன் மகளிடம் கண்ணை காட்டினார்.

"பெரிய மாமா லவ் மேரேஜ்ல நீங்க பட்டா அவமானமும் கஷ்டமும் போதும். எங்க கல்யாணத்துல அது இருக்கக் கூடாது. அதனாலதான் நான் இப்படி பண்ணேன். பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்து வைப்பேன்னு அன்னைக்கு உங்க பையன் கிட்ட சொன்னேன். இன்னைக்கு பண்ணிட்டேன். இதே மாதிரி எல்லா சொந்தக்காரங்களையும் என் கல்யாணத்துக்கு வர வைக்கிறேன்னு உங்ககிட்ட சொல்றேன் மாமா. ஒரு வாய்ப்பு கொடுங்களேன்" என்று வித்யுதா சொல்ல சந்திரசேகரின் முகத்தில் கர்வம் தோன்றியது.


"அதெல்லாம் கரெக்ட் தான்மா. ஆனா இந்த பத்திரிகை விசயம் எனக்கு தலையே சுத்துது" என்று பார்வதி சொல்ல, "அத்த. அப்போ இன்னைக்கு மதியம் நான் சமைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் சமையலறை சென்றாள் வித்யுதா.


"அப்பா நம்ம வீட்டுல அதிரடியா வந்த விளையாட்டு பொண்ணாகவும், அவ வீட்டுக்கு போன அப்போ அழுத சின்ன பொண்ணாவும் தான் உங்களுக்கு அவள தெரியும். ஆனா அவ எங்க கம்பெனி மார்க்கெட்டிங் டீம் ஹெட்.  சைக்காலஜிகல ஒவ்வொரு ஸ்டெப்பும் எடுத்து வைப்பா. இந்த ஒன்ன மட்டும் எனக்காக சம்மதிங்கப்பா" என்று காலருகே அமர்ந்து கெஞ்சினான் அம்ரீஷ்.


அமைதியாக இருந்த சிவநாதனின் முன்னால் டீயை நீட்டினாள் வித்யுதா. "மாமா அத்த ரெண்டு பேரும் டீயை குடிங்க. அப்புறம் எங்கள திட்டுங்க" என்றாள்.

"என்னம்மா ரெண்டு கப் தான் இருக்கு. எங்களுக்கு எங்க டீ" என்று சந்திரசேகர் கேட்க,
"உங்களுக்கு டீ வச்சு தர எங்க மாமியார் சொல்லல. அதனால நான் வைக்கல" என்றாள்.

"அதுக்குள்ள மாமனார் வீட்டுக்கு டீத்தூள மிச்சம் புடிக்க பாக்கறியா" என்று விளையாட்டாய் சொல்ல அந்த இடத்தின் சூழல் சிரிப்பு நிலைக்கு மாறி இருந்தது.

"இதே சிரிப்பு கல்யாணம் அன்னைக்கு தரேன். நம்புங்க"என்று அவள் சொன்னவுடன் டீயை எடுத்துக்கொண்டார் சிவநாதன்.

எல்லோரும் மகிழ்ச்சியாக உணவருந்தினர் மதியம் வித்யுதாவின் கைபக்குவத்துடன்.

"அடுத்த என்னடி ப்ளான்" என்று கேட்க, "பெரிய மாமாவ வந்திடுவார். அடுத்த அணுகுண்டு அண்ணி வீட்டுல தான். நாளைக்கு காலையில அங்க பத்திரிகையோட இருக்கனும் நீங்க" என்று சொன்னவுடன் பார்வதி அதிர்ந்தார். சிவநாதனோ "அந்த ரசத்தை ஊத்துமா. எங்க அம்மா வச்ச ருசி அப்படியே இருக்கு" என்று சொல்லி அவளின் மீது வைத்திருந்த நம்பிக்கையை அனைவருக்கும் நிருப்பித்தார்.

அடுத்தநாள் காலையில் தன் அக்கா வீட்டின் காலிங்பெல்லை அழுத்தினான் அம்ரீஷ்.வித்யுதா காரில் அமர்ந்திருந்தாள்.

"வா மாப்ள. என்ன திடீர்னு வந்திருக்க" என்று கேட்டார் அவன் அக்காவின் கணவர்.

"சார் லவ் பண்ணி கல்யாணம் பண்ண போறார்ல. அத சொல்லிட்டு நம்மகிட்டயும் சம்மதம் கேட்டுட்டு போலாம்னு வந்திருப்பான். இல்லையாடா தம்பி" என்றாள் அவன் அக்கா.

"இல்ல.  உன்கிட்ட கேட்கனும்னு அவசியம் இல்ல. கல்யாணத்துக்கு வந்து சேரு" என்று பத்திரிகையை எடுத்து நீட்டினான். ஆனால் உள்ளுக்குள் பயம் இருந்தது.

படித்தபோது மீண்டும் அதிர்ச்சி அடைந்தாள். "நீபாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு பத்திரிகை நீட்டுற. என்கிட்ட கேட்காம என் பெயரை எதுக்கு போட்ட" என்று கத்தினாள்.

"நான் வேணாம்னு தான் சொன்னேன். என்னய கட்டிக்க போற லூசு தான் உன் பேர போடனும்னு சொல்லிட்ட. நீ வந்தா அம்மா அப்பா சந்தோஷப்படுவாங்க. அவ்வளவு தான்" என்றான்.


"மாப்ள கல்யாணத்துல டெக்ரேஷன் ஸ்டுடியோ செலவு என்னோடது. உங்க அப்பாகிட்ட மருமகன்னா சந்தோஷமா வரார்னு சொல்லு" என்று சொல்லி அனுப்பி வைத்தார் அவன் அக்கா வீட்டுக்காரர்.

அடுத்து வண்டி நேராக பார்வதியின் தந்தை வீட்டுக்கு சென்றது. பெரியவர்களின் ஆசிகளோடு மகிழ்ச்சியாக அடுத்தடுத்த உறவினர்கள் வீட்டுக்கு சென்றார்கள்.

சில இடங்களில் மகிழ்ச்சியும் பல இடங்களில் அவமரியாதையும் பழிச்சொற்களும் அவமானமும் கிடைத்தது.

ஒவ்வொரு முறையும் அவன் ஒரு வீட்டை விட்டு வரும்போது அவன் முகத்தை வைத்து கண்டுபிடித்துவிடுவாள் வித்யுதா.

அவன் மனம் சோர்வடையும் போதெல்லாம் அவனை சொற்களால் தேற்றி உத்வேகம் கொடுத்து வந்தாள்.

எல்லாம் தெரிந்து சிவநாதனும் அமைதி காத்தார். பார்வதிக்கு மட்டும் பயம் நெஞ்சினில் ஆட்கொண்டது.

ஷர்மிளாவின் நிலைமையும் அதே தான். அவ்வப்போது இருவரும் போன் செய்து மாறிமாறி புலம்பிக் கொண்டே நாட்களை நகர்த்தினார்கள்.

சந்திரசேகர் கல்யாண வேலைகளை கவனித்து வந்தார்.

திருமணம் நாளும் வந்தது. காலை முகூர்த்தம் 9-10.30 குறிக்கப்பட்டு இருந்தது. மூத்தமகனான விஷ்வா காலை‌ 5.30க்கு வந்து சேர்ந்தான். மகள் நந்திதாவும் அவள் கணவர் விக்னேஷூம் முதல்நாள் மாலையே வந்திருந்தனர்.


"அம்மா உன் பேரன்‌ பண்ணி இருக்கறதா பாத்தீயா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு" என்று தன் தாயிடம் புலம்பினாள் பார்வதி.

வித்யுதா மற்றும் அம்ரீஷின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. இருவருக்குள்ளும் இருந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஆனால் அன்று வரை தைரியமாக இருந்த சிவநாதனுக்கும் காலையில் மனத்தில் அச்சம் தொற்றிக்கொண்டது.

"மாமா எங்கள மன்னிச்சிடுங்க. எங்களால நேர்ல வந்து அழைக்க முடியல" என்று தன் மாமனாரிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார் சிவநாதன்.


"மாப்ள நடந்த எல்லாத்தையும் பேரன் சொன்னான். நீங்க வந்து அழைச்சிருந்தா கூட இந்த அளவுக்கு சந்தோஷம் இருந்திருக்காது. மனசுக்குள்ள சந்தோஷமா இருக்கு மாப்ள. தைரியமா இருங்க" என்று தேற்றினார்.


ஐயர் அக்னி வளர்த்து மந்திரங்கள் சொல்ல ஆரம்பித்தார். சொந்த பந்தங்கள் சிலர் நேரமே வந்திருந்தனர். சிலர் சிரித்த முகத்துடன் வந்துகொண்டிருந்தனர்.

"பொண்ணு மாப்பிள்ளய அழைச்சிட்டு வாங்க" என்று ஐயர் சொல்ல வெள்ளைத்துணி போர்த்திய பலகையின் மீது இருவரையும் அமர வைத்தார். பார்வதியின் இதயம் அதிவேகமாக துடித்து கொண்டிருந்தது.

பலரும் அவர்கள் பார்த்து கொண்டு இருக்க அம்ரீஷ் பெருமை கொண்டான்.விஷ்வா தலைகுனிந்து பொறாமை கொண்ட வருத்தத்துடன் இருந்தான்.

மந்திரங்கள் ஓதிமுடித்துவிட்டு நந்திதாவையும் மகள் உறவுகொண்ட இன்னொரு பெண்ணையும் அழைத்து சல்லடையை அவர்களின் தலைக்கு மேலே உயர்த்தி பிடிக்கச்சொல்லி மூத்த மகனை வரச்சொல்லுங்க என்று சொன்னவுடன் ஒரு ஆடிப்போனான்.

சிவநாதனின் கண் அசைவில் அவனுக்கு அழைப்பு கொடுத்தார்.

அம்ரீஷ் இறங்கி சென்று அவன் கையை பிடித்து இழுத்து வந்தான் மணமேடைக்கு. ஐயர் அவன் கையில் கலசகுடத்தை திணித்து "ஊத்துங்க. அவர் தண்ணி ஊத்தும் போது ரெண்டு தலையிலயும் விழுற மாதிரி சல்லடைய மாத்தனும்" என்று சொன்னார்.

பல வருடங்களாக பேச்சு வார்த்தை இல்லாமலும், நீ என் பிள்ளை இல்லை செத்துட்டேன்னு நினைச்சுக்கிறேன் என்றும், ஊரார் முன் ஏற்படுத்திய அவமானத்தையும், அன்பிற்காக ஏங்கிய அவன் இதயமும் கண்ணீருடன் கலந்து கலச நீரை தன் தாய் தந்தை மீது ஊற்றியது.


(எல்லோரும் என்ன பாக்கறீங்க. காதலிச்சது கல்யாணம் பேசனது எல்லாம் அம்ரீஷ் வித்யதாக்கு தான். ஆனா பாருங்க கல்யாணமும் அதுக்கு பத்திரிகை அடிச்சதும் நம்ம சிவநாதன் பார்வதி அறுபதாம் கல்யாணத்துக்கு தான்)

தாய் தந்தையின் அறுபதாம் கல்யாணத்துக்கு மூத்த மகனின் நீர் ஊற்றும் முறை முடிந்து அம்ரீஷ் நந்திதா பார்வதியின் தாய் தந்தை என பல உறவுகள் நீரை ஊற்றினார்கள்.

அந்த நேரத்தில் பார்வதியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.ஆனால் கலசநீர் அதை மறைத்துவிட்டது. அதுவரை அவரின் மனதில் இருந்த பயமும் கவலையும் பறந்தே போனது.

வித்யுதா நீர் ஊற்றும் போது பார்வதி அவளுக்கு கண்களாலேயே நன்றி சொன்னாள், சிவநாதனும் கூட.


நீர் ஊற்றி முடித்த பின்னர் மணப்பெண் மாப்பிள்ளை அலங்காரம் முடிந்து இருவரும் மணமேடையில் அமர வைத்தார்கள்.

மத்தளமும் நாதஸ்வரமும் இசைக்க பலரின் கிண்டல் பேச்சுக்களும் மணமக்களை சீண்டியது.

மணப்பெண் தோழிகளாக தன் மகளும் மருமகளும் சம்மந்திகளும் பார்வதியின் அருகே இருக்க மணமகன் அருகே மகன்களும் சம்மந்திகளும் சிரித்துக்கொண்டு இருந்தார்கள்.

இத்தனை வருடங்கள் வாழ்ந்திருந்தாலும் 55 வயதானாலும் பார்வதியின் வெட்கம் மட்டும் மறையவே இல்லை. அவளின் வெட்கத்தை கண்ட சிவநாதனும் வெட்கப்ட்டார்.

"அண்ணி அன்னைக்கு கல்யாணம் ஆகும்போது நாத்தனார் முடிச்சு நான் தான் போட்டேன். இன்னைக்கும் நான் தான் போடுவேன்" என்று சிவநாதன் தங்கை சொல்ல, "அதெல்லாம் முடியாது. என் பொண்டாட்டிக்கு மூனு முடிச்சும் நான் தான் போடுவேன்" என்று சத்தமாக சொன்னார்.

"சம்மந்தி விட்டா இப்பவே தாலி எடுத்து கட்டீடுவீங்க போல. அந்த அளவுக்கு அவசரமா. இது 60ம் கல்யாணம் தான். உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு" என்று நந்திதாவின் மாமனார் சொன்னார்.

"நேத்து வரைக்கும் பயந்துட்டு இருந்த எங்க மாமியார் இப்ப எப்படி வெட்கப்படுறாங்கனு பாருங்க" என்று வித்யுதா வெடியை கொழுத்திபோட சரவெடியாக பேச்சுக்கள் மேலும் மகிழ்ச்சியை கொடுத்தது.

திருமணத்திற்கு வரமாட்டோம் என்று சொன்ன அத்தனை உறவுகளுமே வந்து சேர்ந்தனர். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. வித்யுதாவை தவிர.

மூத்த மருமகளை அழைத்து அட்சதை தட்டை அனைவரிடமும் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கி வர சொன்னார். வீட்டுக்கே வேண்டாம் என்று சொன்ன உறவு தாலியை எடுத்துக்கொண்டு ஒவ்வொருவரிடமும் சென்று வந்தது.

கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று ஐயர் மங்கல வாத்தியங்கள் இசைக்க வயதில் மூத்த தம்பதிகளான பார்வதியின் தாய் தந்தை மாங்கல்யம் எடுத்து தர "மாங்கல்யம் தந்துநானே" என்று மந்திரங்கள் சொல்ல தன் மகன் மகள் பேரன் பேத்தி சம்மந்தி மற்றும் பிரிந்து சென்ற உறவுகளுக்கு முன்னிலையில் மாங்கல்யத்தை தன் மனைவி இரண்டாவது முறை தன் வாழ்நாளில் கட்டுகிறார் சிவநாதன்.


ஊரை வந்து அட்சதை தூவி வாழ்த்திய திருமணத்தில் பெற்ற மகிழ்ச்சியைவிட இந்நாளில் தன் கணவர் தனக்கு கட்டு மாங்கல்யத்தை பார்த்து கண்கலங்கி போனார் பார்வதி.

யாருக்கும் முடிச்சிடும் அதிகாரத்தை கொடுக்காமல் தன் மனைவிக்கு தானே முதல்முறையாக மூன்று முடிச்சிட்டார் சிவநாதன்.

வெட்கத்திலும் மகிழ்ச்சியிலும் சிறகுகொண்ட பறவையாய் இருவரும் பறந்தார்கள்.

ஊராரும் சொந்தபந்தமும் அட்சதையை தூவி தங்கள் சந்தோஷங்களை வெளிப்படுத்தினார்கள்.

பேரனும் பேத்தியும் தலையில் அட்சதை தூவ இருவரையும் அனைத்து கன்னத்தில் முத்தமிட்டார்கள் சிவநாதனும் பார்வதியும்.

மூத்த மகன், மகள் குடும்பத்துடன் ஆசிர்வாதம் வாங்கி சென்றவுடன், "சிவநாதன் உங்க ரெண்டாவது பையனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையில" என்று ஐயர் கேட்க, "கல்யாணம் ஆகலங்க.ஆனா மருமக எங்க வீட்டுக்கு வந்துட்டா" என்று சிவநாதன் சொல்ல சிரித்துக்கொண்டே வித்யுதாவும் அம்ரீஷூம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்.

வித்யுதா எழுந்தவுடன் அவளை அனைத்து கண்ணீர் மல்க "நீ சொன்ன மாதிரியே செஞ்சுடம்மா.ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதைவிட இன்னொரு தடவ அவரு கையால தாலி கட்டிக்கிட்டது அவ்வளவு சந்தோஷம்.நன்றிடா" என்று சொல்லி அவளுக்கு முத்தமொன்றை பரிசளித்தார் பார்வதி.


உறவுகள் ஆசி வாங்கவும் சில உறவுகள் ஆசி கொடுத்தும் பிரிந்தது போதுமென்று திருமணத்தில் இணைந்தனர்.

சின்ன பையன் என்று எல்லோரும் நினைத்த வேளையில் யாரும் நினைக்காத ஒரு விசயத்தை செய்து காட்டி தன் ஆளுமையை நிரூபித்தான் அம்ரீஷ்.


அதே தினத்தில் அனைத்து உறவினர்களின் மத்தியில் சிவநாதனும் பார்வதியும் சந்திரசேகர் ஷர்மிளாவிடம் நிச்சயதார்த்தம் தட்டு மாற்றினார்கள்.


திருமணதேதியும் குறித்தார்கள். அனைத்து பொறுப்புகளும் விஷ்வாவிடம் கொடுக்கப்பட்டது.


பெற்றவர்களுக்கு அறுபதாம் கல்யாணம் செய்து அழகு பார்க்கும் பிள்ளைகள் கிடைப்பதும், பேரபிள்ளைகள் எடுத்த பின்னும் திருமணம் செய்வது வரம்.

திருமணத்திற்கு வந்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி...

முற்றும்...
FB_IMG_1598148218923.jpg
You do not have the required permissions to view the files attached to this post.



Post Reply

Return to “மாங்கல்யம் தந்துனானே”