தாய்மையிலும் விஷமுண்டு 5

Post Reply
User avatar
Madhumathi Bharath
Site Admin
Posts: 124
Joined: Mon May 11, 2020 9:11 am
Location: Tamilnadu
Has thanked: 117 times
Been thanked: 31 times

தாய்மையிலும் விஷமுண்டு 5

Post by Madhumathi Bharath »

அன்று மதுபாலனுக்கும் அனுவிற்கும் கல்யாணம் முடிந்து, பொண்ணு மாப்பிள்ளையோடு காவ்யாவும் ரத்தினமும், பொண்ணோட அப்பா, அம்மா இவங்க மட்டும் வந்தார்கள்.
மங்களம் தான் இந்த ஏற்பாடைச் செய்தார். யாருக்கும் தெரியக்கூடாது என்று, மங்களமும் அவருடைய கணவரும், பேரக் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு, காவியா ரத்தினத்தோடு மதுபாலனை அனுப்பி விட்டார்கள்.
கல்யாணம் முடிந்து வந்தவங்களுக்கு சந்தோஷத்தோடு காவியா ஆரத்தி கரைத்து சுத்தி உள்ளே அழைத்துப்போனாள்.
மதுபாலன் தன் அறைக்குச் சென்று விட, அனு அவ அம்மாவோடு அமர்ந்து கொண்டாள். காவ்யாவும் மங்களமும் ஓடி ஓடி வேலை செய்தார்கள்.
காலை டிபன் ரெடி பண்ணி எல்லாருக்கும் பரிமாருவதற்குள் அவர்கள் இருவருக்கும் இடுப்பு கலண்டுவிட்டது. இதில் பக்கத்து வீட்டிலிருந்த சுஹாசினியும் கவிதாவும் வந்தார்கள்.
"மதுபாலன்" என்று கத்தி கூப்பிட, அவனை வெளியில் விடாமல் மங்களம், "அவன் வரமாட்டான் என்கிட்டயே சொல்லு" என்று நின்றாள். அவளை முறைத்த சுஹாசினி, "உங்க கிட்ட பேசவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, எங்க பேசனுமோ அங்க பேசிக்கறோம். இனி எங்க வயலை உங்களுக்கு விடமுடியாது, இந்த போக அறுவடை முடித்துவிட்டு நீங்க வேற தோட்டம் பார்த்துக்குங்க" என்றாள்.
" அதை நீ சொல்லாத உன்கிட்ட கேட்டு காட்ட நாங்க குத்தகைக்கு எடுக்கலை, சாரதா அம்மா சொல்லட்டும்" என்று சொல்லும் போது வந்த சாரதா, "இதில் நான் சொல்வதற்க்கு என்ன இருக்கு மங்களம், என் மருமகள் பேச்சை என்னால மீற முடியாது.
அவ சொன்னது சொன்னதுதான்" என்று சொல்லி விட்டு. வாங்க போகலாம் இது அவங்க குடும்ப விஷயம், நமக்கு என்ன வந்துச்சு" என்று சொல்லி அழைத்துச்சென்று விட்டார்.
மங்களத்திற்கு இனி தோட்டம் இல்லை என்றானதும் கொஞ்சம் பயம் வந்திருந்தது. இனி என்ன பண்ணுவது, அந்த வயலில் நமக்கு நல்ல லாபம் வந்ததே, அதுவும் இந்த ஊரில் இவங்க மட்டும் தான் குறைவா குத்தகை வாங்குவாங்க, என்று மனம் சஞ்சலம் அடைந்தது.
அப்போது மதுபாலன் ரெடியாகி வந்து, "நான் வேலைக்குப் போய்ட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்.
நேராக மலர்விழிக்கும் தனக்குமான வீட்டிற்கு சென்றவன், "மலர் இன்று நான் கடைக்கு போகல, லீவு சொல்லிட்டேன் எனக்கு மனசு சரியில்ல, நாம எங்காவது சினிமா கோயிலுக்கு போயிட்டு வருவோம்" என்றான்.
"கோயிலுக்கு போகலாம்ங்க" என்றாள். "சரி வா கோயிலுக்கு போயிட்டு அப்படியே சினிமாவுக்கும் போயிட்டு வருவோம்" என்று அழைத்துச் சென்றான்.
வாழ்க்கையில் இதை எல்லாம் முதல் முறையாக அனுபவிக்கும் அவளுக்கு, மனமெல்லாம் பூரித்துப் போக, கணவனின் கையை லேசாக தயக்கத்துடன் பிடித்துக்கொண்டாள்.
அவள் தயக்கத்தை உணர்ந்தவன், அவள் கையுடன் தன் கையை கோர்த்துக் கொண்டான். இருவரும் கோவிலுக்கு போய் சாமி தரிசனம் பண்ணினார்கள்.
அங்கேயே கொஞ்ச நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். "மலர் கல்யாணம் ஆனதிலிருந்து நீ உங்க அம்மா வீட்டுக்கு போனதில்லை, போய் இரண்டு நாள் இருந்துட்டு வரையா?" என்றான் மதுபாலன்.
அவளுக்கும் அம்மாவையும் தங்கச்சியையும் பார்க்கனும் போல இருக்கவே, சரி என்றாள். "சரி வா நாம சினிமாவிற்கு அடுத்த வாரம் போகலாம், இப்ப கடைக்கு போகலாம்" என்று கூட்டிபோனவன், அவளுடைய தங்கச்சிக்கும் அம்மாவுக்கும் துணி ஸவீட் காரம் எல்லாம் வாங்கினான்.
"இன்னும் உன் தங்கச்சிக்கு எதாவது வேணுமா?" என்றான். தயக்கத்துடன், "அவளுக்கு கொழுசு ரொம்ப பிடிக்கும்" என்றாள். "சரி வா" என்று அழைத்துச் சென்றவன், அவளுடைய தங்கைக்கு கொழுசும், மனைவிக்கு தோடு, கொழுசு, மோதிரம், கழுத்துக்குச் செயின் எல்லாம் வாங்கினான்.
"இதெல்லாம் வேண்டாங்க நான் போட்டதே இல்லை, எனக்கு கவரிங்கே போதும்" என்று பதட்டமானவளை, சமாதானப்படுத்தியவன் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.
"மலர் இதெல்லாம் நான் முன்னயே வாங்கித்தந்திருக்கனும், சரி போவுது உனக்கு, வீட்டுக்கு எந்த செலவும் வைக்காம கவிதா சிஸ்டரும் சஹாசினி சிஸ்டரும் செஞ்சுட்டாங்க. என்கிட்ட இருக்கற காசுக்கு இதை எல்லாம் வாங்கிட்டேன், அட்வான்ஸ் வாங்குன பணம் தான்.
சம்பளத்தில் படுச்சுக்குவாங்க" என்று மனைவியிடம் சொல்லிக்கொண்டே, எல்லாம் எடுத்து போட்டு விட்டான்.
புது மணப்பெண் போலச் ஜொலித்தாள். இந்த நகை எல்லாம் போட்டதில், அவளுக்கு கூச்சம் வந்து கண்ணமெல்லாம் சிவந்து போனது.
"இதையெல்லாம் எங்க அம்மா பார்த்தாங்கன்னா ரொம்ப சந்தோஷ படுவாங்க" என்றாள். மனமெல்லாம் சந்தோஷத்தில் திளைத்திருக்க கணவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
இரவு எட்டு மணி ஆனதும், "சரி நான் வீட்டுக்கு கிளம்புறேன் பத்திரமா இரு, இன்னும் கொஞ்ச நாள் தான் எல்லாம் சரியாப் போகும்" என்றான். சரி என்று தலையாட்டியவள், அழுதுகொண்டே வழியனுப்பி வைத்தாள்.
தன் வீட்டை நோக்கி பயணமானான் மதுபாலன். அங்கே இவன் அறையில் அனு படுத்திருந்தாள். அவனுடைய அம்மா சமையல் செய்து கொண்டிருந்தாள்.
மதுபாலன் போனதும், "அம்மா பசிக்குது சாப்பாடு ரெடியா?" என்றான். "இப்பதான் செய்துட்டிருக்கேன்" என்று குரல் கொடுத்தவர், முனகிக்கொண்டே சமையலை முடித்தாள் மங்களம்.
மகனுக்கு பரிமாற வரவும், "நீங்க இருங்க அத்தை என் புருஷனுக்கு நான் பரிமாறிக்குவேன். நீங்க வேற வேலை இருந்தால் பாருங்க" என்று சொன்னவள், அவளுக்கும் கணவனுக்கும் போட்டுக் கொண்டு அமர்ந்தாள்
அதேநேரம் காவியா சாப்பிட வர, "அக்கா நீங்க கொஞ்ச நேரம் கழிச்சு வாங்க, நானும் அவரும் சாப்பிடுறோம்" என்றாள் வெடுக்கென்று.
"நீ சாப்பிட வேண்டியது தானே உன்னை நான் என்ன பண்ணினேன்" என்றாள் காவியா.
" நீங்க வந்தா எங்களுக்கு டிஸ்டர்பா இருக்கு, நாங்க தனியா பேசிட்டு சாப்பிடுவோம். கொஞ்ச நேரம் நீங்களும் உங்க அம்மாவும் வெளியிலிருங்க, நாங்க சாப்பிட்டதும் வந்து சாப்பிடுவீங்களாம்" என்றாள் அனு.
"மது என்ன அமைதியா இருக்கிற, என்று கோபமாக கத்தினார் மங்களம். "அம்மா ப்ளீஸ் தயவுசெய்து போங்க" என்றான் தயவு தாட்சண்யம் பார்க்காமல்,
தாயும் மகளும் எதுவும் பேச முடியாமல் வெளியில் வந்தவர்கள், "ஏண்டி நீ தான் உங்க சொந்தக்கார பொண்ணு நல்ல பொண்ணுன்னு சொன்ன, கட்டி கொடுத்த முதல் நாளே இப்படி எல்லாம் பண்றா, இனி நம்ம நிலைமை என்ன" என்றாள் பயத்துடன் மங்களம்.
"அம்மா நான் இவளைப் பார்த்திருக்கேன்னு தான் சொன்னேன், இவ குணம் இப்படி இருக்குமுன்னு எனக்கு எப்படி தெரியும்" என்றாள் காவியா எரிச்சலுடன்.
"நம்ம மது நான் என்ன சொன்னாலும் தலையாட்டுவான், வாயே திறக்கமாட்டான். இப்ப பாரு நானும் அவ முன்னாடி பேசக் கூடாதுன்னு வந்துட்டேன், முதல் நாளே இப்படின்னா இது சரிவராது" என்றாள் மங்களம்.
"முதலிலேயே வாலை ஓட்ட நறுக்கி வைத்தால் தான், மலர் மாதிரி கம்முனு அடங்கி கிடப்பா, முதல்ல அவ கழுத்துல போட்ட நகைகளை எல்லாம் வாங்குங்க" என்றாள் காவ்யா.
மதுபாலனும் அனுவும் ஒருவருக்கொருவர் பேசிக் சிரித்துக்கொண்டே இரவு உணவை முடித்துவிட்டு, அவர்களுடைய அறைக்கு சென்று விட்டார்கள்.
அவர்கள் இருவரும் அறைக்குள் போவதை வெறுப்புடன் பார்த்துக்கொண்டே, இவர்களும் சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றார்கள்.
அடுத்த நாள் காலையில் எழுந்ததும் மதுபாலனும் அனுவும் பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரும் அன்னியோன்யமாக பேசிக் கொள்வதும், சிரித்துக் கொள்வதும் மற்றவர்களுக்கு கடுப்பை கிளப்பியது.
மலர் வந்ததிலிருந்து எந்த வேலை செய்யாமல் இருந்த மங்களத்தாள், இப்பொழுது தொடர்ந்து வேலை செய்ய முடியவில்லை. அதனால் சமைக்காமல் படுத்துக்கொண்டார்.
காலை ஆபீசுக்கு ரெடியாகி வந்த மதுபாலன், "ஏன் அம்மா சமையல் செய்யலையா?" என்றான். "எனக்கு உடம்பு சரியில்ல டா உன் பொண்டாட்டிய செய்யச் சொல்லு" என்றார் மங்களம்.
அவன் வாயைத் திறப்பதற்குள், "அதெல்லாம் என்னால செய்ய முடியாது, உங்க பொண்ண வந்து செய்யச் சொல்லுங்க" என்றாள் அனு.
உடனே காவியா, "நான் ஏன் செய்யணும் நீ செய் உனக்குத்தான் அந்தக் கடமை இருக்குது" என்றாள். "அப்படியா நீங்கள் சொல்வது சரிதான், எனக்குத்தான் சமையல் செய்யும் கடமை இருக்கு. நீங்க உங்க வீட்டுக்கு கிளம்பறீங்களா?" என்றாள் அனு.
எல்லாரும் அதிர்ந்து போயிருக்க, காவ்யா "என்ன சொன்ன, இது எங்க அம்மா வீடு நான் இருப்பேன், நீ யாருடீ அதைச் சொல்றதுக்கு" என்று பொங்கிக் கொண்டு வந்தாள் காவியா.
" இந்த பாருங்க இவ்வளவு நாள் அப்படி இருந்திருக்கலாம். இனி இது என் வீடு, என் புருஷனுடைய சம்பளம், சும்மா தண்டச்சோறு எல்லாம் எல்லாருக்கும் போட முடியாது. உங்களுக்கு புருஷன் மாமனார் மாமியார் எல்லாம் இருக்காங்க இல்ல, அங்க போய் உங்க அதிகாரத்தை பண்ணுங்க, உங்களுக்கு சப்போர்ட்டுக்கு உங்க அம்மா வந்தால், அவங்களையும் கூட்டிட்டு போங்க நான் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்" என்றாள்.
மங்களம் வாயே திறக்கவில்லை. முகம் முழுவதும் அதிர்ச்சி நிரம்பியிருந்தது. காவியாவும் வாய் பேசமுடியாமல், இவளை கட்டிட்டு வந்து எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம்.
இதுவே மலராய் இருந்தால் நம்ம காலுக்கு கீழ கிடைப்பாளே, நாம எவ்வளவு நாள் வேணாலும் நம்ம அம்மா வீட்டில் இருக்கலாமே, என்று காலம் கடந்து ஞானோதயம் வந்தது.
" என்ன யோசனை பண்றீங்க உங்க யோசனை எல்லாம் உங்க வீட்ல வையுங்க, இப்ப நீங்க கிளம்பலாம்" என்ன என்று பிடிவாதமாக நின்றாள் அனு.
"அது வந்து அது வந்து" என்று காவ்யா தடுமாற, "இங்க பாருங்க உங்க தங்கச்சி இப்பவே இங்கிருந்து போகணும், இல்லனா நான் எங்கம்மா வீட்டுக்கு போயிடுவேன்" என்றாள்.
" நீ ஏன் அனு உங்க அம்மா வீட்டுக்கு போற, காவ்யா போயிருவா என்று மனைவியின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு, சமாதானப் படுத்தினான் மதுபாலன்.
"இல்லை அண்ணா அங்கெல்லாம் போகமாட்டேன், இங்கதான் இருப்பேன்" என்று பிடிவாதம் பிடித்தாள் காவ்யா. "சரி இருங்க நான் என்ன வேலை சொன்னாலும் நீங்க அதைச் செய்யனும்" என்றாள் அனு.
வேறு வழியில்லாமல் தலையசைத்தவள், குழந்தையை அம்மாவிடம் கொடுத்து விட்டு சமையல் செய்யச் சென்றாள். அடுத்து இரண்டு மூன்று நாளில் அவளை ஓட ஓட விரட்டினாள் அனு.
காவ்யா தன் கணவனுக்கு போன் பண்ணி தன் நிலமையைச் சொல்லவும், அடுத்த நாள் வந்தவன் இங்கே நடப்பதை எல்லாம் பார்த்து விட்டு, அனுவின் அம்மாவிற்கு போன் பண்ணி வரவழைத்தான்.
அனுவின் அம்மா வந்ததும், "சுமதிக்கா ஏதோ நாம ஒன்னுககுள்ள ஒன்னுன்னு நினைச்சுதான் உங்க பொண்ண என் மச்சினனுக்கு கட்டி வைத்தேன். அவ வந்த ரெண்டு மூனு நாள்ளயே யாரையும் கொஞ்சம் கூட மதிக்கறதில்லை" என்றான் ரத்தினம்.

" அப்படியா தம்பி" என்றவள், "அனு விருந்தாளியாக ரெண்டு நாளைக்கு வந்துட்டு போறவங்களை, நல்ல முறையா பார்த்து அனுப்ப மாட்டயா?" என்றாள் சுமதி.
அதில் ரத்தினமும் அதிர்ந்து மனைவியை பார்க்க, அவளோ எல்லும் கொள்ளும் வெடிக்க நின்றாள். "அக்கா இது என் மாமியார் வீடு இங்கே தான் என் பொண்டாட்டி இருப்பா, நீங்க விருந்தாளியா வந்தோம்ன்னு சொல்றீங்க" என்றான் ரத்தினம்.
" என்னது இங்கே இருப்பாளா?, ஏன் அவளுக்கு வீடு வாசல் இல்லையா? இவளை எல்லாம் வீட்ல வெச்சிருந்தா என் பொண்ணு இருக்கவே, அண்ணுக்கு இன்னொரு பொண்ணு பார்த்து கட்டி வெச்சாலும் வெப்பா, அந்த பொண்ணுக்கு கேக்கறக்கு ஆளில்லை, என் பொண்ணுக்கு அப்படியா? எல்லாச் சொத்தும் உங்களுக்கு தான் மாப்பிள்ளை" என்று மூக்கை சிந்தவும்,
" அத்தை நீங்க கவலைப்படாதீங்க அவ கிளம்பிருவா?" என்றான் மதுபாலன். அடுத்த இரண்டு நாள் அனுவும்அவளுடைய அம்மாவும் கொடுத்த டார்ச்சரில் காவியா, "அம்மா நான் எங்க வீட்டுக்கு போறேன்" என்று பெட்டி படுக்கையோடு கிளம்பி விட்டாள்.
மங்களம் அவள் சென்ற இரண்டு நாளில், வேலை செய்து ஓய்ந்து போனார். ஒரு நிமிஷம் நிக்க விடுவதில்லை, எனக்கு ஜூஸ் வேண்டும் அது வேண்டும் இது வேண்டும் என்று, அவரை தொடர்ந்து டார்ச்சர் பண்ணி கொண்டு இருந்தாள் அனு.
அன்று இரவு மதுபாலன் வந்ததும், "இங்க பாருடா உன் பொண்டாட்டி பண்றது எதுவும் சரி இல்லை. என்னால வயசான காலத்துல வேலை செய்ய முடியல. அவள வேலை செய்யச் சொல்லு, இனி நான் வீட்டு வேலை செய்யமாட்டேன்" என்றார் மங்களம்.
" அம்மா அதெல்லாம் நான் கேட்க மாட்டேன், அது நீங்களாச்சு உங்க மருமகளாச்சு உங்க பேச்சை கேட்டு நான் அவளை ஏதாவது சொல்ல, அவ பாட்டுக்கு அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டா, நான் பொண்டாட்டிக்கு என்ன பண்ணுவேன்.
ஏதோ மலர் இருந்தாள் பரவாயில்லை. அவளையும் சேர்ந்து விரட்டி விட்டுட்டீங்க, நான் தனிக்குடித்தனம் கொண்டுபோய் வைக்கலாம்னு போனதும், உங்க அம்மா பேச்சைக் கேட்டுத்தானே என்ன தனியா வைக்கிறீங்கன்னு, எங்கிட்ட சண்டை போட்டு விட்டு போய் விட்டாள்.
நான் அவளை எங்கே போய் தேடுவது, இருக்கிற பொண்டாட்டி ஒழுங்கா வெச்சு வாழறேன், உங்க விஷயத்துல நான் இனி தலையிடமாட்டேன்.
மலர் எத்தனை வேலை செஞ்சு இருபபா, நீங்களும் காவ்யாவும் மனசாட்ச்சி இல்லாம எத்தனை வேலை வாங்கி இருப்பீங்க, அப்போ நான் எதாவது கேட்டனா? இல்லையே உங்களோடு சேர்ந்து உங்க இஷ்டத்துக்கு ஆடினேன்.
அந்த சாபம் தான் உங்களுக்கு அனு ரூபத்துல வந்திருக்கு, என்னமோ பண்ணுங்க என்னை விட்டுடுங்க என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டான்.
உள்ளே இருந்து வெளியில் வந்த அனு, "என் புருஷன் கிட்ட என்ன பேசினீங்க, இனிமே அவரு கிட்ட நீங்க பேசுற வேலை வச்சுக்க கூடாது. சமையல் செய்து விட்டு உங்க ரூம்ல போய் முடங்கி இருக்கணும். இங்க இருக்க முடியலைனா உங்க பொண்ணு கூட வேணாலும் போங்க" என்றாள்.
மங்களத்தாள் வாய் திறக்க முடியவில்லை. கண்ணில் கண்ணீர் வர தன் அறைக்குச் சென்றார். அதை குரூர புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அனு.



Post Reply

Return to “தாய்மையிலும் விஷமுண்டு”