Page 1 of 1

சதிராடும் திமிரே 3 teaser tamil novels

Posted: Thu Dec 01, 2022 6:42 am
by Madhumathi Bharath
சதிராடும் திமிரே (காதல் கதகளி பார்ட் 2 ) அடுத்த எபியில் இருந்து.

"வேலைனா.. என்ன வேலை ஆன்ட்டி... பாத்திரம் விளக்கி.. துணி துவைச்சு... வீடு பெருக்கிறதா? அச்சச்சோ! பாவம் ஆன்ட்டி நீங்க... எங்க வீட்டில் இந்த வேலைக்கு எல்லாம் ஆட்கள் இருக்காங்க... எங்க அம்மா வெறுமனே சூப்பர்வைஸ் தான் செய்வாங்க... ஆனாலும் எங்க டாடிக்கு மம்மி மேல அன்பு அதிகம்” என்று ஒரு அம்பை எய்தவள் துரைசாமியை ஒரு நமுட்டு சிரிப்புடன் பார்க்க... துரைசாமிக்கோ பக்கென்று ஆனது.

மேகலா எதுவுமே சொல்லாமல் அமைதியான முகத்துடன் துரைசாமியை ஒரு பார்வை பார்த்தார். மேகலாவின் முகத்தில் ஒரு துளி சலனம் இல்லை... கோபம் இல்லை..பரிதவிப்பு இல்லை... ஆழ்ந்த அமைதி இருந்தது. அந்த அமைதியின் பின்னால் இருக்கும் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தார் துரைசாமி.

அவர்கள் வீட்டில் வெளி வேலைகளுக்கு எத்தனையோ ஆட்கள் இருந்தாலும் வீட்டு நிர்வாகம் முழுக்க மேகலாவின் பொறுப்பு தான். பகல் பொழுதுகளில் அவர் ஐந்து நிமிடம் ஓய்வாக அமர்ந்து துரைசாமி பார்த்ததே இல்லை. பம்பரமாக சுழன்று கொண்டிருப்பார். இதுநாள் வரை தன்னுடைய சோகத்தில் மூழ்கி இருந்த மேகலாவும் அதை ஒரு விஷயமாக எண்ணி கவலை அடைந்தது இல்லை.
துரைசாமி எல்லா வேலைகளையும் மேகலாவையே செய்ய வைத்ததற்கு காரணம் அவரது சிந்தனை பரதத்தின் அருகில் கூட செல்லக்கூடாது என்பதற்காகத் தான். மேகலா எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதை பார்த்தாலும் ஒருநாள் கூட மனமிரங்கி வந்து மேகலாவிடம் பேசியது இல்லை.

‘இந்தளவுக்கு அவள் வீம்பா இருக்கிறாள்னா என்ன அர்த்தம்? இப்பவும் அவளுக்கு என்னை விட பரதம் தான் பெரிய விஷயமா தோணுது இல்லையா? கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னரும் கூட அவளுக்கு என் மேல் இருக்கும் கோபம் தீரவில்லையே... எனக்கு பரதம் வேண்டாம்.. நீங்க தான் வேணும்னு சொல்ல இவளுக்கு மனசு வரலையே... அந்த நினைப்பு இவளுக்கு வரணும்..வந்தே ஆகணும்.
பொம்பளை இவளுக்கே இத்தனை வீம்பு இருந்தா.. ஆம்பிளை எனக்கு எவ்வளவு வீம்பு இருக்கும்? இவளா என்னைத் தேடி வந்து என் காலில் விழணும்... என்கிட்டே அவ தோற்றுப் போனதை ஒத்துக்கணும். அதுவரைக்கும் அவளுக்காக நான் ஒரு துரும்பைக் கூட நகர்த்த மாட்டேன்.’ என்று நினைத்துக் கொண்டு இருந்தவருக்கு இப்பொழுது அஞ்சலியின் கேள்வியும், அதற்கு மேகலாவின் முக பாவனையும் வயிற்றில் புளியை கரைக்கத் தொடங்கியது.

தந்தையின் பரிதாபமான நிலையைக் கண்டு அவருக்கு உதவுதற்காக முன் வந்தான் சத்யன்.

“எல்லார் வீடும் ஒரே மாதிரி இருக்குமாங்க... உங்க வீட்டில் எல்லா வேலைக்கும் ஆட்கள் இருந்தாலும் உங்க அம்மாவால ஒரு நிமிஷமாவது ஓய்வா உட்கார முடிஞ்சு இருக்கா? எங்க அப்பாவுக்கு அம்மான்னா ரொம்ப இஷ்டம். அவர் என்ன பணத்தை மிச்சம் பிடிக்கவா வேலைக்கு ஆட்களை வைக்கலை... அம்மாவுக்கு இதெல்லாம் தானே செஞ்சா தான் நிம்மதி. அதனால அவரும் அவங்க விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து அமைதியா இருந்துட்டார். இப்பக்கூட அம்மா ஒரு வார்த்தை சொன்னா போதும்... எல்லா வேலைக்கும் அப்பா உடனே ஆள் போட்டுடுவார். அந்த அளவுக்கு அவருக்கு அம்மான்னா உயிர்”

“ம்ம்ம்... செம சூப்பர்... உங்க அப்பாவுக்கு அந்த அளவுக்கு மனைவி மேல பிரியமா? அவங்க விருப்பத்துக்கு குறுக்கே நிற்காமல் அவங்க ஆசைப்பட்டதை எல்லாம் நிறைவேற்றும் கணவன் கிடைப்பது வரம் தான் இல்லையா? ஆன்ட்டி ரொம்ப கொடுத்து வச்சவங்க”என்றவளின் கண்கள் பேசிய பாஷையில் துரைசாமியின் தலை தானாகவே கீழே தாழ்ந்தது.

“அஞ்சலி நீ இன்னும் சாப்பிடவே இல்லையே...வாம்மா சாப்பிட போகலாம்... என்னங்க உங்களுக்கு வயலில் ஏதோ வேலை இருக்குனு சொன்னீங்களே... நீங்க கிளம்புங்க... உங்களுக்கு டிபனை வயலுக்கே கொடுத்து அனுப்பறேன்” என்று சொன்ன மேகலா , அஞ்சலியின் கைகளைப் பற்றி வீட்டிற்குள் அழைத்து சென்றார்.

துரைசாமி அந்த இடத்தை விட்டுக் கூட அசையாமல் அப்படியே நின்று விட்டார்.
சத்யனுக்கு உண்மையில் அவரைப் பார்க்கும் பொழுது பாவமாக இருந்தது.

‘அஞ்சலி தன்னுடைய கணவரைத் தாழ்த்திப் பேசுவது பிடிக்காமல் தானே மேகலா இப்பொழுது அவளை உள்ளே அழைத்து சென்றார். இப்படி அவரை மேகலா எத்தனை இடங்களில் தாங்கி இருக்கிறார். இருந்தும் அவர் மாறாதது ஏன்?’

“எப்பேர்ப்பட்ட மனுஷன்ப்பா நீங்க... இந்த அளவுக்கு சின்னப் பெண்ணெல்லாம் உங்களை குறை சொல்ற அளவுக்கு நடந்து இருக்கீங்களே... இதெல்லாம் உங்க தகுதிக்கு அழகு தானா?”

“எனக்கு யாரோட அறிவுரையும் தேவை இல்லை” என்று கத்தியவர் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு விறுவிறுவென நடந்து வெளியே போனார்.

‘ம்ச்... இன்னும் இவர் மாறலையே’ என்று சலிப்பாக உணர்ந்த சத்யன் வீட்டினுள் சென்றான்.

“இன்னும் கொஞ்சம் பொங்கல் வச்சுக்கோ அஞ்சலி...”

“ அச்சோ.. எனக்கு பொங்கலே பிடிக்காது ஆன்ட்டி... நீங்க செமயா சமைச்சு இருக்கீங்க.. அதனால கொஞ்சமா சாப்பிட்டேன்...போதும் ஆன்ட்டி.. ப்ளீஸ்”என்று கெஞ்சிக் கொண்டிருக்க... அவளின் மறுப்புகளை காதில் வாங்கிக் கொள்ளாமல் மேகலா அவளை விழுந்து விழுந்து உபசரித்துக் கொண்டிருந்தார்.

‘இந்த கவனிப்பு எதற்காக? மகளின் நாத்தனார் என்றா? அல்லது கொஞ்ச நேரத்திற்கு முன் கணவனிடம் தன்னைக் குறித்து அவள் பேசிய விதத்திற்க்காகவா?’ புரிந்து கொள்ள முடியாமல் மௌனமாக அங்கே வந்து நின்றான் சத்யன்.

“நீயும் உட்கார் சத்யா... டிபனை சாப்பிடு”என்றவர் மகனுக்கும் இலையைப் போட்டு பரிமாற மௌனமாக உண்ணத் தொடங்கினான் சத்யன்.