Page 1 of 1

Arooba Mohini Kindle Ebook

Posted: Fri Sep 18, 2020 9:52 am
by Madhumathi Bharath
‘இந்த நேரத்தில் யார் அது? பெண் போல தெரிகிறதே? யார் அவள்?’ என்று அவன் யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே அந்த ‘அவள்’ அவன் இருக்கும் திசைப் பக்கம் திரும்பி அவனை நோக்கி வருவது போல ஒரு பிரமை ஏற்பட... அவன் உடலில் ஏனோ நடுக்கம் பிறந்தது.
கண்களை நன்றாக அழுந்தத் தேய்த்துக் கொண்டு மீண்டும் அதே இடத்தில் பார்வையை செலுத்தினான்.
அது ஒரு பெண் என்பது அவனுக்கு தெரிந்தது. ஆனால் ஏதோ ஒரு வித்தியாசம் இருந்ததை அவனால் துல்லியமாக உணர முடிந்தது. அது என்ன வித்தியாசம் என்ற ஆராய்ச்சியில் இறங்க... அந்த நேரம் அவன் மனம் தயாராக இல்லை.
தூரத்தில் எங்கோ ஒரு நாயின் ஊளை சத்தம் கேட்க... அவன் மனது திகில் அடைந்தது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் மீண்டும் அந்த உருவத்தைப் பார்க்க அந்த உருவம் இப்பொழுது இன்னும் நெருங்கி இருந்தது.
அந்த உருவத்திற்கும் அவனுக்குமான இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது.
நூறு அடி... ஐம்பது அடி... இருபது அடி... பத்தடி... என்று இடைவெளிகள் வெகுவாக குறைய.. ஏனோ அந்த உருவத்தை நேருக்கு நேராக சந்திக்கும் திராணி இல்லாமல் பால்கனியில் இருந்த தூணுக்குப் பின்னால் மறைந்து கொண்டான்.
எரிந்து கொண்டிருந்த தெருவிளக்கு பட்டென்ற சத்தத்துடன் அணைந்து போக... நிம்மதி பெருமூச்சு விட்டான் சந்திரன். ஆனால் அவனது நிம்மதிக்கோ ஆயுள் மிக மிக குறைவாக இருந்தது.
அவனது முதுகுக்கு பின்னால் ஏதோ அரவம்... சூடான மூச்சுக்காற்று அவன் பின்னங்கழுத்தில் பட... பயத்தில் அவன் உடல் மொத்தமும் வேர்த்து வடிந்தது. திரும்ப சொல்லி மனம் உந்தினாலும் அதை செய்ய முடியாமல் அவனது உடல் மொத்தமும் மரத்துப் போன உணர்வு...
சின்னதாக எந்த ஒலியும் இல்லாமல் ஒரு மயான அமைதி அங்கே நிலவியது. காற்றில் ஒரு வித துர்நாற்றம் அடித்தது. குடலைப் பிரட்டிக் கொண்டு வாந்தி வருவதைப் போல இருக்க... மூக்கை அழுந்த மூடிக் கொண்டான்.
அவனது வீட்டு வாசல் கதவை ஒட்டி மீண்டும் அதே உருவம் அவன் கண்ணில் பட... லேசாக தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தான். சுற்றிலும் இருந்த இருளில் அந்த முகத்தை அவனால் காண முடியவில்லை. ஆனால் அந்த உருவம் தலை முடியை விரித்து விட்டு இருப்பதாலோ என்னவோ அதைப் பார்க்கவே அகோரமாக இருந்தது அவனுக்கு.
அந்த இருளிலும் கூட அதன் கண்களை அவனால் தெளிவாக பார்க்க முடிந்தது. இரை தேடும் புலியின் கண்களைப் போல பளபளப்பாக இருந்தது. கண்விழி கறுப்பாக இல்லாமல் வெள்ளையாக இருப்பதே ஒருவித பேய்த் தன்மையுடன் இருப்பதாக அவனுக்கு தோன்றியது.

https://www.amazon.com/dp/B08J87B78V