நானும்!... உனது நினைவுகளும்!...
Posted: Fri Jun 12, 2020 4:09 pm
முடிவென வந்தவனே! என்னவனே!
நான் நெருங்கினால் நீ விலகுவது போலும்
நான் விலகினால் நீ நெருங்குவது போலும்
எனக்குத் தோன்றுவதும் ஏனடா?...
எனக்கு வரமாய் வந்த சாபமடா நீ!...
என் மீது உனக்கு இருக்கும் ஈடுபாட்டை
ஏனோ என்னால் உணர முடியவில்லை.
உன்னை இம்சிப்பதாய் எண்ணி,
என்னை நானே நொந்து கொள்கிறேன்...
உன்னால் காதல் பித்து கொண்டேனடா!...
உன் மீது கோபம் கொண்டு எரிச்சலுற்றாலும்,
உன்னை எண்ணி ஏங்கி ஏங்கித் தவித்தாலும்,
வார்த்தைகளால் பல முறை உன்னை வெறுப்பதாகக் கூறினாலும்,
ஒரு முறை கூட மனதாற உன்னை வெறுக்க முடியவில்லையே!
என்ன மாயம் செய்தாயோ!...
நான் கொண்ட காதல் நோய்க்கு
காரணமும் நீ!... மருந்தும் நீ!... என்ற போதிலும்,
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சல்லவா?...
மருந்தாகினும் ஓர் அளவு தானே!...
உன்னை அளவிற்கு மீறி பருக எனது மனம் துடிக்கிறதே!...
மருந்தை விலக்கி நலம் பெற விருப்பம் கொண்டேனடா!...
நான் உன்னை விலக்கினும்,
விலக்க இயலா உன் நினைவுகள்!
முப்பொழுதும் உறவாடிக் களிக்கிறோம்
நானும்!... உனது நினைவுகளும்!...