என் மனம்!...
Posted: Mon Jun 29, 2020 6:26 pm
அவனது காலையேச் சுற்றி வரும் ஒரு நாய்க்குட்டியை போல,
என் மனது அவனைச் சுற்றியே வட்டமடித்துக் கொண்டிருக்கிறதே!...
அவன் வீட்டு நாய்க்குட்டியா என் மனம்?
தாய் அதட்டினாலும் திட்டினாலும் அடித்தாலும்,
மீண்டும் தாயிடமே அடைக்கலம் தேடும் குழந்தையைப் போல,
அவன் வார்த்தைகளால் புண்படுத்தப்பட்டாலும்
என் மனது அவனிடமே தஞ்சம் புக துடிக்கிறதே!...
தாயைத் தேடும் குழந்தையா என் மனம்?
கை தவறி கீழே போட்டு விட்டால்
நொறுங்கி விடும் கண்ணாடியைப் போல,
அவனது ஒற்றைச் சொல்லில்
என் மனது பொடி பொடியாகி விடுகிறதே!...
உடைக்கப்பட்ட கண்ணாடிப் பாத்திரமா என் மனம்?
மீள் விசை செயல்படுத்தப்பட்டதும்
தன் பழைய நிலையை வந்தடையும் மீள் பொருளைப் போல,
மீள் விசையாய் அவன் குரலிருக்க,
அவன் ஆறுதல் வார்த்தை பேச,
என் மனது நொறுங்கிய சுவடுகளேயின்றி
பொடி பொடியான அதன் துகள்கள் அனைத்தும்
தானாக ஒட்ட வைக்கப்படுகிறதே!...
மீள் பொருளாய் மாறிய மாயக்கண்ணாடியா என் மனம்?
பசலை நோயுற்ற சங்க கால தலைவியைப் போல,
உணவு, உறக்கமின்றி சிரிக்க மறந்து
அவனையே எண்ணி எண்ணி என் மனது ஏங்குகிறதே!...
பசலையுற்று பிரிவுத்துயர் தாங்கா தலைவியின் மனமா என் மனம்?