சூரியனின் மெல்லிய ஒளிக் கீற்றுகள் மரத்து இலைகளில் துளித் துளியாக விழுந்திருந்த மழைத்துளியை ஊடுருவி வர்ணஜாலத்தைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது…
மரங்களில் கூடு கட்டித் தஞ்சம் புகுந்திருந்த பறவைகள் அதிகாலை நேரத்திற்கு ஏற்ற வகையில் விதம் விதமான வகையில் சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது
அந்தச் சத்தம் மூலம் ஆறறிவு படைத்த மனிதர்களை நேரத்திற்கு எழுப்புவதற்கு வெகு பிரயத்தனம் செய்து கொண்டிருந்தது…
அந்தச் சத்தத்தைக் கேட்டதும் தனது போர்வையை இழுத்து முகத்தை முழுவதும் மூடிக் கொண்டு அடுத்த பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள் தேன்மதி…
பறவைகளின் சத்தத்தைக் கேட்டதும் அந்த ஓசையை கேட்டபடியே துவைத்த துணிகளைக் கொடியில் காயப் போட்டுக் கொண்டிருந்தாள் தேன்மதியின் அக்கா வான்மதி…
திடீரென ஒரு தீனமான சத்தத்திலே திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் அவள்…
மாமரத்துக் கிளையில் கூடு கட்டி இருந்த காகத்தின் குஞ்சுகள் இரண்டு கீழே விழுந்து குரல் எழுப்பிக் கொண்டு இருந்தது…
அதற்கு அருகில் காகத்தின் கூடு பிய்ந்து கிடக்கக் கூடவே ஒரு பெரிய கல்லும் கிடந்தது…
சுற்றிப் பார்த்தவளது கண்களுக்கு இன்னொரு கல்லுடன் நின்றிருந்த தம்பி அபிராம் மட்டும் தான் தெரிந்தான்…
அவ்வளவு தான் அவளுக்கு எங்கிருந்து அத்தனை கோபம் வந்ததோ தெரியவில்லை அருகே கிடந்த ஒரு பெரிய தடியை எடுத்து அவனை அடி பின்னி எடுத்து விட்டாள்…
தம்பியின் அழுகுரல் கேட்டுப் பதறியபடி படுக்கையில் இருந்து ஓடி வந்தாள் தேன்மதி…
அங்கு வெளியே தமக்கை தம்பியை அடிப்பதைப் பார்த்ததும் வேகமாக ஓடிச் சென்று அவளிடம் இருந்து தம்பியை இழுத்துப் பிடித்தவள்
“அறிவிருக்காடி அக்காச்சி உனக்கு… ஏன் இப்ப அவனை இந்த அடி அடிச்சனி…”
என்றாள் கோபமாக…
தங்கை வந்து தம்பியை இழுத்ததும் தான் சுய நினைவுக்கு வந்தவள்
“உனக்கு ஒன்டும் தெரியாது தேனு… அவன் கல்லாலே இந்தக் காகக் கூட்டை அடிச்சுப் போட்டான்டி…”
என்றாள் மனம் பதறியபடி…
அவள் சொன்னதைக் கேட்டவளோ
“காகக் கூட்டைத் தானே அடிச்சவன்… அதுக்கு நீ ஏனக்காச்சி குடி முழுகிப் போனது போல நடந்து கொள்ளுறாய்…”
என்றாள் தம்பியை அணைத்தவாறு
தங்கையின் பதிலில் இன்னும் கவலையானவள் “தேனு உனக்கும் இவனுக்கும் வேணும் எண்டால் இது வெறும் காகக் கூடாகத் தெரிஞ்சிருக்கலாம்… ஆனாப் பாரன் என்னால அப்பிடி நினைக்க முடியேலை…”
என்றவாறு முகத்தை மூடி அழத் தொடங்கினாள்…
தமக்கை அழுவதைப் பார்த்தவள் அவளது கைகளை விலக்கி
“அக்காச்சி ஏனிப்படி நடந்து கொள்ளுறாய்… என்னெண்டு சொல்லன்… நீ சொன்னாத் தானே எங்களுக்கும் விளங்கும்”
என்றாள் தேன்மொழி
கண்ணீரை அழுந்தத் துடைத்தவள்
“தேனு பத்து வருஷத்துக்கு முதல் சண்டையில எங்கடை குடும்பம் இல்லாமப் போனதை எனக்கு இப்பிடியான விஷயங்கள் அடிக்கடி ஞாபகப் படுத்துது”
என்றாள் விக்கியபடியே…
தமக்கையைப் புரிந்து கொண்டவளாக அவளை அணைத்துக் கொண்டாள் தேன்மதி…
அபிராமும் விம்மியபடி
“பெரியக்காச்சி தெரியாமச் செய்திட்டன்… இனிமே இப்பிடியெல்லாம் சத்தியமாச் செய்ய மாட்டன்” என்று தனது காதுகளைப் பிடித்து மன்னிப்புக் கேட்டான்…
ஒரு நொடி குட்டித் தம்பியை அடித்ததை நினைத்து அதற்கும் சேர்த்து அழுதே கரைந்தாள் வான்மதி…
அவளது நிலையைப் பார்த்த சின்னவளோ
“சரி சரி அக்காச்சி மன்னிச்சு விட்டாச்சி பிழைச்சுப் போ”
என்றவாறு தம்பியை உள்ளே அனுப்பி வைத்தாள்…
பின்னர் தமக்கையைத் திரும்பிப் பார்த்தவள் “அக்காச்சி நீ கொஞ்ச நாளாவே சரியில்லையோண்டு நான் நினைச்சது சரிதான்… இப்பிடி எதையாச்சும் நினைச்சு உன்னை நீயே வருத்தப் படுத்த வேண்டாம்…”
என்றபடி வான்மதியின் தலையை வருடிக் கொடுத்தாள்…
“நான் என்ன செய்யிறதடி… என்னால அதையெல்லாம் மறக்கவே முடியேல்ல…” என்றவாறு எழுந்து உள்ளே சென்ற தமக்கையையே வேதனையுடன் பார்த்த வண்ணம் இருந்தாள் தேன்மதி…
உள்ளே சென்ற வான்மதியோ சுவரில் படமாகத் தொங்கிக் கொண்டிருந்த தனது குடும்பத்தினரை வருடிய படி அதற்குக் கீழே தொய்ந்து அமர்ந்து விட்டாள்…
அவளுக்கு அடிக்கடி நினைவு வருகின்ற பழைய சந்தோஷமான நினைவுகளை விடவும் அந்தக் கொடிய சம்பவம் தான் அவளது மனதுள் என்றுமே நீங்காத வடுவாக மாறி விட்டது…
என்றுமில்லாத திருநாளாக இன்று ஏனோ பழைய நினைவுகள் போட்டி போட்டுக் கொண்டு அவளை வலிக்க வலிக்கக் கொன்று கொண்டிருந்தது…
சரியாகப் பத்து வருடங்களுக்கு முதல் கிளிநொச்சி மாவட்டத்தில் உருத்திரபுரம் என்ற ஊரில் ஒரு நாள் காலைப் பொழுது…
“அம்மா நான் இன்டைக்குப் பள்ளிக்கூடம் போகையில்லை… ஏனெண்டு கேக்காதேங்கோ… நான் சொல்ல மாட்டன்”
என்ற படி தாய் கலையரசியிடம் ஓடி வந்தாள் வான்மதி… அப்போது அவள் பதினான்கு வயதுப் பாவை…
“இவள் போகாட்டிக்கு நானும் போக மாட்டனம்மா இப்பவே சொல்லிப்போட்டன்”
என்றவாறு அவளது மூத்த தங்கை சாருமதியும் ஓடி வந்தாள்…
இருவரையும் பார்த்த கலையரசியோ இடுப்பில் கை வைத்து முறைத்துக் கொண்டே
“இஞ்சை பாருங்கோ அம்மாட்ட ஒன்டும் சொல்ல வேண்டாம்… நீங்கள் போய் உங்கட அப்பாட்ட சொல்லிட்டு என்ன கூத்தெண்டாலும் செய்யுங்கோ… நானொண்டும் கேக்க மாட்டன்” என்றவாறே உள்ளே போய் விட்டார்…
தந்தையிடம் பயந்தே பழக்கப் பட்ட இருவரும் தயங்கியவாறு அவர் முன்னிலையில் போய் நின்றனர்…
தன் முன்னால் நெளிந்தபடி வந்து நின்ற இருவரையும் பார்த்து அவர் பேசுவதற்கு வாயைத் திறப்பதற்கு முன்பாகவே அவரது முறுக்கு மீசை இருவரையும் பார்த்து முறைத்தது…
சாருமதி மெதுவாகத் தமக்கையின் பின்னால் மறைந்த படி “அப்பா இண்டைக்குப் பள்ளிக்கூடத்துக்கு நாங்கள் போகேல்லை”
என்றாள் வலுக்கட்டாயமாக வருவித்த தைரியமான குரலில்…
இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்தவர்
“நீங்கள் பள்ளிக்கூடம் போகாமல் நிண்டால் உவன் சின்னவனும் எல்லே நிக்கப் போறன் எண்டு அழுவான்…”
என்றார் கேள்வியாக
“தம்பி அப்பதையே போட்டானப்பா…” என்று இழுத்தாள் சாருமதி
“சரி சரி இண்டைக்கு மட்டும் நில்லுங்கோ” என்றவர் எழுந்து போய்விட்டார்…
தந்தை சென்றதும் சகோதரிகள் இருவரும் கட்டி அணைத்துக் கொண்டு துள்ளினார்கள்…
வான்மதிக்கும் சாருமதிக்கும் இரண்டு வயது தான் வித்தியாசம் என்பதால் இருவரும் தோழிகள் போலவே பழகுவார்கள்…
அடுத்து நான்கு வருட இடைவெளியில் தனுராமும் அவனை அடுத்து மூன்று வருட இடைவெளியில் தேன்மதியும் பிறந்திருந்தார்கள்...
தேன்மதி பிறந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு கடைக்குட்டி அபிராம் பிறந்திருந்தான்…
கிளிநொச்சி பற்றிமா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் வான்மதி ஒன்பதாம் வகுப்பும் சாருமதி ஏழாம் வகுப்பும் படிக்க, தனுராமோ மூன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தான்…
இளையவள் தேன்மதிக்கு ஐந்து வயதும் அபிராமுக்கு மூன்று வயதும் அப்போது தான் பூர்த்தி அடைந்திருந்தது…
அதனால் இருவரும் கலையரசியின் பின்னாலேயே குட்டி போட்ட பூனை போல சுற்றிக் கொண்டு இருப்பார்கள்…
.............................
பள்ளிக்கு மட்டம் போட்ட இருவரும் வயல்வெளியில் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் தூரமாக ஏதோ ஒரு வித இரைச்சல் சத்தம் கேட்டது…
விளையாட்டில் ஆர்வமாக இருந்த இருவரது செவிகளையும் அந்தச் சத்தத்தினால் எட்ட முடியவில்லை…
தொலை தூரமாகக் கேட்ட இரைச்சல் மெதுவாக அருகில் கேட்கத் தொடங்கவும் திடுக்குற்றுத் திரும்பிப் பார்த்தாள் சாருமதி…
உருத்திரபுரீஸ்வரர் என்கின்ற பெயரில் சிவன் குடி கொண்டிருக்கின்ற ஆலயத்தின் கோபுரத்துக்கு மேலாக ஏதோவொரு பொருளொன்று வேகமாக வந்து கொண்டிருந்தது…
அது என்னவென்று தெரியாமல் சற்றுத் தூரமாக நின்ற தமக்கையை அழைத்து
“அக்காச்சி அங்க பாரன்டி என்னவோ வேகமா வருதடி”
என்றவளின் பதிலில் திரும்பிப் பார்த்தவளுக்கும்… அது என்னவென்று புரியவில்லை…
“ஆரும் வெடி கொழுத்திப் போடுகினம் போல” என்றவளின் பதிலைக்கேட்ட சாருமதியோ “போடியக்காச்சி வெடி கொழுத்திப் போட்டால் உப்பிடி ஒருநாளும் வராது”
என்று சொல்லி முடிக்கவும்… வேகமாக வந்த அந்தப் பொருள் இரண்டு வயல்கள் தாண்டி விழுந்து வெடிக்கவும் சரியாக இருந்தது…
காதுகளைக் கிழித்துக் கொண்டு சென்ற அந்த ஓசையில் வான்மதிக்குச் செவிப்பறை வலிப்பது போல இருந்தது…
வலி தாங்க முடியாமல் இரண்டு காதுகளையும் இறுக மூடிக் கொண்டாள்…
“அக்காச்சி குண்டு வெடிச்சிட்டுப்போலடி”
என்று சாருமதி பயத்துடன் கத்தினாள்…
அவள் சொன்னதைக் கேட்டு இவள் திரும்புவதற்குள் அடுத்த குண்டு இவர்கள் அருகில் வெடித்தது
அவள் சுதாரித்து முடிப்பதற்குள்
“அம்மாஆஆஆஆ”
என்ற அலறல் மட்டுமே வான்மதியின் காதுகளில் ஒலித்தது…
யார் செய்த பாவமோ யாரை நோவதோ வான்மதியின் கண் முன்னாடியே குண்டுக்கு இரையாகி இரத்தம் கொப்பளிக்க வானத்தைப் பார்த்தவாறு விழுந்து கிடந்தாள் சாருமதி
தங்கையின் அருகில் ஓடியவள் அவளை மடி மீது போட்டுக் கதறித் துடித்தாள்
“சாரூ சாரூ எழும்படி சாரூ”
அவளது கதறல் எதுவும் கேட்காத தூரத்திற்குச் சாருமதியின் உயிர்ப் பறவை பறந்து விட்டிருந்தது…
தங்கையை மடியில் வைத்து அழுது கொண்டிருந்தவளைக் கவனிக்கும் அளவில் அங்கு யாரும் இருக்கவில்லை
காரணம் அங்கே பலியானது சாருமதி மட்டும் இல்லை அல்லவா
குண்டு குடித்து விட்டுப் போன உயிர்கள் பத்துக்கு மேல் இருக்கும்
அத்தனை பேரும் வயலில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள்…
சமையலறையில் நின்ற கலையரசி அந்தச் சத்தத்தைக் கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்து விட்டு இவளை நோக்கி உயிர் பதற ஓடி வந்தார்…
வந்தவர் அப்படியே மகளின் மீது விழுந்து கத்தினார்
அந்த அன்னையவளின் கதறல் இனிமேல் எப்போதும் கேட்காத தூரத்திற்கு மகள் போய்விட்டாளே என்ன செய்வது
இரண்டு குண்டுகளைத் தொடர்ந்து மீண்டும் இரைச்சல் கேட்கத் தொடங்கியது…
தொடர்ந்து சராமரியான குண்டுத் தாக்குதல் வீசத் தொடங்கியது
கலையரசியோ வான்மதியை இழுத்துக் கீழே விழுத்தி விட்டு அவளை மறைப்பது போல மேலே குறுக்கே விழுந்து மறைத்தார்
வேகமாக வந்த குண்டொன்று கலையரசியையும் பதம் பார்த்து விட்டே ஓய்ந்தது
கலையரசி மட்டும் குறுக்கே பாய்ந்து தடுக்கவில்லை என்றால் வான்மதி சிதறி இருப்பாள்
இரத்த வெள்ளத்தில் கிடந்தவர் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு வீடு இருக்கும் பக்கத்தைக் காட்டியவர் அப்படியே விழிகளை மூடிக் கொண்டார்
அன்னையை உலுக்கிப் பார்த்தவள் கத்திய கத்தலில் அந்தே இடமே அதிர்ந்தது…
சுற்று வட்டாரத்து மக்கள் எல்லோரும் கத்தியபடியே குழந்தைகளைத் தூக்கியவாறு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அங்குமிங்குமாகச் சிதறி ஓடத் தொடங்கி இருந்தார்கள்
குண்டுகளோ அங்கும் இங்குமென எங்கும் வீசப் பட்டுக் கொண்டிருந்தது
அந்த நேரம் எங்கிருந்தோ வந்த அமிர்தலிங்கம் மனைவியையும் மகளையும் கண்டு ஓவென்று அழுததைப் பார்த்திருந்தால் அந்தக் காலனும் கலங்கியிருப்பானோ தெரியவில்லை
அவர்கள் இருந்த திசைப்பக்கம் குண்டொன்று இரைச்சலுடன் கூவிக் கொண்டு வரவே மகளை இழுத்துக் கொண்டு வீடு இருக்கும் திசைப் பக்கம் விரைந்தார் அமிர்தலிங்கம்
தந்தையின் இழுப்புக்கு ஓடியவளின் பார்வை மட்டும் தாயினதும் தங்கையினதும் உடலிலேயே பதிந்து இருந்தது
“ஐயோ வாடி பிள்ளை சின்னதுகள் ரெண்டும் பயத்தில கத்துதுகள் நான் போய்ச் சின்னவனைக் கூட்டி வாரன்”
என அழுது கொண்டே சொன்னார்
மூன்று வயது மகனையும் ஐந்து வயது மகளையும் மூத்தமகளிடம் கொடுத்தவர்
“கவனமாப் பாரு மதீ அப்பா போட்டு வாரன்”
என்றவாறு போனவர் தான் திரும்பி வரவேயில்லை…
நெடு நேரமாகத் தந்தைக்காகவும் தம்பிக்காகவும் காத்திருந்தவளால் வீறிட்டுக் கத்திய படி இருந்த குழந்தைகளான தேனுவையும் அபியையும் சமாதானப் படுத்தவே முடியவில்லை
பக்கத்து வீட்டில் குடியிருந்த வான்மதியின் சித்தி ஓடி வந்து மூவரையும் எழுப்பித் தங்களுடன் அழைத்துக் கொண்டே மக்கள் ஓடும் திசைப் பக்கம் ஓடத் தொடங்கினார்
தம்பியை ஒரு கையால் தூக்கிக் கொண்டும் தங்கையை மறு கையால் இழுத்தவாறும் ஓடிக் கொண்டிருந்தவள் மூச்சு வாங்கியவாறே
“சித்தீ… அப்பா தம்பியைக் கூட்டிக் கொண்டு வாரன் எட்டு சொல்லிப் போட்டுப் போனவர் இன்னும் காணேல்லை… பயமா இருக்கு” என்று கேட்டாள்
“அவையள் அங்க வருவினம் நீ முன்னுக்கு வா” என்றவாறு அவளை இழுத்துக் கொண்டு ஓடினாள் வான்மதியின் சித்தி
நெடு நேரத்திற்குப் பிறகு வட்டக்கச்சியில் ஒரு கோவிலில் எல்லோரும் மெதுவாக இருந்து கொண்டார்கள்
தொடர்ந்து ஓடுவதற்கு உடலிலும் தென்பில்லை மனதிலும் தென்பில்லை
கோவிலில் இருந்தவர்களின் அழுகுரலில் பயந்து போய்த் தமக்கையை இறுகக் கட்டிக் கொண்டனர் சின்னவர்கள்
அந்த நிம்மதியும் நெடு நேரம் நிலைக்காமல் இந்தப் பக்கமாகவும் குண்டுகள் வந்து விழவே எல்லோரும் எழுந்து ஓடத் தொடங்கினார்கள்
பாதைகளெங்கும் இரத்தம் கொப்பளிக்கக் கிடந்தவர்களைத் தாண்டி ஓட வேண்டிய கொடூரத்தையும் சகித்துக் கொண்டு சின்னவர்களுக்காக ஓடினாள் வான்மதி
எங்கிலும் மரண ஓலங்கள் உயிரை உலுக்கிப் போட்டுக் கொண்டு இருக்க சின்னவர்களுக்காக மீண்டும் வேகத்தைக் கூட்டி ஓடினாள் வான்மதி
சுதந்திரபுரம், தேவிபுரம், கோம்பாவில் என அனைத்து இடங்களையும் கடந்து இறுதியில் மாத்தளன் என்ற இடத்தில் இருந்து கடலுக்குள்ளாகக் கூட வந்தவர்களுடன் நடக்கத் தொடங்கினார்கள்
இடையில் மூன்று தினங்களை முழுக்க முழுக்க பயத்துடனும் வேதனையுடனும் எப்படிக் கடந்தாள் என்று அவளுக்கே தெரியாது…
கடல் நீர் முழங்கால் வரை இருக்கும் போது நடப்பது சுலபமாக இருந்தது ஆனால் தூரம் போகப்போக சிரமப் பட்டுப் போனாள்
நிறைய இடங்களில் விழுந்து எழும்பித் தட்டுத் தடுமாறிக் கரை சேர்ந்தவள் அதன் பிறகே தேன்மதியைத் தேடினாள்
அபிராமைக் கைகளில் தூக்கி வைத்திருந்ததால் அவன் அவள் கூடவேயே இருந்தான்
தங்கையைக் காணாமல் வீறிட்டுக் கத்திக் கொண்டு இருந்தவள் அருகில் யாரோ ஒருவரின் தோளில் அமர்ந்தவாறு வந்த தேன்மதியைக் கண்டதும் துக்கம் மறந்து சிரித்தவாறே அழத் தொடங்கினாள்
தமக்கையை நோக்கி ஓடி வந்தவளை இறுகக் கட்டி ஓவென்று அழுத வான்மதியைப் பயத்துடன் மீண்டும் கட்டிக் கொண்டான் அபிராம்
“தேனு எங்கேடி போனனி நான் பயந்திட்டன்”
என்றாள் அழுதவாறே
“அப்பாவும் அண்ணாவும் அங்க விழுந்து கிடந்தவை நான் எழுப்பினான் எழும்பலை”
என்ற சின்னவளின் பதிலில் மின்னாமல் முழங்காமல் அடுத்தடுத்து தலையில் இடிகள் இறங்கியதை அறிந்தவள்
அப்படியே மண்ணில் சரிந்தாள்
அதன்பின் இடம்பெயர்ந்து முகாமில் தங்கியிருந்தது பின்னர் யாழ்ப்பாணத்தில் குடியேறியது எல்லாம் ஜீவன் அற்ற வான்மதி தான்
அந்த நேரங்களில் துணையாக இருந்தது அவளது சித்தி அன்பரசி
ஆரம்பத்தில் இரவுகளில் பயங்கரக் கனவு கண்டு கத்தியவாறே எழுபவள் காலம் செல்லச் செல்ல அது மறைவதை உணர்ந்தாள் மறைந்து விட்டதென்றும் நினைத்தாள்
ஆனால் பத்து வருடங்களுக்கு பிறகு இன்று கொஞ்ச நாட்களாகவே அவளது மனதில் அந்த நினைவுகள் பெரும் வலியை ஏற்படுத்திக் கொண்டே தான் இருக்கும் என்பதை உணர்ந்தாள்…
அவளது நினைவுக் கோர்வையை அறுப்பது போலக் கோவில் மணியோசை ஒலிக்கவே மெதுவாக எழுந்து கொண்டவள்
“எனக்காச்சும் தேனுவும் அபியும் இருக்கினம் சிலருக்கு யாருமே இல்லைத் தானே”
“நானும் எப்பவோ விஷத்தைக் குடிச்சுச் செத்து போயிருப்பான் ஆனால் அப்பா சொன்னது போல தம்பி தங்கச்சிக்காக நான் வாழோணும்”
“கட்டாயம் அவையளை நல்ல நிலைக்குக் கொண்டு வருவன்”
என்று சொல்லித் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு வேலைகளில் ஈடுபடத் தொடங்கினாள்
எத்தனை காலங்கள் கரைந்தாலும் யுத்தமது கொடுத்துச் சென்ற ரணங்கள் ஆறப் போவதில்லை அவையெல்லாம் நெஞ்சில் ஒரு மூலையில் நீறு பூத்த நெருப்பு போல இருந்து கொண்டே தான் இருக்கும்..............
"மனித உயிரதின்
மதிப்பறியாத மூடர் தனை
மனித குலமதுவே ஈன்றதேனோ
மனிதமது மரித்துப் போனதேனோ மறைந்த மரண ஓலங்கள் இன்றும் தூரமாக ஒலிப்பதோனோ இறைவன் கொடுத்த சாபமோ இல்லை நாம் வாங்கிய வரமோ இனியேனும் சாந்தி நிலவிட வேண்டி நிற்போம் "
✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍
அன்று இறந்த அத்தனை உயிர்களுக்கும் உயிர்களை இழந்த உறவுகளுக்கும் இக் கதை சமர்ப்பணம்
✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍