உச்சி வேளையிலே உருக்கும் வெய்யிலிலே
உன்னைக் கண்டதும் பதறியது நெஞ்சம்...
இங்கு வரும் கிளிகள், காகங்கள் அணில்கள்,மைனாக்கள் ஏன் மனிதர்கள் யாருக்கும் நான் இல்லை என்று சொன்னதில்லை...
வறுமையை விரட்ட வயலில் வறுத்தெடுக்கும் வெய்யிலில் வற்றாத நதி ஓடுவது போல வேலை செய்யும் உனக்கு மட்டும் இல்லை என்று சொல்ல நான் என்ன பாவம் செய்தேன்...
என் கிளைகள் எங்கும் இலைகளை மறைத்து நாவற் பழங்கள் பழுத்து நாவூறச் செய்யும்... ஆயினும் என்ன பயன் உன் பசி போக்க என்னிடம் ஒரு பழம் இல்லையே...
நீல வானில் நிலத்தை வேடிக்கை பார்த்துச் செல்லும் வெண்ணிற மேகங்களே...
சற்றேனும் அந்த சூரியனை உங்கள் கரம் கொண்டு பொத்தி வையுங்கள்... பெண்ணரசிக்கு வெப்பமாவது குறையட்டும்...
என் அடி வேரை மேவிப் பாயும் நீரோடைக்கு
என்னவாயிற்று நாவு வறண்டு துடிக்கும் பெண்ணவளின் வேதனை புரியாமல் எங்கே போய்த் தொலைந்தது...
என்னால் எதுவும் செய்ய முடியவில்லை
என் கிளைகளை அசைத்து அசைத்து சாமரம் மட்டும் வீச முடிகிறது... அவளுக்கு...