மாதவி எனும் மாதரசியைப் பற்றிய என் எண்ணம்
பண்ணொலிகளைப் பயின்று தனைப் பண் படுத்திக் கொண்டவள் இவள்
கலையைக் கொண்டு உலகை மகிழ்விக்கும் தொழிலை ஏற்றவள் இவள்
அழகில் தேவதை என்று அனைவராலும் ஆராதிக்கப் பட்டவள் இவள்
கண்ணியமாக வாழ வேண்டும் என்ற விருப்பம் கொண்டவள் இவள்
கணிகை மகளெனப் பிறந்திட்ட இவளோ கலையின் இருப்பிடம்
கலையின் ராணியெனத் திகழ்ந்திட்ட இவளை உலகம் மதித்தது
ஆனால் இவளுக்கான அன்போ அங்கீகாரமோ கொடுக்கப் படவில்லை
அன்புக்கு ஏங்கியவளாயினும் இவளாகவே ஒரு ஆடவனைத் தேடிச் செல்லவில்லை
இவள் மீது ஆசை கொண்டு விலை கொடுத்து வாங்கிய கோவலனை இவள் நிராகரிக்கவில்லை
மாதவியென்ற மங்கையிவளைத் தூற்றியவர்கள் தான் அதிகம்
மாதவி கோவலனை மனதால் மணாளனாக வரித்துக் கொண்டவளாயினும்
கணிகை மகளென்பதால் இவளுக்கான அங்கீகாரம் கேள்வி ஆகிவிட்டது
சரித்திரங்களில் புருஷர்கள் எது செய்திடினும் புகழப் பட்டார்கள்
எப் பிழை செய்திடினும் குற்றமற்றவர்களாகக் காட்டப் பட்டார்கள்
பெண்களை மட்டுமே நிலை நிறுத்தி அவர்தம் கற்பை அளவுகோலால் அளக்க முயன்றார்கள்
குலம் தானா ஒருவரின் குணத்தை நிர்ணயிக்கிறது
கோவலன் கொலையுண்டதைக் கேட்டதும் கண்ணகி மதுரையை எரித்தாள்
அந்தச் செய்தியைக் கேட்டதும் மாதவியவள் என்ன செய்திருப்பாள்
மனதுக்குள்ளே மரித்திருப்பாள் மருகி இருப்பாள் துடித்திருப்பாள்
அவள் நியாயம் கேட்டிருப்பின் அவளது கற்பு சந்தியில் கடை பரப்பப் பட்டு கேலிக்கு உட் பட்டிருக்குமோ ???
மாதவியின் அந் நேரத்துத் தவிப்பை அவளல்லாது யாரறிவார்???
✍பானுரதி✍