Page 1 of 1

முற்றத்து மாமரம்

Posted: Sat Jul 04, 2020 6:13 pm
by Bhanurathy Thurairajasingam
என் வீட்டு முற்றத்து மாமரம்...

தாத்தாவின் காலத்தில் அவரது இளம் பிராயத்தில் தெருவோரத்தில் கேட்பாரற்று தனியே ஒரு மாங் கன்று...

வீணாகப் போகிறதே இதை வீட்டில் வைத்தால் நன்று...

என்று தாத்தாவிற்கு தோன்றியதன் பலன்...

இன்று என் வீட்டு முற்றத்தில் பெரிய விருட்சமாய்க் குடை போன்று நிழல் பரப்பி நின்று கொண்டிருக்கிறது...!!!

மரத்தில் மாம்பூ பூக்கத் தொடங்கும் காலத்தில்... மாமரம் கொள்ளை அழகு தான்...

அதை விட அழகு மாம்பூவெல்லாம் பிஞ்சாகிக் காய்க்கத் தொடங்கும் காலம் தான்...

காரணம் அந்தப் பருவங்களில் எங்கள் வீட்டிற்கு நிறைய நிறைய விருந்தாளிகள் வருவார்கள்.....

அவர்கள் வருவது எங்களை நலம் விசாரிக்க இல்லை...
எங்கள் முற்றத்து மாமரத்தை...!!!

அணில், கிளி, மைனா, புளுனி, காகம், தேன்சிட்டு என்று விருந்தாளிகள் பட்டியல் நீண்டு கொண்டு செல்லும்...

இவர்களில் தனித்துவமான விருந்தாளி மாம்பழக் குருவி...

அதிகாலை நேரத்தில் வீட்டு மாமரத்தில் கூவும் குயிலின் இசைக்கு போட்டியாக வர யாருக்கும் திறமை இல்லை...!!!

மாமரத்து நிழல் தான்... எங்க வீட்டுத் தாத்தா, எதிர் வீட்டுத் தாத்தா அமர்ந்து விவாதிக்கும் விவாத மேடை...

அதில் நாங்கள் எல்லோரும் முக்கிய உறுப்பினர்கள்...
விவாதித்துக் களைத்தால் அம்மா கொடுக்கும் மாம்பழச்சாறு, மோர் அமிர்தம் தான்...

மாமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடிப் பாட விருப்பம் உண்டாகவும் பலி ஆனது என்னவோ அம்மாவின் விலை உயர்ந்த சேலை தான்...

சேலையில் ஊஞ்சல் கட்டி எல்லோரும் ஏறிக் குதித்தால் சேலை தாங்குமோ இல்லையோ??? அம்மா தாங்க மாட்டார்...

அம்மாவும் கோபம் கொள்ளக் கூடாது, நாங்களும் ஊஞ்சல் ஆட வேண்டுமே...
தாத்தா மரப்பலகையில் கயிறு போட்டு மாமரத்தில் கட்டித் தந்த ஊஞ்சல் தோற்றம் பெற்ற கதை இது...

மாமரத்துக் காய்கள் சற்று நிறம் அடைந்ததும் நமக்குக் கொண்டாட்டம்...

அம்மா நிறையப் பழம் தர மாட்டாரே... என்பதால் அவருக்குத் தெரியாமல் மாமரம் ஏறிக் கீழே விழுந்ததை இன்று நினைத்தால் அது அவமானம் அல்ல... ஆனந்தம் தான்...

வீட்டில் இருக்கும் மரங்களை வெட்டும் போது முற்றத்து மாமரத்தையும் வெட்டலாமே என்ற அம்மா கூறிய செய்தியைக் கேட்டதும் அழுது ஆர்ப்பாட்டம் செய்தது

அப்பாவுடன் சண்டை போட்டு, உண்ணாவிரதம் இருந்து எத்தனையோ போராட்டங்களுக்கு மத்தியில் மீட்டு எடுத்தது எங்கள் முற்றத்து மாமரம்...

நாம் வாழ்ந்த சந்தோஷ வாழ்வுக்கு அடையாளம்...
நம் வாழ்வு முடிந்த பின்னரும் நம் வாழ்வுக்கு
அடையாளம்...
நம் முற்றத்து மாமரம் நம் மூதாதையரின்
அடையாளம்...
இவற்றை நினைத்து நாம் என்றும் மகிழ்வு
அடையலாம்...

                                        ✒பானுரதி✒