அவளின் நாட்குறிப்பு

Post Reply
Bhanurathy Thurairajasingam
Moderators
Posts: 14
Joined: Tue Jun 30, 2020 4:13 am
Been thanked: 1 time

அவளின் நாட்குறிப்பு

Post by Bhanurathy Thurairajasingam »

அனைவரும் தூங்கும் இரவில்

அவள் மட்டும் விழித்திருப்பாள்

அவள் கையில்  நாட்குறிப்பொன்று

அதை விரித்து ஏதோ எழுதுவாள்

அப்படி என்ன எழுதுவாளோ…?

அதை அறிய ஒரு துடிப்பு…

அவள் இல்லாத சமயத்தில்

அந்த நாட்குறிப்பைக் கைப்பற்றினேன்

அவளறியாமல் அதைத் திறக்கின்றேன்

அது தவறு என்று தோணவில்லை

அவளுக்கும் எனக்கும் இடையில்

அந்த நாட்குறிப்பு அநாவசியம்…

அதனால் அவள் அனுமதியின்றி

அதைத் திறந்து விட்டேன்...

அவளது அழகான கையெழுத்து

அன்பாக என்னை வரவேற்றது

அதை வருடிக் கொடுத்துக் கொண்டே

அடுத்த பக்கத்தைப் புரட்டுகிறேன்…

அவற்றை நான் எதிர்பார்க்கவில்லை…

அழகு ராணியின் உள்ளத்தில் இருக்கும்

அந்தரங்க விடயத்தை எழுதினாளென

அந்தப் பக்கத்தைப் பார்த்த எனக்கு

அத்தனை ஏமாற்றமாக இருந்தது…

அவளது மனதில் எனக்கு தெரியாத

அறியக் கூடாத  ஏதாவது

அந்தரங்கம் இருக்குமென நினைத்தேன்

அப்படியில்லை என்று சொல்லியது

அந்தப் பக்கங்கள்…

அரிசி, பருப்பு,சீனி,மிளகாயென

அடுக்களைக்கு அவசியம் வேண்டிய

அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே

அவள் அதில் எழுதியிருந்தாள்…

அதிர்ந்து நான் அதை மூடிவிட்டு

அவளை நிமிர்ந்து பார்க்கிறேன்…

அவளோ என் தலையைக் கோதி

அழகிய புன்னகையை வீசி விட்டு

அம்மாவுக்கு இதெழுதவே நேரமில்லை

அடி கள்ளி நீ இப்பொழுது

அதிலென்ன அப்படித் தேடுகிறாய்…

அவள் கேட்ட பதிலில்…

அழுகையுடன் அவளை இறுக்கமாக

அணைத்துக் கொள்ளுகிறேன்…

அவளுக்கு ஒரு நாட்குறிப்பை

அங்கு எழுதக் கூட நேரத்தை

அமைத்துக் கொடுக்கலை நாங்கள்…

❤ அம்மாவின் நாட்குறிப்பு ❤

                                     ✒பானுரதி✒
You do not have the required permissions to view the files attached to this post.



Post Reply

Return to “Bhanurathy Thurairajasingam”